Pages

03 May 2014

பன்றியும் ஃபன்ட்ரியும்
மகாராஷ்டிராவில் நடந்த ஒரு கொலை அம்மாநிலத்தையே அதிரவைத்திருக்கிறது. பதினோறாம் வகுப்பு படிக்கும் 17 வயது தலித் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறான். அகமத்நகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் கடந்த 2014 ஏப்ரல் 27ம் தேதி அன்று அவனோடு பள்ளியில் படிக்கிற சக மாணவியோடு பேசிக்கொண்டிருந்திருந்த போது அவ்வழியாக போய்க்கொண்டிருந்த அப்பெண்ணின் அண்ணன், தன்னுடைய இரண்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த இளைஞனை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அடித்தது போதவில்லை என்று தலித் மக்கள் அதிகம் வசிக்கிற காடா என்கிற கிராமத்திற்குள் அந்த இளைஞனை தரதரவென இழுத்துச்சென்று ஊருக்கு மத்தியில் இருக்கிற மரத்தில் உயிரோடு ரத்தவெள்ளத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொன்றிருக்கிறார்கள். அவனுடைய கொலைக்கு காரணம் வெறும் காதல் மட்டுமல்ல, அதற்கு பின்னால் இருப்பது அப்பட்டமான ஆதிக்கசாதிவெறி! இக்கொலையை அடுத்து அந்த மூவரும் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தர்மபுரியை சேர்ந்த இளைஞன் ஒருவனும் காதல் விவகாரத்தில் இறந்துபோனதும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களும் கூடவே நினைவுக்கு வந்துபோயின. இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ''இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?'' என்று எப்போதும் சொல்லிக்கொண்டு அலைகிற ANTI-இட ஒதுக்கீடு பேசுகிற ஆட்களும் கூடவே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய சரிநிகர் சமான உலகத்தில் சாதி கிடையாது மதம் கிடையாது, அடக்குமுறைகள் கிடையாது. எங்கும் அன்பு வியாபித்திருக்குமோ என்னமோ! ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கிறதில்லையா. இதுமாதிரியான தொடர் சம்பவங்கள் நம்முடைய சமூகத்தை பீடித்திருக்கிற சாதிய அடக்குமுறையின் கோர முகத்தை அவ்வப்போது வெளிகாட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.

தமிழகத்தைப்போலவே தலித்துகள் மீதான அடக்குமுறையில் முன்னிலை வகிக்கிற இன்னொரு மாநிலம் மஹாராஷ்டிரா. நம்மை விடவும் அங்கே நிலைமை மோசம் என்கிறார்கள். அப்படிப்பட்ட மாநிலத்திலிருந்து தலித்துகளின் வாழ்க்கை குறித்து மிக தைரியமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ''பன்ட்ரி''(FANDRY). நம்முடைய கிராமங்களில் மலம் அள்ளுவதைப்போல் மிகமோசமான வேலைகளை செய்து ஜீவிக்கிற ஏழை தலித்துகள் இன்னமும் என்னமாதிரியான அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதைப்பற்றி சிறப்பாக பேசியிருந்த படம் இது. குறிப்பாக கல்விகற்க பள்ளிக்கு செல்கிற தலித் குழந்தைகளின் நிலையை அசலான காட்சிகளாக இத்திரைப்படம் முன்வைக்கிறது.

பதின்பருவத்து தலித் சிறுவனான ஜாப்யாவின் வாழ்க்கை தான் இந்த ஃபன்ட்ரி. சிறிய கிராமத்தில் வசிக்கிற ஏழை தலித் குடும்பம் ஜாப்யாவினுடையது. ஊரில் இருக்கிற சாக்கடைகளை சுத்தமாக்குவதில் தொடங்கி சகல சில்லரை வேலைகளையும் செய்து ஜீவிக்கிறவர் ஜாப்யாவின் அப்பா. வறுமையோடு போராடிக்கொண்டே பள்ளியில் படிக்கிற சிறுவனான ஜாப்யா ஊருக்குள் தலித் என்கிற ஒற்றை அடையாளத்தினால் தினம் தினம் அவமானங்களை சந்திக்கிறான். சிறுவனாக இருந்து இளைஞனாக மாறுகிற பதின்பருவத்தில் அவனை சுற்றி நடப்பது ஒரளவு புரிய ஆரம்பிக்கிறது. தலித் என்பதால் அவன் மீது திணிக்கப்படுகிற அவமானங்கள் தரும் வலியை உணரத்துவங்குகிறான். அந்த உணர்வு அவனை வாட்டியெடுக்க... அதைத்தொடர்ந்து அவன் எடுக்கிற முடிவும்தான் இப்படத்தின் கதையாக விரிகிறது.

ஃபன்ட்ரி என்ற சொல்லுக்கு தமிழிலும் பன்றி என்றுதான் பொருள். அந்த பெயரில்தான் படம் முழுக்க தன்னுடைய பள்ளி தோழர்களால் ஜாப்யா அழைக்கப்படுகிறான். அவனுடைய குடும்பத்தையும் அந்த ஊரில் சாக்கடைகளில் புரளும் பன்றிகளையும் ஒரே மாதிரியாகத்தான் ஆதிக்கசாதியினர் நடத்துகிறார்கள். படம் முழுக்கவே அவமானங்களாலும் அதனால் உருவாகிற அடர்த்தியான மௌனங்களாலும் நிறைந்திருக்கிறது.

தீண்டாமை பள்ளி மாணவர்களுக்கு மத்தியிலும் செயல்படுவதை ரொம்பவும் நாசூக்காக படமாக்கியிருப்பார் இயக்குனர். அதை பிரச்சாரமாக திணிக்காமல் மைக் போட்டு கதறாமல் பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் மனதை உறையவைக்கிற காட்சிகளாக சொல்லிச்செல்வதே இப்படத்தை உன்னதமான படைப்பாக மாற்றுகிறது. நாயகனின் கனவுகள் அத்தனையும் இறுதிக்காட்சியில் உடைந்து நொறுங்குவதும், தன்னுடைய அடையாளத்தின் மீதான அவனுடைய கோபமும் யாரையும் கலங்கடிக்கக்கூடியது.

க்ளைமாக்ஸில் ஜாப்யாவின் குடும்பம் பன்றிவேட்டை ஆடுவதும், அதை ஜாப்யாவின் சக பள்ளிதோழர்களும் அந்த ஊரும் சிரித்துக்கொண்டே ரசிப்பதும் அதைத்தொடர்ந்து வருகிற ஜாப்யாவின் கோபமும் முகத்திலறையும்படி படமாக்கப்பட்டிருக்கும். ஒரு பன்றியை ஜாப்யாவும் அவனுடைய அப்பாவும் வழிமறித்து நிற்கையில் அருகிலிருக்கிற பள்ளியிலிருந்து தேசியகீதம் இசைப்பது கேட்க இருவரும் அசையாமல் அப்படியே அங்கேயே நின்றுவிடுகிற காட்சியில் எவ்வளவு தீர்க்கமான அரசியல் இருக்கிறது. சமூகநீதி இட ஒதுக்கீடு குறித்தெல்லாம் தப்புதப்பாக புரிந்துவைத்திருக்கிற இளம் தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. ஃபன்ட்ரி படத்தின் இயக்குனர் மராத்தி இலக்கியம் படித்தவராம். அவரும் ஒரு தலித்துதான் என்பதால் தன்னுடைய பால்யத்தில் தன்னுடைய ஊரில் தனக்கு நிகழ்ந்ததைதான் படமாக்கியதாக குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் மலர்வதி எழுதி சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘’தூப்புக்காரி’’ நாவல் கிட்டத்தட்ட இதே பிரச்சனையை இதே பாணியில் பேசியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தலித் பெண் ஒருத்தியின் பார்வையில் அவளுடைய பால்யமும் முதல் காதலும் அதன் தோல்வியும் பேசப்பட்டிருக்கும். ஃபான்ட்ரியை கூட அப்படியே வசனம் கூட மாற்றாமல் தமிழில் எடுக்க சாத்தியங்களுண்டு. ஆனால் இப்படத்தை நிச்சயமாக தமிழில் யாரும் ரீமேக் செய்யமாட்டார்கள். எடுத்தால் நிச்சயம் வெளியாகாது என்கிற பிரச்சனையும் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட படங்களுக்கான தேவை நமக்கு முன்பைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

தமிழில் தலித்துகளின் மீதான அடக்குமுறை குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உண்டு. மிகவும் குறைவுதான். ''ஒண்ணா இருக்க கத்துக்கணும்'' ''வரவு எட்டணா செலவு பத்தணா'' மாதிரி படங்களில் இயக்குனர் வி.சேகர் தலித்துகளின் வாழ்க்கையை கதாபாத்திரங்களாக ஒரளவு சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார். கவனித்துப்பார்த்தால் இவ்வேடங்களில் வடிவேலுவும் கவுண்டமணியும்தான் அதிகமாக நடித்திருப்பார்கள். ‘’பச்சை என்கிற காத்து’’ என்ற திரைப்படம் தமிழில் வெளியான தலித்துகள் குறித்த படங்களில் மிகமுக்கியமானது. அதில் தலித்துகளுக்குள் இயங்குகிற அரசியல் செயல்பாடுகள் குறித்து விரிவாக விமர்சிக்கப்பட்டிருக்கும். அரசியல்வாதிகள் எப்படி தலித்துகளை பயன்படுத்துகிறார்கள் என்பது பதிவுசெய்யப்பட்டிருக்கும்.

பாலாஜிசக்திவேலின் ‘’காதல்’’ திரைப்படத்தில் வருகிற பரத் பாத்திரம் ஒரு தலித் என்பதற்கான அடையாளங்களோடிருந்தாலும் ஒருசில காட்சிகள் தவிர்த்து அந்த அடையாளம் தவிர்க்கப்பட்டேயிருக்கும். அப்படத்தின் இறுதிகாட்சியில் வருகிற வசனங்கள் தீண்டாமையை நாசூக்காக தொட்டுச்செல்லும். தேசிய விருதுபெற்ற சீனுராமசாமியின் முதல் படமான ‘’கூடல்நகரில்‘ நாயகன் தலித்துதான் என்றாலும் தீண்டாமை இருக்காது. பெரும்பாலான நேரங்களில் தலித்துகள் விசுவாசமான வேலைக்காரனாகவும் நாயகன் ஹீரோயிசம் காட்டுவதற்காக அடிவாங்குகிறவராகவுமே இருந்திருக்கிறார்கள். அசலான தலித்தும் அவனுடைய வாழ்க்கையும் முழுமையாக பதிவுசெய்யப்படாமலே இருப்பது சோகம்தான்.


*****