Pages

05 October 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பும் சில சுவாரஸ்யங்களும்......




கடந்த சனிக்கிழமை (04-10-2008) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே . அன்றைய தினம் பல பணிகளுக்கிடையே அங்கே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சக பதிவர்களுக்கு நன்றி . இக்கூட்டத்தில் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது . ஆவலுடன் கலந்து கொண்டு பல மூத்தப்பதிவர்களும் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி .

இச்சந்திப்பில் இடம் பெற்ற பதிவர்களும் அவர்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களும் உங்களுக்காக :

பாலபாரதி :

பதிவர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் இவர் திருமணத்திற்கு பிறகு 10 வயது குறைந்தது போல இருக்கிறார் . சந்திப்பில் டிஷர்ட் ஜீன்ஸ் எல்லாம் அணிந்து கொண்டு ஒரு மூத்தப்பதிவர் என்கிற எந்த பாகுபாடுமின்றி அனைவரிடமும் தானக முன் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் . அது தவிர இங்கு நடந்த பொது இட புகைப்பிடிப்பது பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு மிக சூடாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார் .

ஞானி :

நமது சக பதிவர்கள் அடிக்கடி விவாதிக்க வாராவாரம் பல விடயங்களை தன் ஓபக்கங்களால் எழுதி வரும் ஞானியை பற்றி நான் கூறுவது சூரியனுக்கு டார்ச் அடித்தது போல் ஆகி விடும் . பதிவர் சந்திப்புக்கு எதிர்பாராத விதமாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் . அவரிடம் பல பதிவர்களும் பலவித கேள்விகணைகளை தொடுக்க தான் ஒரு பார்வையாளனாக சக பதிவராக இந்த சந்திப்புக்கு வந்ததாக கூறி மேலும் ஆச்சர்யப்படுத்தினார். அக்டோபர் 2 ஆம் தேதி அவர் தனது வலைப்பூவை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . (இப்போ அவரும் வலைப்பதிவராகிட்டாருங்கோ .. .ஜீனியர்தான் அதனால யார்வேணா அவர ராகிங் பண்ணலாம் ) சில அவசர காரணங்களால் சில நிமிடங்களிலேயே அவர் கிளம்பிவிட்டாலும் , நம்மைப் போன்ற வலைப்பதிவர்களை மதித்து அவர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . ( பாருங்கையா எழுத்தாளர்கள்லாம் நம்மள திரும்பி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க )

டோண்டு ராகவன் :

வயதிலும் , வலையுலக அனுபவத்திலும் மூத்த பதிவர் , இச்சந்திப்பு முழுவதுமே மிக உற்சாகமாக காணப்பட்டார் , அங்கே நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது டைரியில் குறித்துக்கொண்டார் .

பொட்டீகடை :

இவருக்காகத்தான் முதலில் சந்திப்பு நடத்த உத்தேசித்து சிலபல சிக்கல்களால் சந்திப்பு முடிவதற்கு அரைமணிநேரம் முன்புதான் வந்து சேர்ந்தார் . ஆஸ்திரேலியாவில் இருந்து ஆஸ்திரேலிய உடையிலேயே சந்திப்பில் கலந்து கொண்டது விழாவை மேலும் சிறப்பிப்பதாய் இருந்தது . எல்லா பதிவர்களுக்கும் ஐஸ் வாங்கி தந்து சந்திப்பை மேலும் குளிர்வித்தார் .

ஜ்யோவ்ராம்சுந்தர் :

நமது காமக்கதை புகழ் சுந்தர் அண்ணா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் . பணி முடிந்து அப்படியே வந்துவிட்டார் போலும் மிக டிப்டாப்பாக வந்திருந்தார் . பல விடயங்கள் குறித்தும் சக பதிவர்களிடமும் பேசியபடியே இருந்தார்.

சுகுணாதிவாகர் :

இவரது பதிவுகள் போலவே இவரும் மிக நல்ல மனிதர் . சந்திப்பு முழுவதும் பல இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தார் . என்னால் சரியாக இவரை கவனிக்க இயலவில்லை ( இலக்கியத்திற்கும் நமக்கும்தான் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாயிற்றே )

ரோசாவசந்த் :

நான் கடந்த வருடங்களில் இவரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் , ஆனால் நேரில் அப்படியே எதிர்மறையாய் மிக மென்மையானவராக இருக்கிறார் .( அமுல் பேபி போல ) அனைத்து பதிவர்களிடமும் தானே முன் வந்து பேசியபடி இருந்தார் .

கென் :

கென் என் நண்பன் , எனக்காகவே இச்சந்திப்பிற்கு வந்ததாக கூறினார் , அவரது சித்தப்பா வராத குறையை அவரது மகன் மற்றும் மூன்றாம் சிஷயர் வந்து நிவர்த்தி செய்தார் , இவர் அவரது சித்தப்பாவிற்கு நேரெதிர் ஆள் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாக மற்றவர் பேசுவதை கவனித்தபடி இருந்தார் .

மருத்துவர் புருனோ :

நம்ம மருத்துவருக்கு சந்திப்பு என்றால் அல்வா சாப்பிடுவது போல எத்தனை பணி இருந்தாலும் கட்டாயம் சந்திப்புகளில் கலந்து கொள்ளும் சிலரில் ஒருவர் . புகைப்பிடித்தல் தடை குறித்து விவாதம் எழுகையில் அருமையான ஒரு கருத்தை முன்வைத்தார் , சிகரெட்டை காண்டத்துடன் ஒப்பிட்டு , அது குறித்து தனி பதிவு விரைவில் இட எண்ணியுள்ளேன் . ( ஆள் எப்போதும் போல முக மலர்ச்சியுடன் அனைவரிடமும் நட்பு பாராட்டினார் )

அருட்பெருங்கோ :

இவரைப்பற்றி அதிகம் நான் சொல்லத்தேவையில்லை , மிக நல்ல மனிதர் , மிக அமைதி , அவரது எழுத்துக்களையும் பெயரையும் வைத்து 45 வயதில் ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் அவரோ மிக இளமையாய் 27 வயது மதிக்கத்தக்கவராய் இருந்தது பெரும் அதிர்ச்சி .

ஆழியுரான் :

இவர் ஒரு பழைய பதிவர் , சிலபல பொது சேவைகளில் தற்சமயம் ஈடுபடுவதால் பதிவுகள் எழுதுவதில்லை . இவரும் எல்லா சந்திப்புகளிலும் முடிந்த வரை கலந்து கொள்பவர் .

ஜிம்ஷா :

தினமும் பல அதிரடி பதிவுகளால் அடிக்கடி சூடான இடுகைகளை ஆக்கிரமிப்பவர் , சந்திப்புக்கு மிகத்தாமதமாக வந்தார் அது தவிர யாரிடமும் பேசாமல் அனைவரது நடவடிக்கைகளையும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார் . தொப்பி கண்ணாடி என அசத்தலாக இருந்தார் .

ஜிங்காரோ ஜமீன் :


பதிவர் ஜிங்காரோ ஜமீன் , பல பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் . பதிவுகள் மட்டும் எழுதமாட்டார் . கும்மி மக்களோடு சந்திப்பு முழுதும் ஐக்கியாமாகியிருந்தார் . அவரோடு அளவளாவ அத்துனை வாய்ப்பு கிட்டவில்லை . கிட்டியிருந்தால் கலாய்த்து மகிழ்ந்திருப்பேன்
வடகரைவேலன் :

கோவையிலிருந்து நமது பதிவர் சந்திப்பிற்க்காக இந்த சென்னை வந்த ஒரே பதிவர் இவர் . சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அவருக்கு என் நன்றிகள்.

தாமிரா :

சமீபகாலமாக வலையுலகில் தங்கமணிகள் பற்றி பதிவுகளால் வலையுலகில் சிலபல புரட்சிகள் செய்து வருபவர் . புகைப்படத்தில் பார்ப்பதைவிட நேரில் ஆள் அழகாக இருக்கிறார் . சினிமாவில் நுழைவதை விட டிவி மெகா சீரியல்களில் கதநாயகன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார். சந்திப்பு முடிவதற்கு முன்னே ஓடிவிட முயன்றார் .(தங்கமணி டிரபிளாக இருக்கலாம் )

கார்க்கி ;

சமீபகாலமாக சிலபல அதிரடி பதிவுகளால் கலக்குபவர் , இளமைதுள்ளலுடன் சந்திப்பு முழுவதுமே காணப்பட்டார் . ( அவர் என்னை போலவே மஞ்சள் சட்டையும் நீல பேண்டும் அணிந்து வந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார்...... இன்னாங்கடா கலரு என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது ... )

குப்பன் _ யாகூ ;

யாகூவின் சாட் ரூம்களில் கபடி ஆடிக்கொண்டிருந்தவர் சமீபகாலமாக தமிழ்வலையுலகிலும் கலக்குகிறார் . சந்திப்பு அறிவித்த நாளில் இருந்து ஆல்கஹால் மறுப்புகொள்கையுடன் இருந்தவர் . ஆனால் ஏனோ பாதி சந்திப்பில் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாகினார் .

ஊர் சுற்றி - ஜோன்சன் :

சந்திப்பு முழுதுமே மிக அமைதியாக காணப்பட்டார் . அனைத்து பதிவர்களிடமும் ஆரம்ப தயக்கம் இருப்பினும் பின் சுதாரித்து அனைவரிடமும் கலகலப்பாக இருந்தார்.

பாலசந்தர் :

உலகம்.நெட் தளத்தின் பங்களிப்பாளரான இவர் தனியாகவும் தனக்கென ஒரு வலைப்பூவை வைத்துள்ளார் . பார்க்க ஆரம்பகால விஜயகாந்த் போல இருந்தாலும் மிக அமைதி . தனது டிஷர்ட்டில் தமிழ்வலைப்பதிவர் என எழுதி வந்து அனைவரையும் கவர்ந்தார்.

சரவணன் :

நம்மில் மிகமிக புதிய பதிவர் , திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றும் இவர் தனது பணிகளுக்கு நடுவே சந்திப்பின் பாதியில்தான் வந்தார் .

சென் :

இவரும் ஒரு புதிய பதிவர் சமீபத்தில் தான் தனது வலைபதிவை தொடங்கியிருந்தார் . அனைவரிடமும் நிறைய பேசி நட்பு பாராட்டினார் . நிறைய புகைப்படங்கள் எடுத்தார் . அதை என்ன செய்தார் என்று தெரியவில்லை.

வினோத் ( அக்னிபார்வை ) ;

மேலும் ஒரு மிகப்புதியப்பதிவர் , சந்திப்புக்கு வந்த புதிய பதிவர்களில் அதிகம் விவாதங்களில் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .

வரவணையான் :

இவரும் மிகப்புதிய பதிவர் , இவரும் பொட்டீகடையாரும் ஒன்றாகவே வந்தனர் . அனைவரையும் மாறிமாறி படமெடுத்தபடி இருந்தார் . சந்திப்பு முடிந்ததும் சில பதிவர்களுக்கு சரக்கு வாங்கிதந்து நட்பு பாராட்டியதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .


வெண்பூ தனது மகனின் உடல்நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்று கூறியிருந்தார்.


இவர்கள் தவிர வருவார்கள் என மிகவும் எதிர்பார்த்த புதுகை அப்துல்லா , உண்மைத்தமிழன் , கேபிள் சங்கர் , போன்ற பதிவர்கள் வராதது மிகவும் வருத்தத்தை அளித்தது .


இவர்கள் தவிர அதிஷா,லக்கிலுக்,கடலையூர் செல்வம் , முரளிகண்ணன் போன்ற புதிய பதிவர்களும் சின்னத்துரை மற்றும் நர்சிமின் நண்பர் , மேலும் ஒரு வாசகர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் குச்சி ஐஸ் வாங்கித்தரப்பட்டது . ( திஸ் குச்சி ஐஸ் ஈஸ் ஸ்பான்சர்டு பை பொட்டிகடை)


சாருநிவேதிதா குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது , என்னை பொருத்தவரை இந்த சந்திப்புக்கு அவரது வலைபக்கத்திலும் விளம்பரம் கொடுத்து உதவியதாகவே கருதுகிறேன் . ( சாரு மிக்க நன்றி ; )


சந்திப்பு 6 மணிக்கு என அறிவித்து விட்டு நானும் லக்கியும் 5 மணிக்கே பீச்சுக்கு வந்து கொண்டிருக்கையில் லக்கியின் பைக் பஞ்சராகியது , அதனால் நாங்கள் பீச்சை அடைய 6.10 ஆகிவிட்டது , பல புதிய பதிவர்களும் ஒருவரை ஒருவர் அறியாது அது வரை ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தனராம்.


எங்களது பைக் பஞ்சரான இடம் சென்னையின் மிக முக்கிய கல்லூரியான எத்திராஜ் கல்லூரியின் வாசலில் , அதுவும் அந்த கல்லூரி முடிந்து பெண்கள் வெளியேறும் நேரம் , நல்ல நேரத்திலும் கெட்ட நேரம் .


கடற்கரையில் பல பதிவர்களும் பதுங்கி பதுங்கி தம் அடித்தது வேடிக்கையாக இருந்தது . ( அன்னைக்கினு பாத்துதான் யாரோ வி.ஐ.பி வரணுமா பீச்சு பூரா ஒரே போலிஸ்.


புதுப்பதிவர்கள் ஒவ்வொருவராக வருவதும் அவர்களை அலைப்பேசியில் பிடித்து சந்திப்பில் விடுவதுமாக இருந்ததால் என்னால் யாரிடமும் சரியாக பேசக்கூட இயலவில்லை . அதனால் அங்கே என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை. ( இந்த பதிவில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவில் உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்கிறேன் )


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் இங்கே...


http://picasaweb.google.co.in/asksen.ashok/BloggerSMeet?authkey=lODgj2cQiJ0#


____________________________________________________________________________________


அவ்ளோதான்பா. ;-)


____________________________________________________________________________________