Pages

06 March 2013

புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்!

இன்று அதிகாலையிலேயே மூன்றுமணி சுமாருக்கு ஓர் அலைபேசி அழைப்பு. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நான்.. திடுக்கிட்டு விழித்து எழுந்தேன். துவக்க எண் +1 என்று இருந்தது. அமெரிக்காவேதான்.

''தம்பீ நல்லாருக்கியளா'' என்றொரு குரல்.

''நல்லாருக்கேன்ங்க.. யாருங்க'' என்றேன்.

''சும்மா கண்டுபுடிங்களேன் பார்ப்போம்'' என்றார்.

''சார் நிஜமாவே தெரியல..''

''சும்மா டிரைபண்ணுங்க பாஸ்..''

''இல்லைங்க நிஜமாவே தெரியல.. என்னோட மெடூலா ஆம்லகேட்டா ரொம்ப வீக்கு நீங்களே சொல்லிடுங்க என்றேன்

''சரி நான் யாருங்கறது இருக்கட்டும்.. முதல்ல பிறந்தநாள் வாழ்த்துகள்''

''எனக்கு இன்னைக்குதான் பர்த்டேனு உங்களுக்கு எப்படி தெரியும்''

''அதான் ஃபேஸ்புக்ல போஸ்டர் அடிச்சி போட்டிருக்கானே, புகழ்பெற்ற எழுத்தாளர் பிறந்தநாள் ஊருக்கே தெரியுமே''

''என்னது எழுத்தாளரா?''

''ஆமாங்க நிறைய ப்ளாகு..ஸ்டேடஸ்லாம்... டுவிட்டு.. கமென்ட்லாம் போடறீங்களே''

''அதனாலேயே எழுத்தாளரா.. ம்ம் மேல''

''ஃபேஸ்புக்ல உங்கள ரெகுலரா பாலோ பண்றேன்''

''ஓ நீங்க என்னோட ஃபேஸ்புக் பிரண்டா?''

''உங்களோட ஃபேஸ்புக் பிரண்டா இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.. ரிக்வஸ்ட் குடுத்து ஆறுமாசமாச்சு.. நீங்கதான் இன்னும் அக்செப்ட் பண்ணல''

''இல்லைங்க 5000 பிரண்ட்ஸ் தாண்டிடுச்சு அதனாலதான்.. தப்பா எடுத்துக்காதீங்க''

''உங்களப்போயி தப்பா நினைப்பேனா.. புகழ்பெற்ற ஆளுங்கன்னா இதுமாதிரிலாம் இருக்கறது சகஜம்தானே.. உங்களோட பேசறதே எனக்கு கிடைச்ச பாக்யமா நினைக்கிறேன்.. போன ஜென்மத்துல நான் ஏதோ புண்ணியம் பண்ணிருக்கணும். நீங்க வாழற காலத்துல நானும் வாழறேன்றதே எனக்கு பெருமையாருக்கு''

''ம்ம்ம்... மேல''

''உங்க எழுத்துன்னா எனக்கும் என் பொண்டாட்டி புள்ளைகளுக்கும் உசுருங்க.. எப்பயும் என் பொண்டாட்டி கிட்ட சொல்லுவேன்.. இந்த பய நல்லா காமெடியா எழுதுவாப்ல.. தினமும் படிச்சிடுனு.. அவ கூட இப்ப உங்களுக்கு ஃபேனாகிட்டா.. அட என் பசங்களுக்கு சோறூட்டும்போது உங்க ஸ்டேடஸை படிச்சி காட்டிதான் சோறூட்டுவா.. தினமும் உங்க ஸ்டேடஸுக்கு நான் லைக் போடாட்டி கடுப்பாகி சோறுபோடமாட்டானா பாத்துக்கோங்களேன்.. ஆக்சுவலா இங்க அமெரிக்காவுல உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா எடுக்கணும்னு ரொம்பநாள் ஆசை.. ''

''ஐய்யயோ என்ன ரொம்ப புகழாதீங்க சார்,.. கூச்சமாருக்கு''

''அட நிஜமாதாங்க.. போனவாரம் நம்ம மன்னுகிட்ட பேசும்போது கூட உங்களைபத்திதான் ஒருமணிநேரம் பேசிகிட்டிருந்தேன்''

''அவர் யாரு.. மனுஷ்யபுத்திரனா''

''அவர் இல்லைங்க.. இவர் வேற.. உங்க ஊர்காரர்தான் தலைல டர்பன் கட்டிருப்பாரே.. நம்ம ராகுலுக்கு கூட ரொம்ப நெருக்கம்ங்க..''

''நீங்க யாரை சொல்றீங்க.. ராகுல் யாருங்க..''

''என்னங்க நாட்டு நடப்பு தெரியாம இருக்கீங்களே... அவங்க அம்மானா இந்தியாவே அலறுமே''

''அம்மானா தமிழ்நாடு மட்டும்தான்ங்க பயப்படும்.. பன்னீர் செல்வம் அன் கோ வைகோ தாபா சீமான்னு சிலர்தான் அலறுவாங்க.. நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலைங்க.. சரி யார் சார் நீங்க.. உங்க பேர் என்ன''

''பேர் சொன்னதும் தெரியற அளவுக்கெல்லாம் நான் ஃபேமஸ் கிடையாது.. அதுவும் உங்க புகழுக்கு முன்னால நான்லாம்.. இங்க வெள்ளைமாளிகைல வேலை பாக்குறேன்.. என்னை எல்லாரும் பிரசிடென்ட்னு கூப்பிடுவாய்ங்க ''

''யோவ் யாருய்யா நீ.. ஏன்ய்யா பொறந்தநாளும் அதுமா இந்த ஓட்டு ஓட்ற''

''எக்ஸ்க்யூஸ்மீ ஒரு அமெரிக்கன் பிரசிடென்ட்கிட்ட இப்படிதான் மரியாதை இல்லாம பேசுவீங்களா.. படிச்ச பண்பாளர்தானே நீங்க.. இதுதான் உங்க தமிழ்நாகரீகமா.. தொன்மையான தமிழர் கலாச்சாராமா.. ''

''சார் சத்தியமா என்னால முடியல.. யார் சார் நீங்க''

''அதான் சொன்னேனே பராக் ஒபாமா''

''*(&$*#$&*&*% டேய் யார்ரா நீ.. பொறந்தநாளும் அதுமா.. ஏன்டா இப்படி படுத்தற''

''உங்களோட நான் பேசற இந்த கான்வெர்சேசன எஃப் பி ஐ ட்ரேஸ் பண்ணிகிட்டிருக்காங்க.. பாத்து பேசுங்க''

''டேங்.. &*$&*#$ ''

''வேற வழியில்ல மிஸ்டர் அதிஷா.. உங்க மேல ஃடெரரிசம் கேஸ் பாயணும்னு இருக்கு.. அதை யாரால தடுக்க முடியும். சிஐஏ உங்களை கண்காணிக்கும்''

''என்னது டெரரரிஸ்டா.. சிஐஏவா''

''சாரி.. மிஸ்டர் அதிஷா. இனிமேல் உங்க ஸ்டேடஸுக்கு லைக் போடமாட்டேன். தப்பா நினைச்சுகாதீங்க. எனக்கு வேற வழியில்ல. சட்டம் தன் கடமைய செய்யும். அமெரிக்கா மாதாக்கீ ஜே! யுவர்ஸ் ஃபெயித்ஃபுலி ஒபாமா. பராக் ஒபாமா..'' ன்னு சொல்லிட்டு அந்த பக்கி ஃபோனை கட் பண்ணிடுச்சு. அதற்கு பிறகு எப்படி தூங்க முடியும்.

இவங்களையெல்லாம் புடிச்சி ஜெயில்ல போடமுடியாத யுவர் ஆனர்.