Pages

20 September 2008

குருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்மக்களை தாக்க வந்துள்ள அடுத்த சுனாமி )


நீண்ட கால தயாரிப்புக்கு பின் மிகச்சிரமத்திற்கிடையே நேற்று வெளியான பந்தயம் திரைப்படத்தை நண்பர் ஒருவரின் மிகுந்த ஆவலாலும் , ரசிகன்,விஷ்ணு போன்ற கருத்தாளமிக்க அற்புதமான திரைப்படங்களினால் SA சந்திரசேகர் ( சேகரன்) மீதான அபிமானத்தாலும் இப்படத்தை காண நேர்ந்தது . எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு உலகசினிமாவை பார்ப்பது போன்ற மனநிலையுடன் படத்திற்கு சென்றதால் வெகுவாக ரசிக்க முடிந்தது .( படத்தை தவிர படம் பார்க்க வந்தோரது சேட்டைகளையும் , திரையரங்க நிகழ்வுகளையும் )


படத்தின் துவக்கம் இதுவரை எந்த சினிமாவிலும் கண்டிராதது என்றெல்லாம் கூறும் அளவுக்கு இல்லையென்றாலும் புதுமையானது , ஒரு பள்ளிக்கூட மாணவன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்யும் ஒரு சிறுவன் , ( இதில் அவன் டொக்டர் விஜயின் ரசிகன் என்று புலம்பல் இல்லை இல்லை சவடால் வேறு ) , தலைநகரம் படத்தில் வடிவேலுவிற்கு கொடுத்த பில்டப் ஒப்பனிங்கைவிட கொஞ்சம் அதிகமாக பிரகாஷ் ராஜிற்கு அவரது காலை காட்டி காட்சியை தொடங்குகையில் நம் மனதில் வடிவேலுதான் வரப்போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு .


இப்படி தொடங்கும் படம் போக போக வேகம் பிடித்து மிக வேகமாகி அங்கங்கே சீட்டுகளுக்குள் புகுந்து திரையரங்கத்தை விட்டே ஒடி மூச்சு வாங்கி நம் மண்டையில் இருக்கும் பாதி ரோமத்தையும் பிடுங்கியபடி இறுதியில் சுபமாக முடிகிறது . படத்தின் கதை பேரரசுவின் முந்தைய படங்களுக்கே செல்போனில் சவா(டா)ல் விடும் வகையில் கேவலமாக இருக்கிறது , திரைக்கதையில் கன்னாபின்னாவென்று முடிச்சுகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எங்கள் வீட்டு நாய்க்குட்டி கூட அடுத்து என்ன நடக்கப்போகிறதென்று கூறிவிடும் அளவுக்கு காட்சியமைப்பு .


படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமித்திருக்கிறார் , நிறைய கத்துகிறார் , கோபப்படுகிறார் , சவால் விடுகிறார் , ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் , அருவாளால் தலைகளை கொய்கிறார் , கடைசியில் சாகிறார் , நடுவில் கில்லி பட பாணியில் நகைக்கவைக்கிறார் .


படத்தின் ஹீரோ நிதின் சத்தியா , இதே மாதிரி இன்னும் ஒரு படம் நடித்தால் தமிழகத்தின் முதல்வர்கள் பட்டியலில் இடம்பிடித்து விடுவார் . நடிப்பு என்ன விலை என்று கேட்குமளவிற்கு நடித்திருக்கிறார் . சத்தம் போடாதே படத்தில் சத்தமில்லாமல் பட்டையை கிளப்பியவரை இப்படத்தில் கீச்சுகுரலில் கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேச வைத்து அழகு பார்த்திருக்கிறார் படத்தின் இயக்குனர் . பார்க்க பரிதாபகரமாக இருக்கிறது .


படத்தில் நாயகி ? எப்போதும் போல வந்து போகிறார் , பாடல்களில் ஆடுகிறார் , அழுகிறார் .


இது தவிர டாக்டர் விஜய் இரண்டு காட்சிகளில் வருகிறார் , சிரிக்கிறார் , முதல் காட்சியில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார் , இரண்டாவது காட்சியில் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுகிறார் , நல்ல காமெடி !!! படத்தின் மிக சிறந்த நகைச்சுவை காட்சி '( இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைக்கூட )


படத்தில் ராதிகா ஒரு டுவிஸ்டுக்காக படம் பூராவும் அரசி சீரியல் மேக்கப்பிலேயே வந்து அதே கெட்டப்பபில் அதே போல அழுகிறார் கடைசியில் கொலை செய்கிறார் . சரத்குமார் வாழ்க சமக வாழ்க


அசத்தபோவது யாருவில் அசத்திய இருவரும் மானாட மயிலாடவில் அசத்தும் கணேசும் பல இடங்களில் படத்திலிருந்து கொஞ்சம் ரிலீப் . நல்ல நகைச்சுவை நடிகர்களாக வரலாம்.


பாடல்கள் விஜய் ஆண்டனி யா ? ( போட்ட பால்களில் ரெண்டு சிலோன் மனோகரின் பாடல்களை ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார் , மற்றவை இரைச்சல் , பிண்ணனி அதை விட இரைச்சல் , சமயங்களில் ஷகிலா படம் பார்க்கும் உணர்வு )


இயக்குனர் SAC க்கு ரொம்ப வயதாகிவிட்டது , கோடம்பாக்கத்தில் பல ஆயிரம் திறமைவாய்ந்த இளைஞர்கள் பட வாய்ப்புக்காக பசியும் பட்டினியுமாய் , எதை செய்தாவது முன்னுக்கு வர வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார்கள் , 30 வருடங்களுக்கு முன்னால் SACக்கு யாரோ வாய்ப்பு கொடுத்து இன்று இந்த அளவுக்கு தனக்கு தானே தியேட்டர் வாசலில் போஸ்டர் அடித்து கொள்ளும் அளவுக்கு வளர்த்து விட்டதை நினைத்து பார்த்து வாய்ப்பு வழங்கி தமிழ்திரையுலகத்திற்கு இன்னுமொரு நல்ல இயக்குனரை தரலாம் , அதை விடுத்து 1940 களில் வெளியான திரைப்படங்களின் கதையை பேரரசு போன்ற இயக்குனர்களின் உதவியுடன் இப்படி மிக மோசமாக எடுத்து ஏற்கனவே தனது சமீபத்திய முந்தைய படங்களினால் கழட்டப்பட்ட டவுசரை மேலும் கழட்டிக்கொள்வது அழகல்ல . (அவரது சட்டம் ஒரு இருட்டறையும் நான் சிகப்பு மனிதனும் யாராலும் மறக்க இயலாதது ) . ( புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் , நீங்கள் ஓய்வெடுங்கள் , உங்களுக்குள் விழித்துக் கொண்டிருந்த அந்த சமூகத்தின் மீது கோபம் கொண்ட கண்கள் சிவந்த அந்த இளைஞன் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது )


குருவி , குசேலன்,காளை,பழனி போன்ற மிக நல்ல படங்களுடன் ஓப்பிடுகையில் இப்படம் மிக மோசமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை .


படத்தின் இயக்குனர் இது போல நாலு படங்களை எடுத்தால் டி.ஆர் தமிழ்திரையுலகத்தில் விட்டு சென்ற இடத்தை நிரப்பலாம் . ( டி.ஆர் தற்காலிக விடுமுறையில் சென்றுள்ளார் )


வலியின்றி தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர்க்கு இப்படத்தை கட்டாயம் பரிந்துரைக்கலாம்


படத்தின் முதல் பாதி சஞ்சலக்கா மீதி பாதி மஞ்சலக்கா ( சஞ்சலக்கா மற்றும் மஞ்சலக்கா குறித்து அறிய என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனது மின்னஞ்சல் முகவரி dhoniv@gmail.com )


மார்க் : படத்திற்கு மார்க் போடலாம் பாடத்துக்கு மார்க் போடலாமா ?
மொத்தத்தில் பந்தயம் படம் அல்ல நல்ல பாடம்.... ( இனிமே படத்துக்கு போவியா )