Pages

28 August 2013

ரோல்நம்பர் - 21




தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ஏகப்பட்ட கார்ட்டூன் தொடர்களில் இப்போதெல்லாம் அதிகம் கவர்வது ‘’ரோல்நம்பர்21’’ தொடர்தான். எப்போதும் ‘பென்10’ மட்டுமே போட்டு தாளிக்கிற கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஆசுவாசம் தரக்கூடியதாக இந்த கார்ட்டூன் தொடர் இருக்கிறது.

இந்தத்தொடரிலும் அதே புராணகாலத்து லிட்டில் கிருஷ்ணன்தான் நாயகன். ஆனால் கிருஷ்ணன் பள்ளியில் படிக்கிற ஏழை அநாதை மாணவனாக வருகிறான். தலையில் மயிலிறகு கிடையாது, ஆடம்பர உடைகள் இல்லை, கழுத்தில் டன்கணக்கில் நகைகள் இல்லை.. வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் போட்ட சாதாரண பள்ளி மாணவனாக கிருஷ்ணன். அதுதான் இத்தொடரை மற்ற புராண நாயக கார்ட்டூன் தொடர்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

கிருஷ்ண புராணத்தின் மற்ற எல்லா பாத்திரங்களும் இத்தொடரில் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே இன்றைய யுகத்தில் வெவ்வேறு வேலை செய்கிறவர்களாக மாடர்ன் ஆசாமிகளாக வருகிறார்கள் என்பதுதான் இத்தொடரின் ஸ்பெஷாலிட்டி!

கிருஷ்ணனுக்கும் கம்சனுக்கும் நடக்கிற போட்டிதான் கதை. செத்துப்போன கம்சன் மீண்டும் பிறக்கிறான். கற்பனையான இன்றைய மதுரா நகரில் இருக்கிற அநாதை ஆஸ்ரம பள்ளியில் கம்ஷன்தான் பிரின்சிபால். இப்போது அவன் பெயர் கனிஷ்க்! அதே அநாதைவிடுதியில் தங்கி படிக்கிற அநாதை சிறுவன்தான் கிருஷ்ணன் இந்த ஜென்மத்தில் க்ரிஷ்.

மகாபாரத காலத்தில் செத்துப்போன கம்சன் மீண்டும் பூமியில் பிறந்து மனிதர்களை அடிமைப்படுத்தி பூமியை ஆட்சி செய்ய நினைக்கிறான். அதற்காக வெவ்வேறு திட்டங்களை தீட்டுகிறான். அதோடு பள்ளியில் இருக்கிற குழந்நைகளையும் தீயவர்களாக மாற்ற முனைகிறான். சம்பவாமி யுகே யுகே என்பதற்கிணங்க நம்ம கிருஷ்.. பள்ளி மாணவனாக இருந்தாலும் அவ்வப்போது கம்சனின் திட்டங்களை முறியடித்து உலகை காப்பாற்றுகிறான்! அதோடு குழந்தைகள் தீயவர்களாக மாறுவதையும் தடுத்து நிறுத்துகிறான். கம்சன் பாதாள உலகத்திலிருந்து வெளிக்கொணரும் கொடூர அரக்கர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுகிறான்.

கிருஷ் ஒரு தெய்வக்குழந்தை என்பது தெரியாமலேயே மற்ற பள்ளிச்சிறுவர்கள் அவனோடு நட்பாக இருக்கிறார்கள். பிங்கி என்கிற பெயரில் ராதையும், பப்லு என்கிற பெயரில் சுதாமனும், சுகி என்கிற பெயரில் நாரதரும் கிருஷ்ணனின் நண்பர்களாக பிறந்து அவனுக்கு உதவுகிறார்கள். பள்ளியில் கணக்கு வாத்தியாராக எப்போதும் குழந்தைகளை போட்டு படாதபாடு படுத்துகிறவனாக தாரகாசுரன் மறுபிறவி எடுத்து தாரக் என்கிற பெயரில் வருகிறான். இவை தவிர இன்னும் பல கிருஷ்ண புராண டிக்கெட்டுகளும் வெவ்வேறு பெயரில் இக்கதைகளில் இடம்பெறுகிறார்கள்.

அதோடு பள்ளிமாணவர்களுக்கிடையே நிகழும் சின்ன சின்ன பிரச்சனைகள், அவர்களுடைய அடிதடி ரகளைகள் என செம ஜாலியான கார்ட்டூன் தொடர் இது. சோட்டாபீம் தொடரில் வருகிற காலியாவை போல இத்தொடரில் வருகிற கோலு ஒரு மாணவ வில்லன். அவனுடனான கிருஷ்ணனின் மோதல்கள் சுவாரஸ்யமானவை.

இத்தொடரின் அனிமேஷனும் பழைய பாணியில் இல்லாமல் மிக நேர்த்தியாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணர் கதை என்பதால் கதை எங்கும் நீலம் நிறைந்திருக்கும்படி இத்தொடருக்கான பின்னணி உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு பாத்திரத்துக்கும் இருக்கிற தனித்துவம் இத்தொடரை பெரியவர்களும் பார்க்கிற ஒன்றாக மாற்றுகிறது. குட்டீஸ்களோடு உட்கார்ந்து ஒருமுறை பாருங்கள் அருமையான அனுபவமாக இருக்கும்.