Pages

12 June 2015

8 points - காக்கா முட்டை
#குழந்தைகளை பற்றிய உலகப்படங்களுக்கு ஒர் அடிப்படையான இலக்கணம் இருக்கிறது. அடையமுடியாத ஒன்றுக்காக ஏங்கும் பரம ஏழைக் குழந்தைகள் இருக்க வேண்டும். சகோதர சகோதரிகளாக இருப்பது உத்தமம். அவர்களுக்கு கட்டாயம் க்யூட்டான பாட்டியோ தாத்தாவோ இருக்கவேண்டும். அப்பாவும் அம்மாவும் எந்நேரமும் தங்களுடைய வருமானக்கவலைகளில் இருக்கவேண்டும். அவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட குடும்பமாக இருந்தாலும் அங்கே மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் ஆசைப்பட்டதை அடைய காசு சேர்ப்பதும், அந்த காசு ஏதோ ஒருவகையில் காணாமல் தொலைந்து திருடு போவதும் நடக்கும். பணக்காரர்கள் தங்களுடைய பேராசைக்காக குழந்தைகளை ஏமாற்றுவார்கள். சில சிக்கல்களுக்கு பிறகு கடைசியில் அந்த குழந்தைகளுக்கு ஆசைப்பட்டது கிடைக்கும்போது த்தூ இவ்ளோதானா பிச்சாத்து என்று அதை புறக்கணிக்க வேண்டும். இதற்கு சில்ரன் ஆஃப் ஹெவன், வே ஹோம், சார்லி அன் சாக்லேட் ஃபேக்டரி, ஸ்லம்டாக் மில்லியனர், அபயம் தொடங்கி எண்ணற்ற உதாரணங்களை காட்டலாம்! தமிழிலேயே நிறைய குறும்படங்களும் எடுக்கப்பட்டிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் அருண்குமாரின் ‘’5ரூப்பீஸ்’’ நல்ல உதாரணம். காக்கா முட்டை அந்த இலக்கணத்தில் கச்சிதமாக அமர்கிறது. ஆனால் இது அப்படங்களின் காப்பியல்ல, தாக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

#சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான மெரீனா படத்தோடு காக்காமுட்டையை ஒப்பிடலாம். இரண்டுமே விளிம்பு நிலை குழந்தைகளின் வாழ்வை ஆவணமாக்கும் திரைப்படங்கள். இரண்டு படங்களுமே தமிழ்சினிமாவின் மிகச்சில வணிக சமரசங்களுக்கும் உட்பட்டு எடுக்கப்பட்டவை. ஆனால் காக்காமுட்டையை மெரீனாவை விடவும் பலவிஷயங்களில் மிகச்சிறந்த படமாக கருதலாம். குறிப்பாக படத்தின் திரைக்கதையும் அதன் நோக்கமும்! மெரீனாவின் திரைக்கதை எந்த நோக்கங்களும் இல்லாமல் ஆவணப்படம் போல இஷ்டம்போல் அலைபாயும். கடைசியில் அய்யயோ கருத்து சொல்ல வேண்டுமே என்கிற மெனக்கெடல் அப்பட்டமாக தெரியும். இப்படத்தில் அப்படிப்பட்ட மெனக்கெடல்களில்லை இயல்பாகவே படம் சொல்ல விரும்புகிற கருத்து அல்லது கருத்துகள் தானாகவே மலர்ந்தபடியிருக்கிறது! படம்பார்ப்பவர் அவரவர் பொதுஅறிவுக்கேற்ற படி கருத்துகளை புரிந்துகொள்கின்றனர்.

#காக்காமுட்டையின் இந்த வெற்றி தமிழ்சினிமாவில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். மாற்று முயற்சிகள் மங்கிவிட்ட தமிழ்ச்சூழலில் மலையாளத்தின் மாற்றுபாவனைப்படங்களை ரீமேக் செய்துகொண்டு திருப்தியடைந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில் காக்கா முட்டை புதிய வாசல்களை திறந்துவைத்திருக்கிறது. பெரிய ஹீரோ இல்லாமல், காதல் இல்லாமல் கொஞ்சமாக கமர்ஷியல் அம்சங்களுக்காக வளைந்துகொடுத்தால் நிச்சயமாக வசூலை வாரிக்குவிக்கலாம் என்று இப்படம் தயாரிப்பாளர்களுக்கு நிரூபித்திருக்கிறது. இந்த ட்ரெண்டில் இன்னும் பத்து அல்லது இருபது படங்கள் வரலாம் அதில் இன்னும் இரண்டு இதே அளவில் ஜெயித்தாலும் இந்த ட்ரெண்ட் சூடுபிடிக்கும்! படம் கோடை விடுமுறையில் வெளியாகியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்படி ஒருமுயற்சிக்கு பணம் போட்ட நட்சத்திர தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இதுபோல நிறையபடங்களெடுக்க வேண்டும்.

#படத்தில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது உணவு அரசியல், உலகமயமாக்கலுக்கு எதிரான அரசியல்,கம்யூனிசம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் லொட்டு லொசுக்கு என்று நிறையபேர் சொன்னாலும் படத்தில் என் கண்களுக்கு எந்த அரசியலும் தெரியவில்லை. இதுமாதிரியான ஃபீல் குட் படங்களுக்கு அது தேவையுமில்லை. குழந்தைகளின் ஆசையும் அகவுலகமும் சிறப்பாக வந்திருக்கிறது. அப்பையன்களுடைய வயதுக்கேற்ற காட்சிகள் அமைந்திருக்கிறது. அதை நன்றாக காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர். சமூகத்தின் மீதான விமர்சனங்களாக சில வசனங்கள் வருகிறது. அவ்வளவுதான். நண்பர் ஒருவர் இப்படத்தின் ப்ரிவியூ பார்த்துவிட்டு மிகுந்த உற்சாகமாகி சார் படத்துல தோசைய காட்டும்போது ஈ மொய்க்குது, குடிசைல ஈ மொய்க்குது, பீட்சாவ காட்டும்போதும் ஈ மொய்க்குது இது என்ன குறியீடு சார் என்று ஏதோ கேட்டிருப்பார் போல இயக்குனர் அதெல்லாம் ஒன்னுமில்லைங்க நிஜமாவே ஈ மொச்சிருக்கு போல என்றிருக்கிறார்.

#சிம்பு சிம்புவாகவே இப்படத்தில் வருகிறார். அதுவும் தப்பான முன்னுதாரணமாக. அவரால்தான் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். இறுதியில் அவர் சிம்பிளாக ‘’ஓ அப்படியா சாரி’’ என்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க சிம்பு எப்படி அதற்கு சம்மதித்தார் என்பது தெரியவில்லை. ரஜினி கூட ரஜினியாகவே திரையில் தோன்றினாலும் நல்லவராக ஏழைகளுக்கு உதவுபவராக இரக்க குணம் கொண்டவராகத்தான் தோன்றுவார் (அன்புள்ள ர.கா, குசேலன்). தனுஷ் தயாரித்த படம்தானே இது. இதில் தனுஷே கூட அந்த பாத்திரத்தில் நடித்திருக்கலாம். ஏனோ சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க முன்வந்த சிம்பு நிச்சயம் பாராட்டுகளுக்குரியவர்.

#சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோமல்லூரியை புத்தக கண்காட்சியில் கவிதை தொகுப்புகளுடன் பார்த்திருக்கிறேன். இரண்டு ஸ்டால் எடுத்து அவருடைய புகைப்படத்தை பெரிதாக வைத்து பேனர் வைத்து அவர் எழுதிய கவித்துவ நூல்களை மட்டும் அடுக்கி வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஆனால் கும்கிக்கு பிறகு மனிதருக்கு நல்ல ஏறுமுகம். காக்கா முட்டை படத்தில் மிகவும் கவர்ந்த பாத்திரங்களில் பழரசத்திற்கு முதல் ரேங்க் கொடுக்கலாம்! அவருடைய அந்த வெள்ளந்தியான புன்னகை மிகவும் பிடித்திருந்தது. மல்லூரி மட்டுமல்ல படத்தில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும் மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பின்னணி நன்றாக தயாரிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. பாட்டி, காய்லாங்கடை பெண், எம்எல்ஏ, திருடர்கள் என எல்லாருமே அவ்வளவு யதார்த்தம். அதே சமயம் படம் முழுக்க காட்டப்படும் அந்த சேரியும் அதன் மனிதர்களும் ஒரு செட் ப்ராபர்ட்டி போலவேதான் இயங்குகிறார்கள். வடசென்னை பின்னணியை காட்சிப்படுத்திய மெட்ராஸ் திரைப்படம் இந்த விஷயத்தில் அவ்வளவு டீடெயிலிங் பண்ணியிருப்பார்கள். படம் முழுக்க அந்த ஊரும் மக்களும் ஒட்டுமொத்த வடசென்னையும் இயங்கிக்கொண்டிருக்கும்.

#தமிழ்நாட்டில் இன்று இருபது வயதை தாண்டியவர்களில் முக்கால்வாசி பேர் தங்களுடைய பால்யத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் காக்காமுட்டை பையன்களாக ஒருமுறையாவது இருந்திருப்பார்கள். ஏதாவது ஒன்றுக்காக ஏங்கி ஏங்கி செத்திருப்பார்கள். அதை ஆல்மோஸ்ட் நெருங்கின நாளில் அவர்களுக்கான அக்கதவுகள் திறக்கபடாமலிருந்திருக்கும்! படம் குறித்து நெகிழ்ச்சியோடு பேசுகிற பலரிடமும் அதை உணரமுடிந்தது. உலக மயமாக்கலுக்கு பிறகு மிடில் கிளாஸ் ஆனவர்கள்தானே தமிழ்நாட்டில் ஒன்தேர்ட்.

#காக்காமுட்டை படம் பார்த்தவர்களில் 90சதவீதம் பேர் காக்கா முட்டையை ருசித்திருக்கமாட்டார்கள் காக்கா முட்டையை மரம் ஏறி எடுப்பது அவ்வளவு சுலபமும் இல்லை. ரிஸ்க் எடுத்து சாப்பிடுகிற அளவுக்கு அது அத்தனை சுவையாகவும் இருக்காது. கொஞ்சம் சன்னமான கசப்பும் கொழகொழப்புமாக மோசமான வாசனையோடு இருக்கும். ஒரே ஒருமுறை சிறுவனாக இருக்கும்போது பச்சையாக குடித்திருக்கிறேன். காக்காமுட்டையை சாப்பிட்டுவிட்டு அந்த ஓட்டை கொண்டுபோய் புதைத்துவிட்டால் தாய்காக்கா நம்மை பழிவாங்க துரத்தாது என்று மூடநம்பிக்கையும் உண்டு.