24 March 2014

எழுத்தாளர் கமலஹாசன்
கமலஹாசனின் ஆளவந்தான் படம் வெளியான சமயத்தில் அப்படத்தை பத்துக்கும் அதிகமான தடவைகள் தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறேன். ஒரு முழு தீபாவளியை முழுங்கிய திரைப்படம். அது வணிகரீதியில் தோல்வியடைந்த படம்தான் என்றாலும் ஏனோ அக்காலகட்டத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. படம் வெளியான நேர பரபரப்பில் இது கமலஹாசன் எழுதிய தாயம் என்கிற சிறுகதையைத்தான் படமாக எடுத்திருப்பதாக அப்போதைய குமுதமோ விகடனோ எதிலோ படித்த நினைவு.

அப்போதிருந்தே தாயம் கதையை படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் அக்கதை எங்குமே கிடைக்கவில்லை. பலநேரங்களில் எழுத்துலகில் ஒரு கவிஞராக மட்டுமே அறியப்படும் கமலஹாசன் எழுதிய ஒரே கதை இதுதான் என்று நினைக்கிறேன். வேறுகதைகளும் எழுதியிருக்கலாம்.

நண்பர் கிங்விஸ்வா என்கிற காமிக்ஸ் விஸ்வா பழைய நூல்களை தேடிப்பிடித்து வாங்கி சேர்ப்பதில் கில்லாடி. கமலஹாசனிடமே கூட இல்லாத இக்கதையின் பிரதியை எங்கோ பழைய புத்தக கடையில் வலைவீசி பிடித்துவிட்டார். எந்த இடம் என்கிற கம்பெனி ரகசியத்தை எவ்வளவு அடித்துக்கேட்டும் கடைசிவரை சொல்ல மறுத்துவிட்டார். (முன்பு ஜெயலலிதா எழுதிய நாவல் கூட அவரிடம் இருக்கிறது!)

யாரோ தொகுத்திருந்த இந்த தொடர்கதை பைண்டிங்கை கண்டதும் உடனே எனக்கும் தெரிவித்தார். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணிநேரத்தில் டகால் என முடிந்துவிட்டது. நிறைய ஆச்சர்யங்கள். சில அதிர்ச்சிகள். ஒப்பீடுகள் என சுவாரஸ்யமான வாசிப்பனுபவம்.
முதலில் தாயம் குறித்த சில தகவல்கள்.

*தாயம் என்பது சிறுகதை என்றே முதலில் நினைத்திருந்தேன், அது சிறுகதை அல்ல தொடர்கதை.

*இதயம்பேசுகிறது இதழில் 3-7-1983 தொடங்கி வெளியானது

*மொத்தம் 37 வாரங்கள் இக்கதை பிரசுரமாகியிருக்கிறது

முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையை (இது வெளியானபோது எனக்கு வயது 3மாதங்கள்!) இத்தனை காலத்திற்கு பிறகு வாசிப்பதே அலாதியான அனுபவமாக இருந்தது. கதை என்னவோ ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் படிக்கும்போது ஆளவந்தான் படத்தின் கதையோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு படித்துக்கொண்டிருந்தேன்.

கடகடவென ஒரு பல்ப் ஃபிக்சன் நாவலைப்போல (அதானோ?) ஒரே மூச்சில் இரண்டு மணிநேரத்தில் படித்துமுடித்துவிட்டேன். எந்த இடத்திலும் போர் அடிக்காத தட்டாத வழவழ எழுத்து நடை. (கதையை இதயம்பேசுகிறது ஆசிரியர் மணியன் எடிட் செய்திருக்கலாம்). வாரம் ஒரு ட்விஸ்ட்டெல்லாம் வைக்காமல் எழுதியதும் பிடித்திருந்தது.

கமல் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இன்டலெக்சுவல்தான் என்பதால் அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாற் போல சித்தர் பாடல்கள், ஹிந்து MYTHOLOGY மாதிரி விஷயங்களை பேசுகிறார். சுஜாதா சூப்பர்ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை இது என்பதால் 99சதவீத சுஜாதா பாதிப்பு கதை முழுக்க. அழகான பெண்கள் குறித்த வர்ணனையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுவது, விவரிப்புகளில் அதிகமாக இழு இழுவென்று நீட்டி முழக்கமால் கச்சிதமாக வெட்டிச்செல்வது என எங்கும் சுஜாதா ட்ச். (வசனங்களாலேயே பெரும்பாலும் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நூலில் வருகிற எல்லோருமே அறிவுஜீவியைப்போலவே பேசுவது கூட சூப்பர்தான்!)

தொடர்கதைக்கு ஓவியம் வரைந்திருப்பவர் ஜெயராஜ். அவருடைய ஒவியங்களில் வருகிற ஆண்கள் கமலஹாசன் போலவேதான் இருப்பார்கள். இதில் எந்த தயக்கமும் இல்லாமல் கதை நாயகன் நந்து மற்றும் விஜயை கமலஹாசனாகவே வரைந்து தள்ளியிருக்கிறார். ஆனால் ஹீரோயினுக்கு அடையாளமின்றி வரைந்துவிட்டிருக்கிறார். ஆளவந்தான் படத்தில்வருவதைப்போல நந்து முதலிலிருந்து மொட்டையாக இல்லாமல் நன்றாக முடியுடன் அழகாகவே இருக்கிறான். கிளைமாக்ஸில்தான் மொட்டைபோட்டுக்கொள்கிறான். டபுள் ஆக்சன் வேறுபாட்டுக்கு என்ன செய்வது? எனவே நந்துவுக்கு மீசைமட்டும் கிடையாது.

படத்தை பார்த்துவிட்டதால் அதோடு ஒப்பிடாமல் எப்படி வாசிப்பது. இது லோபட்ஜெட்டில் எழுதப்பட்ட கதை. பின்னாளில் மிக அதிக பட்ஜெட்டில் படமாக்கியிருக்கிறார்கள். கதையில் ஊட்டியில்தான் கதை முழுக்கவே நகர்கிறது. நாயகன் விஜய் கோவையில்தான் போலீஸ் ஆபீசராக வருகிறான்! நாயகி நியூஸெல்லாம் வாசிக்கவில்லை. ஆனால் விதவை. படத்தில் இதுமாற்றப்பட்டிருக்கும். இதுபோல நிறையவே விஷயங்களை மாற்றியிருந்தாலும் அடிப்படையான மேட்டரில் கைவைக்கவில்லை. அதே சித்திகொடுமை, அதே மென்டல் ஆஸ்பிட்டல், தப்பித்தல் எல்லாம் இதிலும் உண்டு. கிளைமாக்ஸ் கூட அதிக பிரமாண்டங்கள் இல்லாமல் எளிமையாக முடிகிறது! கதை முழுக்கவே இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கில்மா காட்சிகள் வருகிறமாதிரி பார்த்துக்கொள்கிறார் கமலஹாசன். இக்கதையை எழுதுவதற்காக மனநல மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்தாராம் கமல்.

வாசகர்களும் வாராவாரம் ஆரவாரமான வரவேற்பை இத்தொடருக்கு வழங்கியுள்ளனர். நடுவில் இரண்டுவாரம் வெளிநாட்டுக்கு சூட்டிங் போய்விட தொடர் வரவில்லை என கொந்ததளித்திருக்கிறார்கள் கமலின் வாசகர்கள்! அதற்காக அடுத்த வாரமே கமல் வருத்தப்பட்டு என்னாச்சி என்று விளக்கி தன்னிலை விளக்க கடிதமெல்லாம் எழுதி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இந்த அரிய நாவலை கமலின் அனுமதியோடு மீண்டும் பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறார் நண்பர். மீண்டும் இந்நாவல் வெளியானால் நிச்சயம் பெரிய அளவில் விற்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.
***


இந்த இதயம்பேசுகிறது இதழில் சில்க் ஸ்மிதா தோன்றிய ஒரு ப்ரா விளம்பரம் மிகவும் கவர்ந்தது. இந்த கட்டுரைக்கு இலவச இணைப்பாக அந்த அரிய விளம்பரம். சில்க்ஸ்மிதா தோன்றும் ப்ராவிளம்பரத்தை உங்கள் அபிமான தியேட்டர்களில் கண்டுரசியுங்கள் என ரசிக்கவைத்திருக்கிறார்கள்.
***

13 comments:

Sasikala said...

நீங்கள் தொகுத்து வைத்துள்ள அரிய புத்தகங்களை மின்னேற்றி பதிவிட்டால் எங்களைப் போன்றவர்கள் படித்து மகிழ்வர். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:0

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னவொரு ஈர்ப்பு:)

ரம்பா/மேனகா தவம் கலைக்க வருவாங்க!
ஆனா அவிங்களே தவத்தில் உட்கார்ந்தா?:)
அப்படியிருக்கு சிலுக்கு!:)

Sorry, forgot to talk abt Kamal Story:))

maithriim said...

மிகவும் சுவாரசியமானப் பதிவு. உங்கள் பதிவைப் படித்தப் பின் கமலின் கதையைப் படிக்க நானும் ஆவலாக உள்ளேன். கதையில் வந்த ஜெயராஜின் படங்களைக் கூடப் போடாமல் சில்கின் படத்தைக் கர்ம சிரத்தையாகப் போட்டு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள், நீவீர் வாழ்க :-))

amas32

maithriim said...

மிகவும் சுவாரசியமானப் பதிவு. உங்கள் பதிவைப் படித்தப் பின் கமலின் கதையைப் படிக்க நானும் ஆவலாக உள்ளேன். கதையில் வந்த ஜெயராஜின் படங்களைக் கூடப் போடாமல் சில்கின் படத்தைக் கர்ம சிரத்தையாகப் போட்டு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள், நீவீர் வாழ்க :-))

amas32

Raashid Ahamed said...

கிளுகிளுப்பான விஷயங்களை தேடிப்பிடித்து போடுவதில் உம்மை விட்டால் வேறு யார் ? !! கதையை விட கடைசியா போட்டிருக்கும் கிளுகிளுப்பு படத்தின் கிக்கே தனி !!!

ரமேஷ் கார்த்திகேயன் said...

கமல் ஹாசன்
"நான் கற்பிழந்த நாள்" என்று விகடனில் ஒரு கதை எழுதியதாக நினைவு.

ரமேஷ் கார்த்திகேயன் said...

கமலின் சிறுகதை: அணையா நெருப்பு

http://evanooruvanindiary.blogspot.in/2011/12/blog-post.html

பால கணேஷ் said...

தாயம் நாவலில் எழுத்தாளர் கமலஹாசன் சொன்ன நல்லசில சுவாரஸ்யங்களை நடிகர் கமலஹாசன் ஆளவந்தான் படத்துல தொலைச்சுட்டார்ன்றது என் கருத்து.
1. நந்து எப்படி மனநோயாளியானான் என்கிற விஷயமும் சித்தி கொடுமையும் நாவல்ல சொல்லப்பட்ட அளவு திரையில் சொல்லப்படலை.
2. நந்துவும் விஜய்யும் நான் அவன் பொசிஷன்ல இருந்தா என்று சிந்தித்து விளையாடும் (புத்தி) செஸ் விளையாட்டு நாவலின் சுவாரஸ்யம்.
3. டெரராக இருக்கும் நந்து சிறுவயது பாதிப்பினால் சவுக்கை விஜய் கைல எடுத்ததும் குழந்தையா மாறி மண்டியிடுவான் மனம் இளகி அவர் சவுக்கை கீழ போட்டதும் ராட்சஷனாயிடுவான். இதுபோன்ற சமாசாரத்தை படத்துல மிஸ் பண்ணிட்டார். அதே மாதிரி டெலிபோன் பூத்ல விஜய் எதிர்பார்ப்புக்கு மாறாக நந்து விட்டுட்டுப் போற ரத்தக் கைரேகை.
4. இத்தனைக்கும் மேல நந்து இறந்து போகறதுல படிக்கறவனுக்கு ஏற்படற அனுதாபம் படம் பார்க்கும் போது வரலை. செத்துத் தொலையட்டும்னு தோண வெச்சுட்டார் நடிகர் கமல்.
புத்தகமாகப் படிக்க இன்றைக்கும் சுவாரஸ்யம்தான் என்பது மிகவே உண்மை.

Anonymous said...

அரிய செய்தியை கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்து வளம் நாளுக்கு நாள் மங்கி வருகிறது. கவனம்.

ஆரவாரப் புலி said...

சிலுக்கின் நினைவுகளை மீட்டெடுக்க உதவிய கமலுக்கு நன்றி.

அட்டகாசமான படத்தை தரவேற்றிய அதிஷாவுக்கு நன்றியோ நன்றி!

Anonymous said...

doubt? both r Silk or the 2nd one some other?

Rathnavel Natarajan said...

அருமை அதிஷா.