Pages

15 November 2008

வாரணம் ஆயிரம் - வீணான உழைப்பு!!


இரண்டு வருட தயாரிப்புக்கு பின் குழந்தைகள் தினமான நேற்று வாரணம் ஆயிரம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது . இரண்டு ஆண்டுகளாக பலரது உழைப்பையும் கொட்டி படமாக்கி இருக்கக்கூடிய இப்படம் அத்தனை பேரின் உழைப்பையும் மறக்கடிக்க செய்யும் வகையில் மிக மோசமாக வந்திருப்பது வருத்தப்பட வைக்கிறது .

பொதுவாகவே விமர்சனங்களில் திரைப்படத்தின் கதையை எழுதுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் . இவ்விமர்சனத்திலும் கூட அந்நிலையே . அதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் கதை என்ற ஒன்று இல்லாது போனதே காரணமாயிருக்கலாம் . இப்படத்தில் கதை என்ற ஒன்று இல்லாமல் , ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவாரஸ்யமான சம்பவங்களில் பயணிக்கிறது கதை . புனைவு கதைகளை படமாக்கும் போது எடுத்துக்கொள்ளும் சிரத்தையை விட ஒரு தனிமனிதனது முழு வாழ்க்கையை , அவனது வாழ்வின் மிகமுக்கிய தருணங்களை மூன்று மணிநேரத்தில் ஒரு திரைப்படத்தில் பதிவது மிக கடினமான ஒன்று , அதுவும் சுவாரஸ்யம் குறையாமல் தருவது அதைவிட கடினமானது . இவ்வகை தனிமனித வாழ்க்கையை பதிந்த படங்களில் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக நாம் கருதும் அட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் கூட விமர்சகர்கள் பல குறைகளையும் மகாத்மாவின் வாழ்க்கையில் இன்னும் பல விடயங்களை தவறவிட்டிருக்கிறார்கள் என்றும் குறை கூறியிருந்தனர் . இது போன்ற திரைப்படங்கள் எடுப்பது மிக கடினமானது , கொஞ்சம் பிசகினாலும் சுவாரஸ்யம் குறைந்து விடக்கூடும் .

இப்படத்தில் நிறையவே பிசகி இருக்கிறது . வதவதவென நிறைய காட்சிகளை சுட்டு தள்ளிஅதை எடிட்டிங் செய்து வெளியிட்டது போல காட்சிகள் அமைந்ததால் கடைநிலை மட்டுமல்லாது முதல்நிலை ரசிகனைக்கூட நெளிய வைக்கிறது இப்படம் .

இத்தனை நாட்களாக கௌதம் மேனனாக இருந்த இப்படத்தின் இயக்குனர் இப்படத்தில் தனது பெயரை கௌதம் வாசுதேவ் மேனன் ஆக்கியிருக்கிறார் , பலரும் இது நியூமராலஜிக்காக மாற்றப்பட்டதாக கருதினாலும் உண்மையில் அவர் இப்படத்தை தன் தந்தைக்காக அர்பணிக்கவே அப்படி ஒரு பெயர் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் . படம் நெடுக சூர்யாவின் முகத்தில் அவரது வாழ்க்கையை பதிய முயன்றிருக்கிறார் . அமெரிக்க பாணியில் படம் எடுக்கும் வித்தை கௌதமிற்கு நன்கு வருகிறது . ஆனால் நாம் பார்க்கும் படம் தமிழ் படம்தானா என சமயங்களில் சந்தேகம் வருமளவிற்கா... ( படத்தை சப்டைட்டில்களுடன் பார்க்கலாம் ... பெருவாரியான வசனங்கள் ஆங்கிலத்தில்... தமிழை கூட ஆங்கிலம் போல் பேசும் கொடுமை வேறு ) . கதை சொல்லும் பாணி தவமாய் தவமிருந்து படத்தில் ஏற்கனவே சேரன் பயன்படுத்திய யுக்திதான் ( படமே தவமாய் தவமிருந்து படத்தின் நகரப்பாணி தழுவல் போலத்தான் இருக்கிறது ... சில விடயங்கள் தவிர்த்து ) . சேரன் காட்டிய தந்தை மகன் உறவில் இருந்த இயல்பு இப்படத்தில் நம்மால் உணர முடியவில்லை , மேல்த்தட்டு தந்தையை உருவகப்பட்டுத்தியதால் இருக்கலாம் . இராணுவ காட்சிகளும் அதற்கு முன் வரும் குழந்தைகடத்தல் மீட்பு காட்சியும் மிக நன்றாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் . அக்காட்சிகளில் தெரிந்த காக்க காக்க கௌதம் மேன்ன் மற்ற காட்சிகளில் காணமல் போகிறார்.

படத்தின் நாயகன் சூர்யா.. படத்திற்காக மிக மிக மித மிஞ்சிய அளவிற்கு உழைத்திருக்கிறார் , அத்தனை உழைப்பு , முடி வளர்த்து , உடல் வளர்த்து , அதை குறைத்து , மீண்டும் ஏற்றி , என படம் நெடுக மிடுக்காக துடுக்காக மென்மையாக மிரட்டலாக அனலாக பல வகைகளில் வருகிறார் படம் முடிந்த பின் அவரது உடற்கட்டு மட்டுமே மனதில் பதிகிறது . நாயகனின் தந்தையாகவும் அவரே .... கரகர குரலில் பேசுகிறார் ... அந்த பாத்திரத்தில் வேறு யாரையாவது நடிக்கவைத்திருந்தால் ந்ன்றாக இருந்திருக்கும் , படம் நெடுக படத்தின் பெரும்பாலான காட்சிகளை அவரே ஆக்கிரமித்தது போல உணர்வு . எரிச்சலூட்டுகிறார் .

படத்தில் மூன்று நாயகிகள் , நாயகனின் அம்மாவாக சிம்ரன் நன்றாக நடித்திருக்கிறார் அலட்டல் இல்லாத நடிப்பு . அது தவிர சமீரா மற்றும் குத்து ரம்யா , சமீரா முகத்தை பார்க்க சகிக்கவில்லை , சமீராவை விட சிறந்த அழகிகளை தியேட்டரிலேயே பார்க்க முடிந்தது , ரம்யாவுக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் மனதில் நிற்கிறார் அவரது வசனங்கள்தான் கேவலமாக இருக்கிறது ( டப்பிங் படுமோசம் ) . சமீராவை விட சூர்யாவின் தங்கையாக நடித்த பெண்ணுக்கு நல்ல முகவெட்டு மற்றும் உடற்கட்டு .

படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ் ... தாமரையின் பாடல் வரிகளுக்கு அருமையாய் இசையமைத்திருந்தார் , எல்லா பாடல்களுமே அற்புதம் . அஞ்சலை பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது . சபாஷ்.

ரத்னவேலு வின் அபார உழைப்பு படம் நெடுக உணரமுடிகிறது . இந்த படத்தில் மட்டுமே பல வித நிறங்களை பயன்படுத்தியிருப்பார் போல , கால ஓட்டத்தை தனது கேமராவால் அழகாக பதிகிறார் , காட்சி மென்மையாக இருந்தால் இவர் கேமராவும் மென்மையாகி விடுகிறது , காட்சியின் இயல்போடு அவரது கேமராவும் நடித்திருப்பது அருமை. எடிட்டிங்கிற்கு அதிக வேலை இருப்பதால் மானவாரியாக எடிட்டிருக்கிறார்கள் மனதில் ஒட்டவில்லை.

இரண்டு வருட உழைப்பையும் தன் தந்தையின் வாழ்க்கை முழுவதையும் ஒரு மூன்று மணிநேர படத்தில் காட்ட முயன்று அதை ஒழுங்காக காட்ட முடியாமல் போன கௌதம் மேனனை நினைத்து வருத்தமாக இருக்கிறது . இப்படத்தை அவர் அவரது தந்தைக்காக எடுத்திருக்கலாம் . இப்படத்தில் அவர் காட்டியிருந்த இராணுவ காட்சிகளில் தெரிந்த வசீகரம் நிச்சயம் எதிர்காலத்தில் அவரிடமிருந்து உலகம் பாராட்டும் இந்திய படத்தை எதிர்பார்க்கலாம் . (அதையாவது ஆங்கிலபடங்களில் இருந்து சுடாமல் எடுத்தால் சரிதான் )

சூர்யாவைப்போன்ற ஒரு நல்ல உழைப்பாளியின் உழைப்பை , தனது திரைக்கதை சொதப்பலால் வீண்டித்திருக்கிறார் கௌதம் மேனன் என்றுதான் இப்படத்தை பற்றி இரண்டே வரிகளில் சொல்ல இயலும் . ஒரு அப்பா-மகன் கதையில் மொத்த கதையும் அவர்களிருவரை சுற்றி நடக்காமல் ஆட்டோகிராப் பாணியில் அடுத்தடுத்த காதல்களை செருகியதால் படத்தின் முக்கிய பிரச்சனை நீர்த்து போகிறது .

இதுவரை வந்த கௌதம் மேனன் படங்கள் அனைத்தின் சாயலும் ஒவ்வொரு காட்சியிலும் இருப்பது படத்தின் மிகப்பெரிய பிரச்சனை , படம் பார்க்கும் பார்வையாளன் டே இதத்தானடா அந்த படத்திலயும் காட்டினனு சொல்ல ஆரம்பித்து விடுகிறான் .

படத்தின் பிளஸ் - காட்சியமைப்பு ,சூர்யாவின் நடிப்பு , கேமரா , பாடல்கள் .

படத்தின் மைனஸ் - திரைக்கதை , பிண்ணனி இசை , சமீரா , மனதில் ஒட்டாத காதல் காட்சிகள் .

மிக எளிமையாய் ஆர்ப்பாட்டமில்லாமல் எடுக்க வேண்டிய ஒரு படத்தை இத்தனை செலவுகள் செய்து எடுத்திருக்க வேண்டுமா....?
உயர்தட்டு மக்களுக்காக மட்டுமே படம் எடுக்கும் திரு.கௌதம் மேனன் , உங்கள் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நகரங்களில் மட்டுமே படத்தை வெளியிட படமெடுப்பதில்லை , அது சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் மக்களுக்குமானது ...... அதை உங்களது அடுத்ததடுத்த படங்களில் மனதில் வையுங்கள்....
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவ்ளோதான்பா.... ;-)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++