10 March 2014

அசுணமா

நண்பர் வேல்கண்ணன் எழுதிய ‘’இசைக்காத இசைக்குறிப்புகள்’’ கவிதை நூல் விமர்சன கூட்டத்துக்கு சென்ற வாரம் சென்றிருந்தேன். கதிர்பாரதி, ஐயப்ப மாதவன் என பலரும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவின் பேச்சு அசத்தலாக இருந்தது. அவருடைய பேச்சில் அசுண பட்சி என்கிற சங்க காலத்துப் பறவையைப்பற்றி சொன்னார். மிகவும் சுவாரஸ்யமான பறவையாக இருந்தது.

இப்பறவை நம்முடைய பழைய இலக்கியங்களில் வருவதாக குறிப்பிட்டார். இந்த அசுணபட்சி. ‘’புகுரி’’ என்கிற புல்லாகுழலை ஒத்த இசைக்கருவியை வாசித்தால் எங்கிருந்தாலும் பறந்துவந்து பக்கத்திலேயே அமர்ந்து கேட்குமாம்! ச்சூச்சூ என விரட்டிவிட்டாலும் போகாதாம்! இந்த புகுரி இசையை அது ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போது எங்காவது ஒரு விநாடி தப்பாக வாசித்துவிட்டால், அந்த இடத்திலேயே தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு அப்படியே விழுந்து செத்துப்போகும் என்று குறிப்பிட்டுச்சொன்னார்.

இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்கிற கேள்விகளை தூக்கி கக்கத்தில் வைத்துவிட்டு , இந்தக்கற்பனையை வெகுவாக ரசித்தேன். சின்ன வயதில் பள்ளியில் அன்னப்பறவை பற்றியும் அது தண்ணீரையும் பாலையும் பிரித்துவிடும் என்றும் படித்ததெலாம் நினைவில் வந்துபோனது! பெரும்பாலான நேரங்களில் அது கழுத்து நீண்ட வெள்ளை வாத்து என்றே கற்பனை பண்ணியிருக்கிறேன். அப்படிதான் நம்முடைய ஆட்கள் எல்லோருமே ஒவியங்களிலும் குறிப்பிட்டிருப்பார்கள்.

அசுணப்பறவை குறித்து வீட்டிற்கு வந்ததும் தேட ஆரம்பித்தேன். கூகிளிருக்க பயமேன். இப்பறவை பாடப்பெற்றதாக அமிர்தம் சூர்யா குறிப்பிட்ட கம்பராமாயணப்பாடலிலிருந்து ஆராய்ச்சியை தொடங்கினேன்.

‘’துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச்செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ’’

(யாழ் இசையில் மகிழ்ந்து திளைக்கும் அசுணம் எனும் நல்ல விலங்கு, பறையின் வல்லோசை
கேட்டால் உயிர் விட்டுவிடும் என்பர். அதுபோல ‘நற்கவிதைகள்
கேட்டுத் திளைத்த செவிகளில் என் புல்லிய பாவின் ஓசை
வீழ்ந்ததால் கேட்டோர் துன்புறுவர் – என்பது இப்பாடலின் விளக்கம்)

இப்பாடலில் புகுரி வாத்திய கருவி பற்றியும் குறிப்பு எதுவும் இல்லை. பாட்டில் பிழை இருந்தால் செத்துப்போகும் என்பதாகவும் இல்லை. யாழிசைக்கு நடுவில் பறை இசை கேட்டால் அதிர்ச்சியில் இறந்துபோகும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுண நன்மா என்று குறிப்பிட்டிருப்பதால் இது விலங்காகவும் இருக்கலாம் என்று ஒருநண்பர் சந்தேகமாக குறிப்பிட்டார். மா என்பதற்கு விலங்கு என்பதே பொருள் (அகராதியில் பார்த்துட்டேன்!). அதோடு அது பறக்கவல்லது என்பதாக குறிப்புகளும் இல்லை. என்னங்கடா இது இது பறவை இல்லையா என்று மேலும் அதிர்ச்சியாகி கூகிளாண்டவர் உதவியோடு தேடலை இன்னும் நன்றாக முடுக்கினேன்.

அசுணத்தைத் தேடப்போக ‘மாசுணம்’ என்கிற வார்த்தை தமிழில் இருப்பது தெரியவந்தது. மாசுணம் என்பது மிகவும் நீண்ட பாம்புவகையை குறிப்பதாகும் (ராஜநாகமாக இருக்கலாம்!). சிவபெருமானுக்கு மாசுணங்கங்கணன், மாசுணங்கச்சயன் என்கிற பெயர்களும் உண்டாம்! இங்கே கம்பராமாயண பாடலை நோட் பண்ணுங்க ‘’அசுண நன்மா’’ என்று அவர் குறிப்பிடுகிறார்? கன்ப்யூசிங் இல்ல!

மாசுணத்தைதான் ரிவர்ஸில் அசுண நன்மா என்று குறிப்பிடுகிறாரோ என்கிற சந்தேகமும் வர தலை சுற்றியது! ''அசுணமா'' என்பதே அதன் சரியான பெயர் என்பதும் தெரியவர மேலும் கூகிளிட… ஓர் அருமையான இணைப்பு கிடைத்தது.

http://www.gunathamizh.com என்கிற இணையதளத்தில் இந்த அசுணமா பறவையா விலங்கா? என்பது குறித்து ஒரு சின்ன ஆராய்ச்சியை ஏற்கனவே 2008லேயே செய்திருந்தார்கள்.

சங்க இலக்கியத்தில் மலைபாம்பினை மாசுணம் என்றே குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். "களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)என்கிற பாடலையும் இதற்கு உதாரணமாக குறிப்பிடுகிறார்,

‘’ அசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது ‘’ என்பதாக குறிப்பிட்டு அசுணமா என்பது அக்காலத்து பாம்புவகை. அது இசையால் உண்டாகும் அதிர்வினால் வாசிக்கப்படும் இடத்திற்கு வரும் என்றும்.. வந்த இடத்தில் பறை இசை அதிர்வினால் அதிர்ச்சிக்குள்ளாகி மயங்கிவிழும் என்றும் புரிந்துகொள்ளலாம் என்கிறார்!

(விரிவாக இங்கே http://www.gunathamizh.com/2008/05/blog-post_02.html)

"அசுணமா"ங்கறது பாம்பா பறவையான்றதே குழப்பிகிச்சு… ஆனால் பொள்ளாச்சியை சேர்ந்த பாற்கடல் சக்தி என்கிற கவிஞர் அசுணவேட்டை என்கிற கவிதையை எழுதியிருக்கிறார்.

அதில் ''அசுணப்பறவை இசையை பிரித்தரியவல்லது!'' என்பது மாதிரி குறிப்பிட்டுள்ளார். (அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரிக்கிறார்ப்போல!). அனேகமாக கவிஞர்கள் மத்தியில் இந்த அசுண பட்சி மிகவும் புகழ்பெற்ற MYTH ஆக இருக்குமென்று புரிந்தது. எனக்கு அது பறக்கும் பாம்பாக இருந்திருக்குமோ என்றுகூட தோன்றியது! கற்பனைதானே...

அதுசரி அந்த புகுரி என்கிற வாத்தியக்கருவி? அதைப்பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. புகுரி என்ற சொல்லே அகராதியில் இல்லை!(நான் பார்த்த அகராதியில்) ஒருவேளை மகுடிக்குத்தான் அப்படி பெயரோ என்னவோ…

சில கற்பனைகள் அழகானவை அதைப்பற்றி ஆராய்ச்சிகளில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன்மூலம் தெரிந்துகொண்டேன். அசுணமா எனக்கு பட்சியாகவே இருந்திருக்கலாம்.

11 comments:

வவ்வால் said...

என்னதான் ஆராய்ச்சி செய்தீர்களோ?

அசுணமா என்றால் பறவையாகத்தான் இருக்கணும், சூடாமணி நிகண்டின் படி ,அசுணமா என்பது பறவை தொகுப்பில் வருது,

மயில் அல்லது வல்லூறு/பருந்து, பாம்பினை உண்ணும் பறவைனு வச்சிக்கலாம்.

இசையும் கேட்கும் வல்லமை இருக்குனு சொல்வதும் ஏற்கக்கூடியதே, ,மயில் முரசொலிக்கேட்டால் பயப்படும்னு சொல்லப்பட்டிருக்கு.

மயிலின் கூவலுக்கு கேகைனு பேரு,

# வல்லூறு/பருந்து என சொல்லக்காரணமும் இருக்கு, இன்றைய கசகஸ்தானுக்கு கேகயம் என்று ராமாயணக்காலத்தில் பெயர் ,அங்கே இருந்து வந்தவள் தான் கைகேயி.

அசுணமா என்பதற்கு , கேகயம் என , சூடாமணி நிகண்டு சொல்வதால், கசகஸ்தான் இரான் - பாரசீக வல்லூறுக்கு கேகயம் என பெயர்,அதனை வைத்து அசுணமா என்பதை வல்லூறு/பருந்து எனலாம்.

பருந்து , விசில் சத்தத்துக்கு ஏற்ப வரும், அதனை வைத்து பழக்கலாம்.

எனவே புகுரி என்பது விசில் அல்லது அது போல குழல் வாத்தியமாக இருக்கலாம்.

பொதுவாக எந்தப்பறவையாக இருந்தாலும் முரசு, அல்லது பறையொலிக்கு அஞ்சி ஓடும், அக்காலங்களில் வயலில் பறவை ஓட்ட பறை அடிப்பது ,வெடி வெடிப்பது , இல்லைனா காலி தகர டப்பாவை அடிப்பாங்க.
---------------

மாசுணம் என்பது "அனகோண்டா போல ஒரு பாம்பு, அனகோண்டாவுக்கு யானைக்கொல்லினு ஒரு பேரு இருக்கு. ஒரு பெரிய பாம்புனு வச்சுக்கலாம்.

இந்தியாவில அனகோண்டா இருக்கானு கேட்கப்படாது, தஞ்சாவூர் கோயிலில் அனகோண்டா சிற்பமே இருக்கு :-))

அதை எடுத்து அசுணமானு சொன்னா எப்படி?

அதிஷா என்றாலும் திரிஷா என்றாலும் ஒன்னு தானா அப்போ :-))

வவ்வால் said...

பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு. 2

பொருள்:

உரவோர் - அறிவுடையோர்
அசுணமா - கேகயப் பறவைகள்

கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துபடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.

இப்படி நான்மணிக்கடிகை என்ற நூலிலும் இருக்கு.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14025

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
நன்றி நண்பரே

Unknown said...

@வவ்வால்

நீங்க சொல்றது சரி மாதிரிதான் இருக்கு. ஆனா அசுணமான்றது கேகேய பறவைனோ அல்லது பறக்க கூடியதுனோ எதுவும் பாடல் இருக்கா?

அது பறை இசை கேட்டால் ஓடிடும் அல்லது செத்துடும்ன்ற மாதிரிதான் பாட்டெல்லாம் இருக்கு.

சூடாமணி நிகண்டு தவிர்த்து வேற எங்கயும் அதை பறவைனு குறிப்பிடலனும் நீங்க கவனிக்கணும்.

வவ்வால் said...

அதிஷா,

சூடாமணி நிகண்டில் வரும் சிலக்குறிப்பிட்ட பறவைகள் ,விலங்குகளின் தற்காலப்பெயர்களை தேடித்தொகுத்து முன்னரே ஒரு பதிவுப்போட்டுள்ளதால்,அதில் வரும் பெயர்கள் பெரும்பாலும் சரியாக உள்ளதை அறிவேன்.

எங்கேனும் இலக்கிய குறிப்பில்லாமல் சூடாமணியில் தொகுக்கப்படவில்லை,ஆனால் பல இடம்,பொருள் சார்ந்து வழக்கில் பொருள் மாறுபடும்.

உதாரணமாக "பாறு" என்ற பெயர் கழுகை ,வல்லூறை குறிக்கிறது,ஆனால் கழுகு,வல்லூறு என தனிப்பெயரும் உண்டு, அப்போ பாறு என்பது குறிப்பாக எது என தேடினால் வல்லூறுக்கே பொறுந்துவதை, தியோடர் பாஸ்கரன் எழுதிய ஒரு கட்டுரை மூலம் பாறு என்பது நீலகிரி வல்லூறு என உறுதி செய்துக்கொண்டே பதிவில் எழுதினேன்.

# கேகயம் என்ற சொல்லே "கம்பராமாயணத்தில் சில இடங்களில் வருகிறது, ஒரு முறை பறவை எனவும், இன்னொரு முறை மானாகவும் எனவே கேகய நாடு எட இடத்தினை வைத்து குறியீடாக கேகய மானே , என்கிறார்,அப்புறம் கேகயப்பறவை என்கிறார் கம்பர் , அந்தப்பாடல்களை தேடி எடுக்க நேற்று சோம்பலாக இருந்தது, இப்போ தேடியதில் தமிழ் இணையப்பல்கலையில் கிடைத்தது.

"கண்ணே வேண்டு மென்னினும் ஈயக் கடவேனென்
உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே வண்மைக் கேகய(ன்) மானே பெறுவாயேல்
மண்ணே கொள்நீ மற்றைய தொன்றும் மறவென்றான் "

பெண்ணை (கைகேயி) வலிமையான கேகய மான் என்கிறார். நல்ல திடமான பெண் என்பதை அப்படி சொல்கிறார்.

இன்னொருப்பாடலில்,

"கோகிலம் நவில்வன இளையவர் குதலைப்
பாகியல் கிளவிக ளவ(ர்)பயி(ல்) நடமே
கேகயம் நவி(ல்)வன; கிளரிள வளையின்
நாகுக ளுமி(ழ்)வன; நகைபுரை தரளம் "

பயில் நடமே கேகயம் நவில் வன என நடனமாடும் கேகயம்- மயில் என கம்பர் சொல்கிறார்.

எனவே அசுணமா என்றால் கேகயம் ,கேகயம் என்றால் மயில் ,எனவே அது ஒரு பறவை அஃதே!

இடத்தின் பெயரால் குறிப்பிடப்படும் எனில் ,எதை சொல்கிறார்கள் என பாட்டோடு அல்லது சொல்லப்படும் சூழல் பொறுத்து மிருகமாக கருதலாம். பொதுவாக மயில் போன்ற பறவை என கருதவே அதிக வாய்ப்பு!

வவ்வால் said...

மேலும் ,ராவணனின் தாயார் பெயரும் "கேகசி" என்கிறார் ,கம்பர். பொதுவாகவே ராமாயணம் என்பது இரானில் நடந்தது என கருத்துண்டு , கேகய (கசகஸ்தான்) பற்றிய குறிப்பாக பலவும் இடம் பெற்றிருப்பதை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

இதுல ராவணன் தமிழன், ராமன் ஆரியன் என அரசியல் வேற அவ்வ்!

கேகயம் என்றால் மயில், கேகய நாடு, விஷம் என பலப்பொருள் உள்ளது.

பிங்கள நிகண்டிலும் "அசுணமா" எனில் இசைக்கேட்கும் பறவை என உள்ளதாம், இனிமேல் பிங்கள நிகண்டையும் தேடிப்படிக்கணும் அவ்வ்!


http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=1091

Raashid Ahamed said...

<<<‘’புகுரி’’ என்கிற புல்லாகுழலை ஒத்த இசைக்கருவியை வாசித்தால் எங்கிருந்தாலும் பறந்துவந்து பக்கத்திலேயே அமர்ந்து கேட்குமாம்! ச்சூச்சூ என விரட்டிவிட்டாலும் போகாதாம்! இந்த புகுரி இசையை அது ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போது எங்காவது ஒரு விநாடி தப்பாக வாசித்துவிட்டால், அந்த இடத்திலேயே தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு அப்படியே விழுந்து செத்துப்போகும் என்று குறிப்பிட்டுச்சொன்னார்.>>>

ரூம் போட்டு யோசிப்பீங்களா ? நல்லா கெளப்புறாங்கய்யா பீதியை !!
எங்க ஊர்ல ஒரு புருடா விடுவாங்க... கொம்பேறி மூக்கன்னு ஒரு பாம்பு இருக்குது ! அது ஆளை கடிச்சதும் மரத்துல ஏறீடுமாம். ஆளு செத்து சுடுகாட்டுல எரிக்குற புகையை பாத்துட்டு தான் கீழ இறங்குமாம். சரி ஆளை புதைச்சா என்ன செய்யும் கேட்டதுக்கு “போடா போக்கத்த பயலே” ந்னு சொல்லுவாங்க. அந்த மாதிரில்ல இருக்கு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கோ பிரின்ஸ் said...

//மேலும் ,ராவணனின் தாயார் பெயரும் "கேகசி" என்கிறார் ,கம்பர். பொதுவாகவே ராமாயணம் என்பது இரானில் நடந்தது என கருத்துண்டு , கேகய (கசகஸ்தான்) பற்றிய குறிப்பாக பலவும் இடம் பெற்றிருப்பதை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

இதுல ராவணன் தமிழன், ராமன் ஆரியன் என அரசியல் வேற அவ்வ்!//

ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாகரீகங்களின் எச்சங்கள் அவை திராவிட இனத்தின் தொடர்புகளை நிரூபிப்பதாக தொல்தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், தமிழர் குறித்தல்ல விவகாரம்.... வடமொழி எனப்படும் சமஸ்கிருதம் சம்பந்தப்படாத திராவிட மொழிக்குடும்பத்தின் சுவடுகள் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் விரவிக் கிடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ராவணன் ஈரானில் வாழ்ந்திருந்தாலும் அவன் ஆரியன் அல்ல... அரசியல் ஆரியம், திராவிடம் தானே ஒழிய, ஆரியம் தமிழ் அல்ல... திராவிட இனத்தின் மிக மூத்த மொழி தமிழ் அவ்வளவே...

கோ பிரின்ஸ் said...

//சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. (திராவிடர்கள் எந்த மொழியை பேசுவோராகவும் இருக்கலாம். தமிழர்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.) சிந்து வெளியில் வாழ்ந்த திராவிட இன மக்கள், அன்று உலகிற் சிறந்த நாகரிக வளர்ச்சி கண்டிருந்தார்கள். அவர்களது காலத்தில், சுமேரியா, எகிப்தில் நாகரிக சமுதாயங்கள் தோன்றி இருந்தன. ஆனால், அவர்களால் கூட, சிந்து வெளி மக்களின் நாகரிக வளர்ச்சியை எட்ட முடியவில்லை. //

http://kalaiy.blogspot.in/2014/02/blog-post_7.html