Pages

19 June 2013

ப்யூஸ் மனுஷ் மற்றும் சில ஏரிகள்




சில மாதங்களுக்கு முன் ப்யூஸ் மனுஷ் என்பவரை பேட்டிகாண சேலம் சென்றிருந்தேன். சமூக ஆர்வலரான ப்யூஸ் மனுஷ் சத்தமில்லாமல் சேலத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஒரு பெரிய மக்கள்புரட்சியை மேற்கொண்டிருக்கிறார். ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்பது, மெகா குப்பைத்தொட்டிகளாக மாறிவிட்ட நீர்நிலைகளை காப்பது, தூர்வாருவது எனத்தொடங்கி பல்வேறு சுற்றுசூழல் களப்பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். அதை ஒற்றை ஆளாக செய்யாமல் தன்னை சுற்றியுள்ள சாதாரண மக்களை கொண்டே செய்கிறார்.

அவருடைய சேலம் சிட்டிஸன்ஸ் பாரம் ஃபேஸ்புக்கிலும் கூட இயங்கி வருகிறது. அவருடைய முயற்சியால் வரண்டுபோய் குப்பைகள் குவிந்து கிடந்த ஒரு ஏரி இன்று குட்டி வேடந்தாங்கலாக பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக சுத்தமான ஏரியாக மாறியிருக்கிறது.

மூக்கணேரி என்கிற ஏரியை மக்களை பயன்படுத்தி சுத்தம் செய்ததோடு, அதன் நடுவே சிறிய தீவுபோன்ற மேடுகளை உருவாக்கி அதில் பல்வேறு விதமான மரங்களை நட்டும் வளர்த்தும் பரமாரித்தும் வருகிறார். இதன்மூலமாக நிறைய பறவைகள் இங்கே வருகின்றன. அதோடு அந்த ரம்மியமான சூழலை மாசுபடுத்த யாருக்குமே மனசு வராது. 58 ஏக்கர்கள் கொண்ட அந்த ஏரியில் இன்று 12ஆயிரம் மரங்கள் இருக்கிறது என்று சொன்னால் யாராலும் நம்பவே முடியாது! சேலம் பக்கமாக சென்றால் ஒரு விசிட் அடித்து ஏரியை சுற்றிப்பாருங்கள்... பியூஷ் மனுஷ் என்கிற ஒற்றைமனிதனின் மாபெரும் முயற்சியின் பலனை அறியலாம்.

இந்த ஏரியின் பலனால் கணிசமாக நிலத்தடி நீரின் அளவும் அதிகரித்திருப்பதாக சமீபத்திய பேட்டியொன்றில் ப்யூஸ் கூறியுள்ளார். சேலம் மக்கள் விடாமல் ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய ஞாயிற்றுக்கிழமைகளை தியாகம் பண்ணி உழைத்ததால் கிடைத்த வெற்றி இது. ஒரிருவர் அல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள். ஆச்சர்யமாக இருக்கிறதில்லையா?

மூக்கனேரியோடு இந்த சேலம் இளைஞர்கள் திருபதியடைந்துவிடவில்லை. அடுத்ததாக மேலும் சேலத்தில் இருக்கிற நான்கு ஏரிகளை புணரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். குண்டக்கல் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி, அம்மாபேட்டை ஏரி என பெரிய பட்டியலும் மனதுமுழுக்க ஆர்வமுமாக சேலம் மக்கள் துடிப்போடு இருக்கிறார்.

ப்யூஸோடு இதைப்பற்றி நிறையவே பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு பொறாமையாக இருந்தது. இன்று கோவையில் உக்கடம் பேருந்துநிலையம் இருந்த இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஏரி இருந்தது. அந்த ஏரியின் மீதுதான் அந்த பேருந்துநிலையம் நிற்கிறது. அதோடு அருகேயிருக்கிற பஸ்டிப்போ, அதற்கடுத்த மின்சார வாரிய கட்டிடம் என அரசு ஆக்கிரமிப்பால் கண்முன்னே காணாமல் போன ஒரு ஏரி!

உக்கடம் பேருந்துநிலையத்தின் இரண்டுபக்கமும் வேறு இரண்டு ஏரிகள் இப்போதும் உள்ளன. ஒன்று சின்னக்குளம் இன்னொன்று பெரியகுளம். இரண்டுமே எப்போதும் வற்றாமல் மிகப்பெரிய கடலைப்போல பரந்தும் விரிந்தும் கிடப்பதை கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் சில ஆண்டுகளாக அந்த ஏரிகள் போதிய பராமரிப்பின்றி குப்பைகள் கொட்டுகிற (குறிப்பாக காய்கறி குப்பைகளும், இறைச்சி கழிவுகளும், மருத்துவகழிவுகளும் கொட்டுகிற ஆபத்தான இடமாக மாறிவிட்டன). சீக்கிரமே இதுவும் கூட அபார்ட்மென்டுகளாகவோ வேறு கட்டிடங்களாகவோ ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்துபோகிற சகல வாய்ப்புகளோடுதான் இருந்தன.

கோவையின் நிலத்தடிநீரை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றிவந்த இந்த இரண்டு ஏரிகளும் எந்த நேரத்திலும் மாயமாய் மறைந்துபோகலாம் என்று பேசப்பட்டது. கூடவே உக்கடத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் பாதாளத்துக்கு செல்ல ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் அப்பகுதியை கடந்து செல்லும்போதும் அதன் நிலைமையை கண்டு மனது பதைபதைக்கும்.

என்னுடைய பள்ளிகாலத்தில் கோடை விடுமுறையில் அந்த ஏரிதான் எங்களுக்கு ஷார்ஜா. பாதி ஏரிதான் நிரம்பியிருக்கும் மீதியில் காய்ந்துபோய் மைதானமாக கிடக்கும். அங்குதான் கிரிக்கெட் ஆடுவோம். ஏரிக்குள் பல்வேறு கருவேலமரங்களில் நிறையவே பறவைகள் கூடுகட்டியிருக்கும். பல்வேறு மரங்களும் நிறைந்திருக்கும் அது மிகவும் ரம்மியமான இடம். அப்போது ஆய்போவதைத்தவிர வேறு அசுத்தங்கள் அங்கே இருந்ததில்லை. நாங்கள் அடிக்கடி ஆய்போகிற இடம்தான் அது. அதுகூட மண்ணுக்கு உரமாவதாகவே நினைப்போம்.

உக்கடத்திலிருந்து சைக்கிளில் செல்வபுரம் செல்ல எங்களுடைய குறுக்குவழியும் இந்த பெரியகுளத்தை ஒட்டியுள்ள சாலைதான். ஒருபக்கம் ஏரி நீண்டுகொண்டே செல்ல ஒருபக்கம் ஊர் நீள.. கோட்டைமேட்டு பையன்களின் ஈசிஆர் ரோடு கூட அதுதான்.

அப்படிப்பட்ட பிரமாண்ட ஏரிகள் இரண்டும் குப்பைமேடாகி, ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டு, வீச்சமடிக்கிற இடமாக மாறிப்போனதை யாராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. ப்யூஸ் மனுஷின் மூக்கணேரியை பார்க்கையில் எனக்கு இயல்பாகவே பொறாமையும் நம்ம ஏரிக்கும் ஒரு ப்யூஸ் கிடச்சாதான் ஒளிகிடைக்கும் என்றெல்லாம் தோன்றியது. மூக்கணேரி போல உக்கடம் பெரியகுளத்தை கற்பனை பண்ணிப்பார்க்கவே உற்சாகமாக இருந்தது.

சிலவாரங்களுக்கு முன்பு கோவை சென்றிருந்தபோது அப்படியொரு முயற்சியை சிறுதுளி அமைப்பும் மேலும் சில அமைப்புகளும் அமைப்புகள் சாராத கோவை மக்களும் இணைந்து செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டபோது உற்சாகத்துக்கு அளவேயில்லை. மூக்கணேரியை மாதிரியாக கொண்டுதான் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெரியகுளத்தை தூர்வாரி குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் வெறித்தனமாக ஈடுபட்டிருந்தனர். உள்ளூர் வெளியூர் சாதிமதம் வயது வர்க்கம் என எந்த பேதமுமில்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு இப்பணியில் இறங்கியுள்ளதையும் காண மகிழ்ச்சியாக இருந்தது.

குளத்தின் நடுநடுவே சின்ன சின்ன மேடுகளை பார்க்க முடிந்தது. விசாரித்தபோது மூக்கணேரியைப்போலவே இங்கேயும் அதே பாணியில் மரங்கள் வளர்க்க திட்டமிட்டுள்ளதாக நண்பர் தெரிவித்தார். மக்களின் பங்களிப்போடு நடக்கிற எந்த முயற்சியும் தோற்றதில்லை. நிச்சயமாக பெரியகுளம் மீண்டும் தன் பழைய பொலிவை அடையும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. சீக்கிரமே எங்க ஈசிஆர் பழையபடி பச்சைபசேலென பறவைகளின் சொர்க்கமாக மாறிவிடும். தாங்க்யூ கோவை சிட்டிசன்ஸ்.



(படம் - தி ஹிந்து)