Pages

04 November 2009

அலைபுரளும் வாழ்க்கை!மெரினா பீச் ,கடலுக்கு மிக மிக அருகில் அமர்ந்திருக்கிறேன். அலை புரண்டு ஒடிவந்து மீண்டும் திரும்பி செல்கிறது. அவைகள் இப்படித்தான் முன்னாலிருந்து பின்னால் போகிறதா பின்னாலிருந்து முன்னே வருகிறதா என்பதில் எப்போதும் குழப்பம் தருபவை. வந்து வந்து செல்லும் அல்லது சென்று சென்று வரும். எப்படி இருந்தாலும் அதன் பெயர் அலைதான். காலுக்கு மிக அருகில் வந்துவிட்டு முத்தமிடாமல் திரும்பிச்செல்கிறது அலை. இன்றைக்கு காலையில்தான் முதன் முதலில் சென்னைக்கு வந்தேன். விடியற்காலையில். அலுவலக வேலையாக. ஓட்டலில் ரூம் போட்டு விட்டு நேராக பீச்சுக்கு ஓடோடி போனேன். கடற்கரை முதன்முதலில் பார்க்க படு ரம்மியமாக இருக்க மிக மிக சீரியஸான இந்த கதையை எழுத ஆரம்பித்தேன்...

’’தம்பீ.. வணக்கம்’’ யாரோ ஒருவன் என் அருகில் வந்து கூப்பிடுகிறான்? றார்?. பார்க்க பரதேசி போலொரு தோற்றம். கரைபடிந்த பற்கள் , ஆனால் பேண்ட்டும் சர்ட்டும் புதிதாகத்தான் இருந்தது. முகம் மட்டும்தான் அழுக்காய் இருக்கிறது. பேசும்போது குடலை பிடுங்கும் நாற்றம். கஞ்சா அல்லது மாவாவாக இருக்க வேண்டும்.

’’தம்பீ..’’ மீண்டும் அதே கறைபற்கள். ஏதோ யோசனையில் அவனை கவனிக்கவில்லை. மீண்டும் அழைத்ததும் ‘’சொல்லுங்க சார்..’’ ,

‘’உங்களை எங்கயோ பார்த்திருக்கேனே.. நீங்க கூல் ஜெயந்த் டீம்லதான வேலை பாக்கறீங்க.. ‘’

’’கூல் ஜெய்ந்தா? சார் எனக்கு சின்னி ஜெயந்த்தான் தெரியும்!’’ திருதிருவென புரையோடியிருந்த கண்களோடு முழித்தேன்.

‘’உங்கள ரெண்டு நாள் முன்ன ரவி சார் சூட்டிங்ல பார்த்தேனே!’’ மீண்டும் ஒரு குண்டு. அவன் வாயில் குண்டு போட போட எனக்கு......
நேற்றைக்கு இரவுதான் சென்னைக்கே வந்த என்னை இரண்டு நாள் முன்னமே பார்த்ததாய்.. போகட்டும் என தொடர்ந்தேன்

‘’சரி விடுங்க.. உங்கள பார்த்தா நல்லா டிப்டாப்பா காலேஜ் ஸ்டூடன்டாட்டமா இருக்கீங்க.. இங்க என்ன பண்றீங்க!’’ போருக்கு பிறந்தவன் போல விடாமல் குண்டு போட்டுக்கொண்டே இருந்தான்.

அலை இன்னும் விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் சூரியன் மெதுவாக மேலெழுந்து உதிக்க துவங்கியிருந்தது. தூரத்தில் கரையோரம் யாரோ மலம் கழித்துக்கொண்டிருந்தான். அவனை பார்க்காதது போல அமர்ந்து கொண்டேன். கரைப்பற்கள் தொடர்ந்து பேசியது. ‘’தம்பீ சினிமால நடிக்கிறீங்களா? ‘’
அதிர்ச்சி!

...
...

...

இந்த கதையை போல நானும் ஃப்ரீஸ் ஆகி போயிருந்தேன். அடப்பாவிகளா நான் சென்னைக்கு வந்து மூணு மணிநேரங்கூட ஆகல அதுக்குள்ள சினிமா சான்ஸா!. ‘’வேண்டாம் சார்.. பொழப்புக்காக வந்திருக்கேன்! சரிப்பட்டு வராது’’ மறுத்தேன். லேசாக அடிவயிற்றில் கசமுசா!

‘’தம்பி பாக்க சினிமா ஸ்டார் மாதிரி சும்மா அழகா இருக்கீங்க.. நாளைக்கு ஜெமினில ஒரு தெலுங்குபட ஷூட்டிங் வரீங்களா.. காலேஜ்ல படிக்கற மாதிரிதான்.. நீங்க எதுவும் பண்ண வேணாம். சும்மா அப்படியே நடந்து போற மாதிரிதான் சீனு..’’ கடகடவென ஏதேதோ பேசினான்..னார்!

‘’இல்லைங்க வேணாங்க.. வேலை கெட்டுரும்..அப்புறம் சினிமாலாம் நடிக்கற ஐடியா இல்ல’’ என பிகு பண்ணினேன். பிகு என்கிற வார்த்தைக்கு பொருள் அப்போதுதான் புரிந்தது.

‘’தம்பி நீங்க மட்டும் சினிமால நடிங்க, பெரிய ஸ்டாரா வருவீங்க.. நம்புங்க’’ அடடா இவன் தொல்லை தாங்க முடியலையே என நினைத்தேன். ‘’சார் நான் கிளம்புறேன் நேரமாச்சு’’ என எழுந்திருக்க , என் கையைபிடித்து இழுத்து ‘’தம்பி உக்காருங்க ஒரு நிமிஷம்...’’ என்றான்.

‘’சார் , நீங்க யாரு, ஏன் காலைல நேரத்துல கக்கூஸ் கூட போக வுடாம இப்படி டார்ச்சர குடுக்கறீங்க’’ என கோபமாய் பேசினேன்.

‘’தம்பி நான் கோயம்பத்தூரு. இருபத்தாறு வருஷத்துக்கு முன்னால..’’

‘’யோவ் நிறுத்துய்யா போதும் உங்கதை .. நீ ஹீரோவாகனும்னு டிரை பண்ணி.. மாமா வேலை பாத்து , வயிசாயி குடும்பத்த வுட்டுட்டு கஞ்சா அடிச்சு.. இப்படி ஆயிட்ட அதான உன் கதை.. யோவ் எனக்கு பாத்ரூம் போகணும்யா வுடுயா..’’ என அடுக்கடுக்காய் நான் பேச அந்த ஆள் மண்டைய மண்டையை நன்றாக ஆட்டினார். அப்போதே சுதாரித்து ஓடியிருக்க வேண்டும்.

‘’ஆமா தம்பி ஆமா அதான் என் கதை!’’ கண்கள் அகல நான் சொன்னதை ஆமோதித்தார். லேசாக கண்கள் கலங்கியிருந்தது. அவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும். எனக்கு ஆய் முட்டிக்கொண்டிருந்தது. சோக கதை கேட்கும் நேரமா இது. ஏழு மணிக்கு இழவெடுத்த அடிவயிற்றில் அலாரம் அடித்துவிடும். வாட்சை பார்த்தேன் மணி ஏழுதான்.

‘’யோவ் ஏன்யா என்ன படுத்தற.. என்ன வுடுயா நான் பாத்ரூம் போகணும்’’ கெஞ்சிக்கொஞ்சினேன்.

‘’தம்பி.. நீங்க சினிமா சான்ஸ்தான் வேண்டானுட்டீங்க.. நைட்டு தண்ணி அடிச்சுட்டு பர்ஸ தொலைச்சிட்டேன் ஒரு அம்பது ரூவா இருக்குமா! ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிருவேன்’’ என்று சொல்ல சொல்ல எனக்கு முட்டி முட்டி...

‘’யோவ் மயிராண்டி இத முதல்லயே சொல்லித்தொலைச்சிருக்க வேண்டியதுதான.. இந்த புடியா’’ என பாக்கட்டில் எத்தனை ரூபாய் தாள் என்பதைக்கூட பார்க்காமல் ஓடத்துவங்கினேன்.

அலை புரண்டு ஓடிவந்து மீண்டும் திரும்பி ஓடியது. அலைகள் மட்டும் எப்போதும் இப்படித்தான் முன்னாலிருந்து பின்னால் போகிறதா பின்னாலிருந்து முன்னே வருகிறதா என்பதில் எப்போதும் குழப்பம்தான். ஆனால் வந்து வந்து செல்லும் அல்லது சென்று சென்று வரும். எப்படி இருந்தாலும் அதன் பெயர் அலைதான் ...