Pages

16 May 2012

சிம்ரனின் காதலன்!


கட்டிகிட்டா சிம்ரனைத்தான் கட்டிப்பேன்… இல்லாட்டி கல்யாணமே பண்ணிக்கமாட்டேன் என நாலாம்ப்பு படிக்கும்போதே காதல்வெறியோடு இருந்தவன் சாமிநாதன். அனைத்து நாலாம்ப்பு படிக்கும் பையன்களை போலவே அவனும் சிறுவனாகவே இருந்ததால் அவன் பேச்சை யாருமே மதிக்கவில்லை.

சாமிநாதனின் அத்தைக்கு ஒரு விநோதமான பழக்கமிருந்தது. இரண்டாப்பு படிக்கும் தன் மகளைக் காட்டி ‘’என்னடா என் மகள கட்டிக்கிறியா’’ என்று சொல்லி விட்டு லூசுமாதிரி சிரிப்பாள்.

‘’இல்லீங்த்த என்ர மனசுல சிம்ரனுக்கு மட்டுந்தானுங் எடம்.. வேறாரையும் கட்டிக்கமாட்டேனுங்’’ என கோவத்தோடு சொல்வான். அதற்கும் அதே அத்தை அதே லூசு போல சிரிப்பாள். சாமிநாதன் தன்னுடைய காதலைப்பற்றி யாரிடம் சொன்னாலும் கேட்டவரெல்லாம் அத்தைபோலவே சிரித்தனர்..

நண்பன் வடிவேலு மட்டும்தான் அவனுக்கிருந்த ஒரே ஆறுதல். ‘’மாப்ள! சிம்ரன் அக்காவை நீதான் கட்டிக்கோணும், இல்லாட்டிப்போனா தூக்குல தொங்கி சாகோணும், டே மாப்ள... அந்தக்கா மட்டும் முடியாதுன்ட்டும்.. உனக்கொசரம் கொலைகூட பண்ணுவேன்.. வெட்டியேபோடுவேன்’’ என்று உரத்த குரலில் சொல்லுவான் வடிவேலு. சாமிநாதனின் காதலை இந்த ஊரிலேயே ஏன் இந்த உலகத்திலேயே புரிந்துகொண்ட ஒரே ஆத்மா வடிவேலு மட்டும்ந்தான்.

கடுமையான மனப்போராட்டங்களுக்கு நடுவே வடிவேலுவின் பேச்சுதான் சாமிநாதனுக்கு வெந்தபுண்ணில் வெண்ணெயை தேய்த்தது போல இதமாக இருந்திருக்கிறது. ஒவ்வொருமுறையும் சிம்ரனைப்பற்றி வடிவேலு பேசும்போதெல்லாம் குஷியாகிவிடுவான் சாமிநாதன். ஊரே துப்பினாலும் வடிவேலு மட்டும் ஏன் சாமிநாதனின் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கணும்? ஒரு காரணம் இருந்தது!

அதே காலகட்டத்தில் சிம்ரன் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு வேறுமாதிரி ஃபேமிலி நடிகையாக புகழ்பெற்றிருந்த தேவயானியை வடிவேலு உயிருக்கு உயிராக உளமார நேசித்தான். அவனுடைய காதலையும் இந்த சமூகம் ஏற்கவேயில்லை. அவனுடைய அவலக்குரலுக்கு செவிமடுக்கவேயில்லை. அவனுடைய சுற்றமும் சமூகமும் அவனுடைய காதலை பார்த்து லூசுபோல சிரித்து சிரித்து வெறுப்பேற்றியது. அவனுடைய ஒரே ஆறுதலாக சாமிநாதன்தான் இருந்தான்.

‘’மச்சான் பார்ரா.. தேவயானி மட்டும் என்ர லவ்வ ஏத்துக்கலைனு வச்சிக்கோ.. நான் செத்துடுவேன் மச்சான்.. அப்படி நான் செத்துட்டா.. என்ர லவ்வு எப்படி பட்டதுனு நீதான் மச்சான் தேவயானிகிட்ட சொல்லோணும்’’ என அழுது புலம்புவான் வடிவேலு.

அதை கண்களில் பெருக்கெடுக்கும் நீரோடு கேட்டுக்கொண்டிருப்பான் சாமிநாதன். ‘’ மச்சான்.. தேவயானி உன்ர லவ்வ ஏத்துக்கலைனா என்ரா.. நான் சிம்ரனை கட்டிகிட்டதும்.. மை வொய்ஃப்கிட்ட சொல்லி தேவயானி அக்காகிட்ட உனக்கொசரம் பேச சொல்றேன்.. உங்கல்யாணத்த நான் நடத்திக்காட்டுறேன்டா’’ என ஆறுதலாக நாலு வார்த்தை நறுக்கென்று பேசிவிடுவான். வடிவேலு குஷியாகிவிடுவான். இருவருமாக சேர்ந்து பக்கத்தூட்டுக்காரன் தோட்டத்தில் புகுந்து கடலைக்காய் திருடி தின்று கொண்டாடுவார்கள்.

கோவையிலிருந்து துப்புடி தூரத்தில் இருந்தது செல்வபுரம். அங்கிருக்கிற மாநகராட்சி பள்ளியில்தான் சாமிநாதனும் வடிவேலுவும் படித்தனர். கூடபடிக்கும் பையன்களெல்லாம் கிரிக்கெட்,ஃபுட்பால் ஆடிக்கொண்டிருந்த போது இந்த இருவர் மட்டும் சிம்ரனையும் தேவயானியையும் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தனர்.

திக்கற்று பறக்கும் பறவையில் இறக்கையிலிருந்து உதிர்ந்த சிறகொன்று இலக்கேயில்லாமல் காற்றில் அலைந்தபடி திரியுமே அதுமாதிரி இலக்கியமாக சாமிநாதனும் வடிவேலுவும் தோளில் கைபோட்டுக்கொண்டு வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் சிம்ரன் நடித்த நேருக்குநேர் படம் ரிலீஸானது. அந்தப்படத்தை சாமிநாதன் பத்துமுறையாவது பார்த்திருப்பான். சாமிநாதனுக்காக, அவன் நட்புக்காக, அவனுடைய அன்புக்காக வடிவேலுவும் அந்தப்படத்தை பத்துமுறையும் பார்த்து தொலைக்கவேண்டியிருந்தது.

டிக்கட் செலவுக்காக வடிவேலுதான் எப்போதும் கடுகு டப்பாவிலிருந்து காசு திருடிக் கொண்டுவருவான்! திரையில் சிம்ரன் பெயர் வரும்போதெல்லாம் சாமிநாதன் கைதட்டி ஓஓவென கூச்சல் போடுவான்.

சாமிநாதனின் அன்புக்காக அவன் நட்புக்காக வடிவேலுவுக்கு சிம்ரன் மேல் அவ்வளவு ஈடுபாடில்லையென்றாலும், அக்கா முறை என்றாலும் வடிவேலுவும் விசிலடித்தான். தன் ஆள்காட்டி விரலும் கட்டைவிரலும் தேய தேய விசிலடித்தான்.

‘’மச்சான் எனக்காக இவ்ளோ கஷ்டப்படறியே உனக்கு நான் என்னடா செய்வேன்’’ என்று கேட்பான் சாமிநாதன்.

‘’சிம்ரன் அக்காவ கலியாணம் பண்ணி சந்தோஷமா இருந்தாலே போதும்டா’’ என்று புன்னகையோடு கூறுவான். அவன் அப்படிச்சொல்லும்போதெல்லாம் சாமிநாதனுக்கு அழுகை அழுகையாக வரும்... ஆனால் வீரர்கள் அழக்கூடாதென்பான் வடிவேலு. அதனால் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்வான். விழியோரம் துளிர்க்கிற ஒற்றை துளி கண்ணீரை மட்டும் அவன் பார்க்காத போது துடைத்துக்கொள்வான்.

சிம்ரன் சோம்பல் முறிப்பது போல கையை வானுக்கு தூக்கி இடுப்பை இப்படியும் அப்படியும் ஆட்டி நடனமாடுவது சாமிநாதனுக்கு சுத்தமாக பிடிக்காது.. இதெல்லாம் ஒரு டேன்ஸா.. நல்லாவேயில்ல கல்யாணம் ஆனபின்பு இதுமாதிரி ஆடக்கூடாது என சொல்லிவிடவேண்டும் என்று வடிவேலுவிடம் சொல்லி வருத்தப்படுவான். அதை வடிவேலுவும் ஆமோதிப்பான். ‘’ஆமா மச்சான்.. நல்லாவே இல்ல.. கண்டீசனா சொல்லிப்போடு.. இதுமாதிரி ஆடக்கூடாதுனு, இல்லாட்டி அவ்ளோதான்’’ என்பான்.

வடிவேலுவுக்காக சாமிநாதனும் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தேவயானி படங்களையெல்லாம் பார்த்துத்தொலைய வேண்டியிருக்கும். வடிவேலு ஒருவனுக்காகவே காதல்கோட்டை படத்தை இருபது தடவை பார்த்து நொந்துபோயிருக்கிறான். அவனுக்காக தேவயானி வரும்போதெல்லாம் வேறு வழியில்லாமல் ரேகை தேய கைதட்டி ஆரவாரம் பண்ணுவான்.

சிம்ரன் பெயருக்கு பக்கத்தில் சாமிநாதன் தன்னுடைய பெயரை எழுதிபார்த்து சிலிர்த்துக்கொள்வான். சிம்ரன் போட்டோக்களும் ஸ்டிக்கர்களும் கதவெல்லாம் அலங்கரிக்கும். தினத்தந்தியில் வருகிற சிம்ரன் பட ஸ்டில்களை கத்தரித்து நோட்டில் ஒட்டிவைப்பான். சிம்ரனுக்காகவே அவர் நடித்த அவள் வருவாளா,பூச்சூடவா..மாதிரி மொக்கைப்படங்களையெல்லாம் பல முறை பார்த்திருக்கிறான். சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி சிம்ரனை சந்தித்து அவரிடம் என்காதலை சொல்லிவிடவேண்டும் என நினைப்பான். அடிக்கடி பள்ளிமாணவர்களிடம் சென்னைக்கு செல்லும் ரயில் எதுவென்று விசாரித்துக்கொண்டிருப்பான்.

வடிவேலுவுக்கு இதுமாதிரி ஜில்கா லவ்வாங்கி வேலைகள் தெரியாது. சாமிநாதனைப் பார்த்து அதேமாதிரி தேவயானிக்காக வடிவேலுவும் செய்வான். ஸ்டிக்கர் ஒட்டுவான், தேவயானி பெயருக்கு பக்கத்தில் தன் பெயர் எழுதி கஷ்டப்பட்டு சிலிர்ப்பான், தினத்தந்தி கட்டிவ் வெட்டிங்கும் உண்டு! சென்னைக்கு போயி தேவயானிய பார்த்து லவ்வச்சொல்லிப்போடணும்டா மாப்ள..! என்பான். காதலிக்கறதுல கூடவா காப்பியடிப்பீங்க சொந்தமா யோசிங்கடா என நினைத்துக்கொள்வான் சாமிநாதன். அதோடு தன் மனசட்டையின் காலரை உயர்த்திக்கொள்வான்.

இப்படி உன்னதமாக போய்க்கொண்டிருந்த உயர்தரமான நவீன நட்புக்கும் காதலுக்கும் ஆப்படிக்க ஒரு நாள் வந்தது. அந்த நாளை சாமிநாதனின் மாமாதான் பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கிவைத்தார்.

‘’ஏன்டா மருமவனே பேரூர்ல சூட்டிங்காம்... நம்ம காட்லதான் சிம்ரனும் தேவயானியும் வந்துருக்கறதா சொல்றாங்க.. என்ரா நீ போலையா’’ என மாமா சாமிநாதனிடம் சொன்னதுதான் தாமதம். வானத்திலிருந்து ஒரு தேவதை தன்னைப் பார்ப்பதற்காக பேரூர் கோயில் வாசலில் காத்திருப்பதை போல நினைத்துக்கொண்டான். உடனே வடிவேலு வீட்டை நோக்கி ஓடினான். விஷயத்தை சொன்னான்.

சிம்ரன் வந்திருப்பதை மட்டும்தான் சொன்னான். அவன் அதை பெரிதாக சட்டை செய்யாமல் ‘’மச்சான் எனக்கு உடம்பு சரியில்ல.. நீ மட்டும் போயிட்டு வாயேன்’’ என்றான். சாமிநாதனுக்களு பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது. இருந்தும் வந்த கோபத்தை மூளையிலிருந்து கைகள் வலியாக உள்ளங்கைக்கு டிரான்பர் பண்ணி அதை அப்படியே வைத்து அமுக்கிக்கொண்டான்.. அவனுடைய அலட்சிய மனநிலையை கண்டு தேவயானி விஷயத்தை சொல்லாமல் அவனை பழிவாங்க துடித்தான். இருந்தும் அதி உன்னதமான நட்பு சாமிநாதனின் கோபத்தை பஸ்பமாக்கியது.

வடிவேலுவிடம் எதையுமே மறைக்கவில்லை. வடிவேலுவின் நட்புக்காக,அன்புக்காக ‘’மாப்ள சிம்ரன் மட்டுமில்லடா.. தேவயானியும்தான் வந்திருக்காங்க’’ என்றான். வடிவேலு முகத்தில் பெட்ரமாக்ஸ் லைட் எரிய ஐந்தே நிமிடத்தில் அவனுடைய ஒடக்கிளாஸ் சைக்கிளோடு ரெடியாகிவிட்டான்! வடிவேலு நன்றாக முகங்கழுவி பான்ட்ஸ் பவுடர் போட்டுக்கொண்டு ரெடியாகிவிட்டான். இருப்பதிலேயே நல்ல சட்டையை எடுத்துமாட்டிக்கொண்டான். உடனே சாமிநாதனும் ''மாப்ள ஒரு அஞ்சு நிமிஷம்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்கோடி நன்றாக மூன்று முறை சோப்பு போட்டு முகங்கழுவி கோகுல் சான்டல் பவுடர் போட்டு, நல்ல சட்டையை மாட்டிக்கொண்டு, பட்டனில்லாத டவுசரை நன்றாக அரணாகயிற்றில் இழுது மாட்டிக்கொண்டு நெற்றியில் திருநீரு போட்டுக்கொண்டு கிளம்பினான்.

வடிவேலுதான் மாங்கு மாங்கென்று சைக்கிள் மிதித்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது முதுகில் தெரிந்தது. எங்கேயுமே நிறுத்தாமல் அவன் சென்ற வேகம் அவனுடைய காதலின் ஆழத்தை உணர்த்துவதாக இருந்தது. சாமிநாதன் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு ‘’மின்னல் ஒருகோடி எந்த விழிதேடி வந்ததே!’ என கற்பனைக்கடலில் மிதந்தபடி பாடிக்கொண்டே அமர்ந்திருந்தான். மனதுக்குள் படபடப்பாக இருந்தது. அது சாமிநாதனின் காதலின் ஆழத்தை உணர்த்துவதாக இருந்தது.

‘’மச்சான் இன்னைக்கு கட்டன்ரைட்டா கேட்டுப்போடனும்டா.. சிம்ரனு ஐலவ்யூ, யூ ஐ லவ்யூவானு’’ என்றான் சாமிநாதன். ‘’ஆமா மாப்ள நானும் தேவயானிகிட்ட கேட்டுப்போடலாம்னுருக்கேன்.. என்ன கட்டிக்கிரியானு, முடியாதுனு சொல்லட்டும்... அப்பறம் பாரு’’ என்றான்.
தூரத்தில் பேரூரில் அங்காளம்மன் கோயில் அருகில் இருக்கிற அந்த மிகப்பெரிய பங்களா தெரிந்தது. நட்புக்காக படத்தின் ஷூட்டிங் என்றனர். சரத்குமார் நடிப்பதாக பேசிக்கொண்டனர். யார் நடித்தால் என்ன என் தேவதை சிம்ரன் எங்கே எங்கே என்று சாமிநாதனின் கண்கள் தேடின. வடிவேலு தேவயானியை தேடினான்.

பங்களாவிற்குள் சூட்டிங் முடித்து சிம்ரன் வெளியே வந்தார். ஒருபெரிய சைஸ் ஐஸ்வண்டி குடைக்கு கீழ் அமர்ந்து ஜூஸ் குடிக்க ஆரம்பித்திருந்தார். வாசலில் பெரிய கூட்டம் கூடியிருந்தது. உள்ளே நுழையமுடியாத அளவுக்கு கூட்டம்! சாமிநாதன் புன்னகையோடு வடிவேலுவை பார்த்தான்.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு தூரத்தில் நின்றுகொண்டிருந்த அந்த பங்களா ஓனரான சாமிநாதனின் மாமாவை ‘’மாமோவ்!’’ என அழைத்தான். அவர் அங்கிருந்தே வாடா என்பது போல கையசைத்தார்! கூட்டத்தை விலக்கிக்கொண்டிருந்தவர் உள்ளே அனுமதித்தனர்.
‘’மாமா சிம்ரன்கிட்ட பேசோணுங்.. அதுக்கொசரம்தான் நானும் இவனும் வந்தோம்ங்க..’’ என்றான் சாமிநாதன். வடிவேலு அதையெல்லாம் கவனிக்காமல் தேவயானியை தேடிக்கொண்டேயிருந்தான். மாமா சாமிநாதனை கொஞ்சம் காத்திருக்க சொல்லிவிட்டு.. யாரிடமோ சென்று பேசினார். பிறகு சாமிநாதனை தூரத்திலிருந்து அழைத்தார். சாமிநாதன் வடிவேலுவை இழுத்துக்கொண்டு அவிழ்ந்துவிழும் டவுசரை தன்னுடைய அரைஞான் கொடியில் மாட்டியபடி ஓடினான். மாமவே சிம்ரனிடம் அழைத்து சென்றார்..

சிம்ரனை நேரில் பார்த்ததும்.. தலையெல்லாம் சுற்றுவது போல இருந்தது. டவுசர் வேறு அவிழ்ந்து விடுமோ என்கிற கவலையும் சேர்ந்துகொண்டது. என்னசெய்வதென்றே தெரியவில்லை. சினிமாவில் வருவதைவிடவும் ஒல்லியாக, சாமிநாதனைவிட கொஞ்சம் உயரமாகதான் இருந்தார் சிம்ரன். ‘’மருமகனே நீ நல்லா சத்யராஜாட்டம் உசரமா வருவ பாரு’’ என மாமா சொன்னது நினைவுக்கு வந்தது. கலர்தான் பிரச்சனை. ‘’இருக்கவே இருக்கு ஆறுவாரத்தில் சிகப்பழகு’’ என்று நினைத்துக்கொண்டான். உச்சா போனால் கூட நன்றாக இருக்குமோ என நினைத்தான். கையை கட்டிக்கொண்டு புன்னகைத்தான். சிம்ரனும் புன்னகைத்தார். வடிவேலு இன்னமும் தேவயானியை தேடிக்கொண்டேதானிருந்தான்.

‘’இவனென்ற மருமகனுங்.. உங்க ரசிகனுங்.. உங்க எல்லா படத்தையும் பத்துவாட்டி பாத்துருவானுங்.. டே அதையெடுத்து காட்றா?’’ என்றார். எது என்று டக்கென நினைவுக்கு வரவில்லை. பிறகுதான் சிம்ரன் படங்கள் ஒட்டிய அந்த டைரியை சொல்கிறார் போல என்பது புரிந்தது. சாமிநாதனுக்கு அப்போதுதான் அதை வடிவேலு வீட்டில் மறந்துவைத்துவிட்டது புரிந்தது. பேந்த பேந்த முழித்தான். ‘’நீங்கன்னா அவ்ளோ இஷ்டமுங்க உங்களைதான் கல்யாணம் பண்ணிக்கோணும்னு ஊரெல்லாம் சொல்லிட்டு திரிவான்’’ என மாமா மேலும் பேச பேச சாமிநாதனுக்கு அவரை தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டும் போல இருந்தது.

’க்யூட்’’ என்று சொல்லிவிட்டு சாமிநாதனின் முடியை கலைத்துவிட்டார் சிம்ரன். அப்போது சாமிநாதனின் மனதுக்குள் ‘’உன் வார்த்தை தேன் வார்த்ததே!’’ என்கிற பாடல் ஓலிக்கத்தொடங்கியது. அந்த கேப்பில் சாமிநாதன் கைகளை பிடித்துக்கொண்டு... ‘’வாட் இஸ் யுர் நேம்’’ என்று கேட்டார் சிம்ரன். கேள்வி கேட்கவும் அதையும் ஆங்கிலத்தில் கேட்கவும் கையை விலக்கிவிட்டு இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு.... அட்டேன்ஷனில் நின்றான் சாமிநாதன்.

‘’மை நேம் இஸ் சாமிநாதன்.. போர்த்து சி, கார்ப்பரேஷன் ஐயர் செகன்ட்ரி ஸ்கூல் செல்வபுரம்’’ என்றான். கலகலகலவென சிரித்துவிட்டு ‘’நைஸ்’’ என்றார் சிம்ரன். அவருடைய குரல் வேறுமாதிரி இருந்தது. உடம்பு சரியில்லை போல என நினைத்துக்கொண்டான்.
கல்யாணத்துக்கு பிறகு உடம்பு சரியில்லாட்டி ஷூட்டிங் போக கூடாதுனு கண்டிஷனா சொல்லிப்போடோணும் என நினைத்தான். வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு தருணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது வடிவேலு அதைபற்றி அக்கறையே இல்லாமல் இன்னமும் தேவயானியை தேடிக்கொண்டிருந்தான்.

சிம்ரன் தன் முகத்தை கண்ணாடிக்கு காட்டி அதில் முகத்தை பஞ்சால் துடைத்துக்கொண்டிருந்தார். இதான் கேப்பு சொல்லிட வேண்டியதுதான். என்ன சொல்வதென்றே தெரியாமல் கையை கட்டிக்கொண்டு ஹோம்வொர்க் நோட்டில் கையெழுத்து வாங்க காத்திருக்கும் மாணவன் போல சிம்ரனுக்கு அருகில் காத்திருந்தான். இந்த நேரத்தில் இந்த வடிவேலுவை வேற காணோம்.. ஐ லவ்யூனு சொல்லிடலாமா? ஒரே யோசனையாக இருந்தது. மேடம் ஷாட் ரெடி என்கிற சப்தம் மட்டும் கேட்டது.. சிம்ரனை காணவில்லை!

வடிவேலுவை தேடினான். அவனையும் காணோம். மாமா கிளம்பு என்பது போல சைகை காட்ட.. மீண்டும் வாசலுக்கு வந்தான். பங்களாவிற்கு வெளியே மதில் சுவர் மீது சைத்துவைக்கப்பட்ட சைக்கிள் இருந்தது. அருகிலேயே வடிவேலும் நின்றுகொண்டிருந்தான்.

‘’என்ன மாப்ள திடீர்னு காணாம போயிட்ட.. சிம்ரன்கிட்ட ஐலவ்யூ சொல்றதுக்குள்ளாற அது கிளம்பி போயிடுச்சிடா, ஒரே கொழப்பமாகிடுச்சிட்டா’’ என்று சோகமாக சொன்னான். வடிவேலு பதில் எதுவும் பேசவில்லை. கையை கட்டிக்கொண்டு ஒருகாலைமதில் சுவரில் வைத்து சாய்த்துக்கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டு நின்றான். ‘’மாப்ள என்னடா நான் பேசிட்டேருக்கேன்.. என்னாச்சிடா’’ என்றான் சாமிநாதன்.

‘’தேவயானி வந்திருக்குனு ஏன்டா பொய்சொன்ன!’’ என்று கையை கட்டிக்கொண்டு வானத்தை பார்த்துபடியே பேசினான் வடிவேலு.
‘’என்னது தேவயானி வரலையா.. மாமாதான்டா சொன்னாரு..’’ என இழுத்தான் சாமிநாதன்.

‘துணைக்குவாடானு கூப்டுருந்தா வந்துருப்பேன்ல.. தேவயானிவந்திருக்குனு எதுக்குடா பொய்சொல்லோணும்.. இந்த படத்துல தேவயானியே கிடையாதுன்றாங்க.. ஏன்டா என்னை ஏமாத்தின.. போடா.. ‘’ என திட்டிவிட்டு சாமிநாதனின் பதிலுக்கு காத்திருக்காமல் தன் ஓட்டை சைக்கிளை எடுத்து மிதித்தபடி வேகமாக கிளம்பினான் வடிவேலு.

‘’டே மாப்ள நில்ரா.. நான் சொல்றத கேளுடா..’’ என்று சொல்ல சொல்ல கேட்காமல் அப்படியே அங்கிருந்து கிளம்பியவன்தான்!. சாமிநாதனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சிம்ரனிடம் காதலையும் சொல்ல முடியவில்லை. இப்போ வடிவேலுவின் நட்பும் போயிடுச்சே என வருந்தினான். கண்களின் ஓரத்தில் ஈரமாக இருந்தது. புறங்கையால் கண்களை துடைத்துக்கொண்டான்.

அடுத்த நாள் பள்ளியில் ஹோம்வொர்க் செய்யாமல் வந்தமைக்காக சாமிநாதனையும் வடிவேலுவையும் பெஞ்சு மேல் நிற்க வைத்துவிட்டார் சைன்ஸ் மாஸ்டர். இருவரும் கையை கட்டிக்கொண்டு நின்றனர். வடிவேலு முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு நின்றான். சாமிநாதன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். வடிவேலு இந்தப்பக்கமாக திரும்புகிற சமயம் பார்த்து சாரிடா.. என்பதுபோல பாவனை செய்தான். வடிவேலு தன் கைகளை இறுக பிடித்துக்கொண்டு விரைப்பாக நின்றான்.

‘’எனக்கு தெரியாதுடா.. தேவயானி வந்திருக்குனு மாமாதான் சொன்னாரு’’ என கிசுகிசுப்பாக சொன்னான். வடிவேலு அதை கேட்பதாக தெரியவில்லை. இவர்கள் இருவரும் இங்கே சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பது சயின்ஸ் மாஸ்டருக்கு பிடிக்கவில்லை.. வெளியே போய் நில்லுங்கடா ராஸ்கல்ஸ் என்று கத்தினார்.

இப்போது இருவரும் வெளியில் நின்றனர். ‘’மாப்ள! சிம்ரனையே மறந்துடறேன்டா.. எனக்கு நம்ம பிரண்ட்ஷீப்தான்டா முக்கியம்..’’ என்று சாமிநாதன் அப்பாவியாய் மீண்டும் சொல்ல.. வடிவேலு அவனை திரும்பிப்பார்த்தான்! மணியடித்தது!

ஐஸ்வண்டியில் சேமியா ஐஸ் வாங்கி சாப்பிடலாமா என்று கேட்டான் சாமிநாதன். டவுசர் பாக்கெட்டில் விரல் விட்டு பார்த்துவிட்டு ஓகே சொன்னான் வடிவேலு. இருவருமாக சேமியா ஐஸ் ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தனர். ‘’மாப்ள.. எனக்கொசரம் நீ எப்ப சிம்ரன மறந்துடுவேன்னியோ அப்பயே முடிவு பண்ணிட்டேன்டா.. நானும் தேவயானியை மறந்துடலாம்னு!’’ என்றான் வடிவேலு.

சாமிநாதனே வடிவேலு சொல்வதை கவனிக்காமல் ஐஸ்வண்டியில் வரைந்திருந்த சிம்ரன் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.