Pages

28 August 2008

கேள்விகளில்லா விடைகள் - சிறுகதை


கேள்விகளில்லா விடைகள் -


ஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல ,

அழுக்கடைந்த சட்டைகளும், கரைபடிந்த வேட்டிகளுடன் , காலை உணவாய் ஆளுக்கொரு பீடியை பற்றவைத்த படி , லாரி நிறைய அடைக்கப்பட்ட அடிமாடுகள் போல , ஒரு லாரியின் பின்னே குந்தவைத்து அமர்ந்து கொண்டு இரவெல்லாம் பயணித்து இதோ அடைந்துவிட்டோம் எங்களுக்கும் தண்ணீர் வேண்டி போராட்டமிட்டு அச்சிங்கார நகரத்தில் இனி கழிக்க போகும் நாட்களை எண்ணிய படி நான் .மனதில் ஆயிரம் கேள்விகள் ,

எனது கேள்விகளும் அப்படித்தான் தொடங்கியது , நான் மட்டுமல்ல மழையில்லா ஊரில் வாழும் எல்லா ஏழை விவசாயியின் மனதிலும் எழும் அதே விடையில்லா கேள்விகள், உன்மத்த மழையை இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை அது நகரங்களில் அதிகமாயும் கிராமங்களில் குறைவாயும் பெய்து தனது விரகத்தை தீர்த்து கொள்கிறது .

''அப்பா நீ எங்க போற? '' கேள்விகளின் குழந்தை எனது லட்சுமி

''ஏண்டி போம்போது எங்க போறணு கேக்கற , போற காரியம் விளங்குமா ? '' விடைகளின் கேள்வியாய் எனது பாதி ராஜி

''பாப்பா , அப்பா மெட்ராஸிக்கு போறேன்டா ''

''ஏன் போற ? ''

''குட்டி , நம்ம தோட்டத்துல தண்ணி இல்லாம , கருதுலாம் கருகி போதில்ல , அதுக்குதான்டா ''

''அதுக்கு ஏன் அங்க போற? '' என்னுள் பல கேள்விகளை அந்த ஒரு கேள்வி எழுப்பியது , எங்கோ ஆயிரம் கிலோ மீட்டருக்கப்பால் வராத தண்ணீருக்காய் நான் ஏன் செல்ல வேண்டுமென ,


''உன்ன அடுத்த வருஷம் டவுன் பள்ளிகொடத்தில படிக்க வக்கணும் , நல்ல கவுணு வாங்கோணும் , தினமும் உனக்கு ஆரஞ்சு முட்டாய் வாங்கித்தரணும் , ''

''அவ்ளோதானாப்பா ''

''வேற என்னடா குட்டிமா உனக்கு வேணும் ''

''தினமும் காலைல இட்டிலி , நீசு தண்ணி வேணாப்பா நல்லாவேல்ல , அப்பறம் கேக்கு , பன்னு,சாக்கிலேட்டு , சிலேட்டு , பென்சில்லு , அப்பறம் ம்ம்ம்ம்ம்ம் பிஸ்கட்டு ''

''சரிடா செல்லம்மா , அப்பா எல்லாம் வாங்கி தாரேன் '' என்று அந்த நம்பிக்கைகளின் குழந்தையை வாரி அணைக்க என் கண்களில் ஏனோ அர்த்தமில்லா கண்ணீர் .

''அப்பா , மெட்ராஸி எங்கருக்கு , ரொம்ப தொலவு போணுமா? சீக்கிரம் வந்துருவியா ? ''

''ஆமாடா பாப்பா , அப்பா போயிட்டு சீக்கிரமா வந்துருவேண்டா '' மடியில் படுத்திருக்கும் அந்த மழலை எனக்கு தனது நம்பிக்கையையே ஏமாற்றங்களின் நகரத்திற்கு செல்ல தரும் நம்பிக்கையாய் , குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் நம்பிக்கை சார்ந்தது .எப்படி கேட்பது என்ன கேட்பது தெரியாது , ஆனால் கேட்கவேண்டும் என்பது மட்டும் தெரியும் , வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எதையாவது எப்போதும் கேட்டுக்கொண்டுதானிருக்கோறோம் , அது பொருளாகட்டும் அறிவாகட்டும் நாம் கேட்பது எப்போதுமே கிடைத்து விடுவதில்லை , நாம் எல்லோருமே அப்படித்தான் , கேட்டுகொண்டே இருக்கிறோம் , கேள்விகள் என்றுமே முடிவதில்லை , நாம் பிறந்த உடன் தொடங்கும் கேள்விகள் நம் இறப்பை தாண்டியும் தொடருகின்றன .

அந்த லாரி ஏதோ ஒரு ஆளில்லா டீக்கடையில் பொழுது புலரும் விடியலில் நிற்க அங்கே இறங்கி டீ அருந்த மனமும் வயிரும் ஆவலாய் இருந்தாலும் சட்டைபையிலிருந்த பத்து ரூபாய் பணத்தின் அருமையை மிக அருமையாய் உணர்த்தியது . நாவில் ஊரிய எச்சிலை முழுங்கியபடி அந்த கடையை பார்த்தபடி வரும் வழியில் பாதி அணைத்த பீடியை சட்டையில் தேடி பிடித்து மீண்டும் பற்ற வைத்துக்கொண்டேன் .

'' அண்ணே எத்தன மணிக்கு மெட்ராஸ் வரும் , ''

''ஏலேய் முருகா , நீ நிக்கறதே சென்னைதான்டா '' அதட்டினார் கோணார் அண்ண்ன் , எங்களின் ஆசான் , எங்களுக்காய் போராட எப்போதும் தயங்காதவர் , தள்ளாத வயதிலும் எங்களோடு வந்தவர் .

''அண்ணே , எத்தன மணிக்கு நாம போராட்டம் ஆரம்பிக்கறோம் ''

''அட எழவெடுத்தவனே , நீ இன்னுமா ஆரம்பிக்கல '' செவுளில் அறைவது போல கத்தினார் . அவர் பூடகமாய் கூறுவது ஏனோ புரியவில்லை .

வானுயர்ந்த கட்டிடங்களும் , காலை ஏழுமணிக்கே தொடங்கி விட்ட வாகன இரைச்சலுக்கு நடுவே , அண்ணா சிலையை தாண்டி ஒரு சிறிய குறுக்கு சந்தில் இருக்கும் சேரி போன்ற இடத்தில் அமைந்திருந்த ஒரு பூங்காவில் நாங்களேல்லாம் இறக்கப்பட்டோம் , அங்கிருந்த கரைபடிந்த சுவர்களின் நடுவே குளித்து முடித்து , கோணார் அண்ணன் செலவில் டீயும் பன்னும் மட்டும் தின்று விட்டு , அங்கிருந்த பூங்காவில் சிறிது நேரம் உலாவியபடி ...

''அப்பா , சீக்கிரம் வந்திருப்பா ''

''சரிடா குட்டி ''

''அப்ப்ப்ப்ப்பபா , நீ போகாத ''


''ஏண்டி சனியனே அபசகுனம் புடிச்ச மாதிரி பேசறே '' மனைவி அதட்டினாள் .

''அப்பா நானும் வரேன் , அப்பா நானும் '' விடாமல் கதறினாள் லட்சுமி

அந்த பிஞ்சு கைகளின் மெல்லிய விரல்கள் எனது கையை பற்றிய படி கதறியது , என் மனைவி அதட்டியபடி என் குட்டி லச்சுவை உள்ளே இழுத்துச்செல்ல , எனக்கு தொண்டை அடைத்தது,

பூங்காவில் நடந்தபடி என் குட்டிப்பெண்ணை ஒரு டாக்டரை போல ஒரு கலெக்டரை போல கற்பனை செய்தபடி , அவளுக்காய் ஊருக்கு செல்லும் போது பையிலிருந்த பத்து ரூபாயில் ஒரு குட்டி பொம்மையும் சில ஆரஞ்சு மிட்டாய்களும் வாங்க வேண்டுமென எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.

காலை ஒன்பது மணி தாண்டியது அங்கிருந்து நடந்தபடி அருகிலிருக்கும் மைதானம் அருகே செல்ல , அங்கே எங்களுக்கு முன்னால் மிக பிரமாண்டமான ஒரு கூட்டம் , எங்களுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது , நம்மை போன்ற விவசாயிகள் மாபெரும் போரட்டம் நடத்துகின்றனர் என்று , அந்த கூட்டத்தின் அருகே நாங்கள் செல்ல செல்லதான் அது வேறு மாதிரியான போராட்டமென்று,

அங்கிருந்த கூட்டமும் விவசாயம் பற்றி துளியும் கவலையில்லா கூட்டமென அங்கே அருகில் சென்று பார்த்த பின்தான் உணர முடிந்தது , குளிருட்டப்பட்ட காரிலே கண்களை மறைக்கும் பெரிய அளவு கண்ணாடிகள் அணிந்த படி பல திரைப்பட நட்சத்திரங்களும் அங்கிருந்து இறங்க, அங்கிருந்த கூட்டம் அவர்களை நோக்கி முண்டியடித்து கொண்டு ஒட , நாங்களும் சிதறினோம் .

கோணார் அண்ணன் அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் எவ்வளவோ முறையிட்டும், எங்களுக்கு அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி தர மறுத்துவிட்டனராம் , கோணார் அண்ணன் கோபக்காரர் , எங்களை ஒன்று திரட்டி அந்த பெருங்கூட்டத்தின் அருகிலேயே ஒரு சிறிய இடத்தில் எங்கள் பச்சை கொடிகளை கையிலேந்தியபடி , பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு சிறிய பேனரை கையில் பிடித்த படி ,

'' தண்ணீர் வேண்டும் , தண்ணீர் வேண்டும் '' என உரக்க கத்தினோம் யாருக்கும் கேட்கவில்லை , அந்த நடிகர்களின் ஒலிபெருக்கி சப்தத்தில் , விடாமல் கோஷமிட்டோம் ,

யாருமே இங்கே நடப்பதை கவனிக்கவில்லை , போலீஸ் விரட்டியது , கோணார் அண்ணன் மறுத்தார் ,

தடியடி துவங்கியது , எனது கணுக்காலில் ஏதோ ஒரு காவல் அதிகாரி தன் கடமையை செய்ய ரத்தம் பெருக்கெடுத்தது , மயங்கி விழ என் காதுகளில் கடைசியாய் ஒலித்தது , அந்த பெரிய நடிகனின் வீர வசனங்கள்

'' ______ஆத்துல தண்ணி விட மறுக்கற _______மாநிலத்துகாரங்களை உதைக்க வேண்டாமா ''

கூட்டம் ஆர்பரித்தது , தலைவா என்றது , தெய்வமே என்றது ,

அவர்களது அந்த திரைப்பட ரசனையின் கத்தலினூடே எங்கள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை , எங்கள் கோஷம் எறும்பின் மரண ஓலமாய் ஒலித்தது , என் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் .

எனக்கு கணுக்காலில் வலித்தது , கோணார் அண்ணன் தூரத்தில் விழுந்தார் . பச்சை கொடிகளின் மேல் பலரும் நடந்து செல்ல என் கண்கள் இருட்டின .

நான் விழித்து பார்க்கையில் காலையில் அமர்ந்திருந்த பூங்காவின் ஒரு பெஞ்சில் , சுற்றி என்னைப் போல பல்லாயிரம் கனவுகளுடன் வந்திருந்த ஏழைகள் , என் சட்டைபை கிழிந்திருந்தது , அந்த பத்து ரூபாய் தொலைந்து விட்டது ,

கிழிந்து போன என் சட்டைப்பையோடு தொலைந்தது எனது பத்து ரூபாய் மட்டுமல்ல எங்கள் கனவுகளும்தான் நம்பிக்கையும்தான் .

ஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல .