03 April 2013

கறிவேப்பிலைகளின் கதை
கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்களிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ‘’என்னது இப்படியெல்லாமா நடக்குது’’ என்று ஆச்சர்யமாக இருக்கும். மிகப்பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். நாம் இதுவரை வியந்து பார்த்த பல நட்சத்திரங்களும் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்து நம் மனதில் நொறுங்குவது சாதாரணம். அப்படியொரு உதவி இயக்குனர் எழுதிய புத்தகம்தான் ‘’தோற்றுப்போனவனின் கதை’’.

இந்த உதவி இயக்குனர் ரொம்பவே ஸ்பெஷல். கடந்த 50 ஆண்டுகளாக இவர் உதவி இயக்குனராகவேதான் இருக்கிறார்!

சாதாரண ரசிகனுக்கு வெளிப்பார்வையில் தகதகவென ஜொலிக்கிற சினிமா உலகம் தனக்குள் எப்படி இயங்குகிறது? நாம் திரையில் பார்க்கிற நட்சத்திரங்களின் முகப்பூச்சில்லாத முகங்கள் எப்படியிருக்கும்? சினிமா உலகில் வெற்றிபெற என்ன தேவை? இங்கே தோல்வி எப்படி நிகழ்கிறது? என்பதையெல்லாம் தன் அனுபவங்களின் ஊடாக கூறுகிறார் 78 வயது உதவி இயக்குனரான அழகேசன். எவ்வளவு துரோகம், எவ்வளவு இழப்பு, எவ்வளவு அவமானங்கள்.

இருந்தும் விடாப்பிடியாக இன்று வரை போராடுகிறார். ஆனால் காலம் அவரை மெகாசீரியல்களுக்கு நகைச்சுவை காட்சிகள் எழுதவும், சினிமாவுக்கு காமெடி வசனங்கள் எழுதவும் பயன்படுத்தபடுகிற பினாமி எழுத்தாளராக மாற்றிவிட்டிருக்கிறது. எத்தனையோ வெற்றிப்படங்களுக்கு பின்னால் அழகேசனின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தாலும் அன்றும் இன்றும் அதற்குரிய எந்த அங்கீகாரமும் இன்றி தனிமையில் வாழ்கிறார். கடைசி வரை அவரால் ஒரு முழுநீள படத்தை இயக்கவே முடியவில்லை. பலமுறை படமெடுக்க தொடங்குவதும் பின் கைவிடுவதுமாக நீள்கிறது அழகேசனின் அனுபவங்கள்.

‘’சினிமா உலகின் உங்களிடம் ஒன்று பணம் வேண்டும். அது இல்லையா செல்வாக்கு கட்டாயம் வேண்டும். இரண்டுமே இல்லையென்றால், அதிர்ஷ்டம் வேண்டும். இம்மூன்றும் இல்லாதவனுக்கு திரையுலகம் துரோகங்களை மட்டுமே பரிசளிக்கும்!’ என்கிறார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாடி படித்து முடித்து நடிகனாகும் ஆசையில் நாடகங்களில் நடிக்கிறார். நாடகங்கள் மூலமாக சினிமா தொடர்புகள் கிடைக்க.. சென்னைக்கு வண்டியை விடுகிறார். இங்கே படாத பாடுபட்டு.. உதவி இயக்குனராக வசனகர்த்தாவாக உயர்கிறார். அதோடு அப்போது சான்ஸ் தேடி அலைந்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகளுக்கும் வாய்ப்புகள் வாங்கித்தருகிறார். கவுண்டமணி,பாண்டியராஜன்,சுமித்ரா,முத்துராமன்,ஐசரி வேலன் என ஏகபட்ட பேர் வாய்ப்புத்தேடி அலைந்த காலத்தில் கோலிவுட்டில் அவர்களுக்கான முதல்வாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறார் அழகேசன்.

அதில் மிகச்சிலரே இன்னும் அந்த பழைய மரியாதையோடு அழகேசனோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறார். சிலர் தன்னை முழுமையாக மறந்துவிட்டதையும் குறிப்பிடுகிறார்.

புகழின் உச்சிக்கு சென்ற பின்னும் இன்னமும் அழகேசனை ‘அழகேசண்ணே’ என்று அழைப்பவராகவும் அவரோடு சகஜமாக அதே பழைய அன்போடும் இருப்பவராக ஒரே ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார். அந்த நடிகர், கவுண்டமணி.

ஒருமுறை சாண்டோ சின்னப்பதேவர் தன் படத்துக்கு நல்ல நகைச்சுவை நடிகன் வேண்டும் என அழகேசனிடம் கேட்கிறார். அப்போது வாய்ப்புத்தேடி கம்பெனி கம்பெனியாக அலைந்துகொண்டிருந்தார் கவுண்டமணி. அவரை கண்டுபிடித்து தேவரிடம் அழைத்து செல்கிறார் அழகேசன்.

ஆபிஸ் ஹாலில் தேவர் அமர்ந்திருக்கிறார். கவுண்டமணி உள்ளே நுழைந்து வணக்கம் சொல்லிவிட்டு காத்திருக்கிறார். ‘’எந்த ஊர்.. கவுண்டமணி என்கிற பெயர் உனக்கு எப்படி வந்தது?’’ என்று எல்லா விஷயங்களையும் துருவி… துருவி… கேட்கிறார். கவுண்டமணியும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு பதில் சொல்கிறார்.

எல்லாம் பேசி முடித்த பின், தேவர் ‘’ஏம்பா நீ இவ்வளவு கறுப்பா இருக்கிறீயே.. உனக்கு மேக்கப் பவுடருக்கு எங்கேப்பா போறது?’’ என்று சொல்ல. கவுண்டமணிக்கு முகம் மாறிவிட்டது. பதில் பேசாமல் அமைதியாக நிற்கிறார். அவமானத்தை உணர்கிறார்.

‘’சரிப்பா நான் சொல்லி அனுப்பறேன். மகராசனா போய்ட்டு வா’’ என்று சொல்லி தேவர் கவுண்டமணியை அனுப்பிவிடுகிறார்.

கவுண்டமணியும் அழகேசனும் வெளியே வர.. கவுண்டமணி, அழகேசனை முறைக்கிறார்.

‘’இந்த ஆளு மிருகங்களை வச்சு படம் எடுத்து, அதோடயே பேசி பழகிட்டாருண்ணே.. அதான்.. என்னை மனுஷனா மதிச்சி பேசலைல.. எனக்கும் ஒரு காலம் வரும்ண்ணே.. அப்ப வச்சுக்கிற்றேன் கச்சேரிய’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து போய்விடுகிறார்.

அதற்குப் பிறகு வேறு படங்களில் நடித்து கவுண்டமணி புகழின் உச்சிக்கு செல்கிறார். அந்த நேரத்தில் தேவர் பிலிம்ஸ் தண்டபானி கவுண்டமணியை ஹீரோவாக்கி படமெடுக்க அவரை அணுகுகிறார். ஆனால் கவுண்டமணி அதை மறுத்துவிடுகிறார். அதோடு பல வருடங்களுக்கு முன்னால் அவர் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அவருடைய அப்பா (தேவர்) அவமானப்படுத்தியதையெல்லாம் சொல்ல.. அந்த இடத்திலேயே தண்டபாணி மன்னிப்பு கேட்ட பின்புதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கவுண்டமணி.

பாண்டியராஜன் நடிகனாகும் ஆசையோடு அலைந்துகொண்டிருந்த போது, அவருக்கு ‘தங்கரங்கன்’ என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததோடு, பிறகு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டதும் அழகேசன்தான். சாதாரண நாடக நடிகராக தி.நகரில் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த முத்துராமனை ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலமாக திரையுலகில் கால்பதிக்க வைத்ததும் அழகேசன்தான். தெய்வத்திருமகள் சூட்டிங்கில் முத்துராமனை பார்த்து பிடித்துப்போய் இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பயன்படுத்திக்கொண்டாராம்.

இதுபோல, இன்று நாம் கொண்டாடும் பல இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளின் ஆரம்பகால அனுபவங்கள் இப்புத்தகத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. அவர்களுடனான அனுபவங்களின் வழியாக தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார் இந்த உதவி இயக்குனர்.

புத்தகத்தில் வெறும் புலம்பல்கள் மட்டுமேயில்லாமல் சில நல்ல அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். “தாய்சொல்லைதட்டாதே” படத்தின் ஷூட்டிங். அப்படக்குழுவினரோடு புதிதாக இணைந்திருந்தார் அழேகசன். அன்று வாகினி ஸ்டுடீயோவில் சூட்டிங். படக்குழுவினர் அனைவரும் முன்னதாகவே வந்துவிட கொஞ்சம் தாமதமாக எம்ஜிஆர் வருகிறார். அனைவரும் எம்ஜிஆருக்கு வணக்கம் அண்ணே.. வணக்கம் அண்ணே என்று வணக்கம் சொல்ல.. அழகேசன் மட்டும் வணக்கம் அய்யா என்று சொல்கிறார். அழகேசனை மட்டும் அதிர்ச்சியாகி திரும்பி பார்த்துவிட்டு சூட்டிங்குக்கு போய்விடுகிறார். சூட்டிங்கில் இருந்தவர்கள் அனைவரும்.. அய்யயோ என்னய்யா சொன்னே அண்ணே ஏதோ கோச்சிக்கிட்டாரு என்று அழகேசனை பயமுறுத்துகிறார்கள்.

சூட்டிங் முடித்த பின் அழகேசனை அறைக்கு அழைக்கிறார் எம்ஜிஆர். அழகேசன் எந்த ஊர் எப்படி சினிமாவுக்கு வந்தார் முதலான விபரங்களை கேட்கிறார். அழகேசனும் ஆர்வத்தோடு நான் காரைக்குடி அய்யா, நாடகத்துல நடிச்சிருக்கேன் அய்யா என்று தொடர்ந்து பேசுகிறார். ஒருகட்டத்தில் கடுப்பாகிற எம்ஜிஆர். ‘’நீங்க செட்டிநாட்டுல பொறந்தவரு.. உங்க ஊர்ல எல்லாம் தாத்தாவைத்தானே அய்யானு கூப்பிடுவீங்க.?’’ என்று கேட்கிறார்.

அதற்கும் ஆர்வத்தோடு ‘’ஆமாங்க அய்யா’’ என்கிறார். எம்ஜிஆர் புன்னகைத்தபடி சேரில் இருந்து எழுந்து வந்து..
‘’இப்ப நான் உங்களை தம்பினு கூப்பிடுவேன்.. பதிலுக்கு என்னை நீங்க என்னானு கூப்பிடுவீங்க’’

‘’அண்ணானு கூப்பிடுவேங்க அய்யா’’ என்கிறார் அழகேசன்.

‘’அப்படீனா இனிமே நான் அண்ணே.. நீங்க தம்பி.. இதையே தொடர்ந்து வச்சிக்கங்க..‘’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் என்று எம்ஜிஆரை கடுப்படித்த அனுபங்களும் அழகேசனிடம் உண்டு.

முழுமையாக தயாரிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி மீண்டும் பொட்டிக்குள் முடங்கிய எண்ணற்ற படங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது ‘கொட்டு முரசே’ என்கிற திரைப்படம் தொடர்பானது. பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தமிழில் தயாரான முதல் திரைப்படம் அதுதான். இப்படத்தில் ‘ரிஷிமூலம்’ படத்திலும் சில தொலைகாட்சி தொடர்களிலும் நடித்த சக்ரவர்த்தி என்பவர், பாரதியாராக நடித்துள்ளார். படத்துக்கு இசை ஐயப்பன் பாடல்கள் புகழ் வீரமணி! மனோரமா, ரம்யா கிருஷ்ணன் போன்றோரெல்லாம் நடித்திருந்தும்.. இப்படம் போணியாகவில்லை.

‘’இது பாரதியார் படம்.. யார்சார் பாப்பாங்க’’ என்று விநியோகஸ்தர்கள் படத்தினை வாங்க மறுத்துவிட்டனர். கடைசியில் தமிழக அரசே ஒரு தொகையைக் கொடுத்து, இப்படத்தினை வாங்கிக்கொண்டது. ஆனால் அதை இன்று வரை வெளியிடவேயில்லையாம்! எந்த ஆண்டு இப்படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து அழகேசன் குறிப்பிடவில்லை. உத்தேசமாக எப்படியும் 25 ஆண்டுகளாவது ஆகிவிட்டிருக்கும் என்று யூகிக்கலாம். முதல் பாரதியார் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்பதை பார்க்கிற ஆவல் படிக்கும்போது ஏற்படுகிறது. தமிழக அரசு தூர்தர்ஷனிலாவது ரிலீஸ் செய்யலாம்!

இப்படி அழகேசன் பணியாற்றிய படங்கள், அறிமுகப்படுத்தி நட்சத்திரங்கள் அவர்களுடனான நல்ல கெட்ட அனுபவங்கள் தோல்விகள் அவமானங்கள் ஏராளம். அவரே இயக்கி முழுமையாக தயாராகி வெளியாகாத படங்களும் உண்டு என்கிறார். சகலவித மனிதர்களையும் வாழ்வின் மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டுவிட்ட இந்த உதவி இயக்குனர் தன்னுடைய தோல்வியைக்கூட அழகாக ஒப்புக்கொள்கிறார்.

‘’மண்ணில் உள்ள தாவரங்கள் மரம், செடி, கொடிகளில் உள்ள இலைகள் எல்லாம் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். ஆனால் கருவேப்பிலை இருக்கிறதே அது காய்ந்து சருகாகி மரத்திலேயே வாடிக்கொண்டு இருக்குமே தவிர பழுப்பு நிறமாகி உதிர்வதில்லை. அதுதான் நான்!’’

புத்தகத்தின் கடைசி வரிகள் இவை. சினிமாவில் வாழ்பவர்கள், சினிமா ஆசையோடு சென்னைக்கு ரயிலேறுகிறவர்கள், சினிமாவில் வாழ்க்கையை தொலைக்கிறவர்கள் என சினிமா ஆர்வமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. விகடன் பிரசுரம் வெளியீடு. விலை 85 ரூபாய்!

(நன்றி - www.cinemobita.com)

14 comments:

Anonymous said...

சுவாரஸ்யமான ஒரு புத்தக அறிமுகம்

Raashid Ahamed said...

நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தை பார்த்தாலே இது புத்தகம் அல்ல பொக்கிஷம் என்று சொல்ல தோன்றுகிறது. சினிமா பணம் செல்வாக்கு மட்டுமல்ல திறமை உள்ளவரையும் தான் அரவணைத்து கொள்ளும். மேலும் நிறைய திறமை சாலிகளை வெளிக்கொணர்ந்து வந்துள்ளது என்பது உண்மை. அதே நேரம் நிறைய திறமைசாலிகளை அவமானப்படுத்தி இருக்கிறது. மட்டம் தட்டியிருக்கிறது வெளிப்படாமலேயே செய்திருக்கிறது ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.

Unknown said...

தாங்கள் பதிந்துள்ள சிறிய பதிவே மனதை கலங்கடிக்கிறதே அவர் எவ்வளவு மன வேதனை பட்டிருப்பார்.
பாவம் அனுதபாம்தான் கொள்ள முடியும்.
வேறு என்ன செய்ய?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கலியபெருமாள் புதுச்சேரி said...

Cinemavil mattumalla ella thuraiyilum irukkirargal thiramaiyirunthum vaaippu kidaikathavargal.
Visit my blog kaliaperumalpuducherry.blogspot.com.Expecting your comments and suggestions

குரங்குபெடல் said...

நல்லதொரு புத்தக அறிமுகம் . . .நிறைய முரண்களை உள்ளடக்கியது

சினிமா உலகம் . . .முப்பது நாப்பது வருடமாய் இயக்குனர் வாய்ப்புக்கு பலர்

அலைந்து கொண்டிருக்க

ரஜினி மகள் . .

ஸ்டாலின் மருமகள்ஆகியோர் . . . .
கால கொடுமை
பிசாசுக்குட்டி said...

செம அதி. மிக அருமையான பதிவு :)))

Cable சங்கர் said...

நல்ல அறிமுகம் அதிஷா. இவர் போன்றவர்களின் கதைகள் பல்லாயிரம் சினிமாவில்கொட்டிக் கிடக்கிறது.. :(

Unknown said...

அருமையான புத்தக அறிமுகம்...
அழகேசனின் புத்தகம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை,ஆனால் இந்த அறிமுகத்தைப் படித்தால் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது..

புத்தக அறிமுகம் எழுதுவதன் வெற்றி இதுதான். !

பாராட்டுகள்.

perumal karur said...

நல்ல அறிமுகம் நன்றிங்க...

Manivannan.P said...

திரைக்கு பின்னால் இருக்கும் மோசமான சம்பவங்கள் .திறமைக்கு பலன் கிடையாது. இது நிஜம் .

Manivannan.P said...

திரைக்கு பின்னால் இருக்கும் மோசமான சம்பவங்கள் .திறமைக்கு பலன் கிடையாது. இது நிஜம் .

ganeshdamodharan said...

where can i get the book ?

ganeshdamodharan said...

where can i get hte book !! ??

Anonymous said...

அன்பு நண்பரே

இந்த புத்தகத்தை வலை வீசி தேடி கொண்டு இருக்கிறேன். சென்னையில் எங்கு கிடைகின்றது. கொஞ்சம் விவரம் சொல்லுங்கள் ப்ளீஸ்

என்றும் நட்புடன்

கிருஷ்ணா ஜி