05 June 2012

பச்சை பிசாசு


நம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு! அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.
தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக வளர்ந்து கசகசவென நிற்கிறது! இந்த ஆகாயத்தாமரை பார்க்க பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் அதிகம்.

ஆகாயத்தாமரையின் இலைகள் நல்ல தடிமனாக இருப்பதை பார்த்திருக்கலாம். அவை அதிக நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டவை. இந்த தடிமனான இலைகளின் ஊடாக நடக்கிற நீராவிப்போக்கு ஏரி குளங்களின் தண்ணீர் அளவை வெகுவிரைவில் மானாவாரியாக குறைத்துவிடுகின்றன. இதன் தண்டிலிருந்து புதிய கிளைகள் உருவாவதால் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மிக வேகமாக வளரக்கூடியது.

இத்தாவரங்கள் இறந்து மட்கிப்போவதால் நீர் அசுத்தமடைவதாக கூறப்படுகிறது. வெள்ளம் மாதிரியான நேரங்களில் நீரைத் தடுத்து ஊருக்குள் தண்ணீர் புகந்து நாசம் விளைவிக்கவும் வழியமைத்துக்கொடுக்கின்றன. ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஏரிகளில் மீன்பிடிக்கவோ படகுவிடவோ வாய்ப்பேயில்லை. இவை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளன.

இவற்றை அடியோடு அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்த இயலும். ஆனால் நீர் உபயோகிக்க இயலாத விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பெரிய ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி அழித்தாலும் ஒரே மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு வேலையை மீண்டும் தொடங்கிவிடும் இந்த பச்சை பிசாசுகள்! இதன் ஒற்றை விதை முப்பது ஆண்டுகள் சாகாவரம் பெற்றவை! ஒருவிதை போதும் பலநூறு ஏக்கர் நீர்நிலையை காலி பண்ண.. சரி இந்த அழிக்கமுடியாத நரகாசுரனை என்னதான் செய்வதாம்! ‘’அழிக்கமுடியாத அழிவு சக்திகளை ஆக்கசக்தியாக மாற்றமுடிந்தால் எப்படி இருக்கும்’’ என்று சிரித்துக்கொண்டே நம்மோடு பேசினார் தாராபுரம் முகமது கபீர்!
தாராபுரம் பகுதியில் விவசாய ஆலோசகராக இருப்பவர் அகமது கபீர். ஆகாயத்தாமரையை சில நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியும் , அதன்மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவை விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவை. ஆகாயத்தாமரையை பயன்படுத்தி பணம்கூட சம்பதிக்க முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.

‘’இந்த ஆகாயத்தாமரை நீரை அதிகமாக உறிஞ்சுவதாக சொல்லப்பட்டாலும் அவை நீரை மட்டுமே உறிஞ்சுவதில்லை அதோடு நீரில் கலந்திருக்கிற ஆர்சனிக் மாதிரியான நஞ்சுப்பொருட்களையும் ஈயம் மாதிரியான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் சேர்த்துதான் தன்னகத்தே எடுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக யாருமே உபயோகிக்காத கால்வாய்களில் ஏரிகளில் இருக்கிற மிகமோசமாக தண்ணீர் மேலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. அதோடு வெயில்காலங்களில் குருவிகள்,கிளிகள்,கொக்குகள் முதலான பறவைகளுக்கு தண்ணீர் தரும் மிகமுக்கியமான வாட்டர் சோர்ஸாகவும் ஆகாயத்தாமரை இலைகள் திகழ்கின்றன, குருவிகள் தன் அலகால் இந்த இலைகளை ஒரு குத்து குத்தினால் போதும் தண்ணீர்கொட்டும்! அதோடு ஆகாயத்தாமரைக்கு கீழே நல்ல வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையிருப்பதால் மீன்கள் வளரவும் ஏற்றதாக இருக்கும்.

கேரள மாநிலம் முழுக்க எங்கு பார்த்தாலும் எல்லா நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரைகளை காண முடியும். ஆனால் அவற்றால் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அந்த மக்களுக்கும் அதுகுறித்த கவலைகள் கிடையாது. காரணம் அங்குள்ள நீர்நிலைகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்.

தமிழ்நாடு மாதிரியான இடங்களில் மழைகாலங்களில் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் அது குறைந்துவிடும் என அஞ்சுகிறோம். நம்முடைய அச்சம் சரியானதுதான். தண்ணீர் குறையும் என்பது நிஜம்தான். அதே சமயம் இந்த ஆகாயத்தாமரைகள் அசுத்தமான நீர் நிலைகளில்தான் அதிகம் வளர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுத்தமான நீரில் இவை வளரவே வளராது. மக்கள் பயன்படுத்தும் ஏரிகளிலும் வளரும் ஆகாயத்தாமரைகளை கட்டாயம் அப்புறப்படுத்துவது அவசியம்.

ஆனால் யாருமே பயன்படுத்தாதா உதாரணத்துக்கு கூவம் மாதிரி இடங்களின் நீரை யாருமே பயன்படுத்தப்போவதில்லை அங்கே வளரும் ஆகாயத்தாமரைகளை அப்படியே விட்டுவிடலாம். சுற்றுசூழலுக்கும் பறவைகளுக்கும் நல்லதுதான். மழைக்காலங்களில் மட்டும் அவற்றை அகற்றிவிட்டால் வெள்ளம் உண்டாவதை தடுக்க இயலும்.

இந்த ஆகாயத்தாமரையை பயன்படுத்தி நம்மால் பயோ கேஸ் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதிகம் உபயோகிக்காத நீரில் இவை வளர்வதால் குறைந்தபட்சம் அந்த நீர் சுத்தமாகிறதே என நினைத்து மகிழ்ச்சியடையலாம்!,’’ என்கிறார் கபீர்.

கேரள மாநிலம் கொட்டாபுரத்தில் உள்ள கிட்ஸ் (KIDS) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதை செய்தும் காட்டியுள்ளது. இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எந்திரந்தின் மூலமாக ஆகாயத்தாமரை கூழாக்கப்பட்டு, சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வைக்கின்றனர். அதன்மூலமாக பயோ கேஸ் தயாரிக்கின்றனர் இந்த கிட்ஸ் அமைப்பினர். 700 லிட்டர் ஆகாயத்தாமரை கரைசலைக்கொண்டு 3600லிட்டர் பயோகேஸ் தயாரிக்கின்றனர். 15நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளை அகற்றி புதிய ஆகாயத்தாமரைகளை கொட்ட வேண்டும் அவ்வளவுதான்!

‘’எங்களுடைய கிட்ஸ் கல்லூரி கேன்டீனின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையையும் ஆகாயத்தாமரையைக் கொண்டே பூர்த்தி செய்கிறோம்’’ என்று பெருமையாக சொல்கிறார் அந்த அமைப்பின் ஜியார்ஜ்.

வெறும் பயோகேஸ் தயாரிப்போடு நின்றுவிடாமல் இந்த ஆகாயத்தாமரையை கொண்டு மண்புழு உரமும் தயார் செய்கின்றனர். நன்றாக அரைக்கப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளை சாணக்கரைசலோடு கலந்து தேங்காய்நாரின் மீது போட்டு வைத்து அதில் கொஞ்சம் மண்புழுக்களைவிட்டால் சில நாட்களில் மண்புழு உரம் தயார்! உரம் மட்டுமல்ல இந்த ஆகாயத்தாமரையை காயவைத்து அதன் நாரிலிருந்து நல்ல கைவினை பொருட்களை உள்ளூர் பெண்களை கொண்டே செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

‘’வாழைநார் போலவே இதற்கு நல்ல உறுதியான நார்த்தன்மை உண்டு. அதனால் இதன்மூலம் செய்கிற கைவினை பொருட்களுக்கு நல்ல மதிப்பு உண்டு, நம்மூர் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் இதனை செய்ய முன்வரலாம். அல்லது அரசே இதற்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வரவேண்டும், தற்போது கேவிஐசி ( காதி மற்றும் கிராமிய தொழில்கள் நிறுவனம்) எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் கலன்களை அறிமுகம் செய்துள்ளது. சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது. சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் தாராபுரம் முகமது கபீர்.

நம்முடைய நீர்நிலைகளை காக்க என்னென்னவோ முயற்சிகளை நம் அரசும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டே வருகின்றன. இருப்பினும் இந்த ஆகாயத்தாமரை பிரச்சனைக்கு இதுவரை ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்திடாத பட்சத்தில் கேரளாவின் கிட்ஸ் அமைப்பினை முன்மாதிரியாக கொண்டு இந்த ஆகாயத்தாமரையை நல்ல விதமாக உபயோகித்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் பயோகேஸ் உற்பத்தி மாதிரியான விஷயங்களை ஊக்கப்படுத்தலாம்.

(நன்றி - புதிய தலைமுறை)

17 comments:

Anonymous said...

Arumaiyana thakaval @drtrm

kaarthik raj said...

அட ...!!!! எல்லாம் புதிய,வியக்கும் வகையான தகவல்கள் ..
அவசியமான பதிவு
................அதிஷா வுக்கு நன்றி

Anonymous said...

very interesting. thanks for the info.

குடந்தை அன்புமணி said...

நல்ல தகவல்கள்.
எரிவாயுக் கலன்கள் அமைப்பது பற்றி சற்று விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்...

Vetirmagal said...

True. A nice timely article.

Water Hyacinth used to be a problem in Hyderabad some years back. Govt, called for specialists from Japan to clear it!

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

kumar said...

தோழரே!பத்து லட்சம் ஹிட்சை கடந்ததை தற்செயலாக கவனித்தேன்.
உங்கள் அடக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
கேபிள் போல நன்றி நன்றி என போட்டு தாக்க வேணாமா?
போங்க பாஸ்.

பிழைத்திருத்தி said...

Oru nalla katturai.. Aagaya thamarai patriya adippadai arivukooda illaamal irundhirukkindrome ena unarndhen..

Anonymous said...

good post after a long period of time...

Raashid Ahamed said...

இந்த வெங்காய தாமரையில்(அப்புடி தான் எங்க ஊர்ல சொல்வாங்க)இத்தனை நல்லதும் இருக்கு என்பது ஆச்சர்யபட வைக்கிறது. அப்புறம் ஏன் அதை பச்சை பிசாசு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

Anonymous said...

very intersting and nice.....its not hyancith its hyacinth....
www.hindu.com/yw/2007/06/08/stories/2007060850040200.htm

gnani said...

நல்ல கட்டுரை. இந்த மாதிரி சக்தியைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு எதற்கு பேஸ்புக்கில் அற்ப விஷயங்களில் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ? ரிலாக்ஸ் செய்யவேண்டுமானால், காதில் ஹெட்போன் போட்டுக் கொண்டு நல்ல பாட்டு கேட்டபடி சவாசனம் செய்யுங்கள்.

perumal karur said...

நல்ல தகவல் நன்றிங்க!!

kailash said...

Recently I read in Velachery Post that Chennai Corp. is spraying some chemical to kill these plants , they said this chemical wont affect the water . As you said if it can be used to generate bio gas or if it purifies toxins then we dont need to spray chemicals in bad water storage aras right .

ஏ.பி.தீன் said...

கட்டுரை விருவிருப்பாக உள்ளது. பல்கிப்பெருகி உலகைக் கெடுப்பதில் மனிதனை விடவா இந்த ஆகயத்தாமரைகள் செய்துவிடப் போகின்றன. நம்மையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.

Anonymous said...

hello athisa, good post. indha pudhiya thalaimurai idhalin achchu vadiva santhaathaarar aavadharkkaaba vazhimuraigalai enakku koora mudiyumaa? nandri _ dinesh (mobile-il irundhu karuththu therivippadhaal anonymous therivu seigiren. mannikkavum)

Uma said...

மிக அருமையான பதிவு.தூத்துக்குடி மாவட்டம், ஏரலிலிருந்து செபத்தையாபுரம் வரை குளம் முழுவதும் பரவியிருக்கும் ஆகாயத்தாமரைகளை பார்க்கும்போதெல்லாம் இதற்கு ஒரு விடிவுகாலம் வராதா என எண்ணுவேன். நம்பிக்கைகீற்று தென்படுகிறது.