Pages

08 December 2008

கடலை....கன்னியம்...கட்டுப்பாடு...!!
கடல்

கடலலை

வெளியில் கடலை


கடலலைக்கு இல்லை வேலி

கடலை போடாட்டி உன் வாழ்க்கை (கா)போலி......

- நான் எழுதினதுதான்.நேற்று முப்பாத்தம்மன் கோவிலில் அம்மன் தரிசனம் செய்து , தியானத்தில் ஞானத்தின் பாதையில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே என் மனம் சென்று கொண்டிருந்த போது , திடீரென எனக்கு மிக அருகில் ஒரு ஒலி

''ரெண்டுலதான் ஒன்னத் தொட வரீயா ..........தெனம் ரெண்டுலதான் ஒன்னத்தொட வரிய்யா '' என்று ஒரு கிரகச்சாரமான பாடல் ஒலித்தது , திரும்பி பார்த்தால் ரம்யமான அழகுடன் , சிக் கென இறுக்கமாக நச் என்று கின் எனும் உடலுடன் என் தவம் கலைத்த மேனகை . அவளது மொபைலில்தான் அந்த அழைப்பிசை .

அப்படியெல்லாம் இல்ல ஒரு அபச்சாரமான யுவதி , அவள் மேல் கடும் கோபம் வந்தது , நான் முனிவர் அல்ல , இருந்திருந்தால் அவளை சிம் கார்டாக சாபமிட்டிருப்பேன் . மொபைலை எடுத்து பேச ஆரம்பித்து விட்டாள் . நான் மீண்டும் அம்மன் தரிசனத்தை தொடர்ந்தேன் . அரை மணிநேரமாய் கோவிலை ஒரு 200 முறை சுற்றி சுற்றி பேசிக்கொண்டே இருந்தாள் , எனக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் சிறுவயது முதலே அதிகம் ( அரசாங்கமே ஒட்டுக் கேட்கிறது நான் கேட்டால் தவறா ? ) .

அவளது பாய்பிரெண்ட் போல அந்தப்பக்கம் , மகாமொக்கையாக(என் பதிவுகளை விட ) எங்க வீட்டில் தக்காளி குழம்பு , அம்மா வாங்கி வந்த உருளையில் புழு , பாத்ரூம் போகும் போது தண்ணீர் வரவில்லை என மிக சுவாரஸ்யமாய்(?) பேசிக்கொண்டிருந்தாள் . வெறுப்பாக இருந்தது . பின்தான் புரிந்தது அவள் கடலைகன்னி என்று . காசு கொடுத்தாலும் கடவுளை சுற்றாத இக்கன்னிகள் , இன்று கடலையால் கோவிலையே இருநூறு முறை சுற்றுகிறார்கள் என்றால் அதன் வலிமையை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் .


கடலை வறுத்தல் அல்லது கடலை போடுதல் என்
னும் சொலவடை கடந்த பத்தாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ஒரு வாக்கியம் . இதைக்குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு . இக்கடலை எல்லார்க்கும் மிகப்பிடித்தமானதும் சுவையானதுமானது. இது இளைஞர் ,மத்ய வயதினர் , வயதானவர் , பேச்சிலர் , திருமணமானவர் என்று பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான கடவுளைப் போன்றது .

இது குறித்த அறிந்திடாத மற்றும் நம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட கடலை போட இயலாத இளைஞர்களுக்கும் அதன் பொருள் விளக்கம் தரும் முயற்சியே இப்பதிவு .
கடலை என்பது எந்த வித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்கு தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும் .இக்கடலையாகப்பட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது .இதை ஒரு ஆணும் ஆணுமோ பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது . அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர்வைத்திருக்கிறது .

கடலைகளில் பல வகைகள் உண்டு. உதாரணமாக நிலக்கடலை,பொட்டுக்கடலை ,காரக்கடலை, சுரேஷ் கடலை* etc etc... இப்படி பல பெயர்கள் இருந்தாலும் இக்கடலைகள் வேலை வெட்டி இல்லாமல் அம்மாஞ்சி போல வீட்டிலோ பார்க்கிலோ அல்லது பஸ் ஸ்டான்டிலோ அமர்ந்து கொண்டு முற்றத்தையும் வானத்தையும் பார்க்கும் பலருக்கு ஒரு சும்மா டைம் பாஸ் மச்சியாக இருக்கிறது .

அது போலவே கடலைவருப்பதிலும் பல வகைகள் உண்டு

1.எஸ்எம்எஸ் கடலை


2.மின்னஞ்சல் கடலை


3.சாட்டிங் கடலை


4.தொலைப்பேசிக்கடலை


5.மொபைல்க் கடலை


6.நேரில் கடலை


இப்படி கடலைகள் பல வகைகள் இருந்தாலும் ,அவற்றின் கொள்கை ஒன்றுதான் ,அது எல்லையில்லா இன்பம் .

கடலைப்போடுவது கூட முன் சொன்ன நிலக்கடலை வகையறாக்களை போல வேலை வெட்டியின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் பார்க்கிலும் பீச்சிலும் என எங்கும் வெட்டித்தனமாக இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் . ஆனால் இது சாதாரண வேர்க்கடலை போல சும்மா டைம் பாஸ் மச்சி என்று மட்டும் நினைத்து விட இயலாது .

கடலை போடுதல் சமயங்களில் காதலையும் , கல்யாணத்தையும் , பல கள்ளக்காதல்களையும் தீர்மானிக்கின்றன . கடலைபோட்டே காரியம் சாதிக்கும் இளைஞர்கூட்டமல்லாவா நம்முடையது . இங்கே யாம் காரியம் என்று எதை குறிப்பிடுகிறோம் என்பது காரியம் சாதித்த இளசுகளுக்கும் பெருசுகளுக்கும் புரிந்திருக்கும் .

கடலை போடுதல் கான்பிடன்டை அதிகரிக்கும் என்று சித்தர் பாடல்கள் எதுவும் கிடையாது.

ஆனால் அதுதான் உண்மை . நாம் எத்தனை அதிகமாக நமக்கினியவர்களிடம் கடலை போடுகிறோமோ அத்தனை வேகமாக நமது நம்பிக்கை வளரும் .

கடலை போடுவதில் பல முறைகள் உண்டு . அதற்கு முன் நீங்கள் திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்பது மிக முக்கியம் . பொதுவாகவே திருமணமாகாத கன்னிபையன்கள் வயது வித்யாசமின்றி அனைவரிடமும் கடலை போட்டு மகிழ்வர் . ஆனால் திருமணமானவர்களோ வயது வித்யாசமின்றி கடலை போட்டாலும் சில வரைமுறைகளோடு அதை செய்வர் . அது என்ன வரைமுறைகளென்றால் நாம் பேசும் பெண்மணி நல்ல நாட்டுக்கட்டையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதும் அப்பெண்ணின் வாழ்க்கைமுறை பிற்காலத்தில் அப்பெண்ணுடனான தொடர்பால் நமது இல்லற வாழ்வில் துன்பம் நேருமா என்பதை பற்றியெல்லாம் சிந்தித்து பின்னாலே கடலை போடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் .
திருமணமானவர்கள் மிக ஜாக்கிரதையாக கடலை போடுவது நலம் .

எனக்குத்தெரிந்து ஒரு குடும்பஸ்தர் கிராமத்தில் அந்த ஊர் பால்காரம்மாவிடம் பால் வாங்கப் போய் தினமும் கடலை போட்டு போட்டு அது முற்றி வளர்ந்து விருட்சமாகி இப்போதெல்லாம் அவரே அந்த அம்மையாரின் வீட்டில் பால் கறக்க துவங்கி விட்டார் . அவர்கள் வீட்டில் மொத்தமாய் 10 பசு மாடுகள் . அதனால் திருமணமானவர்கள் ஜாக்கிரதை .

இன்னொரு நண்பர் ஒருவர் மாதத்திற்கு 10000 ரூபாய் வரை தனது மொபைலுக்கு பணம் கட்டுகிறார். எல்லாம் கடலை செயல் .

இவ்விடயத்தில் பெண்கள் மிக கெட்டிக்காரத்தனமாய் மாதந்தோறும் 20000 எஸ்எம்எஸ்கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர் . அது தவிர மினிமம் பேலண்ஸ் மெயின்டயின் செய்து மிஸ்டுகால் மங்கைகளாகவும் திகழ்கிறார்கள் . இதனால் அவர்களுக்கு பொருளிழப்பு அதிகமில்லை . இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிந்து விடுகிறது .

நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும் . போனிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை , நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில விநாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரிலோ அது கிடையாது , அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும் . அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும் . இல்லையென்றால் விடுங்கள் வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள் .

இருந்தாலும் நமது சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுக்காக .

சிறப்பாக கடலை போட சில வழிகள் :

1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .

2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.

3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .

4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )

5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )

6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )

7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது . ( உ.தா - லைசன்ஸ் இன்றி போலீசிடம் மாட்டிக்கொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவே கூடாது )

8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .

இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .

கடலை போட மிக முக்கியமானது , எதிர்பாலினத்தேர்வு (அதாவது நல்ல டுபுரி ) . அது அனைவருக்கும் வாய்க்காது . அதற்கு கடினமான உழைப்பும் நேர்மையும் வாய்மையும் நேரம் தவறாமையும் கொஞ்சூண்டு பர்சனாலிட்டியும் வேண்டும் . இவையெல்லாம் இருந்தும் உங்களுக்கு நல்ல ஃபிகர் அமையவில்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு நல்ல கோவிலில் வாரமிருமுறை என 108 வாரம் முருகப்பெருமானுக்கு நெய்விளக்கு போட்டு பூஜை செய்யவும் நல்ல பலன் கிட்டும் . (நான் கோவிலுக்கு போனதன் காரணம் இப்போது புரிந்திருக்கும் .) . நெய்விளக்கு கிடைக்கவில்லையென்றால் எழுமிச்சைவிளக்கு உசிதம் .


ஒரு சுய விளம்பரம் :

என்னிடம் கடலை போட்டு அறிவை வளர்க்க விரும்பும் வாசகர்கள் ( பெண்கள் மட்டும் )
என் மின்னஞ்சல் முகவரிக்கு , உடனே ஒரு மின்னஞ்சலை தட்டிவிடவும். முதலில் வருபவர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் .


இச்சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே .

CONDITIONS APPLY .


ஒரு பிற்சேர்க்கை :


*சுரேஷ் கடலை என்பது ஒருவகை கடலை , அது வெளியில் கருப்பு நிறத்தில் சொறசொறப்பாகவும் , உள்ளே மஞ்சளாக வழுவழுப்பாகவும் தோற்றமளிக்கும் . அதன் கருத்த தோல் உவர்ப்பாக இருக்கும் . அதனை கோவையில் சுரேஷ் கடலை என்று அழைப்பர் . அதற்கு பிற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை . அதை தெரிந்து கொண்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை . ஏனென்றால் எனக்கு அக்கடலை சுத்தமாய் பிடிக்காது .###########################