10 March 2012

உன்னால் முடியும் தங்கச்சி!
'பாஸ் பேசாம நாமகூட ஒரு சுடிதாரை மாட்டிக்கிட்டு ஆபீஸ் வந்தா, ரொம்ப சீக்கிரமா முன்னேறிடலாம்!’ - இப்படி அலுவலகங்களில் அங்கலாய்க்கிற ஆண்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. என்னவோ பெண்கள் என்றால் மேனேஜர் முதல் பியூன்வரை பல்லைக் காட்டிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வாரி வழங்குவதைப் போலவும் பெண்ணாக இருப்பது ஏதோ வேலை பார்க்கும் இடத்தில் மிகப்பெரிய அட்வான்டேஜ் போலவும் தொடர்ந்து சித்திரிக்கப்படுகிறது.

அழகுதான் முன்னேற்றத்துக்கான முதலீடு என்பதாக ஃபேர்னஸ் க்ரீம்கள் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரிதான் இருக்கிறது. பெண்கள் ஒவ்வொரு நொடியும் நம் சமூகத்தில் போராடித்தான் எதை யும் பெறவேண்டி இருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடங்கி, வீட்டு வேலை செய்கிற பெண் வரை தினம் தினம் போராட்டம், திக்கெட்டும் தடைகள்.

இங்கே ஒவ்வொரு பெண்ணும் தன் துறையில் சாதிக்க ஏகப்பட்ட பிரச்னைகளைத் தாண்டியே வரவேண்டி உள்ளது. பெண்ணாக இருப்பதாலேயே சில தனிப்பட்ட சிக்கல்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது.

சாலை ஓரம் என்சைக்ளோபீடியா விற்கும் பெண்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் அனைவருமே வறுமையின் பிடியில் இருக்கிறவர்கள். அதிகாலை 6 மணிக்கே அலுவலகம் வந்து தேவையான அளவு புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பி, பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், மெகா மால்கள் என, மக்கள் கூடும் பகுதிகளுக்கு வந்து நின்றுகொண்டு ஒவ்வொருவரிடமும் புத்தகத்தைப் பற்றி விளக்கிக் கூறி விற்க வேண்டும். இந்தப் புத்தக ஸ்டாக்குகளை அருகில் உள்ள டீக்கடை முதலாளிகளிடம் அன்பாகப் பேசி வைத்துவிட்டு, காலை தொடங்கி இரவு 10 மணிவரை ஒரு புத்தகத்தையாவது விற்றுவிட்டுத்தான் வீடு திரும்பவேண்டிய சூழல்.

தனியாக நின்றாலே 'அதற்குத்தான்’ என்கிற மாதிரி ஆபாசமாகப் பேசும் ஆண்களையும் சமாளிக்க வேண்டும். மதிய உணவைச் சாப்பிட இடமின்றி பஸ் ஸ்டாண்டிலும் சாலையோரப் பூங்காவிலும் சாப்பிட வேண்டும். இயற்கை உபாதைகளை எப்படிச் சமாளிப்பது? பக்கத்தில் உள்ள வீடுகளில் போய்த் தலை சொறிந்தபடி நிற்கவேண்டும். ஆனாலும் இவர்கள் போராடுகிறார்கள். ஒவ்வொரு விநாடியும் வெறித்தனமாக வேலை பார்க்கிறார்கள். தங்களுடைய வறுமையை வெல்ல எதிர்நீச்சல் போடுகிறார்கள்.

பிரபலம் இல்லாத விளையாட்டு வீராங்கனை அவர். திறமைக்குப் பஞ்சமே கிடையாது. 'ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’ என சபதம்போட்டவர். ஆனால், அவரால் தேசிய அணியில்கூட இடம்பிடிக்க முடியவில்லை. காரணம், மேலிடத்துக்குத் தோதாக நடக்கவில்லையாம். கடைசிவரை மாநில அணிக்காகவே விளையாடி இப்போது வேறு வழியின்றி பயிற்சியாளராகிச் சம்பாதிக்கிறார். இருந்தும் நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கிறது. விளையாட்டை அவர் கைவிடவில்லை.

ஒவ்வொரு நாளும் நம் செல்போனுக்கு வரும் கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன் அழைப்புப் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். 'அட கிரெடிட் கார்டு இருக்கட்டும்மா.. உன் குரல் சூப்பரா இருக்கே’ என வழியும் கஸ்டமர்கள் ஒருபக்கம். இருந்தும் போராடித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

துறை எதுவாக இருந்தாலும் ஆண்களுடைய உலகில் பெண்கள் எப்போதும் 'பெண்கள்’தான். சுமாராக... அழகாக... என, எப்படி இருந்தாலும் பிரச்னைதான். அழகு இருக்கும் வரை கொண்டாடப்பட்டு அந்திமக் காலத்தில் அழிந்துபோன எண்ணற்ற நடிகைகளின் கண்ணீர்க் கதைகளை நாம் அறிவோம்.

பணி இடத்தில்தான் தடைகள் என்றால், வீட்டுக்குள்ளேயும் நிலைமை படுமோசம். சிலர் பாடினால் மனசுக்குள் பூப் பூக்கும். அந்தப் பெண்ணும் அப்படித்தான். அவளின் கனவுஎல்லாம் பி.சுசீலா, ஜானகி ஆவதுதான். அவளுடைய குரலுக்காகத் திருமணம் செய்துகொண்ட காதலன், கணவனாக மாறிய பின் குரல்வளையை நசுக்கிப் பாடலுக்குத் தடைபோட்டான்! இன்றைக்கு வீட்டுக்குள் மட்டுமே ஒலிக்கிறது அந்தக் குயிலின் பாட்டு. எதிர்த்துப் போராட மனம் இல்லை. மூன்றுவேளையும் சமைத்துப்போட்டுவிட்டு, துணி துவைத்து, வீட்டைச் சுத்தம்செய்து ஓய்வு நேரத்தில் சீரியல் பார்த்து அழுதபடி 'சராசரி’யாக ஓடுகிறது அவளுடைய வாழ்க்கை. போராடாமல் எதுவுமே கிடைக்காது. ஒருவேளை அவள் கொஞ்சமே கொஞ்சமாக எதிர்ப்பைக் காட்டி இருந்தாலும் இன்னொரு லதா மங்கேஷ்கர் நமக்குக் கிடைத்து இருக்கலாம்.

அன்ஜூம் சோப்ரா,மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி என்கிற பெயர்களை நமக்கு நிச்சயமாக தெரிந்திருக்காது. கிரிக்கெட்டில் சச்சினை தோனியை தெரிந்திருக்கிற அளவுக்கு பெண்கள் கிரிக்கெட்டில் சச்சின் தோனிக்கு இணையாக விளையாடுகிற சாதனைகள் செய்த ஜூலன் கோஸ்வாமியை யாருக்குமே தெரியாது. இருந்தும் தனக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டுதானே இருக்கின்றனர். எனக்கு அங்கீகாரம் கிடைக்கலையே.. என்னை யாரும் புகழலையே என துவண்டு விடவில்லையே!

எரித்தாலும் மறைத்தாலும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழும் எத்தனையோ பெண்கள், வரலாற்று நாயகிகளாக நம் முன்னே உலாவருகின்றனர். ஒரே ஒரு விஷயம்தான். பெண்ணாகப் பிறந்துவிட்டோம் இனி, இப்படித்தான் எனக் கன்னத்தில் கைவைத்தபடி தேம்பித் தேம்பி அழுதபடி தென்றல் சீரியல் துளசியை பார்த்து நம்மை நாமே தேற்றிக்கொள்ளாமல் பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள். உங்களுடைய இலக்கை நோக்கிப் பயணியுங்கள். அதற்கு இடையூறாக கணவன், தந்தை என யார் வந்தாலும் எதிர்த்து நில்லுங்கள்.

சவால்கள் சமாளிப்பதற்கே! அன்னை தெரசாவைப் போல், அருந்ததிராயினைப் போல், இரோம் ஷர்மிளாவைப் போல் உங்கள் பெயரும் சரித்திரத்தின் பக்கங்களில் ஒருநாள் இடம்பெறும்!

வாழ்த்துக்கள்!


(சென்னை என் விகடன் மகளிர் தின சிறப்பிதழுக்காக அடியேன் எழுதிய கட்டுரை,
நன்றி- என் விகடன்)

21 comments:

காவேரிகணேஷ் said...

அருமை அதி..

வாழ்த்துக்கள்...

விகடன்ல ரொம்ப சுருக்கிட்டாங்களோ...

DR said...

அருமையான கட்டுரை... வாழ்த்துக்கள்...

இல்யாஸ்.மு said...

நல்ல கருத்துக்கள்..

மதுரை சரவணன் said...

nalla irukku vaalththukkal

Unknown said...

அதனால்தான் என்னவோ சமாளிக்கும் திறமையை ஆண்களைவிட பெண்களுக்கே கடவுள் அதிகமாக கொடுத்துள்ளார் போலும்.

துளசி கோபால் said...

அருமையா இருக்கு அதிஷா.

மகளிர் சார்பாக வாழ்த்துகின்றேன்.

பி.கு: அந்தத் 'துளசி'யை பார்த்ததில்லை கேட்டோ:-))))

rishvan said...

nice article...

Unknown said...

//என்னவோ பெண்கள் என்றால் மேனேஜர் முதல் பியூன்வரை பல்லைக் காட்டிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வாரி வழங்குவதைப் போலவும் பெண்ணாக இருப்பது ஏதோ வேலை பார்க்கும் இடத்தில் மிகப்பெரிய அட்வான்டேஜ் போலவும்// athisha vino katturai super!!!athellaam unmai.Mele ulla varikalum unmai.vennira aadai nirmaalavirku mel sabaiyil pathavi koduththathu(MGR)thakuthi adippadaiyilthaanaa? cimema nadikaikalukku pathavikal entha adippadaiyil kodukkappadukirathu?thaniyaaka oru pathivu podavum.(mudinthaal)

Raashid Ahamed said...

ஒண்ணு மட்டும் உண்மை ! வேலை அதிகமானால் டென்ஷனாகி தம் அடிக்கிறது எல்லாம் ஆண்கள் தான் பெண் இல்லை. கடும் உழைப்பாளிகள் பெண்கள் தான். பெண்களை வச்சா தான் நல்லா வியாபாரம் ஓடும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. துபாய் போன்ற நாடுகளில் உள்ள நகைக்கடைகளில் 2005 க்கு அப்புறம் தான் பெண் விற்பனையாளர்களை நியமிக்க ஆரம்பித்தார்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள் ! வாழ்த்துக்கள் !

Murali Sridhar V said...

nice

பிரபல பதிவர் said...

ஆனா கொஞ்சமே கொஞ்சம் இடத்த கொடுத்தா மடத்த புடிச்சிக்கிறாங்களே ஏன்...

ஜெ.. மாயா, கனி, மம்தா, இந்திரா, குஷ்பூ, சிம்ரன், சானியா,


யாருக்காவது ஒரு நல்ல டிராக் ரிக்கார்டு இருக்கா???

CS. Mohan Kumar said...

It was mentioned that "Vinoth" in Vikatan. Thought it must be you.

Vetirmagal said...

அருமைங்க! இந்த மாதிரி தெளிவாக எழுதி, மகளிருக்காக குரல் கொடுப்பவர்களை கொண்டாட வேண்டும்.

எழை பெண்களில் இருந்து படித்த, புகழ் பெற்றவர்கள் வரை , ஆண்களின் கொடுமைகளில் இருந்து தப்பித்து போராட்ம் பெண்களுக்கு , தலை வணங்குகிறேன்.

James said...

Vazhthukkal nga....on the money...

perumal karur said...

super..........

Never give up said...

Superb....adhuvum first point veedhiyoram books virpavargalai patri....

Geetha

Never give up said...

Superb.....vazhakamaanadhaaga illamal yadhaartha vaazhvil poraadum pengalai patri pesi yirupathu...
regards
geetha

Anonymous said...

Nice anna.. I am silent reader of your blog/twitter from USA. Reading your hilarious/serious blog,twitts are big thing for "lonely island" like me. Continue your writings... Good Luck..

ARASU said...

ARUMAI THALAIVARE