11 April 2013

அடக்கடவுளே!
வெள்ளியங்கிரி தெரியுமா? கோவைக்கு அருகில் இருக்கிற அருமையான அழகான மலைப்பகுதி. காட்டுயிர்களின் சொர்க்கம். சின்னதும் பெரியதுமாக சுனைகள், மிக அரிய பறவையினங்கள், விலங்குகள், பாசிகள், மூலிகை செடிகள் என பாதுகாக்கப்பட வேண்டிய மலைப்பகுதி . அந்த வனத்தின் காற்றை சுவாசித்தால்கூட தீராத நோயெல்லாம் தீரும் என்று சொல்வதுண்டு.

இதன் அடிவாரத்தில் ஒரு சிவன் கோயில் உண்டு. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வருகிற பக்தர்கள் கரடு முரடான வெள்ளியங்கிரி மலைமீது ஏறி ஏழு குன்றுகள் கடந்து சிவலிங்க வழிபாடு நடத்தி திருவருள் பெறுவது வழக்கம்.

பத்தாண்டுகள் முன்புவரை இப்படி மலை ஏறுகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். குறிப்பாக சித்ரா பௌர்ணமி நேரத்தில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் மலைப்பகுதியின் சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்பின்றி இருந்தது.

ஆனால் இன்று இந்த மலைக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மனிதர்கள் எங்கெல்லாம் அளவுக்கதிகமாக புழங்குகிறார்களோ அங்கே இயற்கை செத்துப்போகும். அதற்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுயிர்களின் வீடு ‘’பக்தியின் பெயரால் + கடவுளின் பெயரால்’’ அழிந்துகொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு அங்கே சென்றிருந்தபோது, மலைப்பகுதி முழுக்கவே எங்குபார்த்தாலும் ப்ளாஸ்டிக் குப்பைகள், உணவுக்கழிவுகள் என மனிதர்கள் இயற்கையை வேட்டையாடிவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இது பக்தர்கள் இயற்கைக்கு செய்கிற சேவை. பாதிகாட்டை பக்தர்கள் அழித்துக்கொண்டிருக்க.. மீதி காடு சும்மாதானே கிடக்கிறது என்று இன்னும் சிலர் கிளம்பினர்.

இயேசுவை கூவிக் கூவி விற்கிற, ஒரு கிறித்தவ மாஃபியா சாமியார், சிறுவாணி பகுதியை சுற்றியிருந்த காடுகளை கபளீகரம் செய்து சர்ச்சும், கல்லூரிகளும் கட்டினார். இதில் ஏகப்பட்ட காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டன. அதோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் நடமாட்டத்தால் காட்டுயிர்களின் இயல்புவாழ்க்கையும் கேள்விக்குறியானது. காட்டுயிர்களின் வசிப்பிடங்களில் அபார்ட்மென்ட்களும் ஹாஸ்டல்களும் கட்டப்பட்டன.

பின்னாலேயே சிவபெருமானோடு வந்தார், இன்னொரு இந்து சாமியார். ''அத்தனைக்கும் ஆசைப்படும்'' அவரோ தன்பங்குக்கு யானைகளின் வழித்தடம் (CORRIDOR) என்று அழைக்கப்படுகிற பகுதியில் மிக பிரமாண்டமாக பல கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டுபோல ஒரு கோயிலை கட்டினார். இதற்காக பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன! அதோடு ஒவ்வொரு மகாசிவாராத்திரியின் போதும் இலட்சக்கணக்கானவர்கள் இந்த வனப்பகுதியில் கூடி பிரார்த்தனை செய்கிறேன் பேர்வழி என காட்டுயிர்களை பாடாய்ப்படுத்தினார்.

இன்று வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மனிதர்கள் மட்டும்தான் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட அப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் ‘’இங்கே காடு இருந்தது’’ என்கிற போர்டு தொங்கலாம். அக்காட்டினை புகைப்படங்களில் பார்த்து அச்சுச்சோ என உச்சுக்கொட்டலாம். ஆனால் யாராலும் இதன் அழிவை தடுக்கமுடியாது. இங்கு மட்டுமல்ல, இன்று நம்முடைய காடுகளில் பலவும் இந்த கார்பரேட் சாமியார்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

தட்டிக்கேட்க நாதியில்லை. இன்று அதிகாரம் அந்த கடவுள் ஏஜென்டுகளின் கைகளில்தான் இருக்கிறது. நடக்கிற அத்துமீறல்கள் கடவுளின் பெயரால் நடக்கின்றன. இங்கு மட்டுமல்ல, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று எத்தனையோ மலைகள் கடவுளுக்காக தாரைவார்க்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கிழக்கு தொடர்ச்சி மலையை, திருப்பதிமலை ஏழுமலையானால் இன்று நாசமாகி கிடக்கிறது. புலிகள் ரிசர்வ் காடுகளுக்குள் இருக்கிற சபரிமலையில் புலிகளே இல்லை! பம்பா நதியில் கூவத்தைவிடவும் கேடுகெட்ட ஒரு சாக்கடையாக மாறியிருக்கிறது. என்ன காரணம். பக்தி!

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதையெல்லாம் தாண்டி அவர் என்றுமே மார்க்கெட் குறையாத நல்ல வியாபார பண்டமாக இருக்கிறார் என்பதை நீங்களோ நானோ மறுக்கவே முடியாது. எப்போதும் விற்றுக்கொண்டேயிருக்கலாம். வாழை மரம் போல கடவுளிடம் சகலமும் விற்பனையாகும். விபூதி தொடங்கி அர்ச்சனை, பூ, பழம், மெழுகுவர்த்தி, ஆன்மீக சுற்றுலா, உண்டியல் என தொட்டதெல்லாம் தங்கம்தான்! உலகில் எப்படிப்பட்ட பொருளாதார சரிவு ஏற்பட்டாலும், பஞ்சம் பட்டினி வந்து மக்களெல்லாம் மாண்டாலும் கோவில் வருமானத்துக்கு மட்டும் குறையே இருக்காது! கடவுள் வெறும் பணம் மட்டுமேயல்ல அதிகாரமும் கூட!

இன்று ஒவ்வொரு ஊரிலும் எத்தனை சாமியார்கள்.. அந்த ஏஜென்டுகளுக்கு எத்தனை கல்லூரிகள், எத்தனை ஆயிரம் கோடி சொத்துகள்.. அவர்களுக்குப் பின்னால் எத்தனை எத்தனை அரசியல் பெருந்தலைகள். பாலியல் வழக்குகளில் சிக்கி சிறைசென்ற சாமியார்கள் எந்த தண்டனையுமின்றி சிறையிலிருந்து மீண்டுவந்து வெற்றிநடைபோட்டு, தொடர்ந்து ஆன்மீக சேவை செய்வதை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சாமியார்கள், இன்னமும் வெளியே சுதந்திரமாக ஆசி வழங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

சாமியாரின் காலடியில் விழுந்து கிடந்த ஜனாதிபதிகளையும் கூட நாம் பார்த்திருக்கிறோமே! இருந்தும் நம்மால் எதுவுமே செய்யமுடிவதில்லை. சொல்லப்போனால் நாம் அனைவருமே கடவுளுக்கு ‘அடிக்ட்’ ஆகிக்கிடக்கிறோம். மீளமுடியாத அடிக்சன். முழுக்க முழுக்க பயத்தினால் உண்டான அடிக்சன். ‘’சாமி கண்ணைக் குத்திடும்’ என்று முதன்முதலாக, உங்கள் தாய் தந்தையர் சொல்லிக்கொடுத்த போது, உண்டான அடிக்சன்! ஜாதகம் பார்த்து பெயர்வைத்தபோது உண்டான அடிக்சன்.

அதனால்தான் கடவுளின் பெயரால் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக்கேட்க அல்லது கேள்வி கேட்கவும் மறுக்கிறோமோ என்னவோ?.

போலியான பக்தர்களால் இயற்கை நாசமாக்கப்படுகிறது. கடவுளின் வீடுகளாக சொல்லப்படும் கோவில்களில் அப்பாவி மக்களின் பணம் பல்வேறு வழிகளில் பிடுங்கப்படுகிறது. நாத்திகர்களே ஆட்சி செய்தாலும், சாமியார்கள் குறைவதில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்..? கடவுள்!

இதற்காக கடவுளை மட்டும்தான் குற்றம்சாட்ட முடியும். கடவுள் மீது கேஸ்போட்டு கோர்ட்டுக்கு இழுக்கலாம். ஆனால் அதெல்லாம் நடக்கிற கதையா? சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஓ மை காட்’ திரைப்படத்தின் கதையே ஒரு சாதாரண மிடில்கிளாஸ் மனிதன்.. சர்வ வல்லமைகொண்ட கடவுளை கோர்ட்டுக்கு அழைப்பதுதான்!

நாத்திகனான மிடில்கிளாஸ் நாயகனுக்கு எதிர்பாராமல் இயற்கைசீற்றத்தால் மிகப்பெரிய தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. அவன் வாழ்க்கையே சர்வநாசமாகும் நிலை. நஷ்ட ஈடு கேட்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செல்கிறான். ஆனால் அந்த நிறுவனமோ ‘’ACT OF GOD” என்கிற புது விஷயத்தை காட்டி பணம் தர மறுக்கிறது. அதாவது கடவுளால் உண்டாகும் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பணம் கிடையாது, என்று சொல்லிவிடுகிறது! இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்த முடிவெடுக்கிறான் நாயகன்.

ஆக்ட் ஆஃப் காட்தானே பிரச்சனை.. கடவுளையே கோர்ட்டுக்கு இழுக்கிறான். கடவுள் மீது வழக்கு தொடுத்தால் எந்த வக்கீல் ஒப்புக்கொள்வான்.. அதனால் அவனே தன் வழக்கை வாதாட முடிவெடுக்கிறான். கடவுளின் பிரதிநிதிகளுக்கு (சாமியார்கள்) நோட்டீஸ் அனுப்புகிறான். அவர்களோடு வாதாடுகிறான். இவனைப்போலவே ஆக்ட் ஆஃப் காடால் பாதிக்கப்பட்ட பலரும் இவனோடு இணைந்துகொள்கிறார்கள்.

போலி சாமியார்கள் ஒன்றுகூடி இவனை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். ஆள்வைத்து கொல்ல திட்டமிடுகிறார்கள்.

கடவுளே நேராக களத்தில் இறங்குகிறார். நாயகனுக்கு உதவ முடிவெடுக்கிறார். அவனை விரட்டும் அடியாட்களிடமிருந்து காப்பாற்றுகிறார். ஆனால் அவர் அவனுக்கு வேறு எந்த உதவியையும் செய்வதில்லை. அவரும் ஒரு பார்வையாளனாகவே இருக்கிறார். அவனுக்கு அருகிலேயே இருக்கிறார்.

மக்கள், நாயகனை எதிர்க்கிறார்கள். வெறுக்கிறார்கள். நாயகனின் குடும்பம் அவனைவிட்டு பிரிகிறது. தனியாக இருந்தாலும் தைரியமாக போராடுகிறான். கடவுளின் பெயரால் நடக்கிற வியாபாரத்தை அம்பலப்படுத்துகிறான். ஒரு டிவி பேட்டியில் அவன் கடவுள் குறித்து முன்வைக்கும் கேள்விகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மக்களும் அவனைப்போலவே கேள்விகள் கேட்க தொடங்குகிறார்கள். ‘’500 ரூபா வாங்குறல்ல.. மரியாதையா இப்ப சொன்ன மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போயா’’ என்று யாகம் வளர்க்க வந்த அய்யரைக் கேட்கிறான் ஒரு இளைஞன்!

மக்களிடையே நாயகனுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடவுள் ஏஜென்டுகளுக்கோ, என்னசெய்வதன்று புரியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கோர்ட் ஆதாரம் கேட்கிறது. எதிர் அணி வக்கீல் ‘’இந்த இயற்கைச் சீற்றங்கள் அனைத்தையும், கடவுள்தான் செய்தார் என்று நிரூபித்துக் காட்டு பார்க்கலாம், ஆதாரம் கொடு’’ என்று சொல்ல.. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போகிறான் நாயகன்.

கடவுள் அவனுக்கு உதவ நினைக்கிறார். நாயகனிடம் பைபிள், குர்ஆன் மற்றும் கீதையை கொடுக்கிறார். அவன் ராப்பகலாக அதை வாசிக்கிறான். தீர்வு கிடைக்கிறது. கடவுள்தான் இயற்கை சீற்றத்துக்கு காரணம் என்று நிரூபிக்கிறான். பல ஆயிரக்கணக்கானோருக்கு இவனால் நஷ்ட ஈடு கிடைக்கிறது. மக்களிடையே நாயகனாக உயர்கிறான். அதே நேரத்தில் ஸ்ட்ரோக் வந்து கோமா நிலைக்கு செல்கிறான்.

போலி சாமியார்கள் இதையே சாக்காக வைத்து அவனை கடவுளாக்க தீர்மானிக்கின்றனர். அவனை மருத்துவமனையிலேயே கொன்றுவிட தீர்மானிக்கின்றனர்.. அவன் முக்தி அடைந்துவிட்டான். அவன்தான் விஷ்ணுவின் பதினோராவது அவதாரம். கல்கி பகவான்.. என்றெல்லாம் புரளியை கிளப்பி விடுகின்றனர். மீடியா உதவியோடு நாயகன் கடவுளாக்கப்படுகிறான். அவனுடைய கடை இருந்த இடத்தில் நாயகனுக்கு கோயிலும் சிலையும் வைக்க தீர்மானிக்கின்றனர்.

கோமாவில் இருக்கும் நாயகனிடம் இதையெல்லாம் கூறுகிறார் கடவுள். அவனை குணப்படுத்துகிறார். போ அவர்களோடு போராடு.. நான் எதையும் செய்யப்போவதில்லை என்கிறார் கடவுள். இறுதியில் நாயகன் கடவுளாக்கப்பட்டானா? அல்லது மக்களை திருத்தினானா? என்பது கிளைமாக்ஸ்!

இந்தியில் வெளியான இத்திரைப்படம் ஒரு சூப்பர்ஹிட்! பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பினாலும், இப்படம் மக்களிடையே, நல்ல வரவேற்பையே பெற்றது. எந்த இடத்திலும் எந்த மதத்தினரும், மனம் புண்படாத வகையில், ஒரு நாத்திக கருத்துகள் கொண்ட திரைப்படத்தை எப்படி எடுக்க முடியும்? அதை சாதித்து காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர். படம் முழுக்க வருகிற கடவுள் எந்த மாயாஜால மந்திரங்களையும் செய்வதில்லை.. அன்பை மட்டுமே போதிக்கிறார்! படமும் கடவுள் உருவகத்தின் விஷயங்களை கிண்டல் செய்வதில் தன்னுடைய நேரத்தை வீணடிக்காமல் கடவுள் எப்படியெல்லாம் சந்தைப்படுத்தப்பட்டு நம்மிடையே விற்கப்படுகிறார் என்பதை நாசூக்காகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். அதோடு அன்பும் கருணையும்தான் கடவுள் என்பதையும் வலுவாக படம்பார்ப்பவரின் மனதில் பதியவைக்கிறார்.

படத்தின் நாயகனாக வருகிற பரேஷ் ராவல் மிகச்சிறந்த நடிகர். படம் முழுக்க அவருடைய ராஜ்யம்தான். காட்சிக்கு காட்சி விசில் பறக்கும் நடிப்பு! அவர்தான் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும்! ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட THE MAN WHO SUED GOD என்கிற படத்தினை தழுவி மராத்தியில் ஒரு நாடகம் உருவாக்கப்படுகிறது. அந்த நாடகம் பிறகு ‘’கிருஷ்ணா V/S கண்ணையா’’ என்ற இந்திநாடகமாக உருப்பெருகிறது. இந்த நாடகத்தில் நடித்த பரேஷ் ராவல் இதை திரைப்படமாக்கவும் முடிவெடுக்கிறார். ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படம் தயாரானது. முதலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்த பரேஷ் ராவலை பாராட்டிவிடுவோம்.

இப்படத்தை இந்தி தெரியாதவர்கள் சப்டைட்டிலோடு பார்ப்பது நல்லது. படத்தின் ஒவ்வொரு வசனமும் மிக மிக அற்புதமானவை. முழுக்க முழுக்க நாத்திக கருத்துகள்தான் என்றாலும் ‘’இவன் சொல்றது கரெக்டுதானேப்பா’’ என்று நினைக்கிற அளவுக்கு கன்வீன்சிங்கானவை! படம் முழுக்க கருத்து குவியலாகவே இருந்தாலும், வாழைப்பழத்தில் விளக்கெண்ணெய் போல அந்த கசப்பே தெரியாமல், திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். படம் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரவென பறக்கிறது.

கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அனைவருமே இப்படத்தை ரசிக்க முடியும். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளின் பெயரால் நடக்கிற அக்கிரமங்களை கண்டு ஒரு நிமிடாவது கோபம் கொள்வார்கள். நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கு இப்படம் நிச்சயம் உற்சாகம் கொடுக்கும்!

கடவுள் எப்படியெல்லாம், வியாபாரப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறார். எப்படியெல்லாம் இறைநம்பிக்கை அதிகார மையங்களுக்கு உதவுகிறது, மதநம்பிக்கைகள் எப்படி நம் மனங்களில் விதைக்கப்படுகின்றன.. என்பதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்களை படம் பேசுகிறது. ஆனால் எந்த இடத்திலும், எந்த மதத்தையும் தரக்குறைவாக பேசுவது இல்லை. எந்த கடவுளையும் ஆபாசமாக அர்ச்சிக்கவில்லை. அதேசமயம் காட்சிக்கு காட்சி நாத்திக கருத்துகள்தான்! மிகச்சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே கச்சிதம். அதோடு பரபரப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் ஒரே குறை.. ஆரம்ப காட்சிகளில் ஆன்மீகத்தின் பெயரால் நாயகனும்கூட ஏமாற்றிதான் பிழைப்பு நடத்துவான்.. அதுதான் இடறல்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலி சாமியாரான மிதுன் சக்ரவர்த்தி ஒரு வசனம் சொல்லுவார்.. ‘‘இவங்களையெல்லாம் திருத்திடலாம்னு நினைக்கறீயா? இவங்க அத்தனைபேரும் அன்பாலதான் கடவுள் நம்பிக்கையோட இருக்காங்கனு நினைக்கிறீயா.. அப்படி இருந்தா திருத்திடலாம்தான்.. ஆனா அவ்வளவுபேரும் பயத்தாலதான் நம்பிக்கையோட இருக்காங்க.. இவங்கள மாத்துறது அவ்வளவு சுலபமில்ல தம்பி’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்!

அது எவ்வளவு உண்மை. பெரியார் தன் வாழ்நாளெல்லாம் போராடியது இதற்காகவும்தான். திராவிட இயக்கங்கள் ஐம்பதாண்டு காலமாக முயற்சிப்பதும் இதற்காகத்தான். ஆனால் ரிசல்ட் என்னவோ சொற்ப சொற்பம்தான்! சொல்லப்போனால் ஒரு சாரர் பெரியாரையே, கடவுளாக்கி நாத்திகத்தையே மதமாக்கி, அவரையும் ப்ராடக்டாக்கி காசுபார்க்கிற, பதவிபார்க்கிற கதைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை!

சரி! தமிழில் கடைசியாக இதுபோல கடவுளையும் போலிச்சாமியார்களையும் விமர்சித்து வெளியான படங்கள் என்னென்ன என்று யோசித்துப்பார்த்தால்.. “வெங்காயம்” என்கிற படத்தைத்தவிர மிக அண்மையில் எதுவுமே தென்படவில்லை. முன்பு வேலுபிரபாகரன் இயக்கிய “கடவுள்” என்கிற படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுவும் கூட மிக சுமாராக இயக்கப்பட்ட ஒரு லோபட்ஜெட் திரைப்படம்தான்! வெறும் கருத்துகள் மட்டுமே நல்ல சினிமா அனுபவத்தை கொடுத்துவிடாது. அது இரண்டரைமணிநேரம் ரசிக்கும்படியாகவும், அதே சமயம் கருத்துகள் ஒவ்வொன்றும் பார்வையாளனை கன்வீன்ஸ் செய்வதாகவும், தரமான திரைப்படமாகவும் காட்சி அனுபவமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனால்தான் பராசக்தி, ரத்தக்கண்ணீர் மாதிரியான படங்கள் வெற்றிபெற்றன!

ஆனால் இன்று மக்களின் பொது புத்திக்கெதிராக, படமெடுக்க யாருக்கும் தைரியமிருப்பதாக தெரியவில்லை. திராவிட இயக்க பின்புலத்திலிருந்து வந்த தயாரிப்பாளர்களும் கூட இப்படிப்பட்ட படங்களை எடுக்க தயங்குகிறார்கள். ‘’ஓ மை காட்’’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யபடவிருப்பதாக முன்பு செய்திகள் வந்தன. அதில் ரஜினிகாந்த் கடவுளாக நடிப்பதாகவும் வதந்திகள் உலவின. ஆனால் அதற்குபிறகு அந்த ப்ராஜக்ட் என்னவானது என்பது அருள்மிகு பாபாவுக்கே வெளிச்சம்!

ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியில், எத்தனை இறைமறுப்பு திரைப்படங்கள் வெளியாகியிருக்கும்? விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அதற்கான தேவை முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது. வெள்ளியங்கிரியும் சபரிமலையும் திருப்பதியும் திருவண்ணாமலையும் ஒரு உதாரணம்தான். இதுபோல தமிழ்நாடு முழுக்கவே, ஏகப்பட்ட சாமியார்கள். எண்ணற்ற பக்தர்கள். தொடர்ந்து கடவுளின் பெயரால் மதங்களின் பெயரால் நம்முடைய இயற்கை வளங்களை ஆறுகளை காடுகளை சுற்றுச்சூழலை கபளீகரம் செய்தவண்ணம்தான் இருக்கிறார்கள். நாம் அதைப்பற்றி கேள்விகேட்கும் தைரியமின்றி கடவுள் பயத்தோடு வாய்பொத்தி வேடிக்கைபார்த்தபடியே இருக்கிறோம்!

***

நன்றி - http://cinemobita.com/

27 comments:

Anonymous said...

பல வருடங்களுக்கு முன் 'காதுல பூ' என்றொரு படத்தில் (ஆம் படம்தான். எஸ்.வி. சேகர் நாடகம் அல்ல. ராகவேந்தர் - ரஜினி மைத்துனரேதான் - அருணா, சுரேகா, நீலு, வி.கே.ஆர்., வெ.ஆ.மூர்த்தி,அனுமந்து, லூஸ்மோகன் மற்றும் பலர் நடித்த படமே தான்) எமலோகத்தையும், லேசாக கடவுளையும், அன்றைய அரசியலையும் - குமரி அனந்தனின் கா.கா.தே.கா. காலம் - நக்கலடித்த முழுநீள நகைச்சுவைப் படம்.

பிற்காலத்தில் அதன் வீடியோ காஸெட் கூடக் கிடைக்கவிடாமல் அப்படியே "அமுக்கி"விட்டார்கள்..

Anonymous said...

பல வருடங்களுக்கு முன் 'காதுல பூ' என்றொரு படத்தில் (ஆம் படம்தான். எஸ்.வி. சேகர் நாடகம் அல்ல. ராகவேந்தர் - ரஜினி மைத்துனரேதான் - அருணா, சுரேகா, நீலு, வி.கே.ஆர்., வெ.ஆ.மூர்த்தி,அனுமந்து, லூஸ்மோகன் மற்றும் பலர் நடித்த படமே தான்) எமலோகத்தையும், லேசாக கடவுளையும், அன்றைய அரசியலையும் - குமரி அனந்தனின் கா.கா.தே.கா. காலம் - நக்கலடித்த முழுநீள நகைச்சுவைப் படம்.

பிற்காலத்தில் அதன் வீடியோ காஸெட் கூடக் கிடைக்கவிடாமல் அப்படியே "அமுக்கி"விட்டார்கள்..

இரவிக்குமார் said...

Waste article...

கூத்தாடி said...

செம கட்டுரை அதிஷா. என்னுடைய பழைய கீச்சு ஒன்றை இதற்கு முடிவுரை ஆக்குகிறேன்.

"உலகின் மிக மோசமான தொற்று வியாதி - பொது புத்தி"

கடவுளும் அவரை/அவளை/அதை/அவற்றை (ஸ்ஸ்ஸப்பா) சுற்றி உள்ள வியாபாரங்களும் பொது புத்தியை எதிர்க்க/தானாய் சிந்திக்க இயலாத ஆட்டுமந்தைகளால் வளர்த்தெடுக்கப்படுவது சோகம்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Superb Writting style. Amazing Adhiza touch ...Nice one ... I enjoyed.

kailash said...

Thanks for Recommending this movie, has to watch with my family

soms erode said...

உண்மையான எதார்த்தமான பதிவு.நன்றி

Anonymous said...

Very nice article...truth always bitter for somebody....


-KKSV


Anonymous said...

Nice one

Anonymous said...

200% correct, concept of god is maintained by fear,selfishness, greed.

Venkatesan said...

மதம் என்பது முட்டாள்தனம் என சொல்லிவிட்டு போங்கள். அது உங்கள் விருப்பம். அதென்ன திருப்பதி, திருவண்ணாமலை எல்லாம் சுற்றுப்புற சூழலை பாதிக்கிறது என்றொரு கருத்து? நாங்கள் கேட்கமாட்டோமா? ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, குலு, மனாலி எல்லாம் என்ன கணக்கு? உத்தராகண்ட், ஹிமாச்சல் என இரண்டு மாநிலங்களே மலை மீது உள்ளனவே! சேது சமுத்திர திட்டத்தால் மீனோ, முயலோ ஏதோ ஒரு பிராணிக்கு பாதிப்பு என்கிறார்கள். அவ்வளவு ஏன். ஒவ்வொரு காரும், மோட்டார் பைக்கும் கூட புகை விட்டு சுற்று புற சூழலை பாதிக்கின்றன. இவற்றை தடை செய்ய வேண்டாமா? எல்லாத்தையும் நிறுத்துங்க. நாங்களும் நிறுத்தறோம்.

Muraleedharan U said...

All god man with big tummy without humanity

Rathnavel Natarajan said...

திரு அதிஷா அவர்களின் அருமையான பதிவு.
வெள்ளியங்கிரி மலை சென்ற பதிவு -அவர் பதிவு எழுதும் ஆரம்ப காலத்தில் எழுதியது படித்திருக்கிறேன்.
இப்போது அதே வெள்ளியங்கிரி மலையை ஆன்மீகம் என்ற பெயரில் எல்லா மதத்தினரும், கம்பெனிகளும் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது பற்றிய அருமையான பதிவு. எல்லா வனங்களும் சிதைக்கப் படுகின்றன. அங்கிருக்கும் பழங்குடியினர் விரட்டப்படுகின்றனர். Summer Resorts என கட்டிடங்கள் பெருகி வருகின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அதிஷா.

perumal karur said...

படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க...

ramesh said...

Venkatesan போன்ற ஆட்கள் குமுதம் பக்தி மலரை படிக்கவும்...இது போல் அறிவு சார்ந்த பதிவுகளை எதிர்க்றேன் பேர்வழி என்று உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்...

Anonymous said...

அருமையான பதிவு தலைவா..என்னுடைய அனைத்து ஏக்கங்களையும் எழுத்தாக்கியுள்ளாய் .என்றும் அதிஷாவின் பாதையில்..

Raashid Ahamed said...

இது ஒரு சினிமா விமர்சனமா அல்லது சுற்றுச்சூழல் அக்கறை கட்டுரையா எதுவாகினும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்து எழுதியிருப்பது சிறப்பு. பொருத்தமாக உள்ளது என்றும் சொல்லலாம். கடவுளுக்கு பயந்து எல்லா அயோக்யன்களும் திருந்திவிட்டாலே நாட்டில் கெடுதல், இயற்கை சீற்றம் நடக்க வாய்ப்பே இல்லை. கடவுள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் இருந்தாலே தப்பு செய்ய பயப்படுவார்கள். ஆனால் மன்சாட்சியே மழுங்கி போனவனுக்கு கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

Raashid Ahamed said...

இது ஒரு சினிமா விமர்சனமா அல்லது சுற்றுச்சூழல் அக்கறை கட்டுரையா எதுவாகினும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்து எழுதியிருப்பது சிறப்பு. பொருத்தமாக உள்ளது என்றும் சொல்லலாம். கடவுளுக்கு பயந்து எல்லா அயோக்யன்களும் திருந்திவிட்டாலே நாட்டில் கெடுதல், இயற்கை சீற்றம் நடக்க வாய்ப்பே இல்லை. கடவுள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் இருந்தாலே தப்பு செய்ய பயப்படுவார்கள். ஆனால் மன்சாட்சியே மழுங்கி போனவனுக்கு கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

Anonymous said...

Venkatesan, well said.
All these guys are pseudos atheists.

Unknown said...

Good review. I will watch this movie.

Venkatesan said...

@ரமேஷ்
மதம் என்பது மூடநம்பிக்கை என்பதோ, அதன் பெயரால் போலி ஆசாமிகள் ஏமாற்றுகிறார்கள் என்பதோ வேறு விஷயம். அந்த விவாதத்துக்குள் நான் போகவில்லை. திருப்பதி, திருவண்ணாமலை, சபரி மலை போன்ற கோவில்களுக்கு செல்வது சுற்று சூழலை பாதிக்கும் செயல் என்ற கருத்தை எதிர்கிறேன். இந்த பழமையான கோவில்களை இடித்துவிட்டால் மக்கள் வேறெங்காவது கூடி சுற்று சூழலை நாசம் செய்வார்கள். முதுமலை, தேக்கடி, மூனாறு என எங்காவது சென்று கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் சுற்றுலா பொருட்காட்சி, புத்தக கண்காட்சி, அதிமுக மாநாடு என கும்பலாக கூடி குப்பை போடுவார்கள். எனவே, மதத்துக்கும் சுற்று சூழலுக்கும் முடிச்சு போடுவது சரியில்லை. In my humble opinion, there is no correlation between the two. நான் சொல்ல வந்தது அம்புட்டுதான். சுற்று சூழலின் பால் இவ்வளவு பற்று கொண்டவர்கள் இனி சொந்த கார், பைக் போன்றவற்றை பயன்படுத்தாமல் பேருந்து, ரயில் போன்ற பொது வாகனங்களையே பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

ramesh said...

@venkadesh,
மன்னிக்கவும் , நீங்கள் சொல்வதை ஏற்றுகொள்கிறேன் , சென்ற கருத்தில் நீங்கள் மத நம்பிக்கையினல் சொல்கிறீர்கள் என்று தவறாக புரிந்து கொண்டேன்,

YESRAMESH said...

நாத்திகம் பேசறவன்லாம் ஹிந்துக்களை பத்தி மட்டுமே ஏன் எழுதுரானுங்க.

YESRAMESH said...

நாத்திகம் பேசறவன்லாம் இந்துக்களை பத்தி மட்டும் எழுதுரானுன்களே ஏன்.

sharfu said...

good article and decent writing

Madhu said...

Ooty -mettupalayam lies in Elephant Corridor .Salim Ali Centre for Ornithology lies in Elephant corridor . Kindly study properly about what is elephant corridor... How it effect the move,ent ... Just like making a comment about the movie don't make ur irresponsible comment about a genuine organisation

Madhu said...

Ooty -mettupalayam lies in Elephant Corridor .Salim Ali Centre for Ornithology lies in Elephant corridor . Kindly study properly about what is elephant corridor... How it effect the move,ent ... Just like making a comment about the movie don't make ur irresponsible comment about a genuine organisation