06 April 2015

8 Points - கொம்பன்1 - இயக்குனர் முத்தையாவின் முந்தைய படமான குட்டிப்புலியின் சகோதரக்குட்டியாகவே கொம்பனைப் பார்க்கலாம். சாதீய பெருமிதமும், அதை நிலைநாட்டுவதற்காக செய்கிற கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் நியாயம் கற்பிக்கிற அதே முறுக்குமீசை முரட்டுத்தனமான கம்பிக்கரை வேட்டிகளின் ரத்த சரித்திர ஆண்ட பரம்பரை கதைதான்.

2 - படத்தின் ஆரம்ப காட்சியிலேயே வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிற ‘’குண்டன் ராமசாமி’’ என்பவர் தேவர் அல்லாத சாதியை சேர்ந்தவர் என்பதும் அவர் தொழிலதிபர் என்பதும் அவருக்கான அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. வில்லனுக்கு இல்லாத அடையாளம் நாயகனுக்கு படம் முழுக்க நிரம்பி வழிகிறது. நாயகன் தேவர் சாதி என்பதை படம் பார்க்கிற குழந்தை கூட சொல்லிவிடும். இப்படத்தின் கதை தென்மாவட்டங்களில் நிலவும் தேவர்-நாடார் மோதலை முன்வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதை இப்பின்னணி தெரிந்த யாரும் புரிந்துகொள்ள இயலும். ஆனால் வில்லன் பாத்திரம் ‘’நாடார்’’ என்பதை படத்தில் எங்குமே குறிப்பிடுவதில்லை. அல்லது அதை குறிப்பிடுகிற அல்லது சுட்டுகிற காட்சிகளோ வசனங்களோ நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான போட்டி நடக்கும்போதே தேவர் சாதி ஆள் ஒருவன் கவுண்டமணியின் மிகபிரபலமான ‘’நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கமுடியலடா.. புண்ணாக்கு விக்கறவன் புடலங்கா விக்கறவன்லாம் தொழிலதிபரா’’ என்று கிண்டல் செய்வதிலிருந்துதான் படமே தொடங்குகிறது! இன்னொரு காட்சியில் நாயகன் தீப்பெட்டி தொழிற்சாலைகளை எதிர்த்து கேள்விகேட்கிறார். அங்கே வேலைபார்க்கிறவனை புரட்டி எடுக்கிறார். (மதயானை கூட்டம் படத்திலும் தேவர்சாதி சகோதரர்களுக்குள் குழப்பத்தை உருவாக்கும் வில்லனின் அடையாளம் தரப்படாமல், அவர் ''வேறு சாதி தொழிலதிபர்'' ''அதிகாரத்தை அடைய முயற்சி செய்பவர்'' என்று மட்டும் காட்டியிருப்பார்கள். நமக்குள் இப்படி பகையாக இருந்தால் வேற்றுஆள் உள்ளே நுழைந்து அதிகாரத்தை அடைந்துவிடுவான் என்பதுதான் மதயானைக்கூட்டம் சொல்லும் செய்தியே.)


3 - நாயகனும் அவருடைய ஊர்காரர்களும் தன்னுடைய ஊருக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல் அந்தப்பதவியை ஏலம் விட்டு பதவியை தங்களுக்கு வேண்டப்பட்ட சாதிசனத்திற்கே வழங்குவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி இன்னொரு சாதி ஆள் (மீண்டும் நாடார்) அந்த ஏலத்தில் போட்டி போட்டு அதிக தொகை கொடுக்க முன்வரும்போதும் அவரை ‘’திட்டமிட்டு ஏமாற்றி’’ தேவர் சாதி ஆளையே தலைவராக்குகிறார் நாயகன். என்ன இருந்தாலும் ஆண்ட பரம்பரை இல்லையா, அதிகாரத்தை விட்டுத்தர முடியுமா? ஆனாலும் இப்படி சீட்டிங் செய்ததற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் ‘’அவங்க’’ ஏதேதோ தொழில் செய்து தவறான வழியில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நேர்மையற்றவர்கள், ஊரை கெடுத்துபுடுவார்கள் என்றும் வசனங்களாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி என்ன மோசமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை படத்தில் சொல்வதேயில்லை! அநியாய வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாக மட்டும் ஒரு காட்சி வருகிறது.

4 - படம் துவங்கும்போது பொதுக்கூட்டத்தில் கிண்டல் செய்தமைக்காக ஒரு தேவர் சாதி ஆளை இன்னொரு சாதி ஆள் (வில்லன்) திட்டமிட்டு கொல்கிறார். அதனால் அவரை பழிவாங்க தேவர் சாதி ஆள் துடித்துக்கொண்டிருக்கிறார். இறுதிகாட்சியில் அவர் காத்திருந்து இந்த வில்லனை பழிதீர்க்கிறார். அதற்கு நாயகனே உதவி செய்கிறார். அதற்கு முந்தைய காட்சியில் நாயகனையும் அவனுடைய மாமாவையும் சிறையில் வைத்து போட்டுத்தள்ள வில்லன்கள் முடிவெடுக்கும்போது பழிவாங்க துடிக்கிற தேவர்சாதி ஆள் உதவுகிறார். இப்படி மாற்றி மாற்றி… உதவிகள் செய்து… என்ன இருந்தாலும் ஒரே சாதி சனமில்லையா விட்டுக்கொடுக்க முடியுமா?

5 – ஏற்கனவே ஊருக்குள் ஆளாளுக்கு எதையாவது காரணம் சொல்லி குடித்துக்கொண்டிருக்க அதை ஊக்குவிக்கும் வகையில் பெற்ற மகளே தந்தைக்கு ஊற்றிக்கொடுத்து இது மருந்துக்கு என்று சைடிஷ்ஷோடு கொடுப்பதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. படத்தில் பல இடங்களில் குடிப்பதற்கான நியாயமான காரணங்கள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதும், அதை ஊக்குவிப்பதும் என்ன மாதிரியான பண்பாட்டு பதிவு என்றும் விளங்கவில்லை. தி இந்து தமிழ் விமர்சனத்தில் படத்தில் பண்பாட்டு பதிவுகள், பண்பாட்டு சித்தரிப்புகள், சொல்லாடல்கள், வட்டார வழக்குகள் நிறைய இருந்ததாக எழுதியிருந்தார்கள். அப்படி எதுவும் கண்களுக்கு தென்படவில்லை. ஒருவேளை இந்த குடி மேட்டர்கள் பற்றிய பதிவுகளாக இருந்திருக்கலாம். நல்லவேளையாக பிட்டுப்படத்தின் இறுதிகாட்சியில் பெண்களெல்லாம் தெய்வமென்று கருத்து சொல்வது போல ராஜ்கிரண் ‘’மனசுவலிக்கு குடிக்க ஆரம்பிச்சா வீட்ல உள்ள பொம்பளைகதான் குடிக்கணும்’’ என்பார்.

6 – இயக்குனர் முத்தையா தன்னுடைய குட்டிபுலியிலேயே தேவர்சாதி பெண்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். அவர்களெல்லாம் தன்னுடைய ரத்த சொந்தங்களுக்காக கழுத்தை அறுத்து கொலை கூட செய்துவிட்டு குலதெய்வமானவர்கள் என்கிற மாதிரி படமெடுத்தவர். இந்தப்படத்திலும் கோவை சரளா ‘’அவங்களையெல்லாம் சும்மாவிடக்கூடாது கொன்னுரனும்’’ என்று மகனை உற்சாகப்படுத்துகிறார். மதயானை கூட்டம் படத்திலும் தேவர்சாதி பெண்கள் கொலை செய்கிறவர்களாக சித்தரித்து காட்சிகள் உண்டு.(அதை இயக்கியவர் வேறொரு இளைஞர்). தங்களுடைய சாதிசனத்திற்காக ஒரு பெண் கொலை கூட செய்வாள் என்று எப்படி தொடர்ந்து தேவர் சாதி பெண்களை கொலைகாரர்களாக இரக்கமற்றவர்களாக காட்டுகிறார்கள்? அதில் என்ன பெருமை வந்து ஆடுகிறது என்று புரியவில்லை.

7 – எப்படி வேல.ராமமூர்த்தி இதுமாதிரி சாதிப்பெருமித படங்களில் தொடர்ந்து நடிக்கிறர் என்பது புதிரான விஷயம். அவராக வலியப்போய் இந்த வண்டிகளில் ஏறுகிறாரா? அல்லது இந்த வண்டிகள் எப்பாடுபட்டாவது அவரை ஏற்றிக்கொள்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். மதயானைக்கூட்டத்தில் நன்றாக நடித்திருந்தாலும் கொம்பனில் அவரை காமெடிபீஸாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். அனேகமாக அடுத்த படத்தில் அவரை தம்பிராமையாவின் அஸிஸ்டென்டாக்கும் வாய்ப்பிருக்கிறது.

8 – படத்தில் ஒரு சிறைச்சாலை காட்சி வருகிறது. அந்த சிறைச்சாலையில் கைதிகள் பார்க்க ‘’ஜில்லா’’ திரைப்படம் போடுகிறார்கள். சிறைச்சாலையில் எப்படியெல்லாம் நம்மை கொடூரமாக கொடுமைப்படுத்துவார்கள் என்பதை இக்காட்சி நமக்கு விளக்குகிறது. படத்தை பார்த்துகொண்டிருக்கிற சிறைக்கைதிகள் திடீரென்று வெறியேறி ஆளாளுக்கு மாறி மாறி அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இதை பார்க்கிற யாருக்குமே இனி தப்பு செய்துவிட்டு சிறைக்கு போகிற எண்ணமே வராது. அந்த வகையில் இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்.


**********
9 comments:

கண்ணன்.கா said...

Last comment Super. Still laughing 😁 After long gap u started writing reviews again.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
தம 1

Unknown said...

//படத்தில் ஒரு சிறைச்சாலை காட்சி வருகிறது. அந்த சிறைச்சாலையில் கைதிகள் பார்க்க ‘’ஜில்லா’’ திரைப்படம் போடுகிறார்கள். சிறைச்சாலையில் எப்படியெல்லாம் நம்மை கொடூரமாக கொடுமைப்படுத்துவார்கள் என்பதை இக்காட்சி நமக்கு விளக்குகிறது. படத்தை பார்த்துகொண்டிருக்கிற சிறைக்கைதிகள் திடீரென்று வெறியேறி ஆளாளுக்கு மாறி மாறி அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இதை பார்க்கிற யாருக்குமே இனி தப்பு செய்துவிட்டு சிறைக்கு போகிற எண்ணமே வராது. அந்த வகையில் இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்//!!!

குரங்குபெடல் said...

படத்தை முட்டாள் தெனத்துல ரிலீஸ் பண்ணி பல விமர்சகரை இயக்குனர் ஏமாத்துனாலும் . . . தம்பி நீங்க . . . ரொம்ப வெவரமான ஆளுதான் . . .

குறியீடுகளை புட்டு புட்டு வச்சிட்டீங்களே . . .

யாஸிர் அசனப்பா. said...

8 வது பாயிண்ட் செம்ம....

சிந்திப்பவன் said...

சொந்த சாதிக்குள்தான் பிரச்சினை. நாடார் எல்லாம் வரலை.

சிந்திப்பவன் said...

சொந்த சாதிக்குள்தான் பிரச்சினை. நாடார் எல்லாம் வரலை.

திருமாறன் said...

தொழில் பிரச்சனைகள், பதவிக்கான போட்டிகள் ,பழிவாங்குதல் போன்றவை அனைத்து இடங்களிலும் இருப்பவை.. குறிப்பிட்ட சாதிகளில் மட்டும் செய்பவை அல்ல...பின் எதை வைத்து பழிவாங்குவதால், அடிப்பதால் ஒருவரை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்று எப்புடி சொல்லமுடியும்........

Karthik Nilagiri said...

பாயிண்ட் 8 சூப்பர்'ணா... நிதர்சனமான உண்மை...