Pages

14 December 2008

உயிரை வாங்கிய ஒரு புத்தகம்..!!

நாம் சில புத்தகங்களை எப்போதும் படித்துவிடாமல் இருப்பது நல்லது . ஏன்டா இந்த புத்தகத்தை படித்தோம் என எப்போதாவது தோன்றியதுண்டா . அந்நூலின் ஒவ்வொரு வரியும் நமது தின வாழ்வின் வேலைகளில் குறுக்கிட்டு எல்லா நிலைகளிலும் பாதித்ததுண்டா. அப்படி ஒரு வாசிப்பனுபவம் பெரும்பாலும் நமக்கு கிடைத்து விடாது . அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் புத்தகங்கள் மிகக்குறைவே . ஒரு நாவலைப்படித்து முடித்ததும் அந்நாவலின் பாத்திரங்கள் பல காலத்திற்கும் நம்மை மனதை விட்டு அகலாமல் , அப்பாத்திரங்கள் நம் மனதின் ஏதோ ஒரு மூலையில் அகலாத ஒரு தாக்குதலை ஏற்படுத்துமானால் அதுவே அந்நாவலின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

மலையாள எழுத்துலகின் சி.வி.பாலகிருஷ்ணன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு மிகச்சிறந்த நாவல் ''ஆயுசிண்டே புத்தகம் '' . அதனுடைய மொழிபெயர்ப்பு இத்துணை ஆண்டுகளுக்கு பின் தமிழில் கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. அதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளவர் வை.கிருஷ்ணமூர்த்தி .

கேரளாவின் பெரும்பாலான கிராமங்களின் வாழ்வினையும் , அக்கிராமங்களில் வாழும் கிறித்தவர்களின் வாழ்க்கைமுறைகள் குறித்தும் தனது கூரிய எழுத்துக்காளால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் பாலகிருஷ்ணன் . நாவலின் சாரத்தை ஒற்றை பாராவில் விவரிக்க இயலாத வகையில் அத்தனை பாத்திரங்கள் , அத்தனை பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு வியாக்கியானங்கள் , அவைகளின் பார்வையில் விரிகின்ற ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சம்பவமும் அதனால் விளைகின்ற சிக்கல்களும் என இக்கதை பல எல்லைகளை தாண்டிச்செல்கிறது.

இந்நாவலில் நாம் தினம் காணும் பல பாத்திரங்களையும் உங்களையும் கூட பார்க்கலாம் . நாவல் முழுவதும் உருண்டோடும் தனிமையும் , குற்றங்களும் , குடும்பங்களும் , மனத்தாங்கலில் தங்களுக்கு தாங்கே தந்துவிடும் தண்டனைகளும் இந்நாவலை மலையாள எழுத்தலகின் தன்னிகரில்லாத தனித்த ஒன்றாக மாற்றிவிடுகிறது . கதைசொல்லலில் அங்காங்கே சிதறிக்கிடைக்கும் பைபிள் கூற்றுகளும் (அல்லது வாசகங்களும் ) அதனை ஒத்த காட்சிகளும் , ஆசிரியரின் உழைப்பை எடுத்துக்கூறுவதாக இருக்கிறது .

(சி.வி.பாலகிருஷ்ணன் )

இந்நூலின் ஆசிரியர் ஒரு பேட்டியில் இந்நாவலுக்காக தான் காசர்கோட்டில் (ஒரு கேரள சிறுநகரம் ) மூன்றாண்டுகளுக்கு மேலாக உழைத்ததாக கூறியிருந்தார் . அவ்வுழைப்பு இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணலாம் . ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு காட்சியின் முடிவைப்போல அல்லது ஒரு சிறுகதையின் முடிவைப்போல முடித்திருப்பது இன்னும் நேர்த்தி . இக்கதையின் ஆசிரியர் இரண்டு திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்தவராம் . திரைப்படத்துறை குறித்த இவரது சினிமாயுடே இடங்கள் என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவராம் . அது அவரது கதை சொல்லும் பாணியிலேயே நிரூபணமாகிறது . ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு காட்சியின் கதை சொல்லலைப்போல விரிவது அதற்கு சாட்சி .

அந்நாவலின் முக்கிய பாத்திரங்களான யோகான்னாவும்,ராஹேலும்,அன்னியும்,தோமாவும் இந்த கதையை படித்து முடித்த பின்னும் பல வருடங்கள் நம்மோடு வாழ்வதை ஆசிரியரின் எழுத்துக்கள் சாத்தியமாக்கியிருக்கிறது . அதேபோல கதைக்களமும் காசர்கோட்டை சுற்றியிருக்கும் ஏதோ ஒரு கிராமத்தில் நாமும் பல ஆண்டுகள் வாழ்ந்ததை போன்ற ஒரு மனநிலைக்கு ஆட்படுத்துகிறார். அவ்வாழ்க்கை முறையின் ஒவ்வொரு அணுவையும் ரசிக்கலாம் இந்நாவலில். அது அடுப்படி மீன்சோறாகட்டும் அல்லது பைபிள்க்கற்றுத்தரும் பாடசாலை ஆகட்டும் .

இத்தனை மிகச்சிறந்த நாவலை ஏனோ என்னால் ஒரே மூச்சில் படித்துவிட இயலவில்லை . ஒரு வாரமானது படித்து முடிக்க . இத்தனைக்கும் இந்நாவல் வெறும் 222 பக்கங்கள் கொண்ட புத்தகமே . அதற்கான காரணம் மொழிபெயர்ப்பின் கோளாறாகவும் இருக்கலாம் . ஒரு மலையாள டப்பிங் திரைப்படம் பார்க்கின்ற ஒரு உணர்வாகவும் இருந்திருக்கலாம் . மொழிபெயர்ப்பு சமயங்களில் சுவிசேசக்கூட்டங்களில் தரப்படும் துண்டுச்சீட்டுக்களை படிக்கையில் வரும் உணர்வை நாவல் முழுதுமே தருவது வருத்தமளிக்கிறது . மொழிபெயர்ப்பாளர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்நாவலின் சாரம் குன்றாமல் அதன் இயல்பான சுவாரஸ்யத்தோடு கொடுத்திருக்க இயலும் . ஆனால் இந்நாவல் ஏனோ அதனாலேயே ஆசுவாசத்தை தருகிறது . என்னதான் ஒரு மிகச்சிறந்த நாவலைப்படித்தாலும் அது சுவாரஸ்யமில்லாமல் ஆசுவாசமாய் இருந்தால் அது நல்ல வாசிப்பனுபவத்தை தந்திடாது . இந்நூலும் இப்படி ஒரு தகுதியைப் பெற்றுவிடும் அபாயத்தோடே இருக்கிறது .

உங்களைச்சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நீங்கள் தனிமையை உணர்ந்தவரா?

கட்டயாம் உங்களுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தரவல்லது .*****************************************************


நூலின் பெயர் - உயிர்ப் புத்தகம்


ஆசிரியர் - ஸி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் ; வை.கிருஷ்ணமூர்த்தி


விலை - ரூ.120/-


பக்கங்கள் - 224 ( 2 பக்கங்கள் குறிப்புகளுக்காக )


வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.


தொலைபேசி : 044-42009601/03/04


தொலைநகல்(ஃபேக்ஸ்) : 044-43009701


இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே போகலாம் - http://nhm.in/printedbook/648/Uyir%20Puththagam
***************************
இப்போதைக்கு இவ்ளோதான்பா....! ;-)