Pages

08 May 2020

ஈகோவை கைவிடல்


ஈகோவை கைவிடல்!

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே மனிதர்களின் மகிழ்ச்சிக்கு பெருந்தடையாக இருப்பது ஈகோதான். அதிலிருந்து மீள்தல் அத்தனை எளிதாக இருப்பதில்லை. நம்முடைய அடக்கம் ஒவ்வொருநாளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிற சமூகவலைதளங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். அன்பேவா திரைப்படமும் அத்தகைய அகம்பாவத்திலிருந்து மீள்தலை குறித்தே பேசுகிறது. நகைச்சுவையை மையமாக கொண்ட திரைப்படமாகவே அது இருந்தாலும் திரைப்படத்தின் மையமான கருத்தோட்டம் ஈகோவை எதிர்கொள்தலையே அடிப்படையாக கொண்டிருக்கிறது.

செல்வசெழிப்பில் திளைக்கிற நாயகன் ஜேபி அமைதி இன்றி தவிக்கிறான். அதைத்தேடி வெளியூருக்கு செல்கிறான். அங்கே அவனுடைய வீடை வேறெவெரோ ஆக்கிரமித்திருக்கிறார்கள். அமைதி தேடி வந்த இடத்தில் எதிர்பாராத அவமானங்களுக்கு ஆளாகிறான். அதை எதிர்கொள்ள முடிவெடுக்கிறான். படத்தில் வில்லன்களே இல்லை. ஒரே வில்லன்தான் அது நாயகனின் மனதில் குடிகொண்டிருக்கிற ஈகோதான். அதை வெல்வதன் வழிதான் அவன் விரும்பும் அமைதியை அடைய முடியும் என்பதை அறிகிறான். அது படம் நெடுக மீண்டும் மீண்டும் சோதிக்கப்படுகிறது. அவன் விடாப்பிடியாக அவற்றோடு விளையாடுகிறான். அவன் நினைத்தால் அதையெல்லாம் தன்னுடைய அதிகாரத்தால் ஒருவிநாடியில் தீர்த்துக்கட்டிவிட முடியும். இருந்தும் அதற்கு பதிலாக அவமானங்களோடு விளையாடத்தொடங்குகிறான். வேலைக்காரர்கள் அவமதிக்கிறார்கள், காதலிக்கிற பெண் அவமதிக்கிறாள், அவளுடைய கல்லூரி நண்பர்கள் அவமதிக்கிறார்கள் எல்லாவற்றையும் விளையாட்டுபோல எதிர்கொண்டு வெல்கிறார். இறுதியில் உச்சமாக அவருடைய காதலுக்கே அப்படி ஒரு சவால் வரும்போதும் அதையும் எதிர்கொண்டு வெல்கிறார்.

உண்மையில் வெளியே அடக்கமே உருவானவர் என்று அறியப்பட்டாலும் அடிப்படையில் எம்ஜிஆரே ஒரு பெரிய ஈகோயிஸ்ட்தான். எத்தனையோ பேரை பலிவாங்கிய அமைதிமிக்க ஈகோ அது. அவர் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்ததே பெரிய அதிசயம்தான். அதனாலேயே இந்தப்படம் இன்னும் சிறப்பை அடைகிறது. இதில் அவரைத்தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இதே அளவு வெற்றியை ஈட்டியிருக்குமா தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட மனுஷன் எவ்ளோ சிம்பிளா நடிச்சிருக்கார் என்பதே படத்திற்கும் பெரிய பலமாக இருந்திருக்கக்கூடும்.

அகம்பாவத்தை கைவிடுதல் யாருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. அந்தஸ்து, பணம், திறமை, புகழ், வலிமை, வல்லமை முதலானவற்றின் மீது நாம் கட்டமைக்கிற அகம்பாவ உணர்வை கைவிட முயல்கிறவர்கள் முதலில் எதிர்கொள்ள நேர்வது அளவில்லா அவமானங்களையே. அந்த அவமானங்கள் மீண்டும் அகம்பாவத்தின் சட்டகங்களுக்கு பின்னால் நம்மை நெட்டித் தள்ளுவதாகவே அமையும். அவமானங்களின் நஞ்சு சக மனிதர்கள் மீதான நம்பிக்கையிழப்பெனவும் வெறுப்பாயும் ரத்த நாளங்களில் படியும். ஆனால் இந்த நெருக்கடிகளை ரசித்து அவற்றோடு விளையாடத்தொடங்குகிற ஒருவன் வாழ்வின் வேறொரு பரிமாணத்தை காணத்தொடங்குவான்.

புத்தர் அத்தகையவர். அவர் ஆசைகளில் இருந்துமட்டுமல்ல, அகம்பாவத்திலிருந்தும் விடுபடுதலை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார். அறிவு உருவாக்கும் அகம்பாவம் பெரிதினும் பெரிது. அது தன்னையும் அழித்து மனிதகுலத்தையும் அழிக்கவல்லது. தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் ஒவ்வொரு லைக்கிலும் கூட நம் அகம்பாவம் வளர்கிறது. வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி வெல்தலில் இல்லை விளையாடுதலில் இருக்கிறது என்பதை மறந்தும்போகிறோம். நாம் போலிப்புகழின் அகம்பவாத்தில் மூழ்கித்திளைக்கிறோம். சில புத்தகங்களின் சில திரைப்படங்களின் சில வாழ்வனுபவங்களின் மூலம் கிடைக்கிற சிறிய அளவிலான ஞானமும் நம்மை பீடங்களில் ஏற்றிப்பார்க்கிறது. புத்தரோ தன்னுடைய அளவில்லா ஞானத்தோடுதான் ஒவ்வொரு நொடியும் போரிட்டார். அதனாலேயே வாழ்நாளெல்லாம் அவமானங்களை எதிர்கொண்டார். ஆனால் சோர்ந்துவிடாமல் அதை விளையாட்டுபோல மாற்றிக்கொண்டார்.

பெரியாரிடமும் இத்தகைய குணத்தை நாம் காணமுடியும். தன் மீது எறியப்பட்ட செறுப்பை எடுத்துக்கொண்டு இன்னொன்றையும் வீசினால் பயன்படுத்திக்கொள்வேன் என்கிற பகடியான பதில் வலிமைகொண்டவனின் எளிமையிலிருந்தே உருவாகக்கூடிய ஒன்று இல்லையா!g