Pages

22 October 2013

காலம் விழுங்கிய நெருப்பு



எங்கோ குறிப்பிட்ட இடைவெளியில் மெலிதாக கேட்கிற ஒற்றை வேட்டு சத்தம் தீபாவளியின் வருகையை அறிவிக்கிறது

அனேகமாக யாரோ குட்டிப்பையன் அல்லது பெண் ஒரு பாக்கெட் நிறைய சிகப்பு நிற சின்னசின்ன ஊசிவெடிகளை வைத்து தன்னந்தனியாக கையில் ஒரு ஊதிபத்தியோடு வெடித்துக்கொண்டிருக்கலாம்

அதை பக்கத்துவீட்டு பையன்கள் ''நம்ம வீட்டுக்கு அப்பா எப்படா பட்டாசு வாங்கிட்டு வருவாரு'' என்கிற ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கலாம்

''டே நாமல்லாம் சேந்து வெடிக்கலாமா.. எங்க வீட்ல பட்டாசு வந்ததும் உனக்கு கொடுக்கறேன்.. ஒன்னே ஒன்னுடா'' என்று கெஞ்சிக்கொண்டிருக்கலாம்.

அல்லது அப்பா வாங்கி வந்த பட்டாசுகளை கொடுக்காமல் அம்மா மறைத்து வைத்திருக்கலாம்.

அல்லது பட்டாசு வாங்கித்தர யாருமற்ற ஒருவன், வெடிக்காத பட்டாசுகளை பொறுக்கிசெல்ல ஒவ்வொரு வெடியை பற்றவைக்கையிலும் இந்த பட்டாசு புஸ்ஸா போயிடணும் என கடவுளை வேண்டிக்கொண்டிருக்கலாம்.

என்னிடமோ கைநிறைய பட்டாசுகள் இருந்தும் வெடிக்கமுடியாமல் எதையோ தொலைத்துவிட்டுக் காத்திருக்கிறேன். அது காலம் விழுங்கிய நெருப்பாக இருக்கலாம். அது திரும்ப கிடைக்குமா தெரியாது.

சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது தீபாவளியின் வருகையை அறிவித்தப்படி.