Pages

28 March 2013

அப்புறம் என்னாச்சு?




அவர் பிரபலமான மர்மக்கதைகள் எழுதுகிற எழுத்தாளர். எனக்கு அவருடைய கதைகள் மிகவும் பிடிக்கும். அவரிடம் அடிக்கடி போனில் உரையாடுவேன். நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொள்வார். திடீரென ஒருநாள் என்னை வீட்டுக்கு அவசரமாக அழைத்தார். என்னசார் என்றேன். இல்லநேர்லவா பேசுவோம் என்றார். முகவரியை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

ஒரு ஹவுஸ்யூனிட் போன்ற அரசு ஊழியர்களுக்கான குவாட்டர்ஸில் எழுத்தாளரின் வீடு இருந்தது. இரண்டு படுக்கை அறை வசதிகொண்ட சிறிய வீடுதான். பெர்முடாஸ் போட்டுக்கொண்டு எனக்காகவே காத்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்தவனை வாய்யா வா என வரவேற்ற கையோடு அவசரமாக 'வாப்பா முதல்ல உள்ளே போய்டுவோம்' என்று தனியறைக்கு அழைத்துச்சென்றார். வீட்டிலும் வேறுயாருமேயில்லை. அவர் தனியாகத்தான் அந்த வீட்டில் வசிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

லைப்ரரி மாதிரி ஏதோ வைத்திருப்பார் போல.. ஆர்வமாக காட்டப்போகிறார் என்று நினைத்தபடி பின்னாலேயே நடந்தேன். நல்ல தடிமனான கதவுகள் கொண்ட ஒரு இருட்டு அறையை திறந்தார். உள்ளே அதிக வெளிச்சமில்லை.. ஒரு சிறிய அஞ்சுவாட்ஸ் பல்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அது பார்க்க கள்ளக்கடத்தல் ஆசாமிகளின் ரகசிய அறைகளைப்போலவோ அல்லது சினிமாவில் சிபிஐ அதிகாரிகள் தீவிரவாதிகளை விசாரிப்பதற்காகவே ஒற்றை பல்பு இருட்டறை தயார் செய்துவைத்திருப்பார்களே அதுபோலவோ இருந்தது. லேசாக குளிர்ந்தது.

அப்படியே அறை முழுக்க உற்றுப்பார்த்து நோட்டம்விட்டேன். ஒன்றுமேயில்லை. காலியாய் இருப்பதைப்போல உணர்ந்தேன். ஒரே ஒரு பெரிய ஷோபா மட்டும் மத்தியில் இருப்பதை கவனித்தேன். அதிலும் ஒருவர்தான் உட்கார முடியும். உள்ளே போய் சில விநாடிகளில் புரிந்துவிட்டது. வெளியிலிருந்து எந்த வித ஒலியோ ஒளியோ அறைக்குள் புகவே முடியாதவகையில் அந்த அறை அமைக்கப்பட்டிருந்தது. சுவர்களில் எதையோ பதித்து அதன்மேல் தொன்னூறுகளில் பிரபலமான பூப்போட்ட வால்பேப்பர்கள் ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
''இந்த ரூமுக்குள்ள வச்சு கொலை பண்ணினாலும் யாருக்கும் கேட்காது தெரியுமா? வேணும்னா காட்டுக்கத்தல் கத்திப்பாரேன்.. சும்மா கத்துப்பா.. சும்மா கத்து.. '' என்றார் எழுத்தாளர். எனக்கு உச்சி மண்டையில் சுர்ரென்றிருந்தது. யாரோ ஆணியினால் என் காதுகளை குடைவதைப்போலவே இருந்தது. நெஞ்சுக்குள் நமைச்சலாகவும் அடிவயிற்றில் ஏதோ கரைவதைப்போலவும் உணர்ந்தேன். ‘’அதெல்லாம் வேணாம்சார்’’

அவருடைய எழுத்துகளை தொடர்ந்து படிப்பவன் என்பதால் அவருடைய குணாதியங்கள் குறித்து என் மண்டைக்குள் ஒரு ஸ்கெட்ச் போட்டுவைத்திருந்தேன். தான் எழுதுவது எதுவாக இருந்தாலும் அதை அனுபவித்துப்பார்த்து எழுதவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அவருடைய எழுத்துகளும் அவருடைய வாழ்க்கை சம்பவங்களை ஒட்டியே இருப்பதையும் அவதானித்திருக்கிறேன். அதற்காக பல்வேறு வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றி உதாரணங்களையும் சொல்லுவார். ஆனால் கொலைபண்ணுவதாக கதை எழுத கொலையே செய்துபார்த்திருப்பாரா? என்று நினைக்கவே அச்சமாக இருந்தது.

தமிழ்சினிமா வில்லன்களின் மர்ம மாளிகைகளில்தான் இதுபோன்ற ரகசிய அறைகள் இருக்கும் என்பதே என்னுடைய அவதானிப்பாக இருந்தது. ஆனால் ஒரு சாதாரண எழுத்தாளர் வீட்டுக்குள் இப்படி ஒரு மர்மமா என்று அச்சத்தோடேயே வெளியே செல்லும் கதவையே பார்த்தபடி நின்றேன். அவரோ மிக சகஜமாக இருந்தார்.

நிறைய மர்மநாவல்களும் சைக்கோ கொலைகார படங்களும் பார்த்த அனுபவத்தால் பொதுவாக கொலைகாரர்கள் என்பவர்கள் அதிலும் சைக்கோ கொலைகாரர்கள் மிகவும் பொறுமையாகவும் திட்டமிட்டும் பதட்டமில்லாமலும்தான் கொலை செய்வார்கள் என்று நானாகவே கணக்குப்போட்டு வைத்திருந்தேன். அந்த கணக்குகள் வேறு பயத்தை அதிகமாக்கியது.

‘’ஏதாச்சும் சாப்பிடறீயா.. டீ சாப்பிடலாமா?’’ என்றார். ‘’அதெல்லாம் வேணாம் சார்..’’
‘’ஒரு ஆப்பிளாவது சாப்பிடறீயா.. நறுக்கிதரேன்’’ என்று பெர்முடாஸின் நுனிப்பகுதியிலிருந்த ஒருபாக்கெட்டிலிருந்து ஆப்பிளும் இன்னொன்றிலிருந்து ஒரு நல்ல பளபளக்கும் கத்தியையும் வெளியே எடுத்தார். நான் வேண்டாம் என்பதைப்போல மறுத்தபடி சுற்றுமுற்றும் நோட்டம்விட்டேன்.

‘உட்காருப்பா.. உனக்கு இன்னொன்னு காட்றேன்’ என்றார் எழுத்தாளர். ஏதோ சூனியத்துக்கு கட்டுப்பட்டவனைப்போல அப்படியே அமர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தையே பார்த்தேன். அந்த நீளநிற ஒளியில் அவருடைய வழுக்கைத்தலையும் கறுத்தசட்டையும் குறுந்தாடியும் கண்களில் தெரிந்த சிறிய ஒளியும் ரொம்பவே பயமுறுத்தின... அதோடு அவர் முகத்திலும் கண்களிலும் தெரிந்த ஒருவிதமான மர்மமான புன்னகைவேறு பயத்தினை அதிகமாக்கியது. கையில் வைத்திருந்த ஆப்பிள் பாக்கெட்டில் இருந்தது. கத்தி இன்னமும் கைகளில்தான் இருந்தது.

என்னை உட்கார வைத்து கட்டிவைத்து ஷாக்ட்ரீட்மென்ட் கொடுத்து நகங்களை பிய்த்து உருட்டுகட்டையால் விளாசுவாரோ என்றெல்லாம் கற்பனை ஓடுகிறது. உள்ளே வந்து மாட்டிகிட்டோம்.. இந்தாளு வேற ஏடாகூடமான எழுத்தாளர்.. ஆளும் திடகாத்திரமா இருக்காரு.. வேறவழியில்லை என்று நினைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தேன்.

‘’ஒருநிமிஷம் இங்கதான் வச்சிருந்தேன்..’’ என்று எதையோ தரையில் தேடத்தொடங்கினார். படபடப்பாக இருந்தது. ‘’சார் நான் இன்னொரு நாள் வரேனே..’’ என்றேன். ‘’ஏன்ப்பா அஞ்சுநிமிஷம்ப்பா.. முடிஞ்சிடும்’’ என்றார். தரையில் கிடைத்த அந்தப்பொருளை எடுத்தார்... என்னை பார்த்தார்.. புன்னகைத்தார். கதை முடிந்தது.