Pages

11 June 2013

தட்டு கட





கோவை சென்றிருந்தபோது ஏகப்பட்ட சாலையோர தள்ளுவண்டி உணவங்களை பார்க்க முடிந்தது. இவை சென்னையில் மிக மிக சகஜம். எங்கும் வியாபித்திருக்கும். மீன்,போட்டிகறி எல்லாம் கிடைக்கும். எர்ணாகுளத்தில் தட்டுகடைகள்தான் சாப்பிட சிறந்த இடங்கள். அங்கே கிடைக்கிற பீஃப் ஃப்ரைக்கு இணையான ஒன்றை ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் ருசிக்க முடியாது. ஆனால் கோவையில் இதுபோன்ற கடைகளை அதிகமாக பார்த்ததில்லை. இந்த முறை சென்றிருந்தபோது எங்கு பார்த்தாலும் காளான்களைப்போல ஏகப்பட்ட கடைகள் முளைத்திருந்தன.

சாலையோர கடைகள் எல்லாமே வீட்டுசமையல் என்கிற பெயரிலும் மகளிர் சுய உதவிக்குழு பெயர்களிலும் இயங்கி வருகின்றன. சாம்பார் சாதம், தயிர்சாதம் என வெரைட்டி ரைஸ்கள் தொடங்கி உக்கடம் பக்கத்திலும் மரக்கடை ஏரியாவில் பீஃப் பிரியாணி கடைகள் சிலவற்றை பார்க்க முடிந்தது.

எல்லாமே தெருவோர வண்டிகடைகள்தான். இதில் மகளிர் சுய உதவிக்குழு கடைகள் ஆட்டோ டெம்போவில் இயங்குகின்றன. இவற்றில் எவ்வளவு கடைகள் நிஜமாகவே சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படுகின்றன என்பது தெரியவிலை. ஆனால் எல்லா கடைகளுமே நன்றாக கல்லா கட்டுகின்றன என்பதை மட்டும் அவர்களுடனான ஒரு எலுமிச்சை சாத உரையாடலில் தெரிந்து கொள்ள முடிந்தது.

பொள்ளாச்சி சாலையில் இதுபோன்ற கடைகள் ஒரு இருபதையாவது கடந்து செல்லவேண்டியதாயிருந்தது. எல்லா கடைகளிலும் நல்ல கூட்டம். மரக்கடை ஏரியாவிலும் நிறையவே பிரியாணிக்கடைகள் பூத்திருந்தன.

பத்தாண்டுகளுக்கு முன்பு கோவையில் இப்படிப்பட்ட உணவகங்கள் பத்துகூட இருக்காது. பானிபூரி கடைகள்தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும். காளான் மஞ்சூரி என்கிற ஒரு வஸ்து இங்கே பிரபலம். சவசவ வென்று அதில் சன்னாவை ஊற்றி ஊற்றி சாப்பிடுபவர்களை பார்க்கலாம். சாலையோர உணவென்பது இதுபோன்ற சிற்றுண்டிகளுக்கு மட்டும்தான் என்பதே கோவையின் கலாச்சாராம்.

மதிய உணவென்பது வீட்டிலிருந்து கொண்டு செல்கிற தூக்குபோசியில்தான்!கிட்டத்தட்ட எல்லோருக்குமே! காலை டிபன் வெளியே சாப்பிடுவதாக இருந்தாலும் கூட நடுத்தரவர்க்க மக்கள் ஏரியாவில் தெருவோரம் வீட்டுவாசலில் அடுப்பு வைத்து ஆப்பம் சுடுகிற ஆயா கடையிலோதான் போஜனம் நடக்கும்.

கொஞ்சம் பணக்காரராக இருந்தால் அன்னபூர்ணாவே கதி. நான்வெஜ் என்றால் அங்கண்ணன். சாலையோர கடைகளில் சாப்பிடுவதை கௌரவக்குறைவாக நினைக்கிற மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ''என்னது சென்னைல ரோட்டுகடைல சாப்பிடறீயா.. என்னய்யா அங்க போய் நீ ஏதோ நல்லாருக்கேனு நினைச்சா'' என்று புலம்பியவர்கள் உண்டு. சொந்தக்காரர்கள் கண்களில் சிக்கிக்கொண்டால் அவமானமா போய்டும்ப்பா என நினைத்து தயங்கியவர்களும் உண்டு. அதோடு சாலையோர கடைகளில் சாப்பிடுவது வயிற்றுக்கோளாறுகளையும் நோய்களையும் உண்டாக்கும் என அஞ்சியே கோவையில் இக்கடைகளுக்கான சந்தை திறக்கப்படாமலேயே கிடந்தது.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக... எங்குபார்த்தாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் சாலையோர கடைகளில் மதிய உணவு சாப்பிடுவதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. ஊர் முழுக்க ஹோட்டல்கள் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது. அதற்கு இணையாக இந்த தட்டுகடைகளும் வளர்ந்துள்ளன.

இதற்கு முக்கியகாரணமாக கருதுவது பிழைப்பு தேடி வந்திறங்கியிருக்கிற கணிசமான வெளியூர்காரர்களின் வரவு. சென்னையில் சாலையோர கடைகளில் சாப்பிடுபவர்களில் 90 சதவீதம் பேர் பிழைப்புக்காக ஊரிலிருந்து வந்திருக்கிற வெளியூர்காரர்கள்தான். ரோட்டோர கடைகளில் சாப்பிடுகிற உள்ளூர் காரரை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. சென்னை மட்டுமல்லாது மும்பை,பெங்களூரு போன்ற வளர்ந்த நகரங்களிலும் இந்த கலாச்சாரம் பெருமளவில் பார்க்க முடியும். அதுஇப்போதுதான் கோவை வரைக்கும் பரவியிருக்கிறது. வெளியூரிலிருந்து வந்து வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கோவையில் வட இந்தியாவிலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் சாதாரண வேலைகள் பார்க்க மக்கள் தினந்தோறும் கணிசமாக வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் எதையும் சாப்பிட்டு வேலை பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். சாலையோர கடைகள் இந்த எளிய மனிதர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. கோவையில் புற்றீசல் போல பரவியிருக்கும் இந்த தட்டுகடைகளுக்கு அவர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சிலமணிநேர கவனிப்பில் புரிந்தது.

கொஞ்ச கொஞ்சமாக சென்னையைப்போல வெளியூர்க்காரர்களின் நகரமாக அவர்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது கோவை. அதன் ஒரு பருக்கைதான் இந்த தட்டுக்கடைகள் என்று அவதானிக்கிறேன்.