Pages

25 February 2015

மடலேறிடுவேன் மைன்ட் இட்!
சென்ற வார நீயா நானாவில் திருக்குறளின் சிறப்பு பற்றி எண்ணற்ற சான்றோர்கள் பேசியதை கேட்டு தமிழ்நாட்டில் நான்குபேராவது திருக்குறளின் மீது ஆர்வமாகி அதை வாசிக்க ஆரம்பித்திருப்பார்கள். அவ்வகையில் அடியேன் ஐந்தாவது ஆள். நன்றி ஆன்டனி மற்றும் கோபிநாத் கூட்டணி.

பள்ளியில் முட்டிபோட வைத்து திருக்குறளையும் பாரதியார் பாடலையும் மனப்பாடம் பண்ணவைத்து தப்பாக சொன்னதற்காக பிரம்படி பட்ட புண் காரணமாக இருக்கலாம். அந்த காண்டு திருவள்ளுவர் மீதும் பாரதியார் மீதும் இன்னமும் மிச்சமிருக்கலாம். அல்லது திருக்குறள் என்பது சான்றோர்களாக ஆவதற்கான விஷயம் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. அதனாலேயே நாம ஏன் நைட் பன்னென்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும் என்கிற நினைப்பாகவும் இருக்கலாம். அல்லது இதையெல்லாம் படித்து எங்கும் பெருமை பீத்தல் விடமுடியாது என்பதும் காரணமாக இருக்கலாம். மச்சி நீ ரேமன்ட் கார்வர் படிச்சிருக்கியானு கேக்குறது கெத்தா.. நீ திருக்குறள் படிச்சிருக்கியானு கேக்குறது கெத்தா?

ஆன்ட்ராய்ட் மற்றும் IOS ஸ்டோர்களில் ஏகப்பட்ட திருக்குறள் ஆப்கள் கிடைக்கிறது. அதில் ஒன்றை பல மாதங்களுக்கு முன்பே தரவிறக்கி வைத்திருந்தும் ஒருமுறைகூட ஓப்பன் பண்ணி பார்த்ததில்லை. போன வாரம் ஒப்பன் பண்ணி பார்த்தபோதுதான் அது கலைஞர் உரை எழுதிய திருக்குறள் என்பது தெரிய வந்தது. இதுபோல பொன்னியின் செல்வன், பாரதியார் பாடல்கள், ஜெயகாந்தன் சிறுகதைகள் கூட ஆப்களாக அப்படியே பல ஆண்டுகளாக கிடக்கின்றன.

‘’ப்ரோ திருக்குறள் வாசிக்கறதா இருந்தா தயவு செஞ்சு காமத்துப்பாலிலிருந்து ஆரம்பிங்க அப்புறம் வைக்க மாட்டீங்க’’ என்று நண்பர் பரிந்துரைத்தார். கலைஞர் உரையுடன் காமத்துப்பாலின் ஒவ்வொரு குறளாக படிக்க ஆரம்பித்தேன். காதலும் காமமும் கவித்துவமுமாக திருவள்ளுவர் ஒருபக்கம் கம்பு சுற்றினால் அதற்கான உரையில் தன் கைவரிசையை காட்டி அசத்தியிருக்கிறார் கலைஞர்! கலைஞரும் காதல் விஷயத்தில் பேர் போன வல்லுனர் மற்றும் ஆராய்ச்சியாளர் என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார்.

கற்பியலில் பிரிவாற்றாமை என்கிற அதிகாரத்தில் இரண்டாவது குறள்

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

இதற்கான கலைஞரின் உரை

முன்பெல்லாம் அவரை கண்களால் தழுவிக்கொண்டதே இன்பமாக இருந்தது, ஆனால் இப்போது உடல் தழுவிக்களிக்கும் போதுகூட பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

ஒரு மாடர்ன் க்ளாசிக் கவிதை போலிருக்கிறது இல்லையா? களவியல் முழுக்கவே எல்லாமே கவித்துவம்தான். தபூஷங்கருக்கு சவால் விடுகிற கவிதைகளும் கூட நிறைய இருக்கிறது, இழுக்க இழுக்க இன்பம் என்று அந்தக்காலத்தில் சிகரட் விளம்பரங்கள் வரும். இது அதுமாதிரியே படிக்க படிக்க இன்பம்தான்! கற்பியலில் எல்லாமே ஒருமாதிரி சோகமும் பிரிவும் அது தரும் வலியுமாக இருக்க, களவியலில் முழுக்க ஒரே காதல்களியாட்டம்தான். இதையெல்லாம் டீன்ஏஜில் யாராவது பள்ளியிலேயே அறிமுகப்படுத்தியிருந்தால் இந்நேரம் 1330 குறளையும் கரைத்துகுடித்திருப்போம்! நம்முடைய மனப்பாடப்பகுதியை அறம் பொருளோடு நிறுத்திவிட்டது யார் செய்த துர்பாக்கியம்.

காமத்துப்பாலில் ஒரு குட்டிக்கதை கூட வருகிறது. புலவி நுணுக்கம் என்கிற அதிகாரத்தில் அடுத்தடுத்து வரும் நான்கு குறள்கள் ஒரு காதல் கதையில் வரும் சூப்பர் ரொமான்டிக் ஊடல் காட்சியாக இருக்கிறது. குறள் எண்கள் 1317,1318,1319,1320 (தேடி வாசிக்கவும் என்னுரை மட்டும் கீழே)

1317 – காதலன் தும்முகிறான். அவனுடைய தும்மலை கண்டதும் முதலில் வாழ்த்துகிறாள் காதலி (அந்தகாலத்தில் தும்மினால் வாழ்த்துவது மரபு போல) வாழ்த்தும்போதே என்னமோ யோசித்துவிட்டு நான் இங்கே இருக்கும்போது வேற யார் உன்னை நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு சண்டைபோட்டு அழ ஆரம்பித்து விடுகிறார்.

1318 - காதலனுக்கு அடுத்த தும்மல் வர அதை அப்படியே அடக்கிக்கொள்கிறாள். அதை அழுதுகொண்டிருக்கும் காதலி பார்த்துவிடுகிறாள். இந்த முறை ‘’ஒ உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க உன்னை நினைக்கிறாங்கனு எனக்கு தெரியாத மாதிரி மறைக்கிறியா’’ என்று கேட்டு மறுபடியும் சண்டை போட ஆரம்பிக்கிறாள்.

1319 – காதலன் பணிந்துபோய் அவளை சமாதானப்படுத்தி மகிழ்விக்கிறான். அப்போதும் அந்த காதலி விடுவதாக இல்லை. ஓ நீ இப்படித்தான் மற்ற பெண்களையும் சமாதானப்படுத்துவியோ என்று சண்டை போடுகிறாள்.

1320 – கடைசியில் எதுவுமே பேசாமல் அவளையே இமை கொட்டாமல் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் காதலன். அப்போதும் காதலி விடுவதாயில்லை. யாருடன் என்னை ஒப்பிட்டு உற்று பார்க்கிறாய் நீ என்று கோபம் கொள்கிறாள்.

அதோடு கதை முடிகிறது. அனேகமாக திருவள்ளுவருக்கு நேர்ந்த சொந்த அனுபவமாக இருக்கலாம். இதையெல்லாம் வாட்ஸ் அப் காலத்தில் அடிக்கடி நாம் எதிர்கொண்டிருப்போம். இப்படி பலவித சூப் பாய்ஸ்களின் சேம் ஃபீலிங்குகளை கற்பியலில் எதிர்கொள்ள முடிகிறது.

களவியலில் நாணுத்துறவுரைத்தல் என்கிற பகுதியில் மடலூர்தல் என்கிற விஷயம் வருகிறது. மடலூர்தல் அல்லது மடலேறுதல் என்றால் என்னவென்று கூகிளிட்டு பார்த்த போது இது அந்த காலத்து ப்ளாக்மெயிலிங் டெக்னிக் என்று தெரியவந்தது. பெண்கள் பையன்களின் காதலை ஏற்காவிட்டாலோ அல்லது காதலித்து ஏமாற்றிவிட்டாலோ பையன்கள் ஆசிட் அடிப்பேன், பூரான் வுட்ருவேன், வீட்டுக்கு மொட்டை கடுதாசி போடுவேன் என்று மிரட்டுவதைப்போல இந்த மடலேறுதல்.

லவ் பெயிலியர் ஆனவனும், லெட்டர் கொடுத்து பல்பு வாங்கினவனும் கோபத்தில் தன்னை ஏமாற்றிய பெண்ணை அல்லது காதலை ஏற்க மறுத்த பெண்ணை பழிவாங்குவதற்காகவும் அல்லது ப்ளாக்மெயில் செய்வதற்காகவும் காதலை ஏற்க வைப்பதற்காகவும் மடலேறுகிறார்கள்.
மானம் ரோஷத்தையெல்லாம் விட்டுவிட்டு, பனை கருக்கு ஒன்றில் ஏறிக்கொண்டு அதன்மீது குதிரைமேல் அமர்ந்திருப்பது போல அமர்ந்துகொள்ள அதை அவனுடைய நண்பர்கள் ஊருக்குள் இழுத்துச்செல்ல , அவன் தலையில் எருக்கம்பூ மாலையை அணிந்துகொண்டு உடலில் சாம்பலை பூசிக்கொண்டு, கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டு, கையில் அவளுடைய உருவத்தை வரைந்த கொடியை பிடித்துக்கொண்டு, ஊருக்குள் அவளை மோசமான முறையில் திட்டிக்கொண்டே ஊர்வலம் வருவான். இதனால் ஊர் மக்களுக்கு அப்பெண் குறித்து விஷயம் தெரிந்து அந்த பெண்ணை மோசமாக திட்டி அவமானப்படுத்துவார்கள். அவளுக்கு அதற்கு பிறகு திருமணம் நடக்காது. இதனால் சோகமாகும் பெற்றோர் அந்த பெண்ணை மடலேறியவனுக்கே மணமுடித்து வைத்துவிடுவார்கள். அல்லது அந்தப்பெண் தற்கொலை பண்ணிக்கொண்டு சாகவேண்டியதுதான். அல்லது அந்தப்பெண் அய்யோ பாவம் நமக்காக இவன் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறான் என்று நொந்து அவனை ஏற்றுகொள்வாளாம். காதலித்த பெண்ணின் மானத்தை வாங்குவதும், ப்ளாக்மெயில் பண்ணி பணிய வைப்பதும்தான் இந்த மடலேறுதலின் ஒரே நோக்கமாக இருந்திருக்கவேண்டும்.

மார்ஃபிங் பண்ணி காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொள்கிறவன்கள், காதலியின் செல்போன் நம்பரை விபச்சாரியின் எண் என்று சமூகவலைதளங்களில் போடுகிறவன்கள், அந்தப்பெண் குறித்து கேவலமாக ஸ்டேடஸ் போடுகிறவன்கள், மோசமான விஷயங்களை வதந்தி பரப்புகிறவன்களின் அந்தக்காலத்து வெர்ஷன் இந்த மடலேறுதல் போல. இப்போதும் அந்த நடைமுறை இருந்தால் அப்படி யாராவது மடலேறினால் அதை வீடியோவாக எடுத்து யூடியூபிலும் வாட்ஸ்அப்பிலும் போட்டு வைரலாக்கிவிடுவார்கள்!

(சங்க இலக்கியங்களில் யாரும் மடலேறியதாக பாடல்கள் இல்லை, ஆனால் மடலேறிவிடுவேன் என்று மிரட்டியதாக நிறைய பாடல்கள் இருப்பதாகவும் பெண்கள் யாரும் மடலேறியதாக குறிப்புகள் இல்லை என்றும் தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் சொன்னார்.)