Pages

20 June 2008

உண்மையும் ஜோதிடமும்...........?


'' சந்தேகம் காட்டு தீயைப் போன்றது , அதை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் , இல்லையெனில் அது உன்னையும் உன்னை சார்ந்தோரையும் அழித்து விடும் ,

மனைவியை சந்தேகம் கொண்டால் உன் இல்லறம் பாழ் ,
உறவினரை சந்தேகம் கொண்டால் உறவெல்லாம் பாழ்,
வேலையாளை சந்தேகம் கொண்டால் காரியமெல்லாம் பாழ்,
உன் மேல் சந்தேகம் கொண்டால் உன் வாழ்க்கையே பாழ்,
இறைவனை சந்தேகம் கொண்டால் உன் நாடே பாழ் ''

என்று அந்த ஊருக்கு புதிதாக வந்த அந்த சாக்குருகிரிகிரிசுவாமிகள் சொல்லிக் கொண்டிருக்க அவ்வூரின் அரசன் கைகட்டி வாய் மேல் கை வைத்தபடி மண்டையை மாங்கு மாங்கு என ஆட்டிக்கொண்டிருந்தான். பக்கத்தில் இளவரசியார் தன் தந்தையின் செயலை நொந்த படி முறைத்துக் கொண்டிருந்தார் .

இதைப்பார்த்து அங்க கூடியிருந்த குடியானவர்களிடம் சலசலப்பு , '' பாரடா நம் அரசனை பைத்தியம் போல அந்த சாமியார் சொலவதற்கெல்லாம் , பகுத்தறிவின்றி தலையாட்டுவதை'' என அந்த ஊரில் புதிதாக முளைத்திருந்த சில பகுத்தறிவு இளைஞர்கள் .

'' கயலு அங்க பாருடி நம்ம மன்னரே வணங்கறார்னா சாமி பெரிய ஆளா இருக்கும்டி , அவரு போனதும் , நாமலும் சாமி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிப்போம்டி '' என ஒரு குடியானவனும் , இப்படி பலருக்கும் இதில் பல கருத்து ,

அரசன் என்னவோ விடியற்காலையிலிருந்து புது மணபெண் போல குனிந்த தலை நிமிராதுதான் அந்த சாமியார் அருகிலேயே நின்று கொண்டிருந்தான் . அங்கிருக்க இருக்க இளவரசிக்கோ கோபம் அதிகரித்தபடி இருந்தது . ஒரு வழியாக சாமியார் தன் காலையிலிருந்து சொல்லிக்கொண்டிருந்த சிறிய உரையை முடித்துக்கொண்டார் .

உடனடியாக இளவரசி கோபமாக அந்த மண்டபத்தைவிட்டு வெளியேற , அரசன் சாமியாருக்கு பொன்னாபரணங்களையும்,வைர,வைடூரியங்களையும் பரிசளித்தான் . சாமிகள் முதலில் மறுத்தாலும் பின் வேறு வழியின்றி வாங்கிக் கொண்டார் . அவருக்கு ஆசிரமம் அமைக்க நிலமும் வழங்கினான் . சாமியாரும் எதைக்கொடுத்தாலும் சிரித்த முகம் மாறாமல் பெற்றுக் கொண்டார் .

அரசன் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புகையில் முன்னிரவாகியிருந்தது , அரண்மனையை அடைந்ததும் நேராக இளவரசியின் அறைக்கு விரைந்தார் .

'' ஏனம்மா சீக்கிரமே திரும்பிவிட்டாய் , சுவாமிகளுக்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டதடா கண்ணே , ''

''தந்தையே எனக்கு அந்த சாமியாரை பிடிக்கவேயில்லை , அவர் பார்வையே சரியில்லை , கண்ணாலேயே என் கற்பே சூறையாடிவிடுவார் போல... நீங்கள் வேறு அவர் கூறுவதற்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டு , எனக்கு வர வர இந்த சாமியார்களை பிடிப்பதே இல்லையப்பா , என்னை மன்னித்து விடுங்கள் ''

'' அவர் மிகவும் நல்லவரம்மா அவரை பற்றி இப்படி அவதூறாக பேசாதே கண்ணே ,'' என அரசன் அவளது தலையை தடவியபடி கூற ,

''வேண்டாம் தந்தையே அந்த ஏமாற்றுகாரனை பற்றி இங்கே பேசாதீர்கள் , மீறி பேசுவாதாக இருந்தால் தயை கூர்ந்து இங்கிருந்து போய் விடுங்கள் '' என இளவரசி கூறிய மறுகணம் அரசனுக்கு கோபம் வந்து அவளது கன்னத்தில் ஒங்கி அடித்துவிட்டு அங்கிருந்து படபடவென வெளியேறினான் .

காலை ஆனதும் அரசன் நேராக சாமியாரை சந்தித்தான் . அவரிடம் இரவு நடந்ததை பற்றி விவரிக்க அவர் அவளது ஜாதகத்தில் கோளாரு இருப்பதாகவும் ஒரு நல்ல ஜோதிடரை அருகி பரிகாரம் கேட்குமாரும் அறிவுரை கூறினார் . அரசன் நாட்டின் மிகச்சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து அவளது ஜாதகத்தை ஆராய பணித்தான் . அவர்கள் கூடி இளவரசிக்கு மணமுடித்து வைத்தால் பிரச்ந்தசனை தீருமென்றனர் . அரசனும் சுயம்வரம் ஏற்பாடு செய்தான் .

இளவரசிக்கு இவ்விசயம் தெரிந்தவுடன் நேராக அரசனிடம் சென்றாள் . தனக்கு இப்போது மணமுடிக்க வேண்டாம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்றும் கூற , அரசன் ஜோதிடம் குறித்தும் விளக்கினான் . இளவரசிக்கு திருமணத்தை நிறுத்த என்ன செய்வதுன்று யோசித்தாள் , சட்டென ஒரு யோசனை ,

''தந்தையே நீங்கள் கூறும் ஜோதிடத்தின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை , உங்களால் ஜோதிடம் உண்மையென நீருபித்தால் நான் நீங்கள் யாரை மணமுடிக்க சொன்னாலும் எனக்கு சரி , ஏனென்றால் போன முறை நீங்கள் போருக்கு சென்ற போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என எத்தனை பேர் ஆருடம் கூறினர் , கடைசியில் என்ன ஆயிற்று '' என பேசிக் கொண்டிருக்கையிலேயே அரசனுக்கு போரை நினைவு படுத்தியதனால் ஒரு மாதிரி ஆகிவிட்டது .

'' சரி அம்மா , நீ இந்த போட்டியில் வென்றால் , திருமணத்தை தள்ளி வைக்கின்றேன் , சரியா?''

இதற்கு மேல் அங்கிருந்தால் தன்னை போரைப்பற்றி கூறி அசிங்கப்படுத்தி விடுவாள் என திரும்பி பார்க்காமல் நடக்காலானார் . இளவரசிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை , அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை ஜோதிடம் மீது .

ஊரெங்கும் அறிவிக்கப்பட்டது அரசனின் இந்த போட்டி குறித்து , அரசன் இந்த போட்டியில் ஒரு பிரச்சனையை வைத்திருந்தான் இந்த போட்டியில் வென்றால் பரிசு தோற்றால் தலை மண்ணில் என , இதனால் ஊரின் பெரிய ஜோதிடர்களெல்லாம் போட்டியில் கலந்து கொள்ள முன் வரவில்லை , அரசனுக்கு கவலையாகவும் ஜோதிடம் மீதான நம்பிக்கையும் குறைய ஆரம்பித்தது . இளவரசி மகிழ்ச்சி தாங்காது தன் தோழிகளுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தாள் .

ஒரு மழை வரும் காலை வேளையில் ஏழை ஜோதிடன் ஒருவன் அரசவைக்கு வந்தான் , மழையால் அன்று பணிக்கு பல அலுவலர்களும் வராததால் எளிதாக குறைந்த கையூட்டிலேயே அரசவை வரை வந்துவிட்டான் . அரசன் அவனது வருகையால் பெருமகிழ்ச்சி அடைந்து அவனிடம் போட்டி குறித்த விதிமுறைகளை தானே விளக்கினார் . அவனும் மகிழ்ந்தவானாக அனைவர் முன்னும் நின்று வணங்கி இரண்டு நாட்கள் கழித்து ஜோதிடத்தை பற்றி நிரூபிப்பதாக கூறி விடை பெற்றான் . இளவரசிக்கு இன்னும் நம்பிக்கை குறையவில்லை .

இரண்டு நாள் கடந்தது , அரசன் வருவதற்கு முன்னதாகவே வந்து ஜோதிடன் காத்திருந்தான் , அரசன் வந்ததும் அவலை வணங்கி பேச ஆரம்பித்தான் ,

'' அரசே வணக்கம் , இன்று ஜோதிட சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாள் , இனி வரும் சந்ததியினருக்கு ஜோதிடத்தின் அருமையை புரியவைக்கப் போகும் பொன்னான நாள் ''

இடைமரித்த அரசன் '' அது இருக்கட்டும் ஜோதிட பெருந்தகையே.. விசயத்து வாருங்கள் '' என்று கூற , அவன் மேலும் தொடர்ந்தான்,

''அரசே எனக்கு ஒரு மூட்டை 10000 பொற்காசுகள் தேவை ''

''அடப்பாவி பரிசே 5000 பொற்காசுகள் தானே''

''அது எனக்கில்லை அரசே நம் ஆராய்ச்சிக்கு , நீங்கள் இந்த திடீர் இராஜயோகம் பற்றி கேள்வி பட்டதுண்டா , அதை உங்களுக்கு விளக்க அந்த அளவு பணம் தேவை அரசே , ஏனென்றால் அந்த யோகம் ஒருவனை ஒரே நொடியில் கோடிசுவரணாக்கிவிடும் அரசே , நான் என்ன அதற்க்காக கோடி பொன்னா கேட்டேன் , உங்களால் முடியாதென்றால் நான் கிளம்புகிறேன் அரசே '' என கிளம்ப ,அரசன் '' கொஞ்சம் குறைத்துக்கொள்ளக்கூடாதா ,'' என்று கெஞ்சினான் , ''அதெல்லாம் முடியாதரசே , வேண்டுமானால் 9000 பொன் கொடுங்கள் ''

'' சரி விடு உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் 7000 பொன் கொடுத்து தொலைக்கிறேன் '' என காலில் சாணியை மிதித்தவனை போல முகத்தை வைத்துக்கொண்டு கூறியபடியே , மனதிற்குள் தன் மகளை திட்டிக்கொண்டிருந்தான்.

அரசனையும் இளவரசியையும் அழைத்து கொண்டு நடுக்காட்டிற்கு சென்றான் , '' அரசே இப்போது இந்த பணமூட்டையை இந்த பாதையில் இருக்கும் மரத்தடியில் வைத்து விட்டு நாம் மறைவாக நின்று கவனிப்போம் , நாம் மறைந்திருந்து பார்ப்போம் இதை யார் எடுக்கிறார்களோ அவரது ஜாதகத்தை மற்ற ஜோதிடர்களிடம் கொடுத்து ஆராய்வோம் , அவனுக்கு திடீர் இராஜயோகம் இல்லையெனில் நான் தோற்றதாக ஒப்பு கொள்கிறேன் '' . அரசனும் சரியெனக்கூற அங்கே அந்த மூட்டை வைக்கப்பட்டது ,

அந்த வழியே பத்து பதினைந்து பேர் வந்தும் யாருமே அந்த மூட்டையை கவனிக்கவில்லை ,

அந்த வழியே வந்த ஒரு வயதான நபர் காலில் ஒரு முள் குத்துவிட அந்த மரத்தடியில் ஒதுங்கியவருக்கு அந்த மூட்டை கண்ணில் பட அவர் அதை எடுத்து பிரித்து பார்க்கலானார் , மறைந்திருந்த அரசனும் ஜோதிடரும் வெளியே வந்து அந்த பெரியவரை அழைத்துக்கொண்டு

அரண்மனைக்கு சென்று அவரது ஜாதகத்தை வாங்கி ஆராய்ந்தனர் அவருக்கு இராஜயோகம் இருப்பதாக பல ஊரின் பெரிய ஜோதிடரும் முடிவறிவித்தனர் . இளவரசியால் இதற்கு மேல் என்ன செய்வெதென்று அறியாது கண்கலங்கினாள் . மீண்டும் சுயம்வரம்.................

_____________________________________________________________________________________

இந்த கதையை இப்படியே முடிக்க நினைப்பவர்கள் மேலே தொடர வேண்டாம்

_____________________________________________________________________________________

இதற்கு பிறகு அந்த ஏழை ஜோதிடன் வீட்டிற்கு 5000 பொற்காசுகளுடன் வீட்டிற்கு கிளம்பினான் ,

வீட்டில் மனைவிக்கோ கணவனை நினைத்து பெருமை தாங்கவில்லை ,

''ஏங்க எப்படிங்க பெரிய பெரிய ஜோதிடர்களாலேயே முடியாத விசயத்தை நீங்க சாதிச்சீங்க ''

என கணவனிடம் வினவ அவன்

'' காமாட்ச்சி , அதுல பாரு இந்த ஜோதிடத்தை விளக்கின விசயம் எல்லாமே நான் ஏற்பாடு செஞ்ச நாடகம் , அரசன் கிட்ட 2 நாள் கேட்டேன்ல , அந்த 2 நாளும் , என் நண்பர்கள்கிட்ட சொல்லி அந்த காட்டு வழியா யாரையும் வரவிடாம பண்ணி அந்த மரத்தில் அடையாளம் வைத்து , உன் அப்பாவ விட்டு அந்த வழியா வரவழைச்சு சரியா அந்த இடத்திற்கு வரும் போது கால்ல முள் குத்தின மாதிரி நடிக்க வைச்சு , அதன் பிறகு நம் ஜோதிட சங்கத்தில் உள்ள எல்லாரையும் அழைத்து அரசனின் அகந்தையை பெரிதாக்கி பேசி , அவர்கையும் இந்த திட்டத்தில் துணையாக்கி , கடைசியில் அரசனை ஏமாற்றி பெற்றதடி கண்ணே இவ்வெற்றி , இராஜயோகம் உன் தந்தைக்கல்ல , எனக்கடி , இதோ என் ஜாதகத்தை பார் , ஹாஹாஹாஹாஹா''
என்று கூறி பலமா சிரித்தான் .
_____________________________________________________________________________________

இக்கதையை இப்படியே முடிக்க நினைப்பவர்கள் முடித்துக்கொண்டு தொடர்ந்து படிக்க வேண்டாம்

_____________________________________________________________________________________

தீடிரென வீட்டின் உள்ளே மறைந்திருந்த மன்னனும் காவலாளிகளும் இளவரசியும் வெளியே வந்தனர் . '' இளவரசி நீ கூறியது முற்றிலும் உண்மையம்மா....இந்த ஜோதிடர்களும் ஜோதிடமும் பொய்யம்மா , என்னையே ஏமாற்ற துணிந்த இவனை , கைது செய்து நாளை சூரியன் உதிக்கையில் கழுவிலேற்றுங்கள் ''

என்று ஆணையிட , ஜோதிடன் இழுத்து செல்லப்பட்டான் .
இளவரசி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்.
_____________________________________________________________________________________
இந்த கதையின் முடிவில் இத்தோடு திருப்தி அடையாதவர் மட்டும் மேலே தொடராலாம்....
_____________________________________________________________________________________

கைது செய்யப்பட்ட அன்று இரவு , சிறைச்சாலை . நாட்டில் ஜோதிடம் தடை செய்யப்பட்டு
ஊரில் இருந்த எல்லா ஜோதிடர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் . நம் ஜோதிடனும் அவனது மாமனாரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் .

'' மாமா நான் என் ஜாதகத்த நல்லதான் பார்த்தேன் , எனக்கு இராஜயோகமு இருந்துச்சே , பிறகு எப்படி இந்த மரண யோகம் வந்ததுனு எனக்கு இன்னும் புரியவில்லை மாமா,'' என்று தன் மாமாவிடம் நொந்து கொண்டே தன் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டிருந்தான்.

'' மாப்பிள்ளை , என்னை மன்னித்துவிடுங்கள் , நீங்க என் பொண்ணோட ஜாதகத்த பார்த்தீங்களா?''

'' 2 நாள் முன்னால கூட பார்த்தேனே , அவளுக்கு எந்த குறையிம் இல்லை மாமா ''

''அது அவளோட ஜாதகம் இல்லை மாப்பிள்ளை , அது போலி , அவளோட உண்மையான ஜாதகம் இதுதான்'' என தன் இடுப்பில் சொருகியிருந்த ஓலையை நீட்ட அதை வாங்கி பார்த்த

ஜோதிடன் கொலை வெறியோடு தன் மாமாவின மீது பாய்ந்தான்.
____________________________________________________________________

கதை இத்தோட முடிந்தது . இதுக்கு மேலே தொடர்ந்தால் வாசகர்கள் என்னை கழுவிலேற்றிவடுவார்கள் .
____________________________________________________________________
டிசுகி : மூலக்கதை சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்தது _______________________________