Pages

09 November 2012

அழுமூஞ்சி ஜேம்ஸ்பாண்ட் தாத்தா!






எவ்வளவோ ஹாலிவுட் படங்கள் வெளியானாலும் ஜாக்கிசான் படமும் ஜேம்ஸ்பாண்ட் படமும் வெளியானால்தான் தமிழ்ரசிகனுக்கு தீபாவளி. குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படமென்றால் முதல்நாள் முதல்ஷோவே க்யூவில் நிற்பான் தமிழன்.
ஒப்பனிங் சேசிங் சண்டைகள் முடித்து வில்லன்களிடமிருந்து தப்பியோடி கையில் துப்பக்கியோடு கன்பேரலுக்குள் நடந்து வர பபாம்....பபாம் என தீம் மியூசிக் ஆரம்பமாகும்... தலைவா..அரசியலுக்கு வா என்கிற குரல்களில் தியேட்டரே அதிரும். ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறக்கும்.

நம்மாட்களுக்கு படம் புரிகிறதோ இல்லையோ.. கோட்டு சூட்டு போட்ட ஜேம்ஸ்பாண்டின் ஸ்டைல், அவருடைய அசால்ட்டு பேச்சு, அதிரடி ஆக்சன், வித்தியாசமான கேட்ஜெட்ஸ், பிகினி போட்ட கவர்ச்சிகன்னிகள் என எப்போதுமே ஜேம்ஸ்பாண்ட்தான் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார். தமிழகத்தில் ஜேம்ஸ்பாண்டும் ஜாக்கிசானும் கட்சி ஆரம்பித்தால் கணிசமான வாக்குகள் பெறுவார்கள் என்பது உறுதி.

நம்மை மகிழ்விப்பதற்காகவே சமீபத்திய ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைஃபால்’ (SKYFALL) தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியது. அதில் 50ல் மட்டும்தான் ஆங்கிலத்தில்.. மீதி 250 ப்ளஸ் தியேட்டர்களிலும் தமிழ் டப்பிங்கில்தான் திரையிடப்பட்டுள்ளது. ஒரு ஆங்கிலப்படம் அதுவும் தமிழ் டப்பிங்கில் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது அவதாருக்கு பிறகு இப்போதுதான். விஜய்,அஜித் படங்களுக்கு இணையான ஓப்பனிங்கும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ் ரசிகனுக்கு ஜேம்ஸ் பாண்ட் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவேதான். அவரால் முடியாதது எதுவுமே இல்லை. அது ஃபிகர் மடிப்பதாக இருந்தாலும் சரி... வில்லன்களை பந்தாடுவதாக இருந்தாலும் சரி. எல்லாமே சுஜூபி. ஒரே ஒரு துப்பாக்கியோடு அதில் குண்டே இல்லாமல் உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று ஒட்டுமொத்த ராணுவத்தையே நிலைகுலைய வைப்பவர் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்.
மூர்க்கமான வில்லன் நிலவுக்கே சென்றாலும் விரட்டி பிடித்து சுளுக்கெடுக்கிற சாகசமும், எந்த ஆபத்தையும் லெப்ட் ஹேண்டில் சமாளிக்கும் திறனும் கொண்டவர் நம்ம ஜேம்சு. வில்லன்களின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து அவன் மனைவியையே உஷார் பண்ணி உல்லாசம் காண்பார்.

உலகின் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவரோடு போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. வாள்வீச்சு, பனிசருக்கு, சீட்டுக்கட்டு, கில்லி தாண்டு, ஒத்தையா ரெட்டையா, பல்லாங்குழி என எல்லா விளையாட்டிலும் ஜேம்ஸ்பாண்ட்தான் நம்பர் ஒன். வில்லன்களை வெறுப்பேத்த அவர் எப்போதுமே விளையாட்டுகளில்தான் முதலில் ஜெயிப்பார். க்ளைமாக்ஸில் மொத்தமாக ஜெயிப்பார்.

பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த டை அனதர் டே வரைக்கும் கூட ஜேம்ஸ் பாண்ட் ரஜினிகாந்தாகத்தான் இருந்தார். காதல், காமம், சூது என எல்லா விளையாட்டிலும் ஜெயித்தார். அவர் காதலித்த ஃபிகர் செத்துப்போனாலும் ஓ மை காட் என ஒருநிமிடம் அதிர்ச்சியாகிவிட்டு அடுத்த ஃபிகரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தார். இப்படித்தான் ஜேம்ஸ்பாண்ட் இருந்தார்.

ஒருநாள் பியர்ஸ் ப்ராஸ்னன் ரிடையர்டானார். அந்த பாத்திரத்தில் நடிக்க ஆட்கள் தேடி ஒருவழியாக டேனியல் க்ரைக் என்கிற நடிகரை தேர்ந்தெடுத்தனர். எல்லாமே மாறிப்போனது.
பாட்ஷா ரஜினிபோல ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த ஜேம்ஸை, மகாநதி கமலஹாசன் போல மூலையில் உட்காரவைத்து ஆ.....ங்.... ஆ.... ங் என கதறி கதறி அழவைத்து ரசித்தது அக்கிரமக்கார ஹாலிவுட். வில்லனோடு சண்டையிட்டு தோற்றுப்போனார். வில்லன் கும்பலிடம் சிக்கி மரண அடிவாங்கி ரத்தவழிய தப்பியோடினார்.

தன் காதலியை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் தாடிவளர்த்து தண்ணியடித்தார். எந்த குணங்களுக்காக நாம் ஜேம்ஸை கொண்டாடினோமோ அது அனைத்தையும் இழந்திருந்தார். என்ன எழவுடா இது என காசினோ ராயல் படம் வந்தபோதே தமிழக மக்கள் லைட்டாக முகம் சுளிக்க தொடங்கிவிட்டனர். இந்த படத்துல மட்டும்தான் இப்படிபோல என மனதை தேற்றிக்கொண்டனர். ரஜினிகூட பாபா படத்தில் நடித்து குப்புற விழவில்லையா?
இந்த அக்கிரம அழிச்சாட்டியம் குவாண்டம் ஆஃப் சோலேசில் இன்னும் அதிகமானது.

நிறையவே அடிவாங்கி, நிறையவே தோற்று.. ‘’இருக்க இருக்க இந்த ஜேம்ஸுக்கு என்னலே ஆச்சு.. ஏன் இப்பிடியாகிட்டாப்போல’’ என மக்கள் கடுப்பாக ஆரம்பித்தனர். மக்களின் கடுப்பு இதோ ஸ்கை ஃபாலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. க்ளைமாக்ஸில் படத்தின் இயக்குனரையும் ஜேம்ஸையும் எழுதமுடியாத வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர்.
முதல் காட்சியிலேயே ஒரு மிகபிரமாதமான சேஸிங்.. டிரெயின் மேல் பைக் ஓட்டி வில்லனை துரத்துகிறார். ஆஹா நம்ம ஜேம்ஸு மறுபடியும் ஃபார்முக்கு வந்துடாப்ல.. செம ஜாலியா இருக்கும்போலருக்கே என நிமிர்ந்து உட்கார்ந்தால்.. அவரை சுட்டுவிடுகிறாள் ஒரு சுருள்மண்டை பெண். பல நூறு அடி உயரத்திலிருந்து தொப்பக்கடீர் என தலைகுப்புற விழுகிறார் ஜேம்ஸு..

‘’பாண்ட் செத்துட்டான்’’ என அறிவிக்கிறார்கள். ஙே என தமிழ்ரசிகன் அதிர்ச்சியாகிறான்.
அதற்குபிறகு உளவாளிகள் சங்கத்துக்கே ஆப்படிக்கிறான் ஒரு வில்லன். அவனை அழித்து உளவாளிகள் சங்கத்தை காப்பாற்றுகிறார் ஜேம்ஸ். அதற்குள் அவரை பாடாய்படுத்துகிறார்கள் வில்லன்கும்பலும் உளவாளி கும்பலும்.

‘’உனக்கென்ன பாம் வச்ச பேனா வேணுமாக்கும்’’ என புது க்யூ(வெப்பன் சப்ளையர்) கலாய்க்கிறான். எப்போதும் பளிச் பிளிச் என வருகிற ஜேம்ஸ் இதில் நரைவிழுந்த தாடியோடு சோகமூஞ்சியோடு காட்சியளிக்கிறார். அவரிடம் பெரிய கேட்ஜெட்டுகள் இல்லை. க்ளைமாக்ஸில் குண்டுபல்பையெல்லாம் வைத்து வில்லன்களோடு சண்டைபோட வேண்டிய துர்பாக்கிய நிலை. கடைசியில் உளவாளிகள் சங்கதலைவி எம் செத்துப்போன பிறகு அரங்கம் அதிர அழுது புலம்புகிறார்.. முடியல!

நாம் இப்படியொரு ஜேம்ஸ்பாண்டை இதுவரை பார்த்ததேயில்லை. 80களின் இறுதியில் டிமோதி டால்டன் நடித்த இரண்டு ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இதேமாதிரிதான் என்றாலும் அவை அந்த அளவுக்கு புகழ்பெறவில்லை. ரொம்ப சுமாரான படங்கள்தான் அவை. அதற்கு பிறகு மீண்டும் அதே பாணியில் டேனியல் க்ரேக்கை வைத்து நம்மை கடுப்பேற்றியிருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்டுக்கு வயதாகிவிட்டது. அதோடு அவருடைய உடல்நிலையும் முன்பு போல இல்லை. கொஞ்ச தூரம் ஓடினாலும் மூச்சு வாங்குகிறது. அவரை சுள்ளான்களெல்லாம் கேலி பேசுகிறார்கள். போனால் போகுதென்று படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் வைத்திருக்கிறார்கள். அந்த பெண்ணையும் இடைவேளைக்கு முன்பே கொன்று விடுகிறார்கள். படம் முழுக்க பேசி பேசி தமிழ்ரசிகனை கதறவிடுகிறார்கள்.
அதிரடியான சண்டைகாட்சிகள் இல்லை. நெஞ்சம் மகிழ்விக்கிற கில்மா காட்சிகளும் இல்லை. மொத்தத்தில் இதுவரை தமிழ்திரை கண்டிராத யதார்த்தபட ஜேம்ஸ்பாண்டாகவே இருக்கிறார் இந்த புதுபாண்ட்.

இப்படம் உலகெங்கும் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரைக்கும் வந்ததிலேயே இதுதான் தி பெஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் மூவி என அறிவுஜீவிகள் புகழாரம் சூட்டுகிறார்கள். பல ஆயிரம் கோடி வசூலை வாரிக்குவித்திருக்கிறது. அதில் நிச்சயம் உண்மைதான். ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருப்பதும், அதிரடி ஆக்சனை கைவிட்டு பழமைக்கும் (ஜேம்ஸ்) புதுமைக்குமான(தொழில்நுட்பம்) போட்டியாக படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பதும் அருமைதான். கனிணி முன்னால் உட்கார்ந்து கொண்டு சும்மா வெட்டி பேச்சு பேசாதே.. களத்தில் இறங்கினால்தான்டா உங்களுக்கு கஷ்டம் தெரியும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் ஜேம்ஸ்.

இயான் ஃபிளமிங் கூட தன்னுடைய நாவல்களில் இப்படிப்பட்ட ஜேம்ஸ்பாண்டைதான் உருவாக்கியிருந்தார். அவன் சாதாரண மனிதனாகவே இருந்தான். திரைப்படங்களில்தான் ஜேம்ஸ் அசகாயசூரனாக மாறினார். அந்த இமேஜை மாற்றி இயான் ஃபிளமிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் படமாக்கியிருப்பதையும் பாரட்டலாம்தான்.

அதுபோக என்றைக்கிருந்தாலும் பழசு பழசுதான் பெரிசு பெரிசுதான் என இங்கிலாந்து நாட்டின் பெருமையை ஜேம்ஸ்பாண்ட் உலகுக்கு உணர்த்துவதும் ஓக்கேதான்.
ஆனால் சாதாரண தமிழ்ரசிகன் எதிர்பார்க்கிற மசாலாவே இல்லாத ஜேம்ஸ் பாண்டை எவ்வளவு நேரம்தான் திரையில் சகித்துக்கொண்டு பார்க்க முடியும்.

பத்து நிமிடத்துக்கு ஒரு சேஸிங்கோ சண்டைகாட்சியோ படுக்கையறை கில்மாவோ இல்லையென்றால் தமிழ்ரசிகன் கடுப்பாகமாட்டானா? எந்த நேரத்தில் ‘’பேட்மேனை’’ நம்ம கிறிஸ்டோபர் நோலன் சாதாரண மனிதனாக மாற்றி யதார்த்த சூப்பர் ஹீரோவை உருவாக்கினாரோ அப்போதிருந்து எல்லா சூப்பர் ஹீரோக்களையும் சாதாவாக மாற்றுகிற ட்ரெண்ட் ஹாலிவுட்டில் உருவாகிவிட்டது. (நம்ம முகமூடிகூட அதே பாதிப்பில்தான் வந்தது)

இந்த யதார்த்த பட ஹீரோ வியாதி இப்போது ஜேம்ஸ் பாண்டையும் விட்டுவைக்கவில்லை. இனி வரும் காலங்களிலும் புதுவித கேட்ஜெட்ஸ் இல்லாத, அழுமூஞ்சி, அழுக்குபாண்டை ஜேம்ஸ்பாண்ட் தாத்தவைதான் நாம் திரையில் பார்க்க வேண்டியிருக்குமோ என்னவோ.

ஜேம்ஸை அந்த கர்த்தர்தான் காப்பாத்தணும்!


(சினிமொபிட்டா இணையதளத்திற்காக எழுதியது)