16 July 2008

ஏழைக்கதைகள் ஏழு : கனவுக்கணினி


இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிரினத்திற்கும் ஆசை உண்டு , அது அமீபாவாக இருக்கட்டும் நீலத்திமிங்கலமாகட்டும் , ஏன் அழிந்து போன டைனோசர்களுக்கு கூட ஆசைகள் இருந்திருக்கும் . ஆசைப்பட தகுதி தேவையில்லை . உயிருள்ள எல்லாமே ஆசைப்படலாம் .
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு ஆசை , சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .

நாம் அனுபவிக்கும் பல வசதிகளும் யாரோ ஒருவரின் ஆசையின் வடிவமே , ஆசைகளின் வடிவம் கற்பனை , கற்பனைகளின் வடிவம் கண்டுபிடிப்பு . ஆக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஆசைக்கு அழிக்கும் பலமும் உண்டு . அணுவின் சக்தியை கண்டறிந்தவனின் ஆசை ஆக்கும் ஆற்றாலாய் உருவெடுக்க , அதை அனுபவிப்பன் ஆசை எதையும் அழிக்க முற்பட்டது . ஆசைக்கு எல்லையில்லை , அது சுதந்திரமானது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஒன்றுதான் .

அது கட்டற்றது .

'' முருகேசா , ஐயரு கம்பெனிக்கு டீ குடுக்க போகாம அங்க என்னடா பண்ற !! '' அதட்டினார் டீக்கடை அதிபர் , அவருக்கு வேலையாட்களை அதட்டுவதில் அதி தீவிர ஆசை .

'' தோ!! கிளம்பிட்டேன்ப்பா!!''


கையிலிருந்த தேநீர் அட்டியிலிருந்த எட்டு கோப்பைகளிலிருந்தும் தேநீர் தெரித்து விழ அதை இறுக்கமாய் பிடித்தபடி ஓடி வந்தான் முருகேசன் . அழுக்குக் கால்சட்டை மேலும் கிழிந்தபடி.

'' என்னடா !! சொல்லி வாய மூடல அதுக்குள்ள வந்து நிக்கற '' ,

திருதிருவென விழித்தபடி நின்றான் முருகேசன் , டீமாஸ்டர் வாயை திறந்து எதையோ பேச எத்தனிக்க , முருகேசன் அவரை பார்த்து வேண்டாம் என்பது போல் சைகை செய்ய மர்மமாக சிரித்தபடி தனது தேநீர் தயாரிப்பில் மூழ்கினார் .

அந்த அலுவலகத்தில் மொத்தமாய் பத்து பேர்தான் , எப்போதும் கலகல என ஆர்ப்பாட்டமாக இருக்கும் அந்த அலுவலகத்தில் முருகேசனுக்கு காலை மாலை இரு வேளையும் தேநீர் தருவது மிக பிடித்தமான ஒன்று . எல்லாமே அவளை பார்க்கத்தான் . அவள் அந்த அலுவலுகத்துக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது . அங்கு அவளை போல எட்டு இருந்தாலும் அவனது பார்வை எல்லாம் அவள் மேல்தான் . அந்த அலுவலகத்தில் அவள் மட்டும்தான் கருப்பு . அதுதான் அவனை ஈர்த்திருக்க கூடும் . அவனது ஆசை எல்லாம் அவளருகில் அமர்ந்து ஆசை தீர அவளோடு ஒரு நாள் முழுக்க அவளோடு கழிக்க வேண்டுமென்பதே .

'' சார் , ? ''

மேஜை மேல் டீயை வைத்து விட்டு ஏகாம்பரம் சாரை ஏக்கத்துடன் பார்த்தான் , அவர் கவனிக்கவில்லை , அந்த அலுவலகத்தில் இவனிடம் முகம் கொடுத்து பேசும் ஒரே ஆள் . இவனை பார்க்கையில் தன் பால்யம் ஞாயபகம் வருவதாயும் அவனை அடிக்கடி பள்ளிக்கு சென்று படிக்க சொல்லியும் வற்புறுத்துபவர் .

''சார் ? '' கொஞ்சம் சத்தத்தை கூட்டிப்பார்த்தான் .


''என்னடா !! '' முறைத்தார் .

''நான் கேட்டேனே அது ''

''சனிக்கிழமைனு சொல்லிட்டேன்ல , அப்புறமென்ன !! ''

'' சரிங்க சார் ,'' அங்கிருந்து தன் தேநீர் அட்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப முற்பட்டவன் , சில அடிகள் நகர்ந்து பின் ஒரு முறை அவளை ஏக்கமாக பார்த்துவிட்டு , ஒரு பெரு மூச்சுடன் நகர்ந்தான் .


இன்று வியாழன் , இன்னும் ஒரு நாள்தான் எப்படியாவது வேகமாக இந்த நாற்பத்தி எட்டு மணி நேரமும் கழிந்து விடாதா என ஏங்கினான் . சனிக்கிழமை தன் வெகு நாள் ஆசையை ஏகாம்பரம் சார் நிறைவேற்றி தருவதாக வாக்குருதி அளித்திருந்தார் .

கடைக்குள் நுழைய டீமாஸ்டர் வினவினார் இவன் முகத்தில் தெரித்த புன்னகையில் எல்லாம் புரிந்து போனது , மதியம் காய்ந்து போன தக்காளி சாதம் காயந்தபடி இருக்க இவன் மோட்டுவலையை பார்த்தபடி சோற்றை பிசைந்து கொண்டு அதை பற்றியே கற்பனை செய்து கொண்டிருந்தான்.

அவளை முதல் முறை பார்க்கையில் அவள் என்னவென்றே விளங்கவில்லை . ஆர்வமிகுதியில் யாருமே அவனிடம் பேசாத அந்த அலுவலகத்தில் ஏகாம்பரமிடம் கேட்க அவர் அதன் பெயர் கம்ப்யூட்டர் என்றும் கணக்கு போட வாங்கி இருப்பதாகவும் , அவனும் அதை கற்றுக்கொண்டால் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகலாமெனவும் கூறினார் .

அவளால் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்பதெல்லாம் அவனுக்கு ஆசையில்லை , ஒரு நாள் மட்டும் அக்கணினியிலமர்ந்து அவ்விசைப்பலகையினில் தன் விரல் பட ஒரு நாள் எல்லாம் அப்படியே இருந்துவிட்டு அப்படியே செத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றெண்ணியிருக்கிறான் .

அறிவிற் சிறந்ததாய் இருப்பதால் அதை ஒரு பெண்ணாய் நினைத்தானோ. விந்தைகள் புரிவதால் தேவதையாய் கற்பனை செய்தானோ அவனுக்கு அது அதுவல்ல , அது அவளாகியிருந்தது . நம்மூரில் தேவதைகள்தானதிகம் தேவதூதர்கள் குறைவு , அதனாலும் கணினி அவனுள் பெண்பாலாய் ஆகியிருக்கலாம் .

கணினியுடனான அவனது ஆசையை காமத்தோடு ஒப்பிட்டால் , காமம் போன்றதொரு வேட்கையாயிருப்பின் , காமத்தின் ஆவல் ஒரு முறையோடு முடிவதில்லை , காதலாய் கொண்டால் அதுவும் காமத்தின் அழகிய வடிவமே , அவனது ஆசை பக்தியை போன்றது , இறையை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்னும் பக்தி , ஒரு முறை பார்த்துவிட்டால் பிறகு முக்திதான் என்பதை போல இதுவும் பக்திதான் கணினி மீதான ஒரு பக்தி .

அவனால் பணம் கொடுத்து கணினி கற்க அறிவுமில்லை வசதியுமில்லை , ஏகாம்பரமிடம் தெரிவிக்க அவரோ , அவர் வாங்கும் சொற்ப சம்பளத்தில் தன்னால் அவனை படிக்க வைக்க இயலாது வேண்டுமானால் வாரமொருமுறை சனிக்கிழமைகளில் வந்தால் கற்றுத் தருவதாய் வாக்களித்தார் .

நாற்பத்தி எட்டு மணி நேரத்தையும் நானூறு வருடங்களாய் ஆசையின் வலியோடு பயணித்தான் . ஒரு வழியாய் சனிக்கிழமையும் வந்தது .

விடியலுக்காய் காத்திருந்தது போல அவசரமாய் எழுந்து , குளித்து , பவுடர் பூசி , கோவிலுக்கு சென்று , சாமி கும்பிட்டு , தேங்காய் உடைத்து , கற்பூரமேற்றி , ஒரு வழியாய் ஐயர் அலுவலகத்தை அடைந்தான் . அலுவலகம் திறக்கப்படவில்லை . பொருத்திருந்தான் .

இவன் வயது குழந்தைகள் ரிக்சாவிலும் , ஆட்டோவிலும் , பேருந்திலும் பள்ளிக்கு போய்க்கொண்டிருந்தனர் , அவர்களை பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் , அலுவலக வாசலில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் புரட்டினான் , அதுவும் சரியாக படிக்க இயலாமல் , மீண்டும் சாலையிலேயே அயர்ந்தான் . மேலும் குழந்தைகள் சாரை சாரையாக எறும்புகள் போல கையில் அட்டியுடன் அணிவகுத்து செல்ல , தலையை குனிந்து கொண்டான் . குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார பயணமது .


ஏகாம்பரம் வரவில்லை , மதியமானது அப்போதும் அவர் வரவில்லை ,பொருத்திருந்ததான் , மாலை ஆனது பசி காதை அடைக்க ஆரம்பித்திருந்தது இன்னும் வரவில்லை , இரவாகியும் அவன் அங்கிருந்து அகலவில்லை , அவள் மேலிருந்த ஆசைக்கு அவ்வளவு பலம் .


நள்ளிரவாக டீமாஸ்டர் அவனைத்தேடி அலுவலகத்திற்கே வந்துவிட , இவன் அரைமயக்கத்தில் அந்த அலுவலக வாசலில் படுத்திருந்தான்.


''முருகேசா!! டேய் முருகேசா!! '' தட்டி எழுப்பினார் . '' என்னாடா ஆச்சு , நேத்து லீவு சொல்லிட்டு போனவன் , ரவைக்கு வீட்டுக்கு வருவனு காத்திருந்தா ஆளக்காணலயேனு இங்கிட்டு வந்து பார்த்தா இப்படி பைத்தியகார பயலாட்டம் படுத்திருக்க , வா ரூம்புக்கு போவோம் ''


''அண்ணா ஏகாம்பரம் சார் வரலணா , என்னாச்சினு தெரியல , யாருமே வரலணா ''


''சரி வா நாம காலைல பேசுவோம் , லூசுபயபுள்ள , எதையாவது தின்னியா'' பசியால் அவன் அவரது மடியில் மயங்கி விழுந்தான் .

திங்கள் கிழமையும் அந்த அலுவலகம் திறக்கப்படவில்லை , தொடர்ந்து ஒரு வாரம் பூட்டியே இருந்தது . தினமும் அவனும் விடாது அங்கு சென்று பார்த்து வருவான் .

சில நாட்கள் கழித்து அது ஒரு நிதிநிறுவனமென்றும் அது திவாலாகியதாகவும் செய்தி படித்ததாக மாஸ்டர் கூறினார் . அநந் அலுவலகம் இனிமேல் திறக்க மாட்டார்கள் எனபதை தவிர எதுவும் புரியாது துடித்து போனான் . அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவளை இனி பார்க்க முடியாதென்பது .

பிரிதொரு நாளில் அந்த அலுவலகம் அடித்து நொருக்கப் பட்டது அந்த நிறுவன முதலீட்டாளர்களால் , அவளும் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள் , அவள் உடைந்து நடுத்தெருவில் கிடக்க அதில் ஒன்றை கையில் எடுத்து கதறி அழுதான் . அவனாசை அநாதையாய் நடுரோட்டில் .


அதை தூக்கி கொண்டு கடைக்கு திரும்புகையில் வழியெங்கும் அவள் துகள்கள் ஒவ்வொன்றாய் பொருக்கி கொண்டான் , கையில் இடமில்லை அந்த விசைப்பலகையும் உடைந்த திலையில் சாக்கடையில் , ஒடிச்சென்று சாக்கடையில் இறங்கி அதையும் எடுத்துக் கொண்டு , தெருவோர நீர் குழாயில் கழுவியபடி கடையை நோக்கி நடக்க மாலை மங்க ஆரம்பித்தது . அவன் ஆசையும் நிறைவேறியது .சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைப்பட தகுதி தேவையில்லை . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .

17 comments:

அதிஷா said...

வெகு நேரமாக யாருமே வராததால்

நமக்கு நாமே அஸ்திரம் பயன்படுத்தப்படுகிறது

அவனும் அவளும் said...

ஒரு கணிப்பொறியை இப்படி உருவகப்படுத்தி எழுதி இருப்பது மக்களை கவரவில்லை என்று நினைக்கிறேன். என்னையும் கூட.

தங்கள் எழுத்தின் நடை மிகவும் அழகாக அமைந்து உள்ளது.

அதிஷா said...

வாங்க அவனும் அவளும் ,

\\
ஒரு கணிப்பொறியை இப்படி உருவகப்படுத்தி எழுதி இருப்பது மக்களை கவரவில்லை என்று நினைக்கிறேன். என்னையும் கூட.
\\

டீக்கடை பையனுக்கு கணினி கடவுள்தானே
அதை எப்படி விவரிப்பது என தெரியாமல் விழித்து கடைசியில் ஒரு வழியாய் மனதிற்கு தோன்றியதை பதிவு செய்தேன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அடிக்கடி வந்து உங்க ஆதரவை தரவும்

Vijay said...

Kadhai periyadhaga irundhalum , nanraga irukkiradhu .

:-)

Anonymous said...

:-((

Anonymous said...

:((

Anonymous said...

ennidam computer padichchi ketta tea boy ninavu kku vanthuttar.
kavalaya irukku.
abbas

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைப்பட தகுதி தேவையில்லை . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .//

அருமையான நடை! வாழ்த்துகள் அதிஷா

அதிஷா said...

வாங்க விஜய் மிக்க நன்றி

அதிஷா said...

அப்பாஸ் அண்ணா!!!

வாங்கணா.. வருகைக்கு நன்றி

அதிஷா said...

நன்றி புதுகை.எம்.எம்.அப்துல்லா

வருகைக்கும் வாழ்த்துக்கும்

வேதநாயகம் said...

:-((
வருத்தமாய் இருக்கு ,இப்படியெல்லாமா குழந்தைகள் வாழ்கிறார்கள்

VIKNESHWARAN said...

நண்பரே...மிக நல்ல கதைக் கரு...
நீங்கள் மேலும் இம்மாதிருயான படைப்புகளை வழங்க வேண்டும்...

Vetrivel said...

கதை நன்றாக உளளது

முதல் முறையாக

பெண் கதாபாத்திரங்கள் இல்லாத

பெண்கள் பற்றிய விசயங்கள் இல்லாத கதை

(ஏம்பா computer -அ போயி அவ‌ இவ‌ன்னுட்டு)

வாழ்த்துக்க‌ள்

அவனும் அவளும் said...

"டீக்கடை பையனுக்கு கணினி கடவுள்தானே
அதை எப்படி விவரிப்பது என தெரியாமல் விழித்து கடைசியில் ஒரு வழியாய் மனதிற்கு தோன்றியதை பதிவு செய்தேன்."

உண்மை. ஆனால் இதை படிப்பவன் கணிப்பொறியில் காலத்தை ஓட்டுபவன் தானே !

அது சரி. டீகடையில் வேலை செய்பவனுக்கு கணிப்பொறி கடவுள் என்றால், கணிப்பொறியில் வேலை செய்பவனுக்கு டீ பாய்லர் தான் கடவுளா ? சும்மனாச்சுக்கும் கேட்டேன். கடுப்பு ஆவாதீங்க !

மதுவதனன் மௌ. said...

ஒரு வித பீடிகையோடு ஆரம்பித்து அந்தப் பீடிகையோடே முடித்திருக்கிறீர்கள்.

நன்றாக உள்ளது அதிஷா அண்ணா.

மதுவதனன் மௌ.

லேகா said...

Nice article Athisha...Keep rocking!!

With Regards,
Lekha