17 June 2009

அழகானது நம் வாழ்க்கை...- LIFE IS BEAUTIFULஇடுக்கண் வருங்கால் நகுக! அதனை
அடுத்தூர்வது அஃது ஒப்பது இல் .

வாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு !! எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை.

- திருவள்ளுவர்.


நமது அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளுக்காக இயந்திரங்கள் போல காலை முதல் மாலை வரை பணமும் உணவும் உடையும் இருப்பிடமும் தேடி அலைகின்ற நாம் என்றாவது ஒரு நாள் நம் வாழ்வின் நிகழுகின்ற அழகான சின்ன சின்ன தருணங்களை ரசித்துருப்போமா . நமது தீராத இந்த வாழ்க்கையின் ஒட்டம் என்றுமே முடிவில்லாதது . குழந்தைகளின் புன்னகையில் மிளிரும் மகிழ்ச்சியும் , மனைவியின் சாம்பாரில் கிடைக்கின்ற புளிப்பும் அதனூடே கசிந்தோடும் அன்பான இனிப்பும்(!) , தந்தையின் அளவில்லா கனிவோடு விரிகின்ற நினைவுகள் தாயின் அரவணைப்பு என எத்தனையோ எண்ணிக்கையில்லா சின்ன சின்ன தருணங்கள் தரும் அளவில்லா மகிழ்ச்சியை , பணம் மற்றும் அது தரும் சுகங்களுக்காக கவனியாது கடந்து போயிருப்போம் . ஒவ்வொரு நொடியும் எத்தனை இன்பகரமானது நம் வாழ்வில் , அவற்றை என்றுமே நாம் முழுமையாய் அனுபவிப்பதில்லை . ஒரு சிலர் சிறிய துன்பம் வந்து விட்டாலும் இன்றோடு தன் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல இடிந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள் . வாழ்க்கை அதுவல்ல அது இனிமையானது அழகானது .

வாழ்வின் இன்பங்கள் நிகழும் தருணங்களில் மட்டும்தான் அவற்றை அனுபவிக்க வேண்டுமா.. துன்பங்கள் ஏற்படும் போது கூட, அதனையும் மிக எளிதாக, வாழ்வில் அன்றாட நிகழ்வினைப்போல எடுத்துக்கொள்ளும் ஒருவனை குறித்த இத்தாலிய திரைப்படமே லைஃப் ஈஸ் பியூட்டிபுல் ( ENGLISH - LIFE IS BEAUTIFUL ) ( ITALIAN - la vita e belle ) . இப்படத்தினை ராபர்ட்டோ பெனிங்கினி ( Roberto benigni ) எழுதி இயக்கியதோடு மட்டுமல்லாது படத்தின் முக்கிய பாத்திரமான(கதாநாயகன் ) கீடோ ( GUIDO ) வாகவும் நடித்துள்ளார் .

வாழ்க்கையை மகிழ்ச்சியோடு மட்டுமே வாழ்கின்ற இக்கதையின் நாயகன்( யூத இளைஞன் ) , இத்தாலியின் அரிஸோ நகரத்திற்கு பிழைப்புக்காக வருகிறான் . அது இரண்டாம் உலகப்போரில் முசோலினி , நாஜி ஹிட்லர் படையோடு கூட்டணி அமைத்து போரை எதிர்கொள்ள முடிவெடுக்கும் காலம் . அங்கே அவன் தற்செயலாக சந்திக்கும் ஒருத்தியிடம் மனதை பறிகொடுக்க , அவள் இவனை பல முறை தற்செயலாகவே சந்தித்தும் , அவளை சரியாக சந்திக்க வாய்ப்பின்றி தவிக்கிறான் . அவளது நிச்சயதார்த்த விழா அவன் வேலை செய்யும் ஹோட்டலில் நடக்க அங்கே அவன் அவளைகாண , இருவரும் அங்கிருந்து தப்பி திருமண முடித்து கொண்டு இத்தாலியில் ஒரு புத்தகக்கடை மூலமாக சம்பாதித்து மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர் . காலசுழற்சியில் ஐந்தாண்டுகள் கடக்கிறது . அவனுக்கு ஜோஸ்வா எனும் குழந்தை பிறந்து அவனுக்கு ஐந்தாண்டு நிறைவடையும் ஒருநாளில் அவனும் அவனது குழந்தை மற்றும் மனைவியும் கைது செய்யப்படுகின்றனர் .

இரண்டாம் உலகப்போர் உச்சத்தை எட்டுகிறது , நாஜிப்படைகளின் யூதர்கள் மீதான தாக்குதல் தொடங்க அதில் இவர்களது குடும்பமும் மாட்டிக்கொள்கிறது . ஹிட்லரின் யூதர்கள் மீதான இத்தாக்குதலில் கான்சென்ட்ரேசன் கேம்ப் ( concentration camp ) என்னும் முகாம் அமைத்து அதில் யூதர்களை குவியல் குவியலாக கொன்று குவிக்கும்( விஷவாயுவால் மக்களை கொல்லும் GAS CHAMBER ) முகாமில் கீடோவும் அவனது குடும்பமும் சிக்கிக்கொள்ள அங்கே தனது மகனையும் தனது மனைவியையும் எப்படி காப்பாற்றுகிறான் மற்றும் தன் மகனுக்கு அங்கே நடக்கின்ற கொலைகளை பற்றியும் தான் அனுபவித்து வரும் துன்பங்கள் குறித்தும் அறியதராமல் எப்படி அத்துன்பத்தை இன்முகத்துடன் எதிர்கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதை .

படத்தின் நாயகன் கிடோவா நடித்திருக்கும் ராபர்ட்டோ பெனிங்கினி தனது மிகையில்லாத நடிப்பாலும் , படம் நெடுக செய்யும் சிறுசிறு சேட்டைகளாலும் கவர்கிறார் . காதலியை துரத்தி துரத்தி காதலிப்பதில் ஆகட்டும் , தன் காதலிக்கு தன் காதலை உணர்த்தும் காட்சியிலும் , காதலியின் நிச்சயதார்த்தத்தில் , தன் காதலிக்குத்தான் திருமணம் என அறியாது அவ்விழாவில் காதலியினை மணமுடிக்க இருக்கும் மணமகனை கலாய்ப்பதில் ஆகட்டும் தனது நகைச்சுவை உணர்விலும் உடல்அசைவு மொழிகளிலும் அசத்துகிறார் . படத்தின் இரண்டாம் பகுதியில் மனதிற்குள் எந்த நேரத்திலும் தன் மகனையும் தன்னையும் கொன்று விடுவார்களோ என்கிற அச்சத்திலும் தன் மகனிடம் அக்கேம்பை பற்றி கூறுகையில் அது ஒரு போட்டி என்றும் அதில் அவர் கூறும் விதிகளும் தனது அறையில் அச்சிறுவனை அவனது அறையில் மறைத்துவைத்து காப்பதும் அருமையாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது . தந்தைக்கும் மகனுக்குமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் , தன் மகனை நாஜி படையிலிருந்து காக்க எடுத்துக்கொள்ளும் அக்கறையிலும் திரைக்கதை அமைப்பு அசத்துகிறது . தன்னைக்கொல்ல அழைத்து செல்லும் ஒரு காட்சியில் மறைந்திருந்து பார்க்கும் மகனின் மனம் நோகக்கூடாது என்பதற்காக அந்த இராணுவீரனை இமிடேட் செய்து நடந்து செல்லும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும் .

படத்தின் காட்சியமைப்புகள் முதல் பாதியில் காதல்காட்சிகளாலும் நகைச்சுவையாலும் நிரம்பி வழிய மிக மென்மையாகவும் , இரண்டாம் பாதியில் கான்சென்ட்ரேசன் கேம்ப் காட்சிகளின் கொடுமைகளையும் அங்கு யூதர்களின் மீதான தாக்குதல்களையும் கடுமையாகவும் படமாக்கியிருப்பதும் இரண்டு பாதிகளுக்கும் ஏற்ற பிண்ணனி இசையிலும் அசத்தியிருப்பது இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் .

படத்தின் இயக்குனர் ராபர்ட்டோ பெனிங்கினி இக்கதையை உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருப்பது படத்தின் மற்றுமொறு பலம் . படத்தில் ஒரு காட்சியில் இராணுவ வீரர்களினூடே தனது மகனை காப்பாற்ற அவனை அழைத்து கொண்டுஅந்த கேம்பில் ஒரு பகுதிக்குச்செல்ல அவ்வேளையில் தன் மகன் உறங்கிவிட பனிமூட்டத்தினூடே இவன் நகர்ந்து செல்ல வழி தெரியாமல் பனிமூட்டத்தை தன்கைகளால் விலக்க பனிக்கு பின்னால் பல ஆயிரம் பிணங்கள் பெருங்குவியலாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்றின் மூலமாக நாஜிப்படைகளினுடைய மற்றும் அவர்களது யூத வெறுப்பையும் கான்சென்ட்ரேசன் கேம்புகளின் கொடூரத்தையும் சிலவிநாடிகளில் உணர்த்துவது மனதை கனக்க செய்தாலும் வியப்பில் ஆழ்த்துகிறது . ஹிட்லரின் யூத எதிர்ப்பு நிலையை அதைவிட மிக எளிமையாக சொல்ல இயலுமா என தெரியவில்லை மிக அருமையான படமாக்கல் அது . படம் நெடுக யூதர்கள் மீதான அக்கொடூர தாக்குதல்களை நாயகன் தனது மகனுக்கு அறியாமல் மறைப்பதில் காட்டும் அக்கறையும் அதனால் அவனே உயிரிழக்க நேரிடுவதும் , நாமே அக்குழந்தையை அங்கிருந்து மீட்டு வந்துவிடலாமோ என்கின்ற நமது மனநிலையும் இயக்குனருக்கு கிடைத்த வெற்றி .

1997 ஆம் ஆண்டு வெளியான இப்படம் குறித்து விமர்சகர்கள் அதிகம் புகழ்ந்தே கூறியிருந்தாலும் , சில விமர்சகர்கள் இப்படத்தில் யூதர்கள் மீதான தாக்குதல்களை படத்தில் காட்டியிருக்கும் விதம் மிக எளிமையாகவும் , அத்தாக்குதல்களின் வலியும் வேதனையும் சரியாக பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது .

இப்படத்தில் முதல்பாதியில் வரும் காதல்காட்சிகள் மிக அற்புதமானவை , நிச்சயதார்த்த விழாவில் மிகப்பெரிய விருந்து நடக்கும் ஒரு டைனிங் டேபிளின் கீழே காதலர் இருவரும் தங்களது காதலை சொல்ல அங்கே தரப்படும் முத்தம் திரைப்படங்களில் வெளியான சிறந்த முத்தக்காட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது .
தந்தை மகன் அன்பையும் அவர்களிடையேயான உரையாடல்களையுமே மையமாக கொண்டு மென்மையாக அவ்வுறவின் ஆழத்தை வலியுறுத்தும் இப்படம் , ஒவ்வொரு தந்தை மற்றும் மகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் .

இத்திரைப்படம் நிச்சயம் இத்தாலிய ரசிகர்களுக்கானது மட்டுமல்ல , உலகின் அனைவருக்குமானது . வாழ்வினை ரசிப்போரும் , தந்தையை நேசிப்போரும் குடும்பத்தோடு கட்டாயம் கண்டு ரசிக்கலாம் .***************************
ராபர்ட்டோ பெனிங்கினி - இத்தாலி நடிகரான இவர் இப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை இப்படத்திற்காக பெற்றார் . இது தவிர இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த இசை என்ற இரண்டு விருதுகளையும் பெற்றது.

இப்படத்தினை நமது தமிழ்நாட்டில் கூட டொக்டர்.விஜய் அவர்களது அபரிமித நடிப்பிலும் விவேக்கின் கருத்திலும் வெளியான '' யூத் '' திரைப்படம் இப்படத்தின் முதல்ப் பாதியை எந்த வித உரிமையும் இன்றி தழுவி ( அல்லது அட்ட காப்பி அடித்து ) எடுக்கப்பட்ட மகா மட்டமான படமாகும் . அப்படத்தின்(யூத்) ஒவ்வொரு காட்சியையும் இவ்வளவு நன்றாக எடுக்க முடியுமா என அறிய விரும்பினால் மேற்ச்சொன்ன இத்தாலிய திரைப்படத்தை காணலாம் .

13 comments:

Anonymous said...

//அத்தாக்குதல்களின் வலியும் வேதனையும் சரியாக பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது .//

ஒத்துக்க முடியலீங்க, காட்சி அமைப்புகள்ல நிச்சயம் காட்டீருக்காங்கன்னு நினைக்கிறேன். ஓமன்- எக்ஸாஸிஸ்ட் படத்தில பயமுறுத்தும் பேய்கள் வராது. சம்பவக்கள்ளின் வலிமையால் பேய் அங்க இருக்குங்கற மாதிரி நம்ம உணர்ர மாதிரி காட்டிருப்பாங்க. வன்முறையை வன்முறையா காட்டாட்டியும் காட்சிகள் நமக்கு உணர்த்தர மாதிரி அமைச்சிருப்பாங்க. அதுவும் இல்லாம அப்பா மகனை காப்பாத்தணும் பாயிண்ட்ஸ் சிஸ்டம் உருவாக்க்கி அருமையா கதையை கொண்ட்டு போயிருப்பாங்க.

Bleachingpowder said...

ஆனந்த விகடனில் இந்த படத்தை உலக சினிமா விமர்சணத்தை படித்த உடன் இனையத்தில் பார்த்து அன்றிரவு தூக்கத்தை தொலைத்த படம்.

அகநாழிகை said...

அதிஷா,
நலம்தானே.. life is beautiful உங்களோட பதிவ ஏற்கனவே படிச்சேன். நம்ம பதிவர் சந்திப்புக்கு வரும் முன் தி நகர் புதிய புத்தக உலகம் போயிருந்தேன். அங்கே அந்த படத்தோட திரைகதை புத்தகமா வந்துள்ளதை பாத்தேன். என்னை மிகவும் கவர்ந்த படங்களில் ஒன்று. ஒரு சிறு தகவல்.. நான் பல வருடங்களாக விருது பெற்ற படங்களை சேகரித்து வந்திருக்கிறேன். பகிர்ந்து கொள்ள விரும்பினால் சொல்லுங்கள், தருகிறேன்.

சாருமதி said...

***
வாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு !! எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை.
***

திருவள்ளுவர் வாசுகி மாதிரி எல்லா குடும்பத்துலயும் இருந்துட்டா இது என்ன, என்ன வேணும்னாலும் எழுதலாம் !!!

அவருக்கு எங்க தெரிய போகுது !

Venkatesh Kumaravel said...

அருமையான கருத்துரை அதிஷா அண்ணே! மீள்பதிவா?


//அகநாழிகை said...
ஒரு சிறு தகவல்.. நான் பல வருடங்களாக விருது பெற்ற படங்களை சேகரித்து வந்திருக்கிறேன். பகிர்ந்து கொள்ள விரும்பினால் சொல்லுங்கள், தருகிறேன்.//
அடுத்த பதிவர் சந்திப்பு விரைவில் அறிவிப்பு வரும் என்று முரளி அண்ணன் கூறியிருந்தார் (நர்சிம்மின் வலையில் என்று நினைக்கிறேன்) அப்போதே இதற்கும் சேர்த்து ஏற்பாடு செய்வோமா? டிவிடி, ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் முதலியன எடுத்து வந்துவிடுவோம்.. என்ன சொல்கிறீர்கள்? ஆர்வமிருக்கும் பதிவர்கள் அனைவரும் ஐடியாக்கள் தந்தால் ஒரு சந்திப்பில் பல விஷயங்கள் செய்ய முடியும்.

சென்ஷி said...

இந்த படம் இன்னும் பார்க்கலை அதிஷா.. கூடிய சீக்கிரம் பார்த்துடுவேன்னு நினைக்குறேன். சமீபத்துல நிறைய்ய பதிவுகள்ல திரை விமர்சனம் இந்த படத்தோடதா அமைஞ்சது ஆச்சரியம் :)

பகிர்விற்கு நன்றி அதிஷா

சென்ஷி said...

// Bleachingpowder said...

ஆனந்த விகடனில் இந்த படத்தை உலக சினிமா விமர்சணத்தை படித்த உடன் இனையத்தில் பார்த்து அன்றிரவு தூக்கத்தை தொலைத்த படம்.//

ப்ளீச்சிங்க்.. அந்த விமர்சனத்தின் பிடிஎஃப் கோப்பு கிடைக்குமா. படிக்க ஆவலாய் உள்ளது!

எனது மடல் முகவரி

senshe.indian@gmail.com

கார்க்கிபவா said...

// யூத் '' திரைப்படம் இப்படத்தின் முதல்ப் பாதியை எந்த வித உரிமையும் இன்றி தழுவி ( அல்லது அட்ட காப்பி அடித்து ) //

நீங்க யூத் பார்க்கலையா அல்லது life is beuatiful பார்க்கலையான்னு தெரியல...

lazyleo said...

இந்தப் படத்த காப்பி அடிச்சு ‘யூத்’ன்னு ஒரு படம் வந்தது தான் ஜீரணிக்க முடியாத விஷயம்..

Jackiesekar said...

அதிஷா வாழ்வில் தவறவே விடக்கூடாத படம் இது...எல்லோரையுமே சாகடிக்க அழைத்து போவது ஒரு தகப்பனுக்கு தெரியும் ஆனால் பிள்ளைக்கு தெரியாது , அதை அவனுக்கு தெரியாமல் அந்த செய்தியை மறைக்க அவன் செய்திடும் தகிடுதத்தங்கள் மிகவும் சுவாரஸ்யம் மற்றும் நெஞ்சை உருக்கத்தில் பிழிபவை...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல விமர்சனம் .. என் தம்பி இந்த மாதிரி படங்களை மாஞ்சி மஞ்சி பாப்பான். ஹூம்ம்ம்ம்ம்ம் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு அறிவில்லேண்ணே!!!!

Bleachingpowder said...

சென்ஷி said :
ப்ளீச்சிங்க்.. அந்த விமர்சனத்தின் பிடிஎஃப் கோப்பு கிடைக்குமா. படிக்க ஆவலாய் உள்ளது!
//

விமர்சனத்தை படித்து விட்டு வீட்டில் எங்கோ பத்திரமாய் வைத்த நினைவு. அடுத்த முறை ஊருக்கு போகும் போது, தேடிப் பார்க்கிறேன், இருந்தால் கண்டிப்பாக ஸ்கேன் செய்து அனுப்புகிறேன் சென்ஷி.

Bleachingpowder said...

//கார்க்கி said...
// யூத் '' திரைப்படம் இப்படத்தின் முதல்ப் பாதியை எந்த வித உரிமையும் இன்றி தழுவி ( அல்லது அட்ட காப்பி அடித்து ) //
நீங்க யூத் பார்க்கலையா அல்லது life is beuatiful பார்க்கலையான்னு தெரியல..//

யூத் படத்தின் காமெடி காட்சிகள், life is beautiful படத்தில் இருந்து சுட்டவை but அதுவே அந்த படத்திற்கு செய்யும் துரோகம் தான்.

நல்ல தமிழ் படத்தை கண்ணடத்தில் ரீமேக் என்ற பேரில் கொலை செய்து, அதை நாம் பார்க்கும் போது நமக்கு எவ்வளோ கோவம் வருது. அதே மாதிரி தான் அவர்களும் நம்மை கேவலமாக பார்பார்கள்.