கால யந்திரன் !

>> 30 June 2009

அவன் பெயர் பாலாஜி. பாம் பாலாஜி. பாம் என்றதும் அவன் ஒரு வெடிகுண்டு நிபுணர் என்றோ , அல்லது பல பாம்களை வெடிக்க செய்த ஒரு டமால் டுமீல் தீவிரவாதியென்றோ கற்பனை செய்து விட வேண்டாம். அவன் அந்த அளவிற்கு வோர்த் இல்லை. பாம் என்றால் அது வேறு பாம். அதை சொல்லவும் வேணுமா? . ஒரு கோடி சென்னை வாசிகளில் அன்றாடம் தாம்பரம் டூ சென்னை பீச் வரை செல்லும் ரயிலில் அனுதினமும் இயந்திரம் போல காலை ஆறு மணிக்கு கிளம்பி மாலை ஐந்தரைமணிக்கு மணிக்கு திரும்பும் ஏதோ ஒரு டூமீல் கம்பெனியில் வேலை செய்யும் சாதாரண கணக்கன் அல்லது அக்கௌண்டன்ட் அல்லது கணக்கு இயந்திரம் .

இருபத்தியெட்டு வயதாகியும் அவனது அழகுக்கும் அறிவுக்கும் பர்சனாலிட்டிக்கும் ஏற்ற பெண் அமையாமல் திருமணத்தை எப்படியும் இந்தியா வல்லரசாவதற்குள் முடித்துவிட துடிக்கும் முக்காலே அரைக்கால் முழு சிறு இளைஞன் . அவனது சொந்த ஊர் குடும்பம் சொத்து விபரம் நம் கதைக்கு அவசியமில்லாததால் விட்டு விடலாம் . அது சொல்லும் அளவிற்கு வொர்த் இல்லை.

தினமும் காலையில் ஆறுமணிக்கு ரயில்நிலைய பெட்டிகடையில் கடந்த ஆறு வருடங்களாக வாங்கும் அதே தினமலரும் வெள்ளிகிழமைகளில் வாங்கும் ஆனந்த விகடனும் தான் அவனது அறிவுகளஞ்சியம் அல்லது என்சைக்கிள்லபேடியா , அவன் என்றுமே அவற்றை தாண்டி யோசித்ததில்லை. அவனுக்கு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய வாய்ப்பும் அமையவில்லை.

அன்று ஆகஸ்ட் 31ம் தேதி எல்லார்க்கும் விடிகின்ற அந்த காலைப்பொழுது அவனுக்கும் குபீரென பொத்துக்கொண்டு விடிந்தது 4 மணிக்கே. காலையிலேயே குளித்து முடித்து 2முறை கந்த சஷ்டி கவசத்தை உறக்கு பாடி முடித்து 3ஆம் முறை டகுடகுடகு டங்குடிங்குகு டிகுடிகு என யாருமே இல்லாத அந்த குட்டி வீட்டில் கத்தி கத்தி பாடி போட்டோவில் இருந்த முருகப்பெருமானையே கடுப்படித்து காவு வாங்கி கொண்டிருந்தான். கதவை யாரோ தள்ளும் ஓசை கேட்க பாடலை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியே வந்து பூனை போல எட்டி பார்த்தான் . வீட்டு வாசலில் ஒரு முதியவர் பார்க்க படு ஸ்மார்ட்டாக மேக்கப் போடாத ரஜினியை போல அமர்ந்திருந்தபடி கதவை திறக்க முயன்று கொண்டிருந்தார் . அவரது உடை வேறு கோக்கு மாக்கலாக குபீரென இருந்தது. அதை பார்த்ததற்கே பாலுவிற்கு பொறித்தட்டியது.

முதியவர் இவன் கதவை திறந்து வெளியே வர இவனை உற்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் , இவனுக்கு அந்த நபரின் கண்களை பார்த்ததுமே பொறி கலங்கி பூமி அதிர்ந்தது , அவர் இவனை ஷகிலா போஸ்டரை உற்று பார்க்கும் முதியவரை போல பார்த்தபடி நின்றார் .


'' சார் நீங்க யாரு? ஏன் இங்கிட்டு உங்காந்திருக்கிய ?''


''.................'' அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். புரைக்கு அலையும் நாய் பார்க்குமே அப்படி.


''ஐயா சாமீ யார் சாமீ நீங்க ''


''தம்பீ.......இன்னொரு வாட்டி பேசுங்க''


''யோவ் யாருய்யா நீ.............. நீங்க ''


பயத்தை மறைத்தவனாய் , அடித்து விடுவாரோ என்ற பயத்துடன் முறைப்பது போன்ற பாசாங்குடன் அடித்தொண்டையில் பிளிறினான் . அந்த முதியவருக்கு நல்ல பாடி. ஜிம்முக்கு போவார் போல.

'' தம்பீ , என் பெயர் வலநீர்கிள்ளி , நான் இந்த உலகத்திற்கு புதியவன் ''

''யோவ் யாரப்பாத்து கெட்ட வார்த்தைல திட்ற நான் தெரியுமா.. ஐ வீல் கோ டூ ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷன் ..''

''மன்னிக்கவும் தம்பீ.. வலநீர் கிள்ளி என்பது என் பெயர்.. ''

''நான் உங்கள் காலத்தை சேர்ந்தவன் அல்ல , நான் கடந்த காலத்திலிருந்து வருகிறேனப்பா...! ''

''என்னது காலமா , அடங்கொக்கமக்கா , இப்பலாம் இப்படி வேற கிளம்புறீங்களா ''

'' தம்பீ , நீ நினைப்பது போல நான் தவறானவன் அல்ல , ''

''சார் , என் நெத்தில லூசு பு...மன்னிக்கனும் கேனக்கிருக்கனு எழுதிருக்கா !! ''

''தம்பீ , நான் சொல்வது அத்தனையும் சத்தியமப்பா , உனக்கு எப்படி நிரூபிப்பேன்... முதல் முறையாக இப்போதுதான் என் காலயந்திரத்தை கண்டுபிடித்தேன் ஒரு வெள்ளோட்டத்துக்காக உங்கள் காலத்திற்குள் நுழைந்து பார்த்தேன்... வேலை செய்கிறது ''

''ஐயா சாமீ நான் எத்தனை கதை படிச்சிருப்பேன் , சுஜாதா கதைலாம் எனக்கு அப்படியே மனப்பாடம்யா..! கால யந்திரம் எப்பவும் எதிர்காலத்திலதான் கண்டுபிடிப்பாங்க , அங்கருந்துதான் பின்னால வருவாங்க.. இறந்த காலத்திலலாம் கண்டு பிடிக்க மாட்டாங்க , அந்தளவுக்கு டெக்னாலஜி இன்னும் வளரலயா.. நீங்க யாரோ எவரோ எனக்கு தெரியாது , அது எனக்கும் முக்கியமில்ல , இப்ப உங்களுக்கு என்ன வேணும் எங்கிட்டருந்து , நீங்க நினைக்கிற அளவுக்கு எங்கிட்ட எதுவும் தேறாது சாமீ , ப்ளீஸ் சொல்லுங்க உங்களுக்கு என்னதான் வேணும்''

''என்னோடு எனது காலத்துக்கு வந்து பார்த்துவிட்டு திரும்ப வேண்டும் ''

''சார் , உங்கள பாத்தா கொஞ்சூண்டு நல்லவர் மாதிரி இருக்கு , நான் நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஆள்லாம் கிடையாது,நீங்க வேற ஆளப்பாருங்க சாமி.. எனக்கு உங்கள பார்த்தா பயமாருக்கு , ''

'' நண்பரே தமிழர்கள் அக்காலத்திலேயே தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்று படித்ததில்லையா , நீங்கள் என்னோடு வந்து ஒரு வாரம் மட்டும் எங்கள் காலத்திற்குள் வந்து , அங்கே எமது மன்னரை சந்தித்து காலயந்திரம் குறித்து சொல்லிவிட்டால் போதும் எனக்கு பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் அதில் பாதி உனக்கு மீதி எனக்கு ''

''என்னது பொற்காசா.. ''... பப்பரப்பா என வாயைபிழந்து கொண்டு சிந்தித்தான்.

''தம்பீ , நமது காலயந்திரத்தில் சிறிய கோளாறு இருக்கிறது அதை நாளை காலைக்குள் சரிசெய்து விடுவேன், அதற்குள் நீங்கள் தயாராக வேண்டும் ''

''தயவு செய்து என்னோடு வாருங்கள் தம்பீ..!''

''சரிங்க நீங்க இவ்ளோ கெஞ்சி கேட்டுகறதால வரேன் , உங்க டைம் மிஷின் எங்க இருக்கு சாரி காலயந்திரம் ''

'' அது மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது நிற்கிறது தம்பீ ''

''சார் அது மதுரைல ... '' மென்டலா இருப்பானோ.. என மனதிற்குள் ஒரு பயம் தேவையில்லாமல்.

''ஆமாம் தம்பீ , வேறு வழியில்லை , அந்த இடத்தின் உஷ்ண நிலைதான் இயந்திரம் இயங்க தேவையான தட்பவெப்ப நிலையோடு ஒத்து போகிறது ''


''கிழிஞ்சுது.. சரி எப்போ கிளம்பறது எப்படி கிளம்பறது.. ''

''நாம் இருவரும் மதியம் இங்கிருந்து புறப்படுகிறோம்... இரவு அங்கே சேர்ந்ததும்.. இரவு நமது இயந்திரத்திலேயே தங்கி விட்டு .. காலை மூன்று மணிக்கு கிளம்புகிறோம்.. என்ன சரியா ''

''சார் நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா.. ''

தன் கையிலிருந்து பெரிய மோதிரத்தை கழட்டி அவனிடம் கொடுத்தார். கால்கிலோ இருக்கும் அது. அத்தனையும் தங்கம். மயக்கம் வருவது போலிருந்தது .

உடனே உள்ளே சென்று தன் உடைகளை எடுத்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். தன் மொபைலை எடுத்து அலுவலகத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் , ஆயா செத்துப்போச்சு அவசரம் ஒரு வாரம் விடுமுறை. எல்லாம் செய்தாலும் அந்த நபரைப்பார்க்க பயமாகத்தான் இருந்தது. கிட்னியை திருடிவிட்டால். கண்ணை புடுங்கி பிச்சை எடுக்க விட்டுட்டா.. பொற்காசாச்சே..ம்ம் பார்ப்பம்..

கையில் ஒரு பேகுடன் வெளியே வந்தான்.

*********

இருவருமாக எக்மோர் ரயில்நிலையத்தில் இவன் செலவில் டிக்கட் எடுத்துக்கொண்டு மதுரை கிளம்பினர். மதிய ரயில் என்பதால் போய் சேரும் போது மணி 9ஐ தாண்டி இருந்தது. போகும் வழியெல்லாம் கிழவர் பலதும் சொல்லிக்கொண்டே வந்தார். இவன் வாயைப்பிழந்து கொண்டு கேட்டுக்கொண்டே வந்தான்.

பரோட்டாவை அறிமுகப்படுத்தினான். சால்னாவையும். கொத்துபரோட்டாவையும் வீச்சுப்பரோட்டாவையும் . மாட்டுத்தாவணியையும். பெரியார் சிலை குறித்தும். அவர் கொள்கைகள் குறித்தும். மீனாட்சி அம்மன் கோவில் குறித்தும். லகலகலகலகலகலகலக எனப் பீத்திக்கொண்டே வந்தான்.

ஒரு வழியாக அவர்களது பஸ் திருப்பரங்குன்றம் மலை அருகே நின்றது. இருவருமாக நடுநிசியல் இறங்கி முதியவர் காட்டிய பாதையில் நடக்கத்துவங்கினர். பாலுவிற்கு பர்பர் என பாம் பின்னால் வெடித்து சிதறிக்கொண்டே வந்தது. முதியவர் தம்பீ ஏதோ கெட்ட வாடை வருகிறதே என்றார். இவன் சாமி யாரோ இந்த பாதைல ஆய் போயிருப்பாங்க என்று கூறி சமாளித்தான். இருட்டுதானே.

எப்படியோ ஒரு வழியாய் அந்த காட்டுப்பாதை காட்டிய வழியில் நடந்து போய் அந்த காலயந்திரத்தை அடைந்தனர்.

அது பார்க்க நம்ம ஊர் பீரோ போல பச்சை நிறத்தில் இரண்டு கதவுகளுடன் கொஞ்சம் பெரிதாக இருந்தது. இவனுக்கு அது பீரோதானோ என சந்தேகமே வந்தது. தட்டிப்பார்த்தான். மரம் போல்தான் இருந்தது. ஒரு வேளை மரபீரோவோ? . ஆனால் ஒரு அறை போல இருந்தது. அருகில் எண்ணை ஊற்றி ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுற்றி ஓலைச்சுவடிகள். ஃபார்முலா?.

''தம்பீ.. இந்த கால யந்திரம் மட்டும் வெற்றியடைந்துவிட்டால் நமது வரலாறே திரும்பி விடும்.. தமிழ் மக்களே உலகை ஆளுவர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்தான். இப்போது இருக்கும் உங்கள் வாழ்க்கை முறையும் உனது பிறப்பும் கூட மாறிவிடும்.. ''

''சாமீ ஏதோ சொல்றீங்க ஆனா ஒன்னும் புரியல.. '' திரு திருவென திருவாத்தான் போல விழித்தான்.

''உனக்கு போக போக புரியும் தம்பீ ''

சரி நான் இந்த இயந்திரத்தின் கோளாறை முடித்துக்கொள்கிறேன் நீ தூங்கு..

இயந்திரத்துக்கு வெளியே மலை உச்சியில் நல்ல பாறையாக பார்த்து தனது சால்வையை விரித்துப் படுத்துக்கொண்டான். மெல்ல உறங்கினான்.

ஏதோ மிகப்பெரிய ஓளி அவனை சூழ்ந்தது. ங்கொய்ய்ய்ய்... கீகீகீகீ கிகிகீ.. டம் டும் டூமீல்..

வயிற்றுக்கு கீழே லேசாக வலித்தது.


**********

இன்னும் இருட்டாய்த்தான் இருந்தது. ஆனால் காற்றோட்டமாய் இருந்தது. கண்ணை விழித்துப்பார்க்க முடியவில்லை. இறுக்கமாய் இருந்தது.

எப்படியோ சிரமத்துடன் விழித்துப்பார்த்தால் ஏதோ ஒரு பிரமாண்ட கட்டிலில் பிரமாண்ட படுக்கை அறையில் அருமையான மெத்தையில் பட்டுக் கைலியோடு படுத்திருந்தான். வயிற்றுக்கு கீழே லேசான வலி.''ஐய்யயோ என் கிட்னி..'' என்று பதறி எழுந்தான்.

அருகில் அந்த முதியவர் அமைதியாக அமர்ந்து கொண்டு ஆனந்த விகடனோ குமுதமோ ஏதோ ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தார். அவர் பேண்ட் சட்டை என மாடர்னாக இருந்தார்.

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

''சாமீ..... எனக்கு என்னாச்சு.. அடப்பாவி என் கிட்னிய திருடிட்டீயா.. '' எழ முயன்றான் சோர்வாய் இருந்தது.

''ஏம்மா லட்சுமி.. இங்க பாரு உன் புருஷன் முழிச்சிட்டான்.. ''

''என்னது லட்சுமியா.. என் பொண்டாட்டியா.. யோவ் இங்க என்னையா நடக்குது.. ''

முதியவர் அவனது காதிற்கு அருகில் போய்.. ''நான்தான் சொன்னேனே.. வரலாறு மாறிடும்னு..'' என்றார்.

அவரது கடவாய் பல்லில் இருந்த தங்கப்பல் "டிங்" என ஒளிர்ந்தது. விகடன் அட்டையில் தமிழ் தேச அதிபர் என அவனது படத்தில் அவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனது கடவாய் பல்லிலும் தங்கப்பல் "டிங்" என ஓளிர்ந்தது.

மயக்கமாய் இருந்தது பாம் பாலாஜி என்கிற மாண்புமிகு தமிழ்த்தேச அதிபருக்கு.


**********

15 கருத்துக்கள்:

மணிகண்டன் June 30, 2009 at 12:13 PM  

:)- unga kittenthu laptopaa pudunganum.

RAHAWAJ June 30, 2009 at 12:30 PM  

என்னத்த சொல்ல என் தலைய சுத்தவச்சிட்டியே பரட்டை

பாலா June 30, 2009 at 12:51 PM  

athisha antha kaala yanthiraththai enga vetukku anupi vainga summa naangalum try panee paakkurom

சென்ஷி June 30, 2009 at 12:54 PM  

பட்டர்ஃப்ளை எஃபெக்ட் :)

nizam June 30, 2009 at 1:18 PM  

ஷ்சு அபா .. இப்பவே கண்ண கட்டுதே ..

biskothupayal June 30, 2009 at 2:43 PM  

கதை
டங் டங் டகானா!!!!
டிங் டிங் டிகானா !!!!!!

வால்பையன் June 30, 2009 at 6:08 PM  

உமது கற்பனை குதிரைக்கு என்னதான்யா போடுற
கொள்ளா, இல்ல ரம்ம ஊத்துறியா!?

சுஜாதாவின் ஆவி,  June 30, 2009 at 7:06 PM  

கதையில் வரும் என் பெயரை மரியாதையாக எடுத்து விடு. இல்லாவிட்டால் ஐ வீல் கோ டூ கோஸ்டு ரைட்ஸ் கமிஷன்.

லவ்டேல் மேடி June 30, 2009 at 7:09 PM  

யாருப்பா இந்த பதிவர்.....!! உள்குத்து இல்லாம இருக்காதே கதை....!! எப்புடியோ..... நல்லா இருந்தா சரி.....!!!

கே.ரவிஷங்கர் June 30, 2009 at 7:23 PM  

நேக்கு ஒண்ணுமே புரியலையே.
ஆனா ஒண்ணு புரியறதுதா கோந்தே!

புது விதமா வதைக்கறேள்.
எங்களை எல்லாம் ஹிட்லரின் கேஸ்
சேம்பரில்ல உள்ளே தள்ளிட்டேளே.

படிச்சு முடிஞ்சதும் எலும்பும் தோலுமா வெளியே வரோம் யூதர்கள் மாதிரி.

Personal July 1, 2009 at 11:39 AM  

சத்தியமா எதுவுமே புரியல அதனால் வோட்டு போடுறேன்

நமிதா..!,  July 1, 2009 at 11:54 AM  

:))

:))))

seidhi July 1, 2009 at 9:45 PM  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

விஜய் ஆத்ரேயன் July 26, 2009 at 10:47 AM  

அதிஷா , மிகவும் அற்புதம். உங்க ரெகுலர் வாசகர் நான். அற்புத சிறுகதை. ரொம்ப லேட்டா படிக்கிறேன். உங்கள் சேவை தொடர வாழ்துக்கள்.

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP