Pages

29 November 2008

வந்துட்டானுங்க ஆட்டிட்டு.......... தூ.....!

நான் கோவையிலிருந்து சென்னை வந்த பிறகு இரண்டாம் முறையாக என்னை பிரமிக்கவைத்த மழை. கடந்த நான்கு நாட்களாக சென்னையின் முக்கால் வாசி மக்கள் தொகையை ஹவுஸ் அரெஸ்ட் செய்துவிட்ட மழை . ரோடெங்கும் வெள்ளம் முழங்காலுக்கும் மேலே. இன்னும் சில இடங்களில் கழுத்து வரைகூட வெள்ளம் சென்றதாக கேள்வி. அம்பத்தூரிலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா வரை படகு சவாரி செய்ய வல்ல நீர் வரத்து. எங்கும் மின்சாரம் இல்லை . அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடு. இன்னும் பல.

மருந்துப்பொருட்கள் கிடைக்கவில்லை , மளிகைக்கடைகள் திறக்கவில்லை , பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை , டாஸ்மாக்கில் பீரும் ஜின்னும் ஆறாய் ஓடியது , பீர் லேகர்தான் கிடைத்தது . அனைத்து டாஸ்மாக்குகளும் கொட்டும் மழையிலும் இயங்கின . தமிழக அரசு வாழ்க . திமுக வாழ்க . தமிழகத்தில் எதற்கு தட்டுப்பாடு வந்தாலும் எம்குடிமகனின் தாகத்தை என்றும் தீர்க்கும் குடிமகன்கள் குடிகாத்த கோமகர் கலைஞர் வாழ்க வாழ்க .

நேற்று கொட்டும் மழையிலும் டீ்ககடை திறந்து வைத்திருந்த ஒரு புண்ணியவானுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். மூன்று வேளை சோறு போட்ட தெய்வமல்லவா . முகப்பேர் போன்ற ஒரு ஊரில் அல்லது ஏரியில் வசிப்பதின் அருமை அங்கே குடியேறிய ஒரு வாரத்தில் முகத்தில் அறைந்ததது. ஏரியில் வீடு கட்ட அனுமதித்தவர்கள் வாழ்க . அங்கே குடியேறிய குடியேறும் நல்லவர்கள் வாழ்க.

ரோட்டில் குப்பை போடாத சென்னை குடிமகன்கள்(தமிழ் குடிமகன்கள் ) நம்மில் எத்துணை பேர் . பிளாஸ்டிக் பைகளை அப்படியே குப்பையில் கொட்டுவது , குப்பைத்தொட்டி இருந்தாலும் சாக்கடையில் திணிப்பது , இதைத்தானே நமது கலாச்சாரமாய் ஆண்டாண்டு காலமாய் நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தந்து வந்திருக்கிறோம் . நமது சாக்கடைகளையே நம்மால் சரியாக காக்க இயலாத போது ...? . பொது மக்கள் வாழ்க , ஏரியில் நிலம் கிடைத்தால் வாங்கிப்போட்டு குடியேறும் பொது ஜனம் வாழ்க வாழ்க .

ஒரு வெள்ளக்காடான ஒரு பகுதியில் ஒரு திராவிட உடன்பிறப்பு படை , அனைவருக்கும் பிரியாணி வழங்கியது . அதில் ஒரு பெரியம்மா தூ என்று துப்பி , வெள்ளத்த தடுக்க துப்பில்ல வந்துட்டானுக ஆட்டிட்டு என்று . நம் மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்து விட்டால் துப்புவதற்கு அரசியல்வாதிதான் முதலில் கிடைப்பான் . அரசியல்வாதியும் லேசுப்பட்டவன் அல்ல செய்வதெல்லாம் செய்து விட்டு(ஐ மீன் ஊழல்) வெள்ளம் புயல் என்றால் பிரியாணி பொட்டலத்துடன் வந்துவிடுவான் .

ஸ்டாலின்களும் பன்னீர் செல்வங்களும் இனி வெள்ளப்பகுதிகளில் முட்டிவரை ரப்பர் ஷூக்களை போட்டுக்கொண்டு பார்வையிட்டு வேட்டிசேலைகள் வழங்கலாம் . பாப்புலாரிட்டி பிரியாணி வாழ்க , கிழிந்து தொங்கும் வேட்டிசேலைகள் வாழ்க , கட்சியிடம் வாங்கிய நிவாரண நிதியில் பாதியை குடித்தழிக்கும் உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் வாழ்க வாழ்க . (மூன்று நாட்களாக டாஸ்மாக்குகளில் நல்ல வருமானமாம் ஒரு டாஸ்மாக் நண்பரின் தகவல் ) . இவர்கள் பார்வையிடுவதால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை . மடிபாக்கத்திற்கு ஸ்டாலின் வந்தால் அவரால் முழுமடிப்பாக்கத்தையும் பார்வையிட்டு அங்குள்ள (வெள்ளத்தால் வந்த ) பிரச்சனைகளை தீர்க்க இயலுமா ! , அப்படி முழுமடிப்பாக்கத்தையும் அவர் சுற்றிபார்க்க வருகிறார் என்றால் மற்ற பகுதிகளை யார் கவனிப்பது .

இனி நமது ஆளும் அரசு உடனடியாக பல நூறு கோடிகளை நிவாரண நிதியாக கேட்டுப்பெரும் . அப்பணத்திற்கு கணக்கு ஏற்கனவே காந்தி எழுதிச்சென்றுவிட்டாராமே . வாழ்க காந்தி , வாழ்க காந்திக்கணக்கு . அப்பணமும் மீண்டும் டாஸ்மாக்குகளின் மூலம் அரசையே சென்றடைவதையும் இனி காணலாம் .

இனியாவது அரசு விழித்துக்கொண்டு பாலங்கள் கட்டி அதில் தன் பெயரை பொறித்துக்கொள்ளும் உத்திகளை தவிர்த்து , தங்கள் பெயர்களை பொன்னெழுத்தில் பொறிக்க இயலாத , சரியான நீர்வடிகால்களையும் , ஏற்கனவே இருக்கிற நீர்நிலைகளை தூர்வாருவது போன்ற வேலைகளையும் , பாலங்கள் கட்டினாலும் அதிலிருந்து மழைக்காலங்களில் அங்கே தேங்கி நிற்கும் நீர் சரியான வழியில் வெளியேறுமாறு திட்டமிடலும் தான் இப்போது தேவை . உங்கள் பிரியாணி பொட்டலங்களும் வேட்டிசேலைகளும் அல்ல , அதைக்காட்டி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் தமிழனை பைத்தியக்காரனாய் இருப்பானோ தெரியவில்லை .

பொதுமக்களும் எல்லாவற்றையும் அரசே முன்னின்று தனது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றில்லாமல் , தாமாக முன்வந்து இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும் . எந்த ஒரு அரசும் மக்களின் சரியான உதவியின்றி நல்லாட்சி அமைக்க இயலாது . நேற்று முகப்பேரில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது, சாக்கடை அடைப்பு , அதை சரி செய்து தர வேண்டும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அந்த ஐம்பது பேர் நினைத்திருந்தால் அவர்களாகவே அப்பிரச்சனையை சரிசெய்திருக்க இயலும் , ஆனால் எல்லாவற்றிக்கும் அரசும் அரசுசார் துறைகளும் வரவேண்டுமென்றால் அது எத்தனை மூடத்தனம் . இன்று ஆங்காங்கே மழைநீர் சாக்கடைகளில் அடைத்துக்கொண்டு ரோட்டிற்குள் வர என்ன காரணம் , நாம் நேற்றுவரை குப்பையோடு குப்பையாக போட்ட மக்காத குப்பைகளின் மறுவடிவமல்லவா இது . இனியாவது விழித்துக்கொண்டு நாமும் மாறவேண்டும் . ஒவ்வொருவரும் .

************************************************************************************************

மூன்று நாட்களாக மழையால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருந்தது , அதுவும் தனியாக , புதிதாக குடியேறிய வீடென்பதால் பக்கத்து வீடுகளிலும் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை (பேச்சிலர் பேய்! ) . 60 மணிநேரத்தில் தோழர் லக்கியும் நண்பர் கென்னும் மட்டும்தான் எனக்கு சமயங்களில் அலைப்பேசி மூலம் துணையாக இருந்தனர் . அவர்களுக்கு மிக்க நன்றி .

இங்கே முன்னால் எழுதிய சில விடயங்கள் சுயபச்சாதாபத்தை உண்டாக்குவதாக சில நண்பர்கள் கூறுவதால் அவை நீக்கப்படுகின்றன . நன்றி .

************************************************************************************************