17 February 2015

அய்யோ போலீஸ்கார்!
காவல்நிலையத்திற்கு சென்று ஒரு புகார் கொடுப்பதும் தொலைந்து போன ஒன்றைக்குறித்து அவர்களிடம் விசாரிக்க கேட்பதும் மாதிரி கடினமான வேலை உலகத்திலேயே கிடையாது. காரணம் பாம்பும் காவல்துறையும் ஒன்று. இரண்டையுமே பயத்தோடு அணுகினால் அதனிடம் கடுமையாக சீண்டப்படுகிற வாய்ப்பு தொன்னூற்றொன்பது சதவீதம் உறுதியாக உண்டு. அச்சமின்றி அலட்டலாக நடந்துகொண்டாலும் கடி உறுதி. பூசின மாதிரியும் இல்லாமல் பூசாத மாதிரியும் இல்லாமல் மரியாதை இருப்பது மாதிரியும் இருக்க வேண்டும் ஆனால் கண்களில் பயத்தை வெளிப்படுத்திவிடாமல் தைரியமாகவும் பேசிக்கொண்டே பணிவையும் வெளிப்படுத்த வேண்டும். குழப்பமான வேலைதான் இல்லையா?

சென்றவாரம் சென்னையிலிருக்கிற ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு புகார் கொடுக்க சென்றிருந்தேன். கிளம்பும்போதிருந்து வண்டியை வாசலில் எங்கே பார்க்கிங்கில் விடுவது என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பங்கள், பதட்டங்கள். எப்படி பேசுவது என்ன பேசுவது, ஒருவேளை லஞ்சம் கேட்டால் சார் நான் பத்திரிகை ஆளு சார் என்று சொல்லி நிரூபிக்க விசிட்டிங் கார்ட் ஐடி கார்டெல்லாம் எடுத்துக்கொண்டு மிகுந்த முன்தயாரிப்புகளுடன் என்ன்னென்ன வசனங்கள் பேசவேண்டும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே ஒத்திகைகள் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினேன். காதலியிடம் காதலை சொல்லக்கூட இவ்வளவு டென்ஷனும் ரிகர்சலும் எனக்கு தேவைப்பட்டதில்லை!

வாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நம்மை இன்முகத்தோடு வரவேற்கிறார் ஒரு பெண்காவலர் அல்லது ரிசப்ஷனிஸ்ட். இதைவிட ஒரு இந்தியத்தமிழ்க்குடிமகனை பயமுறுத்த காவல்துறையால் முடியுமா? அவரிடம் வந்த விபர விஷயங்களை சொன்னால் அடுத்து எங்கே செல்லவேண்டும், என்னென்ன ஃபார்மாலிட்டிஸ் உண்டு என்ன செய்யவேண்டும் என்பதுமாதிரி விபரங்களை கடகடவெனத் தருகிறார். எனக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது. கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டை ஆண்டால் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். இதுவரை போலீஸ் வேடமே ஏற்றிடாத அம்மாவின் ஆட்சியிலேயே இப்படியெல்லாம் நடக்கிறதென்பது நிச்சயம் நம்ப முடியாததுதான் இல்லையா?

சென்னை முழுக்க எல்லா காவல் நிலையங்களிலும் இதுமாதிரி ஏற்பாடு உண்டு என்பதை முன்பே அறிந்திருந்தாலும் முதன்முதலாக ரிசப்சனிஷ்ட் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அந்த சேவையை அனுபவித்து மகிழ்ந்தது இப்போதுதான். காவல்நிலையத்தில் கூட புன்னகைப்பார்கள் என்பதெல்லாம் எப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான மனநிலையை நமக்குள் உருவாக்கும் என்பதை முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

தாகமாக இருந்ததால் தண்ணீர் கேட்டேன் (தயக்கத்துடன்தான்!). காவல்நிலையங்களில் இருக்கிற நொடிகள் ஒவ்வொன்றும் மிகவும் பதட்டமானவை. எந்த போலீஸ்காரர் நம் மீது எப்போது கோபப்படுவாரோ என்கிற அச்சம் உள்ளுக்குள் காரணமேயில்லாமல் நிலைத்திருக்கும். இந்த மனநிலைக்கு நாம் குற்றவாளியாகவோ அல்லது எதாவது பிரத்யேக காரணமோ இருக்கத்தேவையேயில்லை. நானெல்லாம் கண்ணை உருட்டி கொஞ்சம் மிரட்டினால் கூட அப்ரூவர் ஆகிவிடுவேன். கேஸே இல்லாவிட்டாலும் கூட.

தண்ணீர் கேட்கவும் கூட பம்மும் குரலில் எச்சூஸ்மீ மேடம் வாட்டர் ப்ளீஸ் என்றுதான் கேட்டேன். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அடுத்த நொடி தன்னுடைய பாட்டிலையே எடுத்து புன்னகையோடு நீட்டினார் காவலர். அதை வாய் வைக்காமல் இரண்டு மடக்கு குடிக்கும்போது கூட டேபிளில் சிந்திவிடுமோ என்கிற அச்சம்தான் மனதில் வியாபித்திருந்தது. அதனால் சுமாராகத்தான் தாகம் தணிந்தேன்.

யாராவது லஞ்சம் கேட்பார்கள், கட்டிங் மாமூல் மாதிரி கொடுக்க வேண்டியிருக்கும்… நல்லஅனுபவமாக இருக்கப்போகிறது என்கிற நினைப்போடு ஒவ்வொரு படியாக தாண்ட தாண்ட எங்குமே எந்த சிக்கலுமே இல்லை. சொல்லப்போனால் நம்மிடம் எல்லாவிதமான ஆவணங்களும் நியாயமான காரணங்களும் உண்மையும் இருந்தால் ஐந்து ரூபாய் கூட செலவழிக்காமல் காவல்நிலையங்களில் காரியமாற்றிட முடியும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சமுத்திரகனி படத்தில் காட்டுவதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. போன வேலை சுமூகமாக முடிந்தது. (கடைசி வரை பத்திரிகையாளர் என்கிற அடையாளமெல்லாம் பயன்படுத்தபடவில்லை)

கிளம்பும்போது இந்தக் காவல்நிலையத்தின் வாசலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். ஒரு போர்டு வைத்து அதில் பொது அறிவு தொடர்பான ஒரு கேள்விபதிலும், கீழேயே ஒரு திருக்குறள் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்கள். அது யாருக்காக எழுதப்பட்டிருகிறது, எதற்காக என்பதை யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன். ஒருவேளை காவல்நிலையத்துக்கு வருகிற குற்றவாளிகள் இதை படித்து திருந்தவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது என்னைப்போன்றவர்கள் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவும் கூட இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட வாசகங்கள் படிக்கிறவர்களை விட இதை தினமும் வேலைமெனக்கெட்டு எழுதுகிறவர்களுக்கு மிகவும் பயன்படும். தினமும் எழுதுகிறோமே என்றாவது அவர்கள் அதை பின்பற்றும் வாய்ப்பிருக்கிறது.

நம்மை சுற்றியுள்ள மனிதர்களில் காவல்துறையினர் பற்றித்தான் நம்மிடம் மிக அதிகமான முன்தீர்மானங்களும் அவநம்பிக்கைகளும் இருக்கின்றன. இந்த அவநம்பிக்கைகள் அத்தனையும் சினிமா,சீரியல் முதலான ஊடகங்களின் வழி காட்சி மற்றும் பத்திரிகை எழுத்துகளின் வழி நமக்குள் எங்கோ உருவாக்கப்பட்டவை. ஆனால் வேறெந்த வேலைகளையும் விட மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியமான துறைகளில் காவல்துறையும் ஒன்று. சிஎம் சட்டசபை செல்லும் வழியெங்கும் உச்சி வெயிலில் தன்னந்தனியாக ஆர்கே சாலையில் தேவுடு காக்கும் லேடி கான்ஸ்டபிளில் பேசிப்பார்த்தால் முழுநீள திரைப்படமே எடுக்கும் அளவிற்கு அவ்வளவு கதைகள் சொல்வார்! கல்நெஞ்சக்காரர்களும் ஒவ்வொரு படிநிலைகளிலும் தனக்கு முந்தைய மூத்த அதிகாரியின் வழி கீழுள்ளவர் சந்திக்கிற அவமானங்களும் அசிங்கங்களும் சொல்லி மாளாது. ஒவ்வொரு நாளும் தங்களை கொஞ்சமும் மதிக்காத மனிதர்களோடு பழகக்கூடியவர்கள். அவர்களிடம் நம்மால் ஒரு புன்னகைக்கு மேல் எதையும் எதிர்பார்க்கிற ரைட் நமக்கு கிடையாது.

கோவை க்ராஸ்கட் ரோட்டிற்கு எப்போதாவது சென்றால் அங்கே நடக்கிற பாதசாரிகளையும் ட்ராபிக்கையும் மைக் வழி ஒழுங்கபடுத்துகிற காவல்துறையினரின் குரல் காதில் விழுந்து கொண்டேயிருக்கும். அந்தக்குரலில் துளியளவும் கூட உங்களால் ஆணவத்தையோ அதட்டலையோ உணரமுடியாது. மாறாக அவர்கள் அன்பாக ‘’இப்படி ராங்ரூட்ல வரக்கூடாது கண்ணா ஒரமா போங்க…’’ ‘’அம்மா ஆக்டிவா… இது ஒன்வே திரும்பிப்போ.. அங்கல்லாம் வண்டியை பார்க் பண்ணக்கூடாதும்மா’’ என்பதுமாதிரி கனிவாக பேசுவதை கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்கள் ஒருமுறை க்ராஸ்கட் ரோடில் அங்கிமிங்கும் ஓடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் போலீஸ்காரர் உங்களிடமும் கனிவாக ‘’தம்பி இப்படியெல்லாம் ரோட்ல ஓடக்கூடாது நடைபாதையை பயன்படுத்துங்க என்று சொல்வதை கேட்டு ரசிக்கலாம். சென்னையில் இது கொஞ்சம் மோசமாக இருக்கும். காரணம் இங்குள்ளவர்களிடம் அன்பாக சொன்னாலும் அதட்டிச்சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடேய் சான்ட்ரோ வழியுட்ரா நாயே என்று மைக்கில் கத்தினால்தான் ஆம்புலன்ஸிற்கு கூட வழி விடுவார்கள். கோயம்புத்தூர்காரர்கள் லேசான அதட்டலுக்கே அஞ்சுகிறவர்களோ என்னவோ என்னைப்போலவே…

ஏன் இந்த போலீஸ்காரங்களுக்கும் நமக்கும் ஒத்துவரமாட்டேனுது என்கிற கேள்வி எனக்கு அடிக்கடித்தோன்றும். காவலர்களுடனான நம்முடைய பெரும்பாலான எதிர்கொள்ளல்கள் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் மட்டுமே நடப்பவை. லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் வண்டியோட்டி பிடிபடுவது, மொபைலில் பேசிக்கொண்டே காரோட்டி மாட்டிக்கொள்வது, குடித்துவிட்டு மாட்டிக்கொள்வது மாதிரி சந்தர்ப்பங்களில் குற்றவாளியாக சிக்கிக்கொண்டுதான் காவலர்களோடு நேருக்கு நேர் உரையாடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதற்குரிய ஃபைனை கட்டாமல் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயல்கிறவர்களாகவே இருக்கிறோம். அல்லது யாராவது பெரிய ஆளுக்கு போன் போட்டு கொடுத்து தப்ப நினைக்கிறோம். இப்படி எப்போதும் குற்றவாளியாக மட்டுமே அவர்களை சந்திப்பதால்தானோ என்னவோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகறதில்லைபோல! ஒரு குற்றவாளியாக காவலர்களிடம் மட்டுமல்ல காதலிக்கிறவர்களிடம் கூட சகஜமாக பழகமுடியாது என்பதுதான் யதார்த்தம்.

13 comments:

மெக்னேஷ் திருமுருகன் said...

சுவாரஸ்யமான அனுபவம் அண்ணா ! சேலத்துக்காரங்களாம் சிக்னல்ல போலிச பார்த்தா அடுத்த செகன்டே யூடர்ன் போட்டு , புழுதிக்காட்டுல வண்டிய ஸ்கர்ட் அடிச்சு , பறந்துடுவாங்க !!

Kathasiriyar said...

எனக்கும் காவல்துறையுடன் ஒரு நல்ல அனுபவம். வளசரவாக்கம் சரகம் ராமாபுரம் காவல்நிலையத்தில் பாஸ்போர்ட் சம்மந்தமாக செல்ல நேரிட்டது. அந்த காவலர் மிக மரியாதையாக நடத்தி காசு எதுவும் கேட்காமலேயே செய்து கொடுத்தார். நீங்கள் சொன்னதுபோல் நம்மிடம் ஆவணங்களௌ சரியாய் இருப்பின் தொல்லை ஏதுமில்லை.

செங்கதிரோன் said...

Partially true. Way back in 2007 one of my friend intervened one police was beating a guy in the road. they took custody of my friend and beaten him like hell for two days. We have rescued him by the the help of the station inspector.

'பரிவை' சே.குமார் said...

தங்கள் அனுபவத்தை சுவராஸ்யமாய் பகிர்ந்து இருக்கிறீர்கள் அண்ணா...

அருமை.

sivakumarcoimbatore said...

thanks for sharing...கோயம்புத்தூர்காரர்கள் லேசான அதட்டலுக்கே அஞ்சுகிறவர்களோ என்னவோ என்னைப்போலவே…

ஜானகிராமன் said...

அற்புதமான பதிவு அதிஷா. எப்பவுமே நாம நமது மனநிலையில் இருந்து தான் எல்லாரையும் எடைபோடுகிறோம். அவர்களது பார்வையில், அவர்களின் அனுபவ அழுத்தத்தில் புரிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை.

sathishsangkavi.blogspot.com said...

சூப்பர் பதிவு என்பதை விட நேர்மையான பதிவு மச்சி...

அப்புறம் கோவை காந்திபுரத்தில் பேசுவார்ன்னு சொன்னீங்களே அவர் இப்ப டவுன்ஹாலில் பேசுகிறார்...

அதைப்பற்றியான எனது சிறிய பதிவு...

http://www.sangkavi.com/2014/01/blog-post_8.html

Balaji said...

Boss. Each word in the post is really true. Admirable post.

vasan said...

Adhisha rocks in this

vasan said...

Adhysha rocks

tharudhalai said...

தோழர்,உங்களை வாசிப்பவர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்டக்காரர்கள் போல் தெரிகிறது.
பின்னூட்டங்கள் அதைதான் சொல்கின்றன.

ஆனால் என் கதை வேறு.பேருந்தில் பர்சை தொலைத்து விட்டு குறிப்பிட்ட சரக
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன்.தொலைத்தவற்றில் முக்கியமாக
என்னுடைய வெளிநாட்டு அனுமதி அட்டையும் ஒன்று.
கிடைத்தது துருப்பு சீட்டு அவர்களுக்கு.
என்னிடம் FIR போடா மூவாயிரம் கேட்டார்கள்.ஏற்கனவே 5000 தொலைத்துவிட்டுத்தான்
இங்கே வந்திருக்கிறேன் என்றேன்.
அவர்களுக்குள் பேசிகொண்டது இதுதான்.
நான் அவர்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.
கடைசியில் அதே தான் நடந்தது.அதே.அதே.

குருத்து said...


இதுவும் சென்னையில் நடந்த மோசமான நிகழ்வு தான்! படியுங்கள்! காவல்துறை குறித்த பயபீதி பிம்பங்கள் எல்லாம் உண்மையானவை!


http://www.vinavu.com/2014/12/26/police-complicit-in-rape-and-murder-of-woman/

குமரி நண்பன் said...

வினவு தளத்தை பொழுது போக்க மட்டுமே படியுங்கள்.தவறான தகவல்கள் தரப்படுகிறது