14 March 2014

நட்பில் கலக்கும் நஞ்சு
நட்பில் கலக்கும் நஞ்சு...

‘’இப்பல்லாம் அவனை கண்டாலே பேசவே பிடிக்கறதில்லைங்க, ஏன்னே தெரியல. ஃபேஸ்புக்ல அவன் பேரை பார்த்தாலே கடுப்பாகுது, நேத்து கூட ஃபேஸ்புக் சாட்டிங்ல வந்து ஹாய் மச்சான் ஊய் மச்சான்றான்.. நான் அப்படியே கண்டுக்காம இருந்துட்டேன், அப்புறம் வாட்ஸ் அப்ல வந்தான்… ஓத்தா போடானு நெனச்சிகிட்டு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லலீயே… சாவட்டும் சனியன்’’ என்று வெறுப்போடு பேசினார் அந்த நண்பர்.

‘’என்னங்க விஷயம், அவர் உங்க ரொம்பவருஷத்து ஃபிரண்டு. ஸ்கூல்ல ஒன்னா படிச்சவர், அவர் எதும் உங்கள்ட்ட கடன் கிடன் வாங்கிட்டு ஏமாத்திட்டாரா, இல்ல தண்ணிய போட்டுட்டு திட்டிட்டாரா’’ என்று விசாரித்தேன்.

‘’நான்தான்ங்க அவன்கிட்ட காசு வாங்கிட்டு இன்னும் திருப்பிகுடுக்கல.. அவன் காசு விஷயத்துல ரொம்ப நல்லவன்.. குடுத்த காசை ஒரு நாளும் கேட்டதில்லை.. தண்ணி அடிச்சாதான் அவனுக்கு என் மேல பாசமே வரும்.. பிரச்சனை அதில்லைங்க இது வேற’’ என்றார் அந்த நல்லவர்.

‘’என்ன பிராப்ளம்’’

‘’நான் தினமும் பாக்குறேன்.. அந்த **** பயலுக்கு லைக்கு போடறதும், அவனோட கொஞ்சி கொஞ்சி கமென்ட்டு பண்றதும் என்னங்க இது.. அந்த *** நாயி என்னை பத்தி என்னல்லாம் முன்ன எழுதினான். என்னை பத்தி எழுதிருந்தா கூட பரவால்ல என் பர்சனல்விஷயத்தை பத்தி எப்படிலாம் எழுதி அசிங்கப்படுத்தினான் அவனோட இவனுக்கென்ன உறவு… எனக்கு நடந்ததெல்லாம் அவனுக்கு தெரியாதா, அவன் எவ்ளோ கேவலமானவன்னு சொல்லிதான் தெரியணுமா.. அவன்ட்ட பேசினா நான் கோவப்படுவேனு கொஞ்சமாச்சும் தெரியவேணாமா’’ என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.

‘’புரியுதுங்க.. ஆனா அந்த *** இப்போ மோடி எதிர்ப்பு அதுமாதிரி ஏதோ நிறைய எழுதறாப்ல, அவருடம் முன்னமாதிரி இல்ல.. நிறைய திருந்திட்டாரு போலருக்கே.. உங்க நண்பரும் மோடி எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு உள்ளவர்தானே அதனால லைக்கு போட்டு கமென்ட்ல ஆதரவு தெரிவிக்கிறாரா இருக்கும்.. அதுக்கொசரம் அவர்மேல கோவப்பட்டா என்னங்க அர்த்தம்’’ என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் கோபம் குறைவதாக இல்லை.

‘’உங்களுக்கு தெரியாதுங்க… அவன் நான் கோவப்படணும்னு வேணும்னே பண்றான்… கல்லூளிமங்கன்’’ என்று பொரிந்துதள்ளினார்.

‘’ஏன்ங்க லைக்கு கமென்ட் போட்டதுக்கெல்லாமா நண்பரை வெறுப்பாங்க.. என்னதான் அவிங்களுக்கு லைக்கு கமென்ட்டுலாம் போட்டாலும் நீங்கதான் அவருக்கு முக்கியமானவரா இருப்பீங்கனு கூடவா உங்களுக்கு புரியல…’’

‘’இல்லைங்க அவன் என்னை வெறுப்பேத்தனும்னுதான் செய்றான்’’ என்று சொன்னதையே சொன்னார்.

‘’இதப்பாருங்க… இந்த ஃபேஸ்புக் லைக் கமென்ட்லாம் அடுத்த ஸ்டேடஸ் போடறவரைதான் தாக்குபிடிக்கும்! உங்க நட்பு எத்தன வருஷத்து நட்பு, இந்த மொக்கை மேட்டருக்கு போய் என்னங்க நீங்க’’ என்று மேலும் தொடர்ந்தேன். ஆனால் அவர் காதுகொடுப்பதாக இல்லை.
அந்த நண்பரின் மீது இப்போதும் காழ்ப்புணர்ச்சியோடுதான் இருக்கிறார். நண்பரின் நண்பரும் அந்த ****ருக்கு நிறைய லைக்கும் கமென்டுமாக உற்சாகமாக இருக்கிறார். இவர் எப்போது என்னிடம் பேசினாலும் அந்த நண்பரைப்பற்றி ரொம்பவும் கேவலமாக திட்ட ஆரம்பித்துவிடுவார்.

ஒரு நல்ல நட்பு கண்ணுக்கு முன்னால் உடைந்துபோவதை பார்க்க சகிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை. சமூக வலைதளங்கள் நமக்கு கொடுத்திருகிற அற்புதமான பரிசுகளில் இதுவும் ஒன்று. சமூக வலைதளங்கள் நமக்கு நிறையவே புதிய நண்பர்களை கொடுத்திருக்கிறது தனிமையை விரட்டுகிறது நிறைய புதிய தகவல்களை கொடுக்கிறது மாதிரியான ஜாலி ஜல்லிகளை தூக்கி ஓரமாக வைத்துவிடுவோம். அதன் ஆபத்தான பின்விளைவாகவே மேற்சொன்ன விஷயத்தை பார்க்கிறேன்.

நம்முடைய மெய்யுலக நண்பர்களை கொஞ்ச கொஞ்சமாக நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து பிரிக்கவல்ல பிரச்சனை இது. நிஜவாழ்க்கையில் நம்முடைய அன்புக்கு பாத்திரமானவர்களை இந்த ஃபேஸ்புக் நம்மிடமிருந்து மெதுமெதுவாக அந்நியமாக்குவதை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் எப்போதும் எனக்கு ஏற்படுவதுண்டு. அதில் ஒரு துளிதான் மேலே என்னோடு உரையாடிய நண்பரின் பிரச்சனை.

இன்றைக்கு கிட்டத்தட்ட நம்முடைய மாமன் மச்சானில் தொடங்கி நம்மோடு தொடர்புள்ள சகலரும் சமூகவலைதளங்களுக்கு வந்துவிட்டனர். சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்திருப்பதன் மகத்துவம் குறித்து கலைஞரே சிலாகித்து எழுதுகிறார். இன்று மெய்யுலகில் நம்மோடு நண்பராக இருக்கிறவர் இங்கே மெய்நிகர் உலகிலும் நண்பராகவே இருக்கிறார். இதுதான் இப்பிரச்சனையின் முதல்புள்ளி. இங்கிருந்துதான் நம்முடைய நீண்டகால நண்பர்களை இழக்க ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த ஆபத்தான சின்ட்ரோமுக்கு என்னுடைய சக நண்பர்களும் நானுமே கூட பலியாவதையும் பலியாகிக்கொண்டிருப்பதையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் இதை தடுக்கவே முடியாத கையறுநிலைதான் இப்போதும் நீடிக்கிறது. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அது எல்லோரிடமும் அதிகமாக பரவுவதையும் காண்கிறேன்.

ஃபேஸ்புக்கில் நமக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் நண்பர்கள் எதிரிகள் என சகலரும் நம்முடைய நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். நமக்கு ஆகாதவர்களை நாம் நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிடாலம்தான் என்றாலும் அவர்களுடைய ஸ்டேடஸ்களும் நடவடிக்கைகளும் கூட டைம்லைனில் எப்போதும் கண்ணில் படுகிறது. அதை அப்படியே கண்டும் காணாதது போல கடந்துவிடலாம்.டிவிட்டரில் இந்த சிக்கலில்லை. ஃபாலோ பண்ணினால்தான் பார்க்க முடியும். துஷ்டனை கண்டால் தூர விலகு!

ஆனால் சிக்கல் என்ன தெரியுமா? நிஜவாழ்வில் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறவர்கள் இந்த துஷ்டர்களின் ஸ்டேடஸ்களுக்கு லைக்கு போட்டாலோ கமென்ட்டு பண்ணினாலோ அதையும் குறிப்பிட்டு காட்டித்தொலைத்தும் விடுகிறது ஃபேஸ்புக். இன்னார் இன்னார் ஸ்டேடஸை லைக் பண்ணியிருக்கிறார்.. கமென்டு பண்ணியிருக்கிறார் என்பது மாதிரி எதையாவது போட்டு நம்முடைய கோபத்தை தூண்டிவிடுகிறது. ஃபேஸ்புக்கில் மட்டுமில்லை ட்விட்டரிலும் நமக்கு ஆகாதவருடன் நம்முடைய நண்பர் உரையாடிக்கொண்டிருந்தால் அதுவும் நம்முடைய டைம்லைனில் தெரிந்துதொலையும்.

இதன் தாக்கம் அந்த நண்பரை நேரில் சந்திக்கும்போது வெளிப்படுகிறது. அல்லது அவர் மீது நமக்கே தெரியாமல் உள்ளுக்குள் ஒரு கோபத்தை அல்லது வெறுப்பை உருவாக்கிக்கொள்ள நேரிடுகிறது! அந்த நபர் மேல் இயல்பாகவே ஒரு எரிச்சலும் கடுப்பும் வந்துவிடுகிறது. நானும் இதை கட்டுப்படுத்தவேண்டும் என பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் தொடர்ந்து லைக்கிட்டவர்கள் பட்டியலில் முதலில் நமக்கு வேண்டப்பட்ட அந்த மெய்யுலக நண்பர் பெயர் தெரிந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் அது நம்முடைய ஆழ்மனதில் அந்த நண்பர் மீதான வெறுப்பை நிச்சயமாக அதிகமாக்கும்.

அந்த நண்பரும் விடாமல் நம்முடைய எதிரியுடன் கொஞ்சி குலவுவார்... நமக்கு செம்ம காண்டாவும்! இதை அந்த நண்பர்கள் தெரிந்து செய்வதில்லை. நம்மாலும் அவரிடம் நேரடியாக சென்று எனக்கு இவனை பிடிக்கவில்லை அவனுக்கு லைக்கு போடாதே ஏன் கமென்ட் போடுகிறாய் என்று சொல்வதும் கேட்பதும் கூட சரியாக இருக்காது. நாமென்ன நர்சரி ஸ்கூல் குழந்தைகளா? இணையத்தில் யார் யாரோடு பேசுவது யாரோடு உறவாடுவது என்கிற சுதந்திரம் நம்மைப்போலவே அந்த நண்பருக்கும் உண்டல்லவா?

இதை சமாளிக்க நான் பெரும்பாலான நேரங்களில் ஆகாதவர்களை எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவேன். அவர்களுக்கு நம்முடைய நண்பர்கள் லைக்கு போட்டாலும் தெரியாது, கமென்ட்டு போட்டாலும் தெரியாது! நமக்கும் டென்சன் கிடையாது. மெய்யுலக நண்பர்களை தக்கவைக்க இதைவிட சிறந்த மாற்று வேறெதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. (சமூக வலைதளங்களை புறக்கணிக்க சொல்வது சரியாக வராது. இன்று கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒன்றாக அது எல்லோருக்குமே மாறிவிட்டது!)

அதைவிட சிறந்த மாற்றுவழி மெய்யுலக நண்பர்களின் நட்பின் அருமையை உணர்ந்திருப்பது. நாளைக்கே நமக்கு ஒன்றென்றால் முன்னால் வந்து நிற்கப்போவது அந்த நபர்தானே தவிர யாரோ எங்கோ லைக்கு போட்டவர்களும் கமென்ட்டிட்டவர்களு அல்ல… நம்முடைய நண்பர்கள் நம்முடைய தனிச்சொத்தல்ல என்கிற புரிதலும் அவசியம். விரும்பியதை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு என்று உணரவேண்டும். அந்த புரிதல் இருந்தால் இவ்வகை சிக்கல்களே வரவாய்ப்பில்லை.

முன்பெல்லாம் , அதாவது இணையமில்லாத காலத்தில் இந்த சிக்கல் கிடையாது. நம்முடைய நண்பர்கள் நம்மிடம் நம் எதிரியைப்பற்றி புறம்பேசிவிட்டு அதே எதிரியிடம் நட்பாக இருந்தாலும் அது நமக்கு தெரியவரலாம் வராமல் போகலாம்… அல்லது அப்படியே இருந்துவிடலாம். பெரிய பாதிப்பு இருக்காது.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. யாரும் இங்கே தன்னுடைய செயல்பாடுகளை மறைத்துக்கொள்ள முடியாது. நம்முடைய எல்லாவற்றையும் நிர்வாணமாக்கி வைத்திருக்கிறது இணையம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாகவே இந்த உறவுச்சிக்கல்களை பார்க்கிறேன். இனி இதிலிருந்து தப்ப முடியாது ஆனால் இதைப்பற்றி புரிந்துகொண்டு உறவுகளை நட்பை காப்பாற்றிக்கொள்ளலாம்.

5 comments:

வவ்வால் said...

//அதைவிட சிறந்த மாற்றுவழி மெய்யுலக நண்பர்களின் நட்பின் அருமையை உணர்ந்திருப்பது. நாளைக்கே நமக்கு ஒன்றென்றால் முன்னால் வந்து நிற்கப்போவது அந்த நபர்தானே தவிர யாரோ எங்கோ லைக்கு போட்டவர்களும் கமென்ட்டிட்டவர்களு அல்ல… நம்முடைய நண்பர்கள் நம்முடைய தனிச்சொத்தல்ல என்கிற புரிதலும் அவசியம். விரும்பியதை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு என்று உணரவேண்டும். அந்த புரிதல் இருந்தால் இவ்வகை சிக்கல்களே வரவாய்ப்பில்லை.//

என்ன புரிதலோ? அவனவன் தான் அவனுக்குனு எப்பவுமே இருக்கணும், இப்போ என்னமோ துவித்தர்,முகநூல் தான் வந்து கெடுக்குதுனு சொல்வதெல்லாம் மிகையான ஒன்று.

அது என்னையா மெய் உலக நண்பர்கள் எல்லாம் மெய்நிகர் உலகிலும் உலாவுறாங்களா, அப்போ மெய் உலகில் என தனியா யாருமே நண்பர்கள் இல்லையா?

எனக்கெல்லாம் இரு வேறு உலகு, எல்லாமே ஒன்று என நினைப்பவன். எதுவும் எங்கும் இடைஞ்சலாக வருவதேயில்லை , முகமூடி வாழ்க்கை சுகமானது :-))

ஹி..ஹி யாராவது வவ்வால்னு ஒருத்தன் ஓவரா பேசுறான்னு என்க்கிட்டேவே சொன்னால் கூட அப்படியா,நானும் படிச்சுப்பார்க்கிறேன் என சொல்வேன் :-))

Divya Balachandran said...

Correct analysis athisha. Its up to our understanding how u tackle the social with ur relationships.

Rathnavel Natarajan said...

அருமை அதிஷா.

Anonymous said...

It's very easier to stay away from it as long as you don't enter in to it....even once...

Anonymous said...

+100!

-Sundar

There was an error in this gadget