Pages

08 June 2010

டிகிரி காப்பியுடன் ஒரு வாசிப்பனுபவம்!ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரிய சோம்பல்களைத் தவிர்த்து.. கடந்த ஞாயிறன்று இந்திரா பார்த்தசாரதி சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு சென்றுவிட்டு வந்தேன். ஒருவருக்கு ஒரு டிக்கட் என்னும் அடிப்படையில் தொகுப்பு மிகமிக மலிவு விலையில் (600ரூ புக் வெறும் 150 ) வழங்கப்பட்டது. நான் அங்கே செல்ல மிகமுக்கிய காரணமும் அதுதான். காலை 8.30க்கு விழா தொடங்கும் , டிபன் இலவசம் என்று கிழக்குப்பதிப்பகம் பத்ரி எழுதியிருந்தார். அதனால் அவசரமாக காலையில் பெய்த லேசான மழையையும் பொருட்படுத்தாமல் ஒரளவு வேகமாக காலையிலேயே புறப்பட்டுவிட்டேன்.

விழாவிற்காக மாமாக்களும் மாமிகளும் பெருமளவில் குவிந்திருந்தனர். மியூசிக் அகாடமியில் மார்கழி இசைவிழாவுக்குள் நுழைந்தது போன்றிருந்தது. அரக்க பரக்க உள்ளே சென்று தேடினேன். யாரும் நாதஸ்வரமோ தவிலோ தம்புராவோ வாசிக்கவில்லை. ஆனால் மேடையில் வரிசையாக பல சேர்கள் இருந்தது. கூட்டம் தொடங்கவில்லை. அரங்கத்தில் யாருமில்லை. மேடையிலிருந்த சேர்களை வைத்து 11 மணிவரைக்கும் பலரது ததரீனாக்களை அனுபவிக்க வேண்டும் என்பதுமட்டும் புரிந்தது. நகர்ந்தேன். நரைத்த தலை மாமா ஒருவர் சாப்பாடு மேலே என்றார்.

காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. எல்லாமே நான் வெறுக்கும் வெஜ் சமாச்சாரங்கள். ஒரே இட்லி பொங்கல் கேசரி டிகிரி காப்பி என! ஒவ்வாதவைகள் நிரம்பி இருந்தன. இருந்தாலும் ருசி அறியாத பசியால் கொஞ்சூண்டு தின்றேன். இபாவின் எழுத்துகளை இதற்கு முன் நான் படித்ததில்லை. வாய்ப்புக்கிடைக்கவில்லை. இது மாதிரி மலிவு விலையில் கிடைக்கிறதென்றால் விடமுடியுமா? மலிவு விலை குறித்து அறிந்த வெளியூர் நண்பர்கள் எனக்கொன்னு எனக்கொன்னு என முண்டியடித்துக்கொண்டு போனிலும் மின்னஞ்சலிலும் சாட்டிலும் என்னிடம் ரிசர்வ் செய்து வைத்திருந்தனர். அதனால் முன்னேற்பாடாக கொஞ்சம் பணம் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் ஒருவருக்கு ஒரு புத்தகம்தான் என்று கராராக சொல்லிவிட்டனர். எனக்கு மட்டும் ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சினிமா நடிகர் சிவக்குமார் வந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச்சொல்லி மனைவி கொடுத்தனுப்பிய நோட்டை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்திருந்தேன். அதனால் சிவகுமாரைப் பார்க்கும் போதெல்லாம் மனைவியின் கோபமுகம் மனக்கண்ணில் வந்து வந்து போனது. இபாவின் கதையொன்றை சினிமாவாக மாற்றிய போது அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின் அவருடைய கம்பராமாயண பிரசங்கம் குறித்து சிலாகித்து அவரே பேசினார். நான் எதேச்சையாக கடந்த இரண்டு வாரங்களாக அண்ணாவின் கம்பரசம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இபா வின் சிறுகதைகள் சில மேடையில் மிக அருமையாக கூறப்பட்டது. சுஜாதா விஜயராகவன் என்பவர் நாயகன் என்னும் இபாவின் கதையை மிகமிக அருமையாக உரைத்தார். வீட்டிற்குப்போய் கதையை படித்தேன்.. படிப்பதைக்காட்டிலும் அவர் கூறிய விதம் இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. அதே போல திருப்பூர் கிருஷ்ணன் பசிபதிபாசம் என்னும் கதையை கூறினார். நல்ல வாய்ஸ் மாடுலேசன். மைலாப்பூரின் ஏதாவது ஒரு பிராமணாள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டது போல் இருந்தது. நல்ல குரல் , ஏற்ற இறக்கம். சிறந்த கதை சொல்லி. ஆடியோ புத்தகமாக பேச சிறந்த ஆள்!

அனைவரும் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு புத்தகத்தை வாங்கினர். பின் இபராவிடம் கையொப்பமும் சேர்த்து. எனக்கு ஒரு தொகுப்பும் இபாவிடம் கையொப்பமும் கிடைத்தது. இறுதியில் மீண்டும் பளபள டவராவில் சுடச்சுட காபி தரப்பட்டது. சர்க்கரை இல்லை. அல்லது கம்மி! வலைப்பதிவர்கள் சிலர் வந்திருந்தனர். இபாவின் சிறுகதைகளை மொத்தமாக படிக்க ஆர்வமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரே மூச்சில் 20 சிறுகதைகளை படித்து முடித்தேன். அவருடைய சிறுகதைகள் மற்றும் இந்த தொகுப்பு குறித்த விமர்சனம் தனியாக.. கூட்டத்தின் முடிவில் சிலருக்கான இலக்கியத்தை பிரத்யேகமாக படைக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இபா மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்தால் ஏன் அவருடைய புத்தகத்தை மலிவுவிலையில் வாங்கவேண்டும்..? சிறந்த எழுத்தாளனாக மதிக்கும் ஒருவருடைய புத்தகத்தைக்கூட மலிவு விலையில்தான் வாங்க வேண்டுமா? ஏழைகள் மலிவுவிலையில் வாங்கிப்படிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலும் காரிலேயே வந்திருந்தனர்.

என் வலைப்பதிவையும் மதித்து படிக்கும் ஒரு சிலரை அந்தக் கூட்டத்திலும் சந்திக்க முடிந்தது.ஏதோ மனவருத்ததுடன் நீங்கதான் அதிஷாவா என்றனர் என்ன பிரச்சனையோ!