Pages

13 June 2012

இந்தமான்.. எங்கள் சொந்த மான்..







‘’இதுங்களால நாங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்ங்க... இந்த மானுங்களை புடிச்சிட்டு போயி எங்கயாச்சும் விட்டுட ஏற்பாடு பண்ணுங்க சார்.. எங்களுக்கு இந்த மானுங்க வேண்டாம், இந்த ஊர்ல மனுஷங்களாலயே விவசாயம் பண்ணி பொழைக்க முடியல, இதுல மானுங்களை நாங்க எங்கருந்து காப்பாத்தறது..’’ நாம் சந்தித்த ஒவ்வொரு விவசாயியும் இப்படித்தான் கோபத்தோடு பேசுகின்றனர்! கோதபாளையம் முழுக்கவே மான்கள் என பேச்செடுத்தாலே வெறுப்போடும் எரிச்சலோடும்தான் பதில் வருகிறது.

அவிநாசியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கோதபாளையம். மிகச்சிறிய கிராமம்தான். ஊருக்குள் நுழைந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் நீண்ட கொம்புகள் கொண்ட மான்களும் மயில்களும் கூட்டம் கூட்டமாக தான்தோன்றியாக சுற்றிக்கொண்டிருக்கிறன. நிறைய தென்னந்தோப்புகளும் சின்ன சின்ன விவாசயநிலங்களும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டங்களையும் ஆங்காங்கே நிழல்தரும் மரங்களையும் பார்க்க முடிகிறது. துள்ளி ஓடும் மான்களையும் தோகைவிரித்து நிற்கும் மயிலையும் யாருக்குத்தான் பிடிக்காது. ஆடுமாடுகள் போல சர்வசாதாரணமாக பொட்டல்வெளியில் மேயும் மான்கள் கூட்டத்தினை எங்கும் பார்க்க முடிகிறது.

இவைபோக இந்தப்பகுதியில் நாற்பதுவிதமான அரிய பறவையினங்கள் வாழ்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விடுமுறைதினங்களில் குழந்தைகுட்டிகளோடு பிக்னிக் சென்றுவர மிகச்சிறந்த இடம்தான்!
ஆனால் இது நிச்சயமாக வனாந்திர பகுதி கிடையாது. சுற்றுலா சென்றுவர ஏற்ற வசதிகள் கிடையாது. விவசாயிகள் வசிக்கும் சாதாரண கிராமம்தான். அந்த ஊரின் பரப்பளவே 150ஏக்கர்கள்தான் இருக்கும். இந்த மிகச்சிறிய இடத்தில்தான் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டம் சுற்றிக்கொண்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எங்கிருந்து வந்தன இந்த மான்கள்? யார் கொண்டுவந்து விட்டது? ஊர்காரர்களுக்கு இந்த மான்கள் மேல் ஏனிந்த கொலைவெறி? சுற்றுலா வாய்ப்புகள் அதிகமிருக்கிற இப்படிப்பட்ட ஒரு அற்புதமான இடத்தில் ஏன் இன்னமும் மான்களுக்கான சரணாலயம் எதுவும் அமைக்கப்படவில்லை..? என இன்னும் எண்ணற்ற கேள்விகளோடு இந்த மான்களுக்கு ஆதரவாக போராடிவரும் கோதபாளையத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளை சந்தித்து பேசினோம்.

‘’காரமடை பக்கத்துல பொன்னூத்துனு ஒரு இடம் இருக்குதுங்க.. அங்கிருந்து ஒரு ஓடை ஒன்னு எங்க ஊரு வழியாக பாயுதுங்க! அந்த ஓடையில் மழை பெஞ்சுதுன்னா மட்டும்தான் தண்ணி போகும்.. இல்லாட்டி முள்ளுச்செடிங்கதான் வளர்ந்து மண்டிக்கிடக்கும்! அந்த ஓடை வழியாதான் இரண்டு மூணு மான்கள் இந்த ஊருக்கு முதன் முதலா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால வந்துது. அப்ப நானும் என்னுடைய உறவினரான குருசாமியும் அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.. அப்பருந்து அதுங்க இந்த ஊர்லதான் வளருது, தண்ணீரும் கொஞ்சம் தாவரங்களும் கிடைச்சாலே இந்த மான்களுக்கு போதும்.. நல்லா இனவிருத்தி செஞ்சு வளர்ந்துடும். மூணு மானுங்க இன்னைக்கு முன்னூறு மானுங்களா ஆகிருக்கு’’ என ஒரு குட்டிஃபிளாஷ் பேக்கை சொல்லத்தொடங்கினார் விவசாயி பாலு.

பட்டப்படிப்பு முடித்தபின்னும் விவாசயம்தான் செய்வேன் என அடம்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் பார்க்கும் இளைஞர் பாலு. அவரும் அவருடைய உறவினர் குருசாமியும்தான் இந்த மான்களின் பாதுகாப்புக்காக அரசிடமும் மக்களிடமும் தினமும் போராடுகின்றனர். இவர்களுடைய தோட்டத்திலும் எப்போதும் மான்கள் மேய்ந்துகொண்டேயிருக்கின்றன. பயிர்களை சேதப்படுத்துகின்றன. வேலிகளை உடைத்துவிடுகின்றன. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. தங்களுடைய நிலத்திலேயே மான்களுக்காக ஒரு சின்ன தண்ணீர் குட்டையை ரெடிபண்ணி நீர்விடுகின்றனர். இதனாலேயே ஒட்டுமொத்த கிராமமும் இந்த இருவர் மீதும் கொலைவெறியில் இருக்கிறது. இவர்களால்தான் மான்கள் பெருகின என்று நம்புகின்றனர்.

‘’அதுக்கென்னங்க தெரியும் இது தனியார் தோட்டம், இங்க பயிர்களை மேயக்கூடாதுனு, பசிச்சா கிடைச்சத சாப்பிடுதுங்க.. அதுங்களுக்கு யாரு இருக்கா.. அநாதையா நிக்கற இந்த மான்களுக்கு அட்லீஸ்ட் நாங்க ரெண்டுபேருமாச்சும் ஆதரவா இருக்கோம்னுதான் அதை அப்படியே விட்டுட்டோம். என்னோட தோட்டத்துல முப்பது ஏக்கரை வெறும் பொட்டல்காடாவே விட்டுட்டேன் இந்த மானுங்களுக்காக.. அங்கதான் எப்பயும் இதுங்க மேஞ்சுகிட்டு திரியும்.. சில சமயம் சாலைகள்ல வண்டில அடிபட்டு, இல்லாட்டி உடல்நிலை சரியில்லாம இருக்கும்போது நாங்க ரெண்டுபேரும்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுபோயி வைத்தியமும் பாக்க வேண்டியிருக்கும்’’ என்கிறார் குருசாமி.

வெறும் மூன்றே மூன்று மான்கள் பதினைந்தாண்டுகளில் பல்கி பெருகி ட்ரிபிள் செஞ்சுரி அடித்துவிட்டன. முதலில் கிராமவாசிகளுக்கு மான்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை பெருக பெருக , மான்களிடையே ஏற்பட்ட உணவு மற்றும் நீர் பற்றாக்குறை அவற்றினை பொட்டல்காடுகளில் இருந்து வயல்களுக்குள் இழுத்துச்சென்றன. தோட்டங்களுக்குள் புகுந்தால் சர்வ நாசம்தான்! மழை வந்தால்தான் விவசாயம் என்னும் நிலையில் இருக்கிற விவசாயிகள் பெருந்தன்மையோடு மான்களை விட்டுவிடுகிற மனநிலையில் எல்லாம் இல்லை! இங்குதான் சிக்கலே தொடங்குகிறது!

‘’விவசாயிகளை சொல்லியும் தப்பில்லைங்க, வருஷம் பூரா கஷ்டப்பட்டு பயிர் பண்ணினா, இந்த மானுங்க கூட்டமா போயி ஒரே நாள்ல மொத்தமாக நாசம் பண்ணிட்டா யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும், ஆனால் அதற்காக மான்களை கொல்லச்சொல்வதும், அவற்றை அப்புறப்படுத்த முயல்வதும் சாத்தியமில்லாத ஒன்று என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் சிலர் கள்ளத்தனமாக வேட்டையாடுபவர்களை ஊக்குவிக்கறாங்க.. அவங்களுக்கு அடைக்கலம் கொடுக்கறாங்க.. ஆனாலும் நாங்கதான் வனத்துறைகிட்ட பேசி வேட்டைகளை தடுத்து நிறுத்திருக்கோம். பத்துக்கும் மேற்பட்ட மான்களை வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்டுருக்கோம். இப்போதான் வனத்துறை இங்கே இரண்டு வேட்டை தடுப்பு ஆட்களை நியமிச்சிருக்காங்க’’ என்கிறார் பாலு.

வேட்டையாடுபவர்களிடமிருந்து இந்த இருவரும் கஷ்டப்பட்டு மான்களை காப்பாற்றினாலும், சில நேரங்களில் தண்ணீருக்காக, உணவுக்காக பிரதான சாலைகளுக்கே மான்கள் வந்துவிடுவதால் இந்த மான்கள் விபத்துகளில் உயிரிழக்கவும் நேருகிறது. அதோடு வயல்களில் வைக்கப்பட்டிருக்கிற கண்ணிகளிலும் சிக்கி பல மான்கள் உயிரிழந்துள்ளன. ஒருபக்கம் இப்படி மாண்டுபோகும் மான்கள் இன்னொரு பக்கம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சோகத்தில் நிற்கும் விவசாயிகள்! இதற்கு தீர்வுதான் என்ன?
இந்த ஊருக்கு அருகில் பரந்துவிரிந்துகிடக்கும் புதுப்பாளையம் ஏரியில் பாதியை மான்கள் சரணாலயமாக்கலாம் என்கிறார் பாலு. அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் பாலுவும் குருசாமியும். அரசு தரப்பிலிருந்து இதுவரை ஒரு அசைவு கூட இல்லை! ஏரியை சரணலாயமாக்க கூடாது என சிலர் உள்ளூரில் குரல் கொடுக்க ஆரம்பித்தும் விட்டனர்.

‘’வனத்துறையும் பொதுப்பணித்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய பிரச்சனை, ஆனா அவங்க ரெண்டுபேருமே வெவ்வேற திசைல நிக்கறாங்க.. வனத்துறையோ வேணுமின்னா உங்க நிலத்தை கொடுங்க சரணாலயம் ஆக்குறோம் என எங்கள் அடிமடியிலேயே கைவைக்க பார்க்கின்றனர். மான்களை இத்தனை காலமும் காப்பாற்றியதற்கு இதுதான் அரசாங்கம் தரும் பரிசா..’’ என கோபமாக பேசுகிறார் குருசாமி.
திருப்பூரின் முன்னாள் கலெக்டர் இந்த இடத்தில் மான்கள் சரணாலயம் அமைக்க திட்டங்கள் தீட்டினாலும், ஆட்சிமாற்றத்தில் கலெக்டரும் மாற்றப்பட அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. உள்ளூர் விவசாயிகளோ இந்த மான்களுக்கு மயக்க ஊசி போட்டு காடுகளுக்குள் கொண்டு போய் விட வற்புறுத்துகின்றனர்.

வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது ‘’இந்த மான்களை நிச்சயமாக இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வதெல்லாம் சாத்தியமேயில்லாத ஒன்று. ஒவ்வொரு மானையும் தேடி கண்டுபுடித்து ஊசி போட்டு மயக்க நிலைக்கு கொண்டு போவதெல்லாம் நடக்காத காரியம். சின்ன அதிர்ச்சி கூட மிகவும் வீக்கான இதயம் கொண்ட மான்களை கொன்றுவிடும். சரணாலயம் அமைக்க திட்டமிட்டாலும் ஏரி வேறு துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். உடனடியாக அரசு இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து ஒரு தீர்வை எட்டவில்லையென்றால் இந்த மான்களின் எண்ணிக்கை இன்னும் பெருகி விவசாயிகளுக்கு தொல்லை அதிகரிக்கவே செய்யும்,’’ என்றார்.

இப்பகுதியை மான்கள் சரணாலயமாக அறிவித்து, மான்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்புக்காக சுற்றிலும் கம்பி அமைக்கவும் திட்டமிடப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வனத்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறையினர் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளையும் காப்பாற்றும், மான்களையும் வாழவைக்கும் , அதோடு சுற்றுலா தளங்கள் ஏதுமில்லாத திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு நல்ல சுற்றுலாதளமும் கிடைக்க வழிசெய்யும்.



நன்றி - புதியதலைமுறை