Pages

09 February 2013

கண்ணா ஆஸ்கர் வாங்க ஆசையா?

‘’அண்ணே உங்க அறிவுக்கும் திறமைக்கும் நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லண்ணே.. நீங்க மட்டும் அமெரிக்காவுல பொறந்திருந்தா இந்நேரம் வெள்ளை மாளிகைல உக்காத்தி வச்சி விழா கொண்டாடிருப்பாய்ங்க, அந்தூருக்கே நீங்க ஜனாதிபதி ஆகிருப்பீங்க..உங்க மூளைல மட்டும் அம்புட்டும் அறிவுண்ணே!’’

‘’உனக்கு தெரியுது.. ஆனா இந்த ஊர்க்காரய்ங்களுக்கு தெரியலையே.. அட அந்த அமெரிக்கா காரனுக்கும் தெரியலையேப்பா!’’

‘’அண்ணே உங்ககிட்ட எம்பூட்டு காரு இருக்கு.. ஆனா இந்த ஆஸ்கார் மட்டும் ஏன்னே இல்ல’’

‘’எனக்கு மட்டும் என்ன ஆசையா.. போனமாசம் ஆடிக்காரன் கடை ஆரம்பிச்சப்ப முத ஆளாபோயி ஆடித்தள்ளுபடில காரு வாங்கினது யாரு.. இந்த அண்ணன் தானடா.. ஆஸ்காரும் அதுமாதிரி எங்காயவது மவுண்ட்ரோட் ஆழ்வார்பேட்டை பக்கமா கடைய விரிச்சி வித்தாய்ங்கண்ணா விலை என்னானு விசாரிச்சி நாலு வாங்கி ஏழைகளுக்கே ஓட்டலாம்தான்...நமக்கு கொடுப்பன இல்லையே.. அட நேத்து வந்த பய அவன் ஒன்னுக்கு ரெண்டா வாங்கி வச்சிகிட்டு வம்பிழுக்கறான்.. இத்தனைக்கும் நான் பத்தாவது பெயிலு அவன் எட்டாங்கிளாஸ் பாஸுடா.. அதையெல்லாம் பார்க்கும்போது இதை தலைகுனிவு என்றும் சொல்லலாமா..அல்லது அவமானம் என்றும் சொல்லலாமா என்று வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிக்க நினைக்கிற கலைஞனின்... ஆங்ங்ங்ங் ஆங்ங்ங்ங்’’

‘’அட அழாதண்ணே.. இதுக்குபோயி சின்னபிள்ளையாட்டம்.. ஆமா ஏன்னே இன்னும் உங்களுக்கு மட்டும் ஆஸ்காரு குடுக்கல’’

‘’அதெல்லாம் ஒரிஜினல் கதைல நடிச்சாத்தான் குடுப்பாய்ங்களாம்.. நாம என்னைக்கு சொந்தமாக கதை ரெடி பண்ணினோம்.. எப்பயும் எங்கயாச்சும் ஹாலிவுட்டுல சுட்டுத்தானே படமெடுக்கறது! அவன் ஊரு படத்தை சுட்டு படமெடுத்துட்டு அதை அவனுக்கே போட்டுகாட்டினா அல்லைல மிதிக்காம அடேங்கப்பான்னா சொல்லுவான்.. இதுல ஆஸ்காராம்ல ஆஸ்கார்ரு.. அப்படியே பழகிடிச்சிடா தம்பி’’

‘’அண்ணே அமெரிக்கா காரனுக்கு நாம யாருனு காட்டணும்ண்ணே’’

‘’ஏன்டா ஏன்.. மெதுவா பேசுடா.. எவனாவது கேட்டுகிட்டு தொலைச்சிரப்போறான்.. அப்புறம் ஆஸ்கார் அவார்ட் குடுக்கற தெருப்பக்கம் கூட நம்மள வுடமாட்டாய்ங்க’’

‘’அண்ணே அப்புறம் என்னதாண்ணே பண்ணலாம்’’

‘’ஒரு படமெடுப்போம்டா.. அத பார்த்து அமெரிக்காகாரன் கதறணும்.. இங்கிலாந்துகாரன் குட்டிகரணம் அடிக்கணும்.. ஒட்டுமொத்த உலகமுமே டே ராசா இத்தன நாளா எங்கடா இருந்த.. குடுத்த காசுக்கு மேலயே கூவுறியேடா கொய்யாலனு பாராட்டணும்.. அப்படி ஒரு படம் எடுத்து அந்த ஒபாமாவுக்கே ஒடசல குடுப்போம்டா..’’

‘’சூப்பர்ண்ணே’’

‘’கதைப்படி ஒரு ரகசிய ஏஜன்ட்டு.. சாதாரண ஆளா அமெரிக்கால வாழறான்.. அவன் ஏஜன்ட்டுனு அவன் பொண்டாட்டிக்கே தெரியாது.. ‘’

‘’அண்ணே அண்ணே இது ஜேம்ஸ்காமரூன் எடுத்த ட்ரூலைஸ் கதைண்ணே’’

‘’டேய் மண்டையா.. அது ட்ரூ லைஸ் கதைதான்.. ஆனா அதுமாதிரி தெரியாம இருக்கத்தான்.. ஹீரோ சாதாரணமா இருக்கும்போது கரகாட்டம் ஆடறதா மாத்திட்டேன்.. சேல்ஸ் ரெப்பு கிடையாது.. தலையில கரகத்த வச்சுகிட்டு ஓபனிங்லயே மாங்குயிலே பூங்குயிலே ஹே பூங்குயிலேனு ஆடறான்.. ஜேம்ஸ்காமரூனாலேயே கண்டுபுடிக்க முடியாது எப்படி!’’

‘’அண்ணே பிரமாதம்ண்ணே..’’

‘’அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளால பிரச்சனை வருது.. தீவிரவாதிங்க எப்பயும்போல பாம்வைக்கிறாங்க... அதை புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து எடுத்து.. அமெரிக்காவ காப்பாத்துறாங்க..’’

‘’அப்ப இந்தியாவ யாருண்ணே காப்பாத்தறது..’’

‘’டே டைம்பாம் மண்டையா.. கேப்டனும் அர்ஜூனும் ரிடையர்டாகிட்டதால இப்ப விஜய் அந்த வேலை எடுத்துருக்காப்டியே.. அதுமில்லாம அமெரிக்காதான் பாவம்.. காப்பாத்த யாருமே இல்லாம கெடக்கு‘’

‘’ஆமால்ல.. சூப்பர்சூப்பர்ண்ணே, ஆமா ஏன்னே அல்கொய்தா’’

‘’அமெரிக்காவுக்கு ஆயில் வேணும்.. நமக்கு ஆஸ்கார் வேணும்! அவ்ளோதாண்டா மண்டையா’’

‘’நீங்க ஒரு பஞ்சதந்திரிண்ணே’’

‘’ஒரு சீன் வச்சிருக்கேன் பாரு அமெரிக்காகாரனுங்க பாத்தா கதறிடுவானுங்க, அல்கொய்தா தீவிரவாதிங்க மேல அமெரிக்கா தாக்குதல் பண்ணுது.. அப்ப ஒரு தீவிரவாதி சொல்லுவான் அமெரிக்கா படைங்க ரொம்ப்ப்ப நல்லவனுங்க பெண்கள் குழந்தைகள் மேலலாம் தாக்குதல் பண்ணமாட்டாங்கன்னு.. ஜார்ஜ் புஷ்ஷூ பார்த்தாருண்ணா மிரண்டுருவாரு.. ஹிலாரி கிளின்டன் நமக்கு ஆஸ்கர்ல வொய்ல்ட் கார்டு ரவுண்டலயாச்சும் வாய்ப்புகுடுக்கும். அதுமில்லாம படம் பூரா இஸ்லாமியர்கள பயங்கர பயங்கரவாதிங்களா காட்றோம்.. இன்னொருபக்கம் அமெரிக்காவ அற்புதரட்சகர்களா காட்றோம்..’’

‘’அட அட அட... எனக்கே அழுகை வருது.. ஒபாமா பார்த்தாருண்ணா தம்பி உனக்கு எவ்ளோ நாட்டுப்பற்றுடானு கட்டிபுடிச்சி கிஸ் அடிச்சி...நூறுடாலரும் குடுப்பாருண்ணு தோணுதுண்ணே..’’

‘’அப்புறம் என்ன.. அடுத்தபடம் ஆலீவுட்டுலதான்..’’

‘’ஆமா இதுலயும் உங்களுக்கு புடிச்ச கிஸ்ஸு பிட்டு மேற்படிலாம்.. ம்ம் ம்ம்’’

‘’அதெல்லாம் இரண்டாவது பார்ட்லதான் காட்றோம்..’’

‘’சரி இந்தபடம் ஓடுமாண்ணே..இல்ல அந்த அசந்தவந்தான் படம்மாதிரி..’’

‘’அதெல்லாம் பயப்படாத.. அவிங்களுக்கு எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிக்கறோம்.. கடுப்பாகி சில முட்டாப்பசங்க எதிர்ப்பு அது இதுனு நமக்கு பப்ளிஷிட்டி பாத்துக்குவாங்க.. நாம நோகாம நோம்பிகும்படலாம்.. ஹோ கய்யா.. ஹோகய்யா.. ஓமஞ்சே ஓநெஞ்சே..ஓகயாஆஆஆஆ’’

‘’அண்ணே எங்கயோ போயிட்டீங்கண்ணே! ஆமா ஆஸ்கார் இந்தவாட்டியாச்சும் கிடைச்சிருமாண்ணே’’

‘’கிடைக்கும் என்றும் தோன்றுகிறது.. கிடைக்காது என்றும் தோன்றுகிறது. வாழ்வின் பெருவெளியில் கிடைப்பது கிடைத்தாலும் உடைப்பது உடைக்காது.. ஆங்ங் ஆங்ங்ங்..’’

‘’அண்ணே வாய மூடுங்க.. நாலு ஈ போயிடுச்சி!’’

(தொடரும்.. கண்ணா ஆஸ்கர் வாங்க ஆசையா பாகம் 2)


பிகு – இக்கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே. உயிரோடோ பிணமாகவோ இருக்கிற யாரையும் குறிப்பிடுபவன அல்ல. உங்களுக்கு சிரிப்பு வந்திருந்தால் இதுமுழுக்க முழுக்க நகைச்சுவையே.. சிரிப்பு வராமல் போயிருந்தால் நேரில் வந்தால் கிச்சி கிச்சி மூட்டி சிரிப்பு காட்டுவேன் என உறுதியளிக்கிறேன். இப்படிக்கு - ஆஸ்கார்நாயகன் டாக்டர்.அதிஷா பிஏபிஎல் பிஈ எம்பியே.