Pages

01 August 2015

உள்ளத்தில் நல்ல உள்ளம்...




எம்எஸ்விக்கு இதைவிட சிறப்பாக அஞ்சலி செலுத்த முடியாது என்கிற வகையில் அட்டகாசமான ஒரு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எழுத்தாளர் ஞாநி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது.கங்கை அமரன் எம்எஸ்வி குறித்த தன்னுடைய பால்யகால நினைவுகளை பேசி பாடல்களை பாடி அசத்தினார். எம்எஸ்வி தன்னுடைய பல சூப்பர் ஹிட் பாடல்களையெல்லாம் வெறும் 5மணிநேரத்தில் போட்டது என்று குறிப்பிட்டார்!

ரிகார்டிங் தியேட்டரில் சிங்கம்போல் கர்ஜித்தபடி பவனி வரும் எம்எஸ்வி வெளியே வந்துவிட்டால் பூனைபோல எல்லோரிடமும் அத்தனை பாசமாக பழகுவாராம். சாகும் தருவாயிலிருந்த எம்எஸ்வியை கங்கை அமரன் சந்தித்து அவருக்கு அவருடைய பாடல்களையே பாடிக்காட்டியதையும், அதைகேட்டு எம்எஸ்வி கண்கலங்கியதையும்.. உடனே ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’’ என்று இவர் பாடியதையும் சொன்னது இப்போது வரையிலுமே உலுக்கி எடுக்கிறது.

நம்முடைய குழந்தைகளுக்கு எம்எஸ்வியின் பாடல்களை அறிமுகப்படுத்த வேண்டிய கடமையையும் எம்எஸ்வி ஏன் ஒரு மாமேதை என்பதையெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு பாடல்களை பாடியும் குறிப்பிட்டும் சொன்னார். இளையராஜாவின் பல பாடல்கள் எம்எஸ்வியின் பாடல்களின் தாக்கத்தில் உருவானவை என்பதையும் உதாரணங்களோடு விளக்கினார். உச்சமாக எலந்தப்பழம் பாடலில் இருக்கிற சோகத்தையும் வெளிப்படுத்தி காட்டினார். எம்எஸ்வி தன்னுடை முதல்படத்திற்கு இசையமைக்கும்போது வயது வெறும் 21தானாம். அந்தகாலத்து அநிருத் போல என்று நினைத்துசிரித்துக்கொண்டேன். ஆனால் அவர் சாகும்வரைக்கும் அநிருத்தாகவே இருந்திருக்கிறார்!

கங்கை அமரன் ஒரு தமிழிசை கூகிளாக இருக்க வேண்டும். எப்போதோ வந்த ஒரு படத்தின் பெயரை சொல்லி அப்படத்தின் அத்தனை பாடல்களை வரிசையாக சொல்லி வரிகளையும் கூட குறிப்பிட்டு சொல்கிறார்! பார்வையாளர்கள் சில பாடல்களை பாடசொல்லி கேட்க அதையும் உற்சாகமாக பாடுகிறார். கங்கை அமரனின் பலமும் பலவீனமும் இந்த எளிமையாகத்தானிருக்க வேண்டும்.

எழுத்தாளர் வே.மதிமாறன் மிகவும் கடுமையான சிடுமூஞ்சி அரசியல் விமர்சகர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று அவர் எம்எஸ்வி குறித்தும் அவருடைய பாடல்களை குறித்தும் அத்தனை ரசனையோடும் நகைச்சுவையோடும் பேசினார். பாடல்களை அழகாக பாடவும் செய்கிறார். சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த பேச்சு இது.

இசைஞானியின் நிகழ்ச்சிக்கு ஏழைகளால் போக முடியாதபடிக்கு நிறைய நுழைவுக்கட்டணம் வைத்துவிட்டதால் அதில் கலந்துகொள்ள முடியாத சோகம், எழுத்தாளர் ஞாநியின் இந்த இலவச நிகழ்ச்சியில் தீர்ந்தது. இசைஞானி குறித்த ஞாநியின் பதிவுக்கு கங்கை அமரன் மிகுந்த பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடு பதில் தந்தார். ''இசைஞானியின் நிகழ்ச்சியை தொடர்ந்து எம்எஸ்வி பெயரில் ஒரு அறக்கட்டளை துவக்கப்பட்டு அதன் வழி நலிந்த திரையிசைகலைஞர்களுக்கு உதவப்படும்'' என்றார். அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவன் நானே என்று ஞாநியும் சொன்னார். நிகழ்ச்சியில் எம்எஸ்வி எந்த அளவுக்கு புகழப்பட்டாரோ அதேஅளவில் இளையராஜாவும் பேசப்பட்டார். அவருடைய பாடல்களை பற்றியும் அதன் பெருமைகளையும் கூட பேச்சாளர்கள் குறிப்பிட்டுப்பேசினர்.

நிகழ்ச்சியில் எம்எஸ்வியின் சிறந்த பாடல்கள் சில திரையிடப்பட்டன. எத்தனையோ தேடவை கேட்ட பாடல்கள்தான் என்றாலும் நேற்று பெரிய திரையில் சரவ்ன்ட் சவுண்டில் கேட்டபோது உலுக்கி எடுத்தது! அதிலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்…’’ மற்றும் மயக்கமா கலக்கமாவும் திரையிடப்பட்டபோது அரங்கத்தில் பாதி அழுதுகொண்டிருந்தது! எத்தனை பேரை எத்தனை சந்தர்ப்பங்களில் ஆற்றுப்படுத்திய பாடல்கள் இவை.

திரையிடப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை எட்டு அல்லது பத்து இருக்கலாம். அதில் பாதி எம்ஜிஆருடையது. மீதி நான்கு பாடல்கள் சௌகார் ஜானகி நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாநி எம்எஸ்விக்கு மட்டுமல்ல சௌகார் ஜானகிக்கும் ரசிகராயிருக்க கூடுமோ என்கிற ஐயத்தோடு கிளம்பினோம், நேற்றைய மாலைப்பொழுதினை அர்த்தமுள்ளதாக மாற்றிய அவருக்கு நன்றி.