Pages

26 September 2009

சிக்கன் கறியும் சீதபேதியும்..!எனக்கு மிக நெருக்கமான அந்த தோழர். ஒரு அரை மாமிச பட்சினி. அதாவது நான் வெஜ் என்றால் பிடிக்கும் ஆனால் சாப்பிட பயப்படுவார். அவரோடு அண்ணா நகரின் பிரதான சாலையில் சுற்றிக்கொண்டிருந்த போதுதான் அந்த யோசனை குபீர் என குதித்த்து. அப்படி ஒரு ஐடியாவை நான் சொல்லியிருக்க கூடாது என்பதை இந்த கதையின் கடைசி வரியில் தான் உணர்ந்தேன். என்ன செய்ய விதிவலியது. இருந்தாலும் எடுத்துக்கொண்ட திட்டத்தில் சற்றும் மனம் தளராது, அவரையும் என்னோடு சேர்த்து அந்த படுபாதக செயலில் ஈடுபடுத்தினேன்.
வீட்டிலிருந்து அலுவலகம் போகும் போதும் வரும்போதும் அந்த கடை எப்போதும் கண்ணை உறுத்தும். ஒன்று அங்கே விறகப்படும் சிக்கன்கள். மற்றொன்று அங்கே அதை தின்ன வரும் ‘சிக்’கண்கள். அந்த சிக்கனில் சிக்கிக்கொண்ட என் அடிமனது ஆசையை நிறைவேற்ற நண்பரைவிடவும் சிறந்த யாருமே இல்லை. அதற்கான காரணம் பரம ரகசியம்.

‘’யோவ் லூசு மாசக்கடைசிய்யா.. வேணாம்யா சொன்னாக்கேளு.. எங்கயாச்சும் லோக்கலா பாத்துக்கலாம்’’

‘’பாஸ் வொய் டென்சன்.. பைசாதான நான் பாத்துக்கறேன்..’’

‘’இதுக்குப்பேருதான் சூத்துக்கொழுப்புய்யா. பணத்திமிரு’’

‘’பாஸ் என்னா பாஸ்.. எதெதுக்கோ செலவு பண்றோம் சப்பை மேட்டரு..ஆசைப்பட்டுட்டா அனுபவிச்சரணும் பாஸ் ‘’

ஒருவழியாக தோழரை திட்டத்திற்கு தயார் செய்து கொண்டு அண்ணா நகரின் அந்த பிரபல சிக்கன் கடைக்குள் நுழைந்தோம். கேஎப்சி அதுதான் அதன் பெயர். அந்த சிக்கனின் பெயரும் கடையின் பெயரும். முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் குறியீடு அந்த கடைதான் என அடிக்கடி செஞ்சட்டை தோழர் ஒருவர் கூறுவார். எனக்கு ஏகாதிபத்தியம் என்றாலே கூடவே நிலப்பிரபு ஞாபகத்துக்கு வருவார். பிரபு என்றதும் என்ன கொடுமை சார் ஞாபகத்திற்கு வரும். அதெல்லாம் கதைக்கு தேவை இல்லாதது. கேஎப்சி சிக்கன் பற்றியதல்லவா இந்த கதை. ஆனால் கடைக்குள் நுழைந்தால் கடையெங்கும் செஞ்சட்டை தோழர்கள். செந்தொப்பியோடு வரவேற்றார்கள்.

கடை வாசலில் சில படித்த இளைஞர்கள் கையில் கேஎப்சிஐ தடை செய் என்னும் தட்டியுடன் நின்று கொண்டிருந்தனர். லெவிஸ் ஜீன்ஸ் ரீபாக் சூ ரேபான் கண்ணாடி என சர்வமாய் அமெரிக்கன் அவுட்ஃபிட் இளைஞர்கள். இவர்களை போன்றவர்களை இந்திய முதலாளித்துவ ஆதிக்கவாத பணக்கார வர்க்க இளைஞர்கள் என்பார் செஞ்சட்டைத்தோழர். ஆனால் இவர்கள் எதற்கு அவர்கள் ஜாதிக்காரன் கடைவாசலில் போராடுகிறார்கள் என்கிற ஆர்வம் மனதிற்குள் மேலோங்கியது. அது குறித்து அறியும் ஆவலோடு அவர்களிடம் நெருங்க எத்தனித்தவனை. ‘’பாஸ் டைம் மூன்றரை.. முதல்ல சாப்பிட்டு வந்துருவோம் அப்புறம் கேப்போம் ஏன் போராட்டம் பண்றாங்கன்னு’’ என்றார். எனக்கும் பசி குடலை உறிஞ்சிக்கொண்டிருந்தது.

வாசலில் இருந்த செக்யூரிட்டி. எங்களது காமாசோமா உடையை பார்த்து ஏதோ பினாயில் விற்க வந்த இளைஞர்கள் என நினைத்தாரோ என்னவோ முகத்தை திருப்பிக்கொண்டார். ‘’ச்சே என்ன அவமானம்.. வாங்க பாஸ் போகலாம்’’ என சொல்லிக்கொண்டிருக்கிறேன் தோழரை காணவில்லை. அவர் ஏற்கனவே உள்ளே நுளைந்திருந்தார். நானும் நானாக கதவை திறந்து உள்ளே நுழைந்தேன்.

ஓஓஓஓஓஓஓஓஓஓ என்று ஒரே சத்தம்.. அய்ய்யோ யாரோ நாம யாரு தெரிஞ்சு விரட்டறாங்கடோய் என வெளிய வர தயாரானால் .. தோழர் கையை பிடித்து நிறுத்தி ‘’பாஸ் அவங்க ,,, ஹாய் சார்.. வெல்கம்னு எல்லாம் சேர்ந்து கத்துரானுங்க... பாரின் கல்ச்சராம்’’.

‘’நான்கூட பயந்துட்டேன்ங்க..’’

உள்ளே நுழைஞ்சாச்சு.. நாமதான் வேண்டியதை கவண்டரில் போய் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். கவண்டரில் இருந்தவன் நம்ம ஜாதிக்கரான் போல் இருந்தான். நம்ம பாக்கட்ல இருக்கற நூறு ரூபாய்க்கு என்னத்த போய் கேக்கறது.. அவனிடம் மெனுவை கேட்போம் என..

‘’சார் , மெனு கார்டு இருக்குங்களா’’

‘’வாட்டுஃஉஃபனுஏஐ ஆஸ்க்ட்’’

‘’என்ன சார் சொன்னீங்க’’

‘’என்ன கேட்டீங்க’’

‘’ம்ம்ம்ம் மெனு’’

வேண்டாய் வெறுப்பாய் ஒரு மெனுவை நீட்டிவிட்டு.. மீண்டும் ஓஓஓஓ வென கத்தினான் அந்த கவண்டர் இளைஞன். யாரோ புது கஸ்டமர் நுழைந்திருப்பார் போல.
மெனுவை பார்த்தால் தலை சுற்றியது. இரண்டு துண்டு சிக்கன் நூறு ரூவா. ஒரு துண்டுலாம் தரமாட்டாங்களாம். பக்கட்ல சிக்கன் முன்னூறு ரூவா. அரிசி சோறோட சிக்கன் இருநூறு ரூவா. பாக்கட்டில் நூறுதான் இருந்தது. தோழர் பராக் பார்த்துக்கொண்டிருந்த தோழரை பார்த்தேன்.

நான் அப்பவே சொன்னேன்ல என்பதை அவர் கண்கள் சொன்னது. இருந்தாலும் கவண்டரில் இருந்த பெண் அழகாக இருந்ததாலும் அந்த பெண்ணை தோழர் இத்தனை நேரமும் சைட் அடித்துக்கொண்டிருந்த்தாலும் வேறு வழியில்லாமல் பெட்ரோலுக்கு வைத்திருந்த நூறை தந்தார். ஆளுக்கு இரண்டு பீஸ் சிக்கனும் அரைகப்பு சோறும் இருநூற்றி அறுபது ரூவா.. காம்போ ஆஃபர்.

‘’வித்தின்இஃபமதெப்திஎ ஒன்மினிட் சார்’’ சொய்ய்ய்ங் என ஆங்கிலத்தில் சொன்னான் அந்த கவண்டர் பையன்.

‘’என்ன சார் சொன்னீங்க?’’

‘’ஒரு நிமிஷத்துல குடுத்துருவோம்னு சொன்னேன்ங்க’’

‘’ஓஓ உங்க இங்கிலீஷ் எங்க ஊரு மாதிரி தெரியல.. கோயம்புத்தூர்ல வேற மாதிரி இங்கிலீஸ் பேசுவோம்.. ஹிஹி’’

கையில் ஒரே பிளேட்டில் மொத்தமாய் சிக்கனையும் சோத்தையும் இலவச பெப்சியையும் வாங்கிக்கொண்டு ஒரு சீட்டைப்பிடித்து உட்கார்ந்து கொண்டோம்.

அந்த சிக்கன் பார்க்க ரொம்ப கொடூரமாக இருந்தது. சொறிபுடிச்ச கோழிய பிரை பண்ணிருப்பானுங்களோ? இது கோழிதானா வேற ஏதாவதா? கோழிக்கு கால் எங்கே? கோழி வாசனையே இல்லையே! இது கோழிதானா? ஒருவேளை அப்படி இருக்குமோ! இப்படி இருக்குமோ! என்றெல்லாம் தோன்றியது. அதனோடு தந்த அரைக்கப்பு சோறு மிக்க்குறைவாக இருந்த்து. முனியான்டி விலாசில் இரண்டு அன்லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிடும் நமக்கு இது பத்தாதே என மனது உறுத்தியது.

பக்கத்தில் அமர்ந்திருந்த தோழர் சிக்கனை பிக்க முடியாமல் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். நான் அதை அப்படியே கையால் எடுத்து மேஜர் சுந்தர் ராஜன் போல டெர்ராக தின்ன துவங்கியிருந்தேன். முதல் கடியில் நல்ல சுவை இருந்தது. கொஞ்சம் தோலை கடித்துவிட்டு பார்த்தால் சிக்கனுக்குள் ரத்தம்! அய்ய்யோ.. என்று கத்த வேண்டும் போல் இருந்தது. தோழர் ஏற்கனவே ஒரு முக்காலே அரைக்கால் தாவர பட்சி... நான் வேறு எதையாவது சொல்லி பயந்து விட்டால்!.

தின்னும் போது பக்கத்து சீட்டில் அல்லது டேபிளில் சில வாண்டூகள் ஆரவரமாய் வந்து சேர்ந்தன. எல்லாருமே கல்லூரி மாணவிகள் போல. பார்த்தாலே தெரிந்தது நல்ல பணக்கார பொண்ணுங்க.

‘’நேக்கு சிக்கன் வேணான்டி.. ஆத்துக்கு சீக்கிரம் போனும் , ஸ்மெல் வரும்...சோ கெட் மீ ஏ வெஜ் பர்கர்’’ என்று பேசுவது காதில் விழுந்த்து..

‘’எக்ஸ்க்யூஸ்மீ தோழர் ஐயமார்லாம் சிக்கன் திங்க ஆரம்பிச்சிட்டாங்களோ!’’

‘’யோ நம்ம சேதுகூடதான் ஐயரு அவன் திங்கல..’’

‘’இல்ல பாஸ் , ஐயர் லேடிஸ்?’’

‘’மூடிட்டு உன் தட்ட பாருயா.. ஆனா ஊனா ஒனக்கு கிளம்பிருமே! ஏதாவது பிகர பாத்தா போதும்.’’

நான் கப்சிப் என ரத்தம் வழிய சிக்கனை கடித்து தின்ன ஆரம்பித்தேன். தோழர் ஒரு சிக்கன்தான் தின்றிருப்பார். அவருக்கு லைட்டாக குமட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.

‘’பாஸ் இந்த இன்னொரு பீஸையும் நீங்களே தின்னுருங்க’’. தோழர் தனது கோழியை எனக்கு தாரை வார்த்தார்.

‘’பாஸ் நல்லா சாப்புடுங்க பாஸ்.. ஹைஜீனிக் சிக்கன்’’

‘’யோவ் இங்கல்லாம் கோழிய உயிரோட உரிச்சு அப்படியே பொறிச்சுதான் பிரை பண்ணுவாங்களாம்’’

தோழர் என்னிடம் அதை சொல்லும்போதே தொண்டைக்கு கோழி கூவியது.
கஷ்டப்பட்டு என்னுடைய இரண்டு கோழித்துண்டுகளை தின்றது போதாது என்று தோழரின் கோழியை கடித்தால் அதற்குள் பிசுபிசுவென ஏதோ வந்தது.

‘’சார் இதென்ன இந்த சிக்கனுக்குள்ள பிசுபிசுனு இருக்கு’’

‘’எக்ஸ்யூஸ்மீ.. இஃஉபிதேகபகளூமுபகமெஉஃ ‘’ என்றார் அந்த சிகப்புச்சட்டை பையன். கடையில் வேலை பார்ப்பவன்.

ஒரு மயிறும் புரியவில்லை என்றாலும் ‘’ ஓஹோ தேங்க்யூ என மண்டையை ஆட்டிக்கொண்டேன்.

ஆனாலும் தொண்டைக்குள்ளிருந்து கோழி வெளியே வரத்துடிப்பது போலவே இருந்தது. தோழரும் நானும் ஒருவழியாய் அந்த அரைக்கப்பு சோற்றையும் அதற்கு கொடுக்கப்பட்ட கேவலமான ஒரு சிகப்பு குழம்பையும் ( வெளியே வந்து கேட்டப்பதான் தோழர் சொன்னாரு அதன் பேர் தக்காளி சாஸ்!) பிசைந்து கோழி வெளியே வராமல் தடுப்பு போட்டு தொண்டையை அடைத்தாச்சு.

வெளியே வந்து போராட்டம் செய்து கொண்டிருந்தவர்களிடம் பேசலாம் என்கிற ஆவல் இருந்தது. ஆனால் சிக்கன் தொண்டையை அடைத்தது.

கடைக்கு போய் ஒரு தம்மடிக்கலாம் என முடிவானது. கிங்ஸை வாங்கி ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட.. நான்

‘’உவ்வ்வ்வ்வ்வேவேவேவேவேவே..’’ தோழர் சிரித்தபடி


‘’யோவ் அப்பவே சொன்னேன் கேட்டியா ...உவ்வ்வ்வ்வ்வ்வே’’

கடையில் ஒரு வாட்டர் பாக்கட்டும் , மானிக் சந்தும் வாங்கி ஒன்றாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார் தோழர்.

தூரத்தில் கோழி கூவும் ஓசைக்கேட்டது என்று கதையை முடிக்கத்தான் ஆசை. ஆனால் அப்படியெல்லாம் இல்லை.. முன்னூறு ரூபாய் தண்டம் ஆனது மட்டும்தான் கதையின் கருத்து.

அதனால் தோழர்களே கேஎப்சி சிக்கன் சாப்பிடுவது உடல்நலத்துக்கு கேடு! ( கதைக்கு கருத்து அவசியம்ல! அதான்)