Pages

16 March 2013

பொம்மை எப்படி சாகும்?





அந்த பொம்மைக்கு எல்லாமே பாப்பாதான். பாப்பா எப்பவும் பொம்மையை கட்டிபிடிச்சிகிட்டு தூங்குவா ஸ்கூல் முடிஞ்சி வந்ததும் அலங்காரம் பண்ணிவிடுவா... பூவைப்பா... பொட்டுவைப்பா... அழகான உடையெல்லாம் ரசிச்சி ரசிச்சி மாட்டிவிடுவா பகலெல்லாம் பாப்பாவுக்காக பொம்மை காத்திருக்கும்.

நைட்டு பாப்பாவோட தான் தூங்கும். பாப்பா எங்கே போனாலும் பொம்மையும் கூடவே போகும். பொம்மையில்லாம பாப்பாவ பாக்கவே முடியாது. யாராச்சும் அந்த பொம்மைய கேட்டா இது என்னோடது குதுக்கமாத்தேனு சொல்லுவா.. தனக்கு எப்படி பாப்பாதான் எல்லாமோ அதுபோலவேதான் பாப்பாவுக்கும் நாமதான் எல்லாமேனு அந்த பொம்மையே நினைச்சி பெருமை பட்டுக்கும்.

ஒரு நாள் பொம்மை உடைஞ்சிடுச்சு. உடைஞ்ச பொம்மை உனக்கு வேண்டாம்னு தாத்தா திட்டினாரு. அழுதுகிட்டே பொம்மைய தூக்கி போட்டுடுச்சு பாப்பா. குப்பை தொட்டியில கிடந்துதாம் பொம்மை. பாப்பாவ பாக்க முடியாம பாப்பவோட முத்தமில்லாம செத்துபோக நினைச்சுது பொம்மை.

எப்படி சாகறது? பொம்மைக்கெல்லாம் சாவே கிடையாதுனு குப்பைமேட்டு புள்ளையார் கத்தி சொன்னாரு. போடா யானை மண்டையானு திட்டுச்சாம் பொம்மை பாப்பாவுக்கு எல்லாமே நான்தான் ஒருநாள் பாப்பா என்னை தேடிகிட்டு வருவா பாருனுச்சு.

யானை மண்டை தும்பிக்கைய ஆட்டி ஆட்டி சிரிச்சுது.

ஆனா பாப்பா வருவானு பொம்மை அழுதுகிட்டே பல நாளா குப்பைகளுக்கு நடுவுலயே காத்திருந்துச்சு. ஒருநாள் பாப்பா வேற ஒரு பொம்மையோட அந்த வழியா போச்சுது. தூரத்துல பாப்பா வரதை பாத்து ரொம்ப குஷியாகிடுச்சு பொம்மை. நம்மள தேடிதான் பாப்பா வருதுனு நினைச்சுது.

டே யானை மண்டை இப்ப பாரு பாப்பா என்னை பார்த்து ஓடிவந்து தூக்கிக்கும்.. இனிமே உன் தொல்லை இல்லாம சந்தோஷமா இருக்கப்போறேனுச்சு பொம்மை. யானை மண்டை ம்க்கும்னு நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு பாக்கறேன் பாக்கறேனுச்சு.

பாப்பா பக்கத்துல வந்துச்சு.. பொம்மைய பாத்துச்சு.. கைலருந்த புது பொம்மைய தூக்கி போட்டுட்டு.. ஓடிவந்து குப்பைல கிடந்த பொம்மைய எடுத்துகிச்சு.. அள்ளி அள்ளி முத்தம் கொடுத்துச்சு.. உடம்போட கட்டிபுடிச்சிகிச்சு.. பொம்மைக்கு ஆனந்தம் தாங்கல..

யானை மண்டைய பாத்து தெனாவெட்டா சிரிச்சிது அழுக்கு பொம்மை! ஆனா யானை மண்டை இப்பயும் நமட்டுத்தனமாதான் சிரிக்கிது. அழுக்கு பொம்மைக்கு ஒன்னுமே புரியல. யானைமண்டை ஏன் சிரிக்குது?

டக்குனு ஒரு கை.. பொம்மைய பாப்பாகிட்டருந்து பிடுங்கி மறுபடியும் குப்பைல வீசிச்சி.. தாத்தாவோட கை அது. பொம்மைக்கு பிடிக்காத கை.

வாட் ஈஸ் திஸ் பாப்பா.. டர்ட்டி ஃபெலோ மாதிரி நடந்துக்கற.. அழுக்குபுடிச்சி கிடக்கு பாருன்னாராம் தாத்தா. ஆனாலும் பாப்பா அழுதுச்சாம். ச்சே பாப்பாக்கு நம்ம மேல எவ்ளோ பாசம்னு நெகிழ்ந்துபோச்சாம் பொம்மை. பாப்பா அழ அழ பொம்மைக்கும் அழுக வந்துடுச்சாம். தாத்தா பாப்பாகிட்ட பேசி பேசி அழுகைய நிறுத்துனாரு.

இந்த பொம்ம வேணாம்.. இது அழுக்கு, உடைஞ்சது, உன் கைய கிழிச்சிடும் டர்ட்டின்னாராம் தாத்தா.

''ஆமா நாம டர்ட்டிதான்... அழுக்கு புடிச்சி கிடக்கோம்.. உடைஞ்சிருக்கோம் இனிமே நாம பாப்பாவுக்கு வேணாம்''னு பொம்மையும் நினைச்சுதாம். அதேநேரத்துல பாப்பா அழுகைய நிறுத்திடுச்சாம்.

பொம்மைக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துதாம். இனிமே பாப்பாவ பாக்காட்டியும் இதுபோதும்னு நினைச்சுதாம். இப்படியே இந்த குப்பைதொட்டிலயே கிடக்கலாம்னு நினைச்சிகிச்சு. ஆனா அழுகைய நிறுத்தின பாப்பா போகும் போது சொல்லுச்சு.. ''ஆமா தாத்தா இந்த பொம்ம ரொம்ப டர்ட்டி உடைஞ்சது இது நமக்கு வேணாம்''

இத கேட்டுகிட்டிருந்த பொம்ம அப்படியே செத்துபோச்சு. யானைமண்டைக்கு பொம்மை எப்படி செத்துதுனு கடைசிவரைக்கும் புரியாமயே போச்சு!

(நன்றி-டாய்ஸ்டோரி)