Pages

28 October 2013

தமிழில் ஒரு டான்ப்ரவுன்




6174 என்கிற தமிழ் நாவலை சென்றவாரம் ஓர் இரவில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். க.சுதாகர் என்கிற அதிகம் பரிட்சயம் இல்லாத எழுத்தாளர் எழுதிய நாவல் இது. இது இவருடைய முதல் நாவலாம். நம்பவே முடியவில்லை. 400 பக்கங்கள் கொண்ட அந்த சற்றே பெரிய நூலை ஒரே மூச்சில் படித்து முடிப்பேன் என்று நண்பர் மதன்செந்திலிடம் ஓசிவாங்கும்போதுகூட நினைத்து பார்க்கவில்லை.

முதல் நாலைந்து பக்கங்கள் பொறுமையாக தொடங்கினாலும் அதற்கு பிறகு நாம் என்னமோ பிஎஸ்எல்வியில் ஃபுட்போர்ட் அடிப்பது போல நம்மை உள்ளே இழுத்துக்கொண்டு பாய்கிறது கதை. அப்படி ஒரு வேகம்! அனேகமாக கடந்த சில ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட ஜனரஞ்சக அல்லது பல்ப் நாவல்களில் இதற்கே முதலிடம் கொடுக்கலாம். அதோடு தமிழில் இதுவரை வெளியான அறிவியல் புனைகதை நாவல்களிலும் இதற்கு முக்கிய இடம் கொடுக்கலாம்.

வரிக்குவரி அவ்வளவு தகவல்கள். ஆனால் எதுவுமே எங்குமே உறுத்தாமல் கதையோடு அதன் வேகத்துக்கு இணையாக பீட்சா டாப்பிங்ஸ் போல தூவிக்கொண்டே போகிறார். ஒரு பரபரப்பான ஹாலிவுட் படத்தின் திரைக்கதையை தமிழில் படிப்பது போல உணர முடிந்தது. அதற்கேற்ப க்ளைமாக்ஸில் இரண்டாம்பாகத்துக்கு அச்சாரமெல்லாம் போட்டுத்தான் கதையை முடிக்கிறார்.

லெமூரியா காலத்தில் தொடங்கும் கதை , உலக அழிவு, மூன்றாம் உலகப்போர், லெமூரியன் சீட் கிரிஸ்டல்,பிரமிடுகள், தமிழ் இலக்கணம்(!), எண்கணிதம்,கோலம்,வெண்பா, இன்றும் வாழும் டைனோசர்காலத்து மீன் சீல்கந்த், க்றிஸ்டலோகிராபி… இன்னும் நிறைய இருக்கிறது அதையெல்லாம் எழுதுவதே நூலுக்கு செய்யகூடிய துரோகமாகிவிடும். அவ்வளவும் ஸ்பாய்லர்ஸ். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் எளிமையான விளக்கங்கள் நூல்முழுக்க உண்டு.

படித்து முடித்ததும் நேராக கூகிள் தளத்துக்கு சென்று தேடலைத்தொடங்கினேன். பர்மாவில் இருக்கிற கட்டிமுடிக்கபடாத பகோடா, ஹர்ஷா எண்கள், நன்னீர் டால்ஃபின்கள், ரஷ்யன் போர்கப்பல்கள், க்ரிப்டிட் உயிரினங்கள் என இன்னும் நிறைய விஷயங்களை தேடி இவையெல்லாம் சரியான தகவல்தானா என உறுதிப்படுத்தி கொண்டேன். ஏன் என்றால் நான் படித்தது ஒரு தமிழ் நாவல்.

பொதுவாக வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உயரிய தத்துவத்தின் படி டான்பிரவுன்களையும், சிட்னி ஷெல்டன்களையும், ஸ்டீபன் கிங்குகளையும் நான் ஒருநாளும் சந்தேகித்ததே இல்லை. ஏன் என்றால் அதெல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. தமிழில் அது போல முன்பு எழுதிக்கொண்டிருந்தவர் சுஜாதா. அவருக்கு பிறகு அறிவியல் விஷயங்களை யார் எழுதினாலும் அதில் ஏனோ நம்பிக்கையே வருவதில்லை. அதுபோக இன்று யாரும் போகிற போக்கில் எதையும் எழுதிவிட்டு தப்பவே முடியாது.

சாதாரண பல்ப் வகை துப்பறியும் கதைதான் என்றாலும் இதற்காக ஆசிரியரின் மெனக்கெடல் பிரமிக்க வைக்கிறது. அது இன்றைய ஜனரஞ்சக வாசகனின் தேவையாகவும் இருக்கிறது. டிஸ்கவரிசேனலும்,நேஷனல் ஜியாகரபியும் ஓர் எழுத்தாளன் சொல்லித்தருவதை அதிகமான விஷயங்களை வாசகனுக்கு தமிழ் டப்பிங்கில் மிக சிறப்பாக வீட்டிற்கே வந்து சொல்லிகொடுத்துவிடுகின்றன. கூகிள் காலத்தில் எழுத்தாளனால் ஈஸியாக கப்ஸாவிட்டு தப்பிக்க முடியாது.

அதையும் மீறி ஒரு அறிவியல் விஷயத்தை சுவாரஸ்யமாகவும் கச்சிதமாகவும் சொல்ல அதீத உழைப்பும் நிறைய க்ரியேட்டிவிட்டியும் வேண்டும். அது இந்நாவலில் நிறையவே இருக்கிறது. அந்த க்ரியேட்டிவிட்டிதான் லெமூரியன்களை சிவபெருமானோடு தொடர்பு படுத்துகிறது. நான்கே எண்களை கொண்டு ஒரு 400 பக்க நாவலை எழுதவைத்திருக்கிறது. பல்ப் வகை நாவல்களை படிக்கிறவர்களும், அறிவியல் புனைகதைகளில் ஆர்வமுள்ளவர்களும் மிஸ்பண்ணிவிடக்கூடாத நாவல் இது. இலக்கியவாதிகள் நிறைய லாஜிக் பார்ப்பார்கள் அவர்களுக்கு இது ருசிக்குமா தெரியவில்லை. அதோடு நாவலில் மனித உணர்வுகள் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கதையை நகர்த்தியிருப்பதால் அவர்களுக்கு எரிச்சலூட்டலாம்.

டான்பிரவுனின் டாவின்சி கோட் என்கிற நாவல் சுதாகரை நிறையே பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. நூலில் ஒரு இடத்தில் டான் பிரவுனின் பெயரும் இடம்பெறுகிறது. நாவல் முழுக்க ஏகப்பட்ட புதிர்கள். எல்லாமே அவரே உருவாக்கியவையாய் இருக்குமென்று நினைக்கிறேன்.

சுஜாதாவின் அறிவியல் புனைகதைகளை படித்துவிட்டதாலோ என்னவோ ஆங்காங்கே தொட்டுக்கொள்ள கொஞ்சமாக ஊறுகாய் போல செக்ஸும், அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற வசன காமெடிகளையும் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த பாதிப்பெல்லாம் இல்லாமல் முழுக்க சீரியஸாகவே கதையை புனைந்திருக்கிற்றார் சுதாகர். வளவளவென ஏகப்பட்ட தத்துவங்கள் பேச நிறைய வாய்ப்பிருந்தும் ஏனோ அதைக்குறித்து அதிகம் பேசாமல் அப்படியே தாண்டி சென்றது பிடித்திருந்தது. ஆனால் க்ளைமாக்ஸை ஒட்டி நடக்கும் களேபரங்கள் இன்னும் கூட எளிமையாக புரியும்படி எழுதியிருக்கலாம் நாலைந்து முறை படித்துதான் ஒவ்வொருவரியையும் புரிந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.

இந்நாவலில் நிறைய புதிய அறிவியல் விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. சிலவற்றை பற்றி ஆழமாக தேடவும் தோன்றுகிறது. குறிப்பாக லெமூரியா குறித்து... இன்னொருமுறை கூட வாசிக்க நினைத்திருக்கிறேன். பொறுமையாக.

6174
க.சுதாகர்
வம்சி பதிப்பகம்
விலை 300

(நூலை பரிந்துரைத்ததோடு ஓசியிலும் கொடுத்து உதவிய நண்பர் மதன் செந்திலுக்கு நன்றி)

ஆன்லைனில் வாங்க - http://discoverybookpalace.com/products.php?product=6174