எங்கேயும் எப்போதும்!

>> 19 September 2011



விபத்து! அதனை நேருக்கு நேர் சந்திக்காத வரை நமக்கு அதன் மீதான பயம் கொஞ்சம் கூட இருப்பதில்லை. செல்போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுவதில் தொடங்கி, பிரேக் கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட அலட்சியமாக கார் ஓட்டுவது, தம்மடித்த படி சரக்கடித்துவிட்டு பஸ் ஓட்டும் டிரைவர்கள் என பட்டியல் ரொம்ப பெரிசு. ஆனால் நேருக்கு நேர் நாம் விபத்தை எதிர்கொள்ள நேரிடும் போதோ அல்லது நமக்கு நெருக்கமானவருக்கு ஏற்பட்டாலோ அதுகுறித்த அச்சமும் கொஞ்சம் கவனமும் நம்மை தொற்றிக்கொள்ளுவது இயல்பு. எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பைக்கை எடுத்து வண்டி ஓட்டுகையில் அதை உணர முடிந்தது, சாலையில் என்னையும் மீறி அதிக கவனமும் பயமும் எங்கிருந்துதான் வந்ததோ!

சில படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்ததும்.. பதட்டமும் பயமும் அப்பிக்கொள்ளுவதை உணர்ந்திருக்கிறேன். ஃபைனல் டெஸ்டினேஷன் வகையறா படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தலைக்கு மேலே சுழலும் ஃபேன் தொடங்கி சாதாரண அழுக்குப்பிடித்த மிதியடி கூட பூச்சாண்டி காட்டி பயமுறுத்தும். இதுமாதிரி படங்களை இன்னொரு முறை பார்க்கவே கூடாது என முடிவெடுத்து விடுவேன். அதன் வேதனையிலிருந்து மீளவே பல நாட்களாகும். சனிக்கிழமை பார்த்த எங்கேயும் எப்போதும் இன்னமும் என் நினைவடுக்குகளில் எஞ்சி நிற்கிறது. சாலையில் எந்த பேருந்தை கண்டாலும் அச்சமூட்டுகிறது. இனி அச்சமின்றி என்னால் மஃப்சல் பேருந்துகளில் பயணிக்கமுடியுமா என்பதே சந்தேகம்தான்.

பேருந்து மோதல்களும், தடம் புரளும் ரயில்களும் அன்றாட செய்தியாகி பல காலம் ஆகிறது. சென்றவாரம் நடந்த ரயில்விபத்து கூட பெரிதாக என்னை ஒன்றுமே செய்யவில்லை. மீடியாவும் தொடர்ந்து நிகழும் விபத்துகளும் இதுமாதிரி விபத்துகளை சகஜமாக எடுத்துக்கொள்ளுகிற நிலைக்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டதோ என அஞ்சுகிறேன். எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைதான். ஆனால் அதே விபத்து நமக்கோ நம்மை சேர்ந்தவர்களுக்கோ ஏற்படும்போதுதான் அதன் மீதான ஒரு அச்ச உணர்வு எழுகிறது. அப்படி ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது எங்கேயும் எப்போதும். காரணம் படத்தின் பாத்திரங்கள் நமக்கு மிக மிக நெருக்கமானவர்களாகவும் நண்பர்களாகவும் இருப்பதே!

நேர்த்தியாக பின்னப்பட்ட இரண்டு காதல் கதைகள். அரசூரை விட திருச்சி பெரிய சிட்டி! திருச்சியை விட சென்னை பெரிய சிட்டி! இரண்டு காதல் ஜோடிகளுக்கான முரண் இதுதான். அரசூர் பையன் திருச்சி பெண்ணின் சாமர்த்தியத்தில் திணறுகிறான். திருச்சி பெண் சென்னை பையனின் அலட்டலில் அலறுகிறாள். ஒரு விபத்தில் ஒரு காதல் அஸ்தமிக்க இன்னொரு காதல் பூக்கிறது. நண்பனுக்கு விபத்து நேர்ந்ததை போலவே மனம் துடித்து அடங்க மறுக்கிறது.

படத்தின் கதை திரைக்கதை,நடிப்பு,இசை,எடிட்டிங்,கிராபிக்ஸ் என எல்லாமே நன்றாகவே இருந்தாலும் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு முறையும் பாய்ந்து செல்லும் பஸ்ஸினை காட்டும்போதும் நாமும் அந்த பேருந்தில் பயணிக்கிற உணர்வினை கொடுத்துவிடுகிறது. அதிலும் அதன் வேகம், அவை மற்ற வண்டிகளை தாண்டிச்செல்லும்போது உண்டாகிற படபடப்பு.. கேமரா மேனுக்கு ஒரு பெரிய சபாஷ்! படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெரிய ரசிகராக இருக்கவேண்டும். படம் முழுக்க எங்கேயும் எப்போதும் ராஜாசார் வாசனை!

ஜெய் தன் பாத்திரத்திற்கேற்ப நன்றாகவே நடித்திருக்கிறார். அஞ்சலியின் நடிப்பு அற்புதம். சிம்ரனுக்கு பிறகு அஞ்சலிக்கு ரசிகனாகிவிடுவேனோ என அஞ்சுகிறேன். அவ்வளவு அழகு.. நிச்சயம் இப்படத்தினை குடும்பத்தோடு பார்க்கலாம். ஒவ்வொருவரும் கட்டாயம் பாக்க வேண்டியபடமும் கூட...

ஆனால் அவ்வளவு அழகான காதல்களை சொல்லிவிட்டு இறுதி 20 நிமிடங்கள் நம்மை கதறவிட்டிருக்க வேண்டாம் என்கிற எண்ணமும் எழாமல் இல்லை. இருந்தும் அந்த 20 நிமிடங்கள் நிச்சயம் விபத்தின் மீதான மக்களின் பார்வையை மாற்றும் என்பது நிச்சயம். இந்த படத்தினை பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்யலாம்! அது தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கிற பெருமளவு விபத்தினை குறைக்கும் என்றே நம்புகிறேன். மற்றபடி அழகான படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

Read more...

உயிர்,மெய்,அஃறிணை (சிறுகதை)

>> 14 September 2011




தெருநாய்கள் என்றாலே எனக்கு பயங்கர வெறுப்பு. அதிலும் சொறிபிடித்தவைகளைப் பற்றி சொல்லவும் வேண்டாம். அழுக்குப்பிடித்த அந்த நாய்கள் ஒவ்வொன்றையும் அந்நியன்,ரமணா பாணியில் தேடித்தேடி விஷ ஊசிப்போட்டு கொல்லவேண்டும் என நினைப்பேன். வீட்டு நாய்கள் நல்லவை. ஊசிபோடப்பட்டவை. அவை குரைப்பதை மட்டுமே செய்யக்கூடியவை. சுத்தமானவை. ஆச்சாரமானவை. சொல்லப்போனால் அவற்றில் சில என்னைப்போலவே சைவபட்சிணிகள். சாதுவானவை. உணவுக்காக குப்பைகளை கிளறி ஊரை நாறடிப்பதில்லை. ஆனால் இந்த தெருநாய்கள் இரவெல்லாம் கத்திக்கொண்டும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் திரிவதால் எத்தனை பேர் தூக்கம் கெடுகிறது. ஊவென இதுகள் போடுகிற ஊளைக்கு என் மனைவி இரவெல்லாம் பினாத்திக்கொண்டு என் தூக்கத்தை கெடுப்பாள்.

இரவில் நிம்மதியாக வண்டி ஓட்டியபடி வீடு வந்து சேர்வதற்குள் எத்தனை நாய்களை தாண்டி வரவேண்டியிருக்கிறது. ஸ்ஸ்ப்ப்பா.. பெரிய போராட்டம்தான். குழந்தைகள் நிம்மதியாக டியூசன் போய் வரமுடிகிறதா.. குழந்தைகளை குறிவைத்து குரைப்பதையே குலத்தொழிலாக கொண்டிருக்கின்றன இந்த கருமம் பிடித்த நாய்கள். நல்ல வேளை எனக்கு குழந்தைகள் இல்லை. தெருப்பங்கீட்டில் பிரச்சனை வந்துவிட்டால் தெருவில் யாருமே நடமாட முடியாத அளவுக்கு இந்த நாய்களுக்கெல்லாம் கோஷ்டிபூசல் வேறு... கத்தி கத்தி ஊரை கூட்டி.. சகிக்க முடியாது. எங்கள் தெருவில் மட்டும் எப்படியும் நாற்பது நாய்களாவது இருக்கும். எண்ணியதில்லை.

மாநகராட்சியில் கம்ப்ளைன்ட் கொடுத்தாயிற்று.. ஹிந்து எடிட்டருக்கு லெட்டரும் எழுதியாயிற்று. என் நேரத்திற்கு பிடித்த கேடு! ஒரு மயிரையும் யாரும் பிடுங்க வில்லை. நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. நாய் பிடிக்கவும் காசு கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. யாரிடம் இருக்கிறது காசு. நாற்பதாக இருந்த நாய்களின் எண்ணிக்கை ஐம்பதானதுதான் மிச்சம். கோவை பக்கத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்கிறார்களாம் அதையாவது செய்துதொலைத்தால்தான் என்ன? சினிமாவில் காட்டுகிற நாய்வண்டிகளை நான் பார்த்ததேயில்லை.

என்னதான் இறைவன் படைத்த உயிராக இருந்தாலும் நமக்கு தொல்லையென்றால் கொலை செய்வதில் தப்பில்லை. கொசுக்களை கொல்வதில்லையா? கரப்பான்களை கொல்வதில்லையா? என்னதான் நான் சைவபட்சிணியாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிப்பவனாக இருந்தாலும் நமக்கு தொல்லை கொடுப்பதை கொல்வதில் தவறில்லை என்றே வாழ்கிறேன். பசுவைப்போல நாய்களொன்றும் புனிதமானவை அல்லவே.

என்னால் எதையும் கொல்ல முடியாது என்றாலும் இந்த நாய்களில் ஒன்றையாவது வாழ்க்கையில் கொன்றுவிடவேண்டும் என்ற லட்சியம் மட்டும் நிறையவே இருந்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது சிறுவயதில் ஒருமுறை பள்ளிக்கு சென்று திரும்பிக்கொண்டி ருந்த என்னையும் என் தங்கையையும் ஒரு நாய் கடித்துவிட்டது. ஒரு ஊசிக்கே அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற எனக்கு பல ஊசிகள் போடப்பட்ட அந்த தழும்பு இன்னும் மனதில் ஆறவில்லை. அப்போதிருந்தே இந்த நாய்துவேஷம் என்மனதில் வேரூன்றியிருக்கலாம். என் தங்கை அதை மறந்துவிட்டாள். அவளிடம் சொன்னால் சிரிப்பாள்.. இப்போது அவள் வீட்டிலேயே ஒரு நாயும் வளர்க்கிறாள். பொமரேனியன்.

ஒரு நாயையாவது கொல்லவேண்டும் என்கிற வெறியும் ஆத்திரமும் ஒவ்வொரு தெருநாயை நான் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போதும் அதிகமாகும். எப்போதோ கடித்த நாய் மீதுள்ள கோபத்தில் இப்போது கொலையா என கொதிக்க வேண்டாம்.. உங்களையோ உங்கள் வீட்டில் இருப்பவர்களையோ இந்த நாய்கள் கடித்திருந்தால்தான் உங்களுக்கு அதன் வலிபுரியும்.

கொலைவெறி முற்றிப்போயிருந்தபோதும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலேயே இருந்தது. சில நேரங்களில் நாய் பலசாலியாக முரட்டுத்தனமாக இருந்துதொலைக்கும் அல்லது கூட்டமாக குழுவாக இருக்கும். அதைக்கண்டு நான் பயந்து ஒதுங்கிவிடுவேன். அல்லது நான் கல்லை எடுப்பதற்குள் அவை ஓடி ஒளிந்துகொள்ளுவதும் உண்டு.

அந்த நாய்களை போல இல்லை இந்த நாய்! இது சரியான நோஞ்சானாக இருந்தது. வயிறு ஒட்டிப்போய்.. எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மார்புகளணைத்தும் தொங்கிப்போய் கண்களில் ஒளியின்றி.. ஓரிரு நாளில் இறந்துபோய்விடுமோ என்கிற நிலையில் இருந்தது. ஒருநல்ல மாலைப்பொழுதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த என்னை விரட்டிக்கொண்டே பின்னால் வந்தது அந்த நாய். பசியாக இருந்திருக்கலாம். வண்டியை நிறுத்தியதும் அதுவும் நின்றது. வாயால் மூச்சிரைக்க என்னையே பார்த்தபடி வாலாட்டிக்கொண்டே நின்றது. வண்டியை விட்டு இறங்கினேன். ஒரு கல்லை குனிந்து எடுக்க அது லேசாக பின்வாங்கியது. கல்லை ஓங்க ஓட முற்பட்டது.. கையிலிருந்த கல் சரியாக அதன் மண்டையில் பட்டதும் அது பொத்தென்று அப்படியே சரிந்து விழுந்தது. க்கீங் க்கீங் என ஈனக்குரலில் அனத்தியது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் அருகில் சென்று காலால் தலையை அசைத்துப்பார்த்தேன். க்கீங் க்கீங் என அனத்தியபடி அப்படியே கிடந்தது. என் ஆத்திரம் இன்னமும் அதிகமானது.. அதே சமயம் எனக்கு அது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி அதன் தலையில் போட்டேன். மண்டை ஓடு உடைந்த சப்தம் கடாக் முடாக் என்றது. கல் தலையில் சிக்கிக்கொண்டது. அதை ஆட்டி ஆட்டி எடுத்தேன். ஒரே ரத்தம். ச்சே கையெல்லாம்..பிசு பிசுவென.. தூக்கிப்போட்டுவிட்டேன். ஆனாலும் அதன் உடல் துடித்துக்கொண்டிருந்தது. விடாமல் இன்னொரு கல்லை போட்டும் கம்பியால் வயிற்றில் குத்தியும் அது துடித்துக்கொண்டேயிருந்தது. என்ன எழவுடா செத்துத்தொலைய மாட்டேங்குதே.. என எரிச்சலோடு இன்னொரு கல்லை தேடினேன்.. ரத்தம் படித்த கற்களை தொடவே சங்கட்டமாக இருந்தது. அருகிலிருந்த முற்செடிகளுக்குள் தேடினேன்.. அதற்குள்ளிருந்து நாலைந்து குட்டி நாய்கள் என் கால்களுக்குள் புகுந்து ஓடின.. என் தேடல் கல்லில்தான் இருந்தன. குட்டிகளை கவனிப்பதில் எனக்கு ஆர்வமில்லை.

அகப்பட்டது பெரிய கல்! இதை எடுத்து இன்னொரு போடு போட்டால் முடிந்தது கதை. இன்னமும் எனக்குள் அந்த கொலை வெறி நிறையவே மிச்சமிருந்தது. எனக்கே என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஒரு நாயையாவது கொல்ல வேண்டும் என்கிற என் தணியாத ஆவல் இன்று தீரப்போகிறது. ஆனால் என் கால்களுக்குள் புகுந்து சென்ற நாய்க்குட்டிகள் துடித்துக்கொண்டிருந்த நாயினை சுற்றி சுற்றி வந்தன.. அதன் மார்புகளில வாய்வைத்து தடுமாறின.. நாய் இன்னும் சில விநாடிகளில் செத்துவிடும் நிலையிலிருந்தது. அதன் உடல் தூக்கி தூக்கி போட்டபடியும் வாயிலிருந்து எச்சில் வழிந்தபடியுமிருந்தது. க்கீ க்கீ க்கீ என அந்த குட்டிநாய்களின் கதறலை கேட்க சகிக்கவில்லை. கையிலிருந்த கல்லை கீழே போட்டுவிட்டு.. மீண்டும் பைக்கிற்கு அருகில் வந்தேன். திரும்பி பார்த்தேன்.. பெரிய நாயின் தலையில் ரத்தம் இன்னும் கசிந்தபடி இருந்தது. குட்டிநாய்கள் அதன் மார்புகளை கவ்வியபடியிருந்தன. எனக்குள்ளிருந்த கொலைவெறி ஏனோ தணிந்திருந்தது. இதற்கு மேலும் அந்த நாயை கொல்ல மனமொப்பவில்லை.

பைக்கை மிதித்து அங்கிருந்து நகர்ந்தேன். வீட்டிற்கு செல்லும் முன் ஏனோ மனது பதைபதைப்பாக இருந்தது. அவை குட்டிநாய்கள். பிறந்து ஓரிரு நாட்கள் இருக்கலாம். அவற்றால் சரியாக நடக்கவும்கூட முடியவில்லை. நான் கொன்றது அதன் அம்மாவாக இருக்கலாம். மீண்டும் பைக்கை திருப்பிக்கொண்டு பழைய இடத்திற்கே வந்தேன். சில காக்கைகள் பெரிய நாயின் மரணத்திற்காக அருகிலேயே கண்விழித்துக் காத்திருந்தன. நான் அங்கிருந்து கிளம்புகையில் குட்டிநாய்களின் எண்ணிக்கை நான்காக இருந்தது. அதில் இரண்டை காணவில்லை. அந்த இரண்டும் என்ன ஆனதோ தெரியவில்லை. இரண்டுதான் இருந்தன. காணமல் போன இரண்டையும் வேறு யாராவது எடுத்து சென்றிருக்கலாம். அந்த இரண்டு குட்டிகளையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். நினைவெல்லாம் அந்த தாய்நாயாகவே இருந்தது. என்னதான் இருந்தாலும் கொலைவரை சென்றிருக்க கூடாது. இனியென்ன செய்ய முடியும். செத்தது செத்ததுதான். செத்தது நாய்தானே,அதனாலென்ன...

பாவம் குட்டிகள். அந்த இரண்டு குட்டிகளில் வெள்ளைக்குட்டியொன்று ரொம்பவே அழகு.. என் மனைவிக்கு அவனை மிகவும் பிடிக்கும். அப்படியே அவன் அம்மா ஜாடை! எனக்கு கருப்பு குட்டிதான் இஷ்டம். நான் வீட்டிற்குள் நுழைந்தாலே என் பின்னாலேயே ஓடிவரும் நான் பால்கொடுத்தால்தான் குடிக்கும். மடியில் உறங்கும். கருப்பிதான் என் செல்லம். வெள்ளையன் என் மனைவிக்கு செல்லம்.

Read more...

எழுத்தாளர் ஜெயலலிதா

>> 08 September 2011





முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர் புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!

ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ் புகழ் கிங்விஸ்வா).
கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர், எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின் உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.

பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன் எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள் சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர.. அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல் மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம் என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே எழுதியிருக்கிறார்.

இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர் கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான புனைவாகவே இது இருக்கிறது.

தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.

Read more...

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP