Pages

05 June 2010

வெள்ளிங்கிரி - 2


காந்திபுரம் பஸ் ஸ்டான்டிலிருந்து பூண்டிக்கு பேருந்து. அங்கேயிருந்து மட்டும்தான் பஸ். அல்லது பேரூரிலிருந்தும்.. ஆனால் பஸ் காந்திரபுரத்திலிருந்துதான் கிளம்பி வரும். கூட்டம் நிரம்பி வழியும்.

கோடை விடுமுறைக்காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பு பேருந்துகள் இயங்கும். பஸ்ஸில் வெள்ளிங்கிரி என்று எழுதப்பட்டிருக்காது. பூண்டி திருவிழா சிறப்புப் பேருந்து என்றே எழுதப்பட்டிருக்கும். இரவுகளில் பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் மலையேறி மாவீரர்கள் கையில் கம்போடு முதுகில் ஸ்டைலான பேக்பேக் போட்டுக்கொண்டு இடித்துக்கொண்டும் உரசிக்கொண்டும் நிற்பார்கள். எரிச்சலூட்டும். கம்பு இடிக்கும். ஷு போட்டவர்களாக இருந்தால் , செறுப்பில்லாத எங்கள் கால்கள் பஞ்சர்தான். பகலில் செல்வது உடலுக்கு நல்லது. அதிக கூட்டமிருக்காது, இருந்தாலும் பெண்கள்தான்!. இருப்பதிலேயே டப்பாவான வண்டிகளைத்தான் போக்குவரத்துக்கழகங்கள் வெள்ளிங்கிரிக்கு அனுமதிப்பார்கள் போல.. லொடபொட லொடபொட என்று பொறுமையாகத்தான் வண்டிகள் நகரும்.

ஒருமுறை பூண்டிக்கு மிகமிக அருகில் பஸ் தடாலடியாக நின்றுபோனது. இளவட்டங்கள் ஆய்ஊய் என சத்தமிட என்னடா பிரச்சனை என்று ஜன்னல் வழியாக தலைநீட்டினேன். ஒரு பெரிய யானை ஒரு சின்ன யானை மீடியம் யானை என நாலைந்து யானைகள் சாலையை கடந்து காட்டுக்குள் செல்கிறது. எல்லாரும் சத்தம் போடாதீங்க என்று சத்தமாக கத்தினார் கடைசி சேரில் அமர்ந்திருந்த கண்டக்டர் என்கிற நடத்துனர். ஆனாலும் ஒரு யானை மட்டும் வரிசையிலிருந்து பிரிந்து எங்கள் பஸ்ஸை பார்த்து முறைத்தது. உடனே சிலர் விசிலடித்து ஓய் ஏய் என்று சவுண்டுவிட எங்களுக்கு உடலெல்லாம் நடுக்கம். பஸ்ஸே நடுங்கியது. கவிழ்த்துப்போட்டுவிடுமோ என்கிற அச்சம். இறங்கி ஓடவும் முடியாது , நடுவில் நங்கென்று கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்தேன். யானைக்கு அன்று பஸ்ஸை கவிழ்க்கும் மூடில்லை போல திரும்பி தன் க்யூவில் ஒட்டிக்கொண்டது. அப்போதெல்லாம் செல்போன்களோ கேமராவோ கிடையாது , அதை வீடியோவாக எடுத்திருந்தால் டிஸ்கவரிக்கோ நேஷனல் ஜியாகரபிக்கோ விற்று நல்ல ரேட்டுக்கு விற்றிருக்கலாம். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் ரேடியாதான்.

எத்தனை பேருந்துகள் போனாலும் நாங்கள் சைக்கிளில்தான் செல்வோம். பஸ்ஸுக்கு காசிருக்காது. போகவர கைசெலவுக்கே அவனவன் மூஞ்சியை முகத்தையும் காட்டுவனுங்க! 50 காசிருந்தால் காற்றடித்துக்கொண்டு அப்பா அண்ணன் மாமா மச்சான் சைக்கிள்களை ஒரு நாள் லவட்டிக்கொண்டு கிளம்புவோம். இரட்டையாக செல்ல முடியாது. அதனால் ஆளுக்கொரு சைக்கிள். மூச்சு வாங்கும் போதெல்லாம் பேரூரிலும் போகும் வழியில் எங்காவது பெட்டிக்கடைகளை கண்டால் நிறுத்தி புகைப்போம். கட் ஆஃப்! நான்கு பேருக்கு ஒரு சிகரட். புகைப்பிடித்தால் சைக்கிள் ஓட்ட முடியாது, ஓடமுடியாது மூச்சிறைக்கும் என்று சொல்லுவார்கள் , அப்போது அப்படி எதுவும் இறைக்கவில்லை. இப்போதெல்லாம் பைக் ஓட்டினாலே மூச்சிறைக்கிறது. (மக்கள் நலனுக்காக – புகைபிடிப்பது உடல்நலனுக்கு கேடு)

சிறுவாணி ரோட்டில் சைக்கிள் ஓட்டுவதே அலாதியானது. இரண்டு பக்கமும் வயல்கள் , தூரத்தில் நம்மோடு பின்சீட்டிலும் முன்னாலும் பயணிக்கும் பெரிய மலைகள் , மலைகளுக்கு மேல் நகரும் மேகம்.. அதை மிஸ்ட் என்று கோவைக்காரர்கள் சொல்வதுண்டு. மிஸ்ட் எங்களுக்கெல்லாம் பெரிய மிஸ்டிரிதான். மிஸ்ட் குறித்து நிறைய கதைகள் சொல்வதுண்டு. வெள்ளிங்கிரியின் ஏழாவது மலை மேல் தங்கும் போது பாறைகளுக்கு நடுவில் இருப்பதுதான் பாதுகாப்பாம். பாறைகளின் மேல் சுற்றினால் பரலோகம்தான். மிஸ்ட் என்னும் மேக கூட்டம் அப்படியே நகர்ந்து வரும்போது நடுவில் நாமிருந்தால் விரைத்து செத்துவிடுவோமாம். அதுபோல ஏழாவது மலையேறி காலையில் சூரிய உதயம் பார்க்க காத்திருந்து , மிஸ்ட் அடித்து மரணித்தவர்கள் நிறையபேராம்.. கோவையில் யாரைக்கேட்டாலும் இந்த மிஸ்ட்(ரி) கதைகள் சொல்வதுண்டு. எங்களுக்கு அதில் நம்பிக்கை இருந்ததில்லை. நம்பவும் பிடிக்கவில்லை எங்களுக்கு அந்த மிஸ்டை பார்க்கும் ஆர்வமும் குறையிவில்லை. தூரத்தில் மலைமேல் தெரியும் மிஸ்டை பார்த்தபடியே சைக்கிளை மிதிப்போம்!