Pages

12 August 2013

புல்லுக்கட்டு முத்தம்மா!




கையிலிருந்து கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார் பிரபல எழுத்தாளர் குஜிலிகும்பான். தலையை குனிந்தபடி கண்களை மூடிக்கொண்டு... (பில்டப் குடுக்கறாராமா!) பேசத்தொடங்கினார்

‘’ம்ம்ம்ம்ம்ம்... வேற வழியில்ல ப்ரோ.. என்னோட லட்சக்கணக்கான..
கோடிக்கணக்கான... வா...வா... என்னது அது.. வானு தொடங்குமே.. வாவாவா...’’

‘’வாமிட் வருதா குஜிலி’’

‘’காமெடி பண்ணாதீங்க ப்ரோ... என்னோட கோடிக்கணக்கான வாசகர்களுக்காக இந்த படத்தை நான் பார்த்தே ஆகணும் ப்ரோ, அவங்க என்னோட விமர்சனத்துக்காக காத்திகிட்டிருக்காங்க..’’ என்றார் குஜிலி.

‘’அதான் படம் ரீலிஸே ஆகலையே அப்புறம் எப்படி விமர்சனம் எழுதுவீங்க’’ என்று குழப்பத்தோடு கேட்டேன்.

‘’இல்லையே வெற்றிகரமான இரண்டாவது வாரம்னு போஸ்டர் பார்த்தேனே’’ என்று குஜிலியும் குழப்பினார்.

‘’நீங்க எந்த படத்தை பத்தி சொல்றீங்க.. ’’ குழப்பத்தோடு கேட்டேன்.

‘’புல்லுக்கட்டு முத்தம்மா ப்ரோ’’

‘’அய்யய்ய மிஸ்டர் குஜிலி கும்பான்... நாம அந்தபடத்தையெல்லாம் பார்த்தா ஊரு என்ன நினைக்கும்.. அதுவும் நீங்க ஒரு முகநூல் பிரபலம்.. உங்க ஸ்டேஸ்க்கு உங்க கமென்ட்டுக்கு உங்க லைக்குக்கு உங்க அதுக்கு... இதுமாதிரி பிட்டுபடமெல்லாம் பார்த்து.. அதுக்குபோயி விமர்சனம்லாம் எழுதி வாட் இஸ் திஸ் ஈஸ் ஃபேமஸ் ரைட்டர்’’ என்று அதிர்ந்தேன்.

''ப்ரோ இதே படத்தை கொரியால யாராவது பம்-கி-மக்கு பார்க்-வான்-குக்குனு டைரக்டர் க்ராஸ்கட்டுபேர்ல்மதர் னு எடுத்தா பார்த்துட்டு உயிர்மைல காலச்சுவடுல விமர்சனம் எழுதினா ஏத்துப்பீங்க.. ஆனா அதே மாதிரி படத்தை தமிழ்ல எடுத்தா ஏன் ப்ரோ ஏத்துக்க மாட்டேங்கறாங்க.. சொல்லுங்க ப்ரோ சொல்லுங்க.. சொல்லுங்க ப்ரோ சொல்லுங்க...''

''ஆமா ஏன்?'' வெளங்காமல் விழித்தேன்.

''நாம மாத்துவோம் ப்ரோ நாம எல்லாத்தையும் மாத்துவோம், இனிமே இப்படிதான்'' சூளுரைத்தார் குஜிலி. தூரத்தில் மணி அடித்தது. டிங்டடிங்ட..

அதோடு கையிலிருந்த துண்டை என்னிடம் நீட்டினார்.

''இது எதுக்கு ப்ரோ''

''இங்கே கொள்ள பயலுக தலையில இத போட்டுகிட்டுதான் இந்த படத்தையெல்லாம் கமுக்கமா பாக்குறாய்ங்க ப்ரோ.. ஆனா வை-பை ஆன் பண்ணிட்டா அப்படியே உத்தமனா மாறிடுவாய்ங்க ப்ரோ.. அதான் நீங்க வேற ரொம்ப கூச்சப்படறீங்களே அதான்'' என்றார்.

வண்டி அண்ணாசாலை அண்ணாதியேட்டர் வாசலில் நின்றது. வாசலில் தலைவா படத்தின் மிகபிரமாண்டமான போஸ்டர். அதற்கு மாலையெல்லாம் போட்டிருந்தார்கள்.

''என்ன குஜிலி புல்லுக்கட்டு முத்தம்மாவ தூக்கிட்டாங்க போலருக்கே''

''தலைவா ரிலீஸ் ஆகாததால அதே படத்தைதான் கன்டினியூ பண்றாய்ங்க ப்ரோ'' என்றார்.

போஸ்டர்கள் அதிரிபுதிரியாக இருந்தன. மூன்று பெண்களின் படங்களை போட்டு ''அசத்த போவது யாரு'' என்று போட்டிருந்தது.

''எனக்கென்னவோ சார்லீஸ் ஏஞ்சல்ஸை கிராமத்து பேக்ட்ராப்ல எடுத்துருப்பாய்ங்கனு ஒரு டவுட்டு ப்ரோ'' என்று அதிர்ச்சியடைய வைத்தார் குஜிலி.

''ஆமாங்க எனக்கும் அதே டவுட்டுதான்''

டிக்கட் கிடைத்தது. விலை நாற்பதுதான். அண்ணா திரையரங்கில் நாற்பதுரூபாய் டிக்கட்டில் படம் பார்த்தால்தான் தலைமறைக்காமல் படம் பார்க்க முடியும். 50 ரூபாய் டிக்கட் வாங்கினால் விதவிதமான மண்டைகளைதான் பார்க்கமுடியும், திரையில் தெரிகிற சண்டைகளை பார்க்க முடியாது.

புதிதாக திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்து முதலிரவுடன் வாழ்க்கையை தொடங்க படம் தொடங்கியது.

''ஆரம்பமே அமர்க்களமா இருக்கே ப்ரோ'' என்றார் குஜிலி.

எல்லா பிட்டுப்படங்களிலும் வருவதைப்போல அந்த நேரம் பார்த்து நாயகனுக்கு திடீரென தலைவலி வந்துவிட புரண்டு படுத்துக்கொள்கிறான். தியேட்டரே அந்த அப்பாவி நாயகனை திட்டி தீர்க்கிறது.

''நல்ல சீன் ப்ரோ.. ச்சே.. இப்படி ஆயிடுச்சே '' என்று சலித்துக்கொண்டார் குஜிலி. இதுபோல படம் முடிவதற்குள் பத்துமுறை சலித்துக்கொண்டார்.

அதற்கு பிறகு படம் சூடுபிடிக்கவே இல்லை. எங்காவது சூடுபிடிக்கிற மாதிரி இருந்தாலும் ஹீரோவின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டி பயமுறுத்துகிறார் இயக்குனர். இடைவேளைக்கு சற்றுமுன்புதான் புல்லுக்கட்டு முத்தம்மா வருகிறார்.

புல்லுக்கட்டு முத்தம்மா பாத்திரத்தில் ஒரு வயசான பாட்டியை நடிக்க வைத்திருக்கிறார்கள். அந்த பாட்டி எப்போதும் வாயில் வெத்தலை பாக்கோடு பாவமாக அங்கிமிங்கும் கூடையோடு நடக்கிறது. பாவமாக இருக்கிறது.

அந்த பாட்டியின் வாழ்க்கையில் விளையாடிவிடுகிறான் நாயகன். அந்த பாவத்துக்கு சரியான தண்டனை கிளைமாக்ஸில் கிடைக்கிறது. பயங்கர காமெடியான தண்டனைது. ஒட்டுமொத்த தியேட்டரும் பிட்டில்லாத விரக்தியில் இருந்தாலும் அழுகையை மறைத்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறது! ஆனால் குஜிலி சிரிக்கவேயில்லை.

படம் முடிந்து வெளியே வந்து வண்டியை எடுக்கும்வரை குஜிலி சைலன்டாகவே இருந்தார். அவரால் அந்த கிளைமாக்ஸ் கொடூரத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

''ஏன் குஜிலி ஏன்.. ப்ளீஸ் பீல்பண்ணாதீங்க'' என்று கண்டித்தேன்.

தன் கண்ணீரை துடைத்தபடி அவர் கூறியது என்னை அசைத்துப்பார்ப்பதாக இருந்தது. என்னை மட்டுமல்ல அந்த இருண்ட திரையரங்கின் ஓரங்களில் ஏதாவது ஒரு சின்ன பிட்டாவது தேறாதா என்கிற எதிர்பார்ப்புடன் கள்ளமௌனங்களோடு அமர்ந்திருந்த நூத்திசொச்சம் பேரையும் அது அசைத்துப்பார்த்துவிடும்.

குஜிலி சொன்னார்

''WE MISS SHAKILA.. YES WE MISS SHAKILA DESPERATELY RESPECTFULY YOURS OBEDIENTLY"