31 March 2014

சந்தோஷ் சிவனின் ‘இனம்’இரண்டு இனங்களுக்குள் நடந்த சண்டையை(!) நடுநிலையோடு பாதுக்காப்பான ஒரு குன்றில் ஏறி நின்றுகொண்டு பறவைப்பார்வையில் திரைப்படமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அவருடைய பார்வையில் இது போர் அல்ல சண்டை அல்லது கலவரம்தான். அதில் ஒரு இனம் தமிழினம். இன்னொரு இனம் என்ன என்றுகூட சொல்ல இயக்குனருக்கு திராணியில்லை.

உலகில் நடுநிலை என்பதைவிட ஒரு டூபாகூர் நிலைப்பாடு வேறெதுவும் இருக்க முடியாது. சயின்டிபிகலி பிலாசபிகலி மற்றும் இன்னபிற எல்லா கலிகளிலும் அது சாத்தியமேயில்லாதது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஏதோ ஒன்றின்மேல் தன்னுடைய சார்புத்தன்மையை வெளிகாட்டிக்கொள்ள தைரியமில்லாத கோழைகள், மறைமுறைமுகமாக அதை பாதுகாக்க முனையும் போலித்தனம்தான் நடுநிலைவாதம்.

நடுநிலையாக இருப்பதாகக் காட்டிக்கொள்வது ரொம்பவும் சிக்கலானது. ஆபத்தானது. கொஞ்சம் மிஸ்ஸானாலும் நம்முடைய நடுநிலைநாடகமே நம்மை அம்பலமாக்கி நிர்வாணமாக்கி நடுரோட்டில் நிறுத்திவிடும். அந்த நடுநிலைவண்டியில்தான் சந்தோஷ்சிவன் இப்படத்தை ஓட்டமுற்படுகிறார். ஆனால் அவருடைய நடுநிலைத்தராசில் சிங்கள ஆதரவு கொஞ்சம் கூடி போய்விட்டது என்பதுதான் சிக்கலே!

இனம் குணம் மணம் மற்றும் மாங்காய்களையெல்லாம் தூக்கி ஒரமாக வைத்துவிட்டு இப்படத்தை வெறும் படமாக மட்டுமே விமர்சித்தால் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். இது சரியான மொக்கைப்படம். கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் எடுக்கப்பட்ட ரொம்ப சுமாரான படைப்பு. உலக சினிமாவும் இல்லை உள்ளூர் சினிமாவும் இல்லை.

தொழில்நுட்ப ரீதியிலும் செய்நேர்த்தியிலும் திரைக்கதை அமைப்பிலும் புதுமையுமில்லை மண்ணாங்கட்டியும்மில்லை. ஒழுங்கில்லாத திரைக்கதை, மிக மோசமான படமாக்கல், என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் எதைபற்றி என்பதில் தெளிவின்மை என ஏனோதானோ என்று எடுக்கப்படும் பி கிரேடு படங்களை விட சுமாரான படம். படத்தில் எங்குமே நம்மால் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வலியையோ வேதனையையோ போரின் கொடுமையையோ அரைடீஸ்பூன் அளவுக்கு கூட உணரமுடியாது. படத்தின் இறுதியில் 2009போரில் மாண்டுபோன மக்களுக்கு சமர்பணம் பண்ணுகிறார்கள். எந்த போர் என்று அங்கேயும் குறிப்பிட வக்கில்லை.

போர்காட்சிகளை இதைவிட கேவலமாக யாருமே படமாக்க முடியாது. ஏதோ நம்ம வீட்டு கொல்லைப்புறத்தில் நடக்கிற அடிதடி சண்டையைப்போல அவை காட்டப்படுகின்றன. சில போக்கிரிகளுக்கு இடையே நடக்கிற துப்பாக்கி சண்டையைப்போல அது படம் பிடிக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் சண்டையெல்லாம் சிரிப்பு ரகம்!

படத்தில் போராளிகளாக காட்டப்படுபவர்கள் எல்லோருமே குழந்தைகளாக அல்லது பதின்பருவ இளைஞர்களாக அமைந்தது தற்செயலானதாக தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும்தான் கொஞ்சம் வயதான போராளியாக வருகிறார். மற்ற எல்லா காட்சிகளிலும் குழந்தை போராளிகள் மயம்தான்! படத்தில் போர், சிங்களம், சிங்களவர் , இலங்கை போன்ற வார்த்தைகள் பாதுகாப்புக்காக தவிர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்தது இனக்கலவரமாம்! படத்தில் வருகிற சிங்கள இராணுவத்தினரும் ஆங்கிலத்திலேதான் உரையாடுகிறார்கள்.

தமிழ் போராளிகள் திடீரென பள்ளிகளில் நுழைந்து போர்காட்சிகளை தமிழ்க்குழந்தைகளுக்கு காட்ட அவர்கள் உணர்வெழுச்சியில் இயக்கத்தில் இணைகிறார்கள்! நீரை மட்டும் வடிகட்டிவிட்டு மீனை ஆற்றில் திருப்பிவிடும் அளவுக்கு அன்புள்ளம் கொண்ட நல்ல புத்த பிட்சு ஒருவர் அநாதையாக வருகிற சிறார்களுக்கு மாதுளம் பழம் தருகிறார். சிங்கள ராணுவத்தினரிலும் நல்லவர்கள் இருப்பதாக காட்டப்படுகிறது. இப்படி ஈழத்தமிழர் ஆதரவாளர்களை சூடாக்குகிற காட்சிகள் ஏராளம் இருந்தாலும், சிங்களர்களுக்கு எதிரான காட்சிகளும் படத்தில் இருக்கவே செய்தன.

சிங்கள ராணுவத்தினரின் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அப்படியே படமாக்கப்பட்டிருப்பது பாரட்டுதலுக்குரியது. இந்த ஒன்றைத்தவிர சிங்கள ராணுவம் செய்த தவறாக வேறென்ன காட்டினார்கள் என்று நினைவில்லை.பெரும்பாலான நேரங்களில் சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை காப்பாற்றுவதாகத்தான் காட்சிகள் வருகின்றன.

பள்ளியில் பிள்ளைகளுக்கு படமெடுத்துக்கொண்டிருக்கிற கருணாஸ் ‘’உலகில் ஆதியில் மொழிகளே இல்லை. மனிதன் பேச ஆரம்பித்த பிறகுதான் மொழிகள் பிறந்தன. பிறந்த குழந்தைக்கு மொழி கிடையாது. எனவே நாமெல்லாம் நிறைய மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்பது மாதிரி (கிட்டத்தட்ட) ஒரு வசனம் பேசுவார்! மொழியால் பிரிந்து நிற்கிற இனங்களை பற்றிய படத்தில் எவ்வளவு நுட்பமாக வசனம் வைத்திருக்கிறார் பாருங்கள் நம்ம சந்தோஷ்சிவன்! ஒரு அகதிப்பெண் ராமேஸ்வரத்தில் உள்ள தமிழ்நாட்டு அதிகாரியிடம் விவரிப்பதாகவே கதை நகர்கிறது. அப்பெண்ணின் கதையை கேட்டு தமிழ்நாட்டு ஆபீசர் அந்தப்பெண்ணை விடுவித்துவிடுகிறாராம். தமிழ்நாட்டில் இப்படியெல்லாமா நடக்குது?

தியேட்டரில் என்னோடு சேர்த்து மொத்தமாக பத்து பேர்தான் பார்த்தோம். அதில் ஆறு பேர் இன்டர்வெல்லுக்கு சற்றுமுன்பே கிளம்பிவிட , நான்குபேருக்காகத்தான் ஆயிரம் சீட்டு கொள்ளளவுள்ள வுட்லேன்ட்ஸ் தியேட்டரில் படம் ஓடியது! மற்ற மூன்றுபேருக்கும் படம் என்ன சொல்கிறது என்பதே புரியவில்லை என்று வருதப்பட்டார்கள்.

இதுமாதிரி படங்களை சும்மா விட்டிருந்தாலே முதலிரண்டு நாட்களிலேயே தியேட்டர்காரர்களே பார்க்க ஆளில்லாமல் படத்தை தூக்கியிருப்பார்கள். இப்போது தடை அது இது என்று ஏதோ பரபரப்பு நிலவுகிறது. இப்போதுதான் ஆளாளுக்கு படம் எங்கே ஓடுது வான்டூ சீ இமிடியெட்லி என அலப்பறையை கொடுக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்தோஷ் சிவா! இதுதான் வாய்ப்பென்று லிங்குசாமியும் படத்தை வாபஸ் பெற்று தன்னை உத்தம பத்தினி கற்புக்கரசன் என்று நிரூபித்துவிட்டார்.

இப்படத்திற்கு தடைகோரி யார் போராட்டம் பண்ணினார்கள் என்று தெரியவில்லை. படத்தினை விமர்சித்து பல்வேறு அறிக்கைகள் வந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அம்பத்தூர் ராக்கி தியேட்டர் வளாகத்தில் ஐந்தாறுபேர் கறுப்புகொடி காட்டி ஆர்பாட்டம் செய்ததாக தினத்தந்தியில் ஒரு பெட்டிச்செய்தி வந்திருந்தது. சத்யம் திரையரங்கிலும் மிகச்சிலர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். வேறெங்கும் ஆர்பாட்டமோ தியேட்டர்கள் மீது தாக்குதலோ கூட நடந்ததாக தெரியவில்லை. விஸ்வரூபம் விவகாரம் போல யாரும் படத்தை தடை செய்யவெல்லாம் கோரியதாக தெரியவில்லை. ஆனால் வான்டடாக இவர்களாகவே படத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டு இப்போது கருத்துரிமை காட்டெருமை என்றெல்லாம் பிதற்றுவது லூசுத்தனமாக இருக்கிறது.

17 comments:

வவ்வால் said...

வியட்நாம் போரில் கொலை செய்த அமெரிக்க வீரர்களை ஹீரோவாக கருத வேண்டும் என "அமெரிக்க அரசு" ஆதரவுடன் "வியட்நாமில் சண்டையிட்ட அமெரிக்க சிறப்பு கொரில்லா" வீரர்களை மையப்பாத்திரமாக வைத்து "ராம்போ வகை படங்களை எடுத்து ,அந்த வீரர்களூக்கு புனிதம் கற்பித்தது போல ,இனம் படமும் சிங்கள அரசின் உதவியில் உருவான படமாக இருக்கும்.

இதோட இன்னொரு வெர்ஷனில் வாய்ஸ் ஓவரில் ஏதோ பேசவிட்டு , சப்டைட்டில் போட்டு சர்வதேச திரைவிழாக்களுக்கு அனுப்பி "வார் டாக்குமெண்டரி ஃபீயூச்சர் ஃபில்ம்" என விருது வாங்கிடுவார் சிவன் :-))

Anonymous said...

Blood Money they want from bleeding people.

காரிகன் said...

சந்தோஷ் சிவன் இதற்கு முன்பே குப்பி என்று ஒரு படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டவர்தானே? மலையாளியான இவர் ஈழம் பற்றி படம் எடுக்க துடிப்பு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

காரிகன் said...

சந்தோஷ் சிவன் இதற்கு முன்பே குப்பி என்று ஒரு படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டவர்தானே? மலையாளியான இவர் ஈழம் பற்றி படம் எடுக்க துடிப்பு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

வவ்வால் said...

காரிகன்,

குப்பி எடுத்தது கன்னட இயக்குனர் ,ஆர்.டி.ரமேஷ் என்னவோ பெயர். ரவிகாலே என்ற மராத்தி நடிகர் நடிச்சது.

சந்தோஷ் சிவன் முன்னர் எடுத்த போராளி வகைப்படம் ,மனித வெடிகுண்டை மையமாக வச்சு "மல்லி" என்றப்படம் ஆகும்.

Prasad Vishwanathan said...

Nice criticism mam.accepted.consider me a common man (we r 3/4 of our nation ,having no fixed ideas ,stern concepts)for us at least this sort of films throw some light. Now tell me consciously why u people(those who have criticized the film so far)all doesn't come under one forum and protest against our govt for betraying our peoples interest (in not supporting in un against srilankans)in ROADS instead of writing in fb. Nice . U tend to be so much perfect . U thank manusiaputhiran for his note on u. Ok fine .should u not ask a ouestion that why should he support DMK (that party also betrayed) if u r impartial uncompromising

Prasad Vishwanathan said...

Nice criticism mam.accepted.consider me a common man (we r 3/4 of our nation ,having no fixed ideas ,stern concepts)for us at least this sort of films throw some light. Now tell me consciously why u people(those who have criticized the film so far)all doesn't come under one forum and protest against our govt for betraying our peoples interest (in not supporting in un against srilankans)in ROADS instead of writing in fb. Nice . U tend to be so much perfect . U thank manusiaputhiran for his note on u. Ok fine .should u not ask a ouestion that why should he support DMK (that party also betrayed) if u r impartial uncompromising

Anonymous said...

காரிகன்,

சந்தோஷ் சிவன் எடுத்தது “தெ ரெரரிஸ்ட்” இதில் ஒரு முக்கியமான சீன் வரும். போராளிப்பெண் சுற்றிவர குண்டுகள் விழுந்து வெடிக்கும் சமயத்தில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடி ஒரு கிடங்கினுள் விழுவாள். அங்கு ஒரு இளைஞனுடன் உடலுறவு கொள்வாள். இவ்வளவும் நடக்கும் போது குண்டுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்கும்.
ஈழப்போரில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் அப்படியாக ஓடியோரே.
அந்த அளவுக்கு ஒரு சீன் வைக்கும் அளவுக்கு போர்பற்றிய அறிவற்ற அல்லது குண்டு விழும் சூழலில் உடலுறவு கொள்ள முனையும் சீன் வைக்கும் வக்கிர புத்தி சினிமாக்காரர் அவர்.

shiva said...

malabari bastard santhosh sivan

Anonymous said...


@karigan

http://en.wikipedia.org/wiki/Cyanide_(film)

Kuppi is dubbed version of Kannanda film Cynaide.

Anonymous said...

இங்கு இரண்டு இனங்களுக்கு இடையேயான போர் என்பதை விட. இலங்கை அரசுக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையேயான போர் என்றால் இன்னும் பொருத்தமானதாக இருக்கும். எல்லா இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதை காட்சிப்படுத்த எடுத்துக்கொண்ட உதாரணங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டதாக தெரிகின்றது.
ஆகவே இதிலிருந்தே புலப்படுகிறது இயக்குனரின் நோக்கம்.

காரிகன் said...

வவ்வால் மற்றும் அனானி,
சரியான தகவலுக்கு நன்றி. மணிரத்தினமே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழப் பிரச்சினையை நுனிப்புல்தானே மேய்ந்திருந்தார்? சந்தோஷ் சிவன் மம்முட்டி மோகன்லாலை வைத்து படம் எடுக்க எதுவும் கதைக்களம் கிட்டவில்லையோ?

Wanderer said...

சந்தோஷ் சிவன் இயக்கும் ‘....’னு போட்டாலே காத தூரம் ஓட ‘அசோகா’ எனக்கு சொல்லிக் கொடுத்தது. உங்களுக்கு ‘இனம்’ சொல்லி இருக்கிறது. ஃபாலோ பண்னுங்க ப்ரோ!

நா.கார்த்திகேயன் said...

நாம் ஈழத் தமிழர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது தான்.

இங்கு ஈழத்தைப் பற்றி படம் எடுப்பவர்களில் பெரும்பாலானோர் செய்வது ஈழத் தமிழ் வியாபாரம் தான்.

Anonymous said...

//மலையாளியான இவர் ஈழம் பற்றி படம் எடுக்க துடிப்பு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.//

இன்னொரு மலையாளியான ஜான் ஆபிரகாமுக்கு ஏற்பட்ட அதே துடிப்புதான்.

பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனனைக் கேட்டால் காரணம் தெரியலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.