Pages

05 October 2009

உள்ளம் கவர் கள்வன்!
''ஏன்டே இந்த சுண்டிபயபுள்ளைக்கு என்னடே தெரியும்,அதப்போயி நொய்யி நொய்யினு
நோண்டிக்கிட்டு கிடக்க'' முறுக்கு மீசையும் கறுத்த மேனியுமாக முரட்டுத்தனமாய் இருந்தார் அந்த புதிதாய் வந்த இன்ஸ்பெக்டர்.

''இல்லைங்க ஐயா , இந்த பிள்ளையும் அங்கிட்டுதேன் இருந்துச்சு , அதான் கூட்டியாந்தேன் , இதுக்கு தெரியுங்கையா '' தொங்கு மீசையும் அகலமான தோளும் கறுத்த உதடுகள் படபடக்க கூனியபடியே பேசினார் ஏட்டு.

''யாரு பையன் இவன், எங்கிட்டோ பார்த்தா மாதிரியே இருக்கான்ல'' அவனை பார்த்த படியே பேசினார்.

''நம்ம சேரிக்கார கன்னையன் பையன்ங்க... இங்கிட்டு கவர்மென்ட்டு இஸ்கூல்லதான் படிக்கிறான், அவங்கப்பன் களவாண்டு போனத என்ன பண்ணானு இவனுக்கு தெரிஞ்சிருக்கும்ங்க'' மீண்டும் படபட கொடகொட என்று கொட்டினார் ஏட்டு.

''அடப்போடா இவனே, அவன் பொஞ்சாதி கூட்டியாந்திருந்தேனாவது உருப்படியாருந்துருக்கும்.. இந்த பயல வச்சுகிட்டு.. டே சின்னத்தம்பி இங்கிட்டு வா.. '' , என்று கைநீட்டி அழைக்க, குறுகுறுவென பார்த்தபடி கைக்கடியபடி சிகப்பு பேண்டும் அழுக்குப்பிடித்த நீல சட்டையுமாய் நின்றுகொண்டிருந்த திறுதிறு சிறுவனை அழைத்தார் இன்ஸ்.

''அங்கிட்டு என்னாச்சுனு சொல்லுடே'' அருகில் வந்தவனின் முகத்துக்கு அருகில் போய் மிரட்டினார்.

''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ''இன்ஸியின் முறுக்கு மீசையைக்கண்டு பயந்து போய் அழ ஆரம்பித்துவிட்டான் பொடியன்.


''என்னலே இது இவன் மீசைய பார்த்தே அலுறுதான் இவன வச்சுக்கிட்டு எப்படி விசாரணை பண்றது.. ''

''இருங்க ஐயா நான் கேக்கேன்.. டே தம்பீ மீசை மாமாகிட்டச் சொல்லி ஒனக்கு புளிப்பு மிட்டாயி , பல்பம்லாம் வாங்கித்தரேன்.. உங்கப்பன் பண்ணை வீட்டு ஆட்டை திருடிட்டுப் போயி என்னடே பண்ணான் ''

பேசாமல் குறுகுறுவென பார்த்துக்கொண்டே நின்றான்.

''ஏய் அந்த பிள்ளைக்கு என்ன தெரியும், அவன் ஏதாவது குடிச்சி அழிச்சிருப்பான்.., பண்ணைக்கிட்ட நான் ச்சொன்னேனு ச்சொல்லிரு , ''

''ஐயா ஆடில்லாம வந்தா அம்புட்டுதேனு பண்ணைக்காரவுக சொல்லிருக்காக , அது அவுக வீட்டு குலதெய்வத்துக்கு பலி கொடுக்க வச்சிருத்தாம்ல, கண்டுபுடிச்சு குடுத்தா அறுநூறு ரூவா தாரேனு சொல்லிருக்காக..''

''இதெல்லாம் எப்பவே பண்ணைகிட்ட பேசுதீய.. ச்சொல்லவே இல்ல..''

''.......''

''ஏலே சின்னப்பயலே சொல்லித்தொலைல எங்கிட்டுலே வித்தான் அந்த ஆட்ட உங்கப்பன்.. , உங்கப்பனாவது எங்கிட்டுப் போனானாவது சொல்லித்தொலைல'' வெறுப்போடு பேசினார் இன்ஸ்.

பேசாமல் குறுகுறுவென நின்றான். ஏட்டுக்கு அருநூறு ரூபாயும் கண் முன் வந்து ஆடி ஆடி சென்றது.

''ஐயா நாலு போடு போட்டா பய பேசுவான்.. லத்தில ரெண்டு பின்னால போடவா!'' பண்ணைத்தரப்போகும் பணம் அவருக்கு வெறியேத்தியபடி இருந்தது.

''பாத்து அடிலே படாத இடத்தில பட்டு செத்துற போகுது $%&$#&* பய புள்ள '' ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்துக் கொண்டார். புகை வட்டவட்டமாய் வருவதைப்பார்க்க பரவசமாய் இருந்தது சிறுவனுக்கு.

சிரிக்க வேண்டும் போலிருந்தது. இன்ஸியின் மீசை உருத்தியது. பளீரென ஏதோ பின்னால் விழுந்தது. ஆஆஆஆஆ கதறினான்.

சொல்லுலே சொல்லுலே.. ஒன்று இரண்டு மூன்று..

வாயையே திறக்கவில்லை. அழுதபடியே பார்த்துக்கொண்டிருந்தான்.

''ஐயா அவங்கப்பன் சொல்லித்தந்திருப்பான் போல பாருங்க வாய திறந்து பேசறானானு.. இன்னும் ரெண்டு போடவா '' ஏட்டு எத்தனித்தார்.

இன்ஸிக்கு அவனைப்பார்க்க பாவமாய் இருந்தது. விடாமல் கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. லத்தியால் பின்னால் அடித்ததில் ஏற்கனவே நைந்திருந்த அவனது கால்சட்டையும் கிழிந்து போயிருந்தது.

''ஏட்டு அவன பாக்க பாவமா இருக்கு.. வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடு.. பண்ணைகிட்ட நான் பேசிக்கறேன்''

''ரெண்டு மிதிமிதி மிதிச்சா பேசுவான்ங்கய்யா.. பயபுள்ள அவங்கப்பன மாதிரியே எம்புட்டு வைராக்கியம்''

சிறுவனுக்குக்கு மூத்திரமே வந்து காலோடு வழிந்தோடியது.

''அடச்சீச்சீ ஏலே பாரு இந்த பயபுள்ளைய ஒன்னுக்கு போயிட்டான் , வாசப்பெருக்கற ஆயாவர சொல்லி கழுவி வுட சொல்லுங்க , டே தம்பி நீ போய் அப்படி மூலைல உக்காரு ''

''என்ன கருமம்டே இது, ஒட்றா போய் உக்காரு '' மீண்டும் அடிக்க லத்தியை ஓங்கினார் ஏட்டு. திருதிருவென பார்த்துக்கொண்டே இருந்தவன் ஓரமாய் போய் உட்கார்ந்து கொண்டான்.

''அடப்போங்கடா நீங்களும் உங்க மூத்திர குடிக்கற விசாரணையும் '' என்றபடியே வாசலுக்கு வந்து ஒரு சிகரட்டை பற்றவைத்தார். குட்டிப்பையன் மூலையில் அமர்ந்தபடி அதிலிருந்து வரப்போகும் வட்ட வடிவ புகைக்காக காத்திருந்தான்.

''டே தம்பீ.. இங்கிட்டு என்னாடா பண்ணுதே.. ஐயா ஐயா '' என்றபடி அவனைப்பார்த்த அந்த ஆயா வெளியே நின்று கொண்டிருந்த ஏட்டு மற்றும் இன்ஸியிடம் ஓடினாள்,

''ஏய் தள்ளி நில்லு.. இப்ப பேசு.. கிட்ட வரக்கூடாதுனு தெரியாது.. '' ஏட்டு விரட்டினார் கையில் விளக்கமாருடன் அருகில் வந்த ஆயாவை.

''ஐயா அது பாவப்பட்ட புள்ளய அத ஏன் இங்கிட்டு கொண்டாந்து வச்சுருக்கீய''

''அவ அப்பன் கன்னையன் பண்ணை வீட்டு ஆட்ட திருடிட்டான்.. அத என்ன பண்ணானு கேட்டா புள்ள வாயவே திறக்க மாட்டேன்றான்.. ''

''ஐயா இது கன்னையன் புள்ளை இல்லங்க.. இது நம்ம ராக்கப்பன் புள்ளைங்க.. அதுமில்லாம இது பைத்தியக்கார புள்ளையா.. பேச்சு வராது.. காது மட்டும் கேக்கும்..மூள வளரலாய் ''

''அடத்தூ யோவ் ஒரு கேஸாவது உருப்படியா பண்றீயா.. அதான்யா இத்தனை வருஷமா இப்படியே இருக்க போயா அந்த பிள்ளைய வெளிய விடு.அடுத்தது யாரு..! ''

சிறுவன் இதையெல்லாம் அறியாதவனாய் ஆடு திருடிய கள்வன் போல முழித்த படி நின்றிருந்தான்.

************************


பி.கு - 1998ல் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக எழுதிய என் முதல் சிறுகதை. அதன் கையெழுத்து பிரதி நேற்று பரணில் கிடைத்தது. என் நினைவுகளுக்காக இங்கே!