Pages

07 February 2009

நான் கடவுள் - குரங்குத்தவம்!சில வருடங்களுக்கு முன்னால் கோவையிலிருந்து சென்னைக்கு ஒரு இன்டர்வியூவிற்காக ஸ்பென்சர் பிளாசாவிற்கு வர நேர்ந்தது. மதியவேளையில் எங்கே சாப்பிடுவது எனத்தெரியாமல் ஸ்பென்சருக்கு எதிர்புறமிருக்கும் கையேந்திபவனில் சாப்பிட முடிவெடுத்தேன். இரண்டு பரோட்டாக்களை வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க , ஒரு முடமான பிச்சைக்கார முதியவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் என் அருகில் வந்து பார்த்துக்கொண்டே இருந்தார். எனக்கு ஒரு மாதிரி பரிதாபமாக இருந்ததால் அண்ணே ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்டேன். அத்தனை நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென உத்தஸ்தாயியில் கத்த ஆரம்பித்தார் '' தேவிடியா பசங்களா , ங்கோத்தா பாடுங்களா , உங்களாலதாண்டா எங்களுக்கு கஷ்டம் , உன்ன மாதிரி நாதாரிங்கலாம் இங்க சாப்புடறதாலதாண்டா இந்த பு.!@!#@ பரோட்டோ வெலைய ஏத்திட்டான் .. @#%&@$&@% &*&$$*$#* '' என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். அப்பொதுதான் புரிந்தது அங்கிருந்த பலரும் பெரிய கம்பேனிகளில் சிறிய வேலையில் இருப்பவர்கள் என்று. அதற்கு மேல் சாப்பிட முடியாமல் அரைபரோட்டாவோடு அங்கிருந்து நகர்ந்தேன். ஆனால் அந்த பிச்சைகார முதியவரின் கதறல் மட்டும் ஒரு வாரத்திற்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த நபரின் ஆற்றாமையை புரிந்து கொள்ள பல இரவுகளின் தூக்கத்தை விலையாய் தரநேர்ந்தது.


பிச்சைக்காரர்களின் வாழ்க்கை ரகசியமானது , அவர்களைப் பற்றி யாருக்குமே அதிகமாய் தெரிந்திருக்காது. உங்கள் வீடிருக்கும் தெருமுனை பிச்சைக்காரன் எந்த ஊர் , அவனது இருப்பிடம் எது அவனுக்கு பிச்சையாய் வரும் பணம் எங்கே போகிறது யாருக்கும் தெரியாது. அவர்களது வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் , மகிழ்ச்சி கண்ணீர் புனைவு , நகைச்சுவை எல்லாமும் இருக்கும் . ஆனால் அவர்களை புரிந்து கொள்வது மிகக்கடினமான ஒன்று. கடைநிலைமனிதர்களின் உலகம் நாம் அறிந்திராதது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது அன்னியமாக தெரிந்தாலும் அவர்களோடு அருகில் இருந்து பழகினால்தான் தெரியும் அவன் தெருவில் பிச்சை எடுப்பதும் நாம் தெருவைத்தவிர மற்ற எல்லா இடங்களிலும் பிச்சை எடுப்பதும். அவன் காசுக்கு மட்டும்தான் பிச்சை எடுப்பவன்.


உங்கள் வீட்டுக்கதவையோ கேட்டையோ தட்டும் கண்ணில்லா பிச்சைகாரரை உங்களுக்கு பிடிக்குமா ? , உக்கிரமான வெயிலில் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் போது கையில் தட்டோடு உங்களை நோண்டி நோண்டி பிச்சை எடுக்கும் காலில்லா முதியவருக்கு போட கையில் 2 ரூபாய் சில்லரை இல்லாமலிருந்தால் அவரை எப்படி அணுகுவீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யும் கடையில் வியாபாரமில்லாமல் இருக்கையில் தெருத்தெருவாய் கடைகேட்கும் திருநங்கைகள் வாசலில் நின்று காசு கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நான் கடவுள் திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது அப்படி ஒரு மனநிலைதான் இருந்தது.

ஸ்ஸ்ப்பாடா ஒரு வழியாக வெளிவந்துவிட்டது நான்கடவுள் திரைப்படம். பாலாவும் பல வருடங்களாக ஆர்யாவைப்போல ஊடகங்களில் பெயர்வராத ஆயிரமாயிரம் பேரின் நொங்கை பிதுக்கி வேலை வாங்கி ஒரு தவம் போல ஒரு சிற்பியைப்போல செதுக்கி செதுக்கி படமெடுத்திருக்கிறார். பாலாவின் பல வருடத்தவம் நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. திரைப்படம் திரையரங்குகளில்.


பாலா படங்கள் பொதுவாகவே விளிம்புநிலை மனிதர்களையும் , சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்வியலையும் சார்ந்து அதைக்குறித்த சமூகத்தினை சுற்றி நிகழுபவையாக இருக்கும். அவரது எல்லா திரைப்படங்களிலும் இருவேறு பரிமாணங்களில் இயங்கும் இரண்டு கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைக்கதையாக்கி தந்திருப்பார். இந்த படத்திலும் இரண்டு கதைகள் , ஒன்று காசியில் அநாதையாக்கப்பட்ட சிறுவன் அகோரி( சாமியார்கள் பலவிதம் அதில் இதுவும் ஒருவிதம்) மாறியிருக்க அவனை மீட்க முயலும் தந்தையும் , தன்னூருக்கே திரும்பி வரும் அவன் சமுதாயத்தை எதிர்கொள்ளுதலும் , இன்னொன்று குருட்டு பிச்சைக்காரியும் அவளுக்கு பின்னால் இயங்கும் ஒரு பிள்ளை பிடிக்கும் கும்பல் அல்லது பிச்சை எடுக்கவைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் மற்றும் அங்கே பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பிச்சைக்காரர்களில் ஒரு சாரரின் (டீம்?) வாழ்க்கை முறை .


ஆயிரம் பக்கங்களில் எழுதவேண்டிய ஒரு புதினத்தை இரண்டைரை மணிநேரத்தில் அடைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் 500 பக்கங்கள் அல்லது அரைக்கிணறுதான் தாண்ட முடிந்திருப்பது வேதனை. இரண்டு கதைகளையும் அதற்கான தளத்தையும் முடிவு செய்துவிட்டு எதற்கு முக்கியத்துவம் தருவது என குழம்பிப்போய் இரண்டையும் சொதப்பியிருக்கிறார் பாலா. காசியில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் படமாக்கியதாய் பேட்டிகளில் அறிய முடிந்திருந்தது. ஆனால் படத்தில் அரைமணிநேரம் கூட அந்த காட்சிகள் வராமல் போனது ஏமாற்றம். காசிக்காட்சிகள் தமிழ்சினிமாவிற்கு மிகவும் புதியது அதை இன்னும் கொஞ்ச நேரம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ அக்காட்சிகள் முடிந்து தேனீ காட்சிகள் தொடங்கும் போது ஏனோ தோன்றியது. அதேபோல வன்முறைக்காட்சிகள் இதுவரை வெளியான பாலாவின் படங்களில் இது உச்சம். வசன வன்முறை , காட்சி வன்முறை என விதவிதமாய் காட்டுகிறார்.


படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா, ஓம் சிவோவோம் என துவங்கும் அந்த ஆரம்ப பாடலை முன்னால் ஆடியோவாக மட்டும் கேட்ட போது திருவண்ணாமலை கிரிவலப் பாடலைப்போல இருந்தது , ஆனால் காட்சியாய் விரிகையில் அதன் பலம் அடேங்கப்பா!. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ஏற்கனவே பலரது மனதையும் உடைத்து நொறுக்கிக் கொண்டு இருந்தாலும் காட்சியாக பார்க்க முடியவில்லை . என்னால் இன்னொரு முறை அந்த பாடல் காட்சியை டிவியில் கூட பார்க்க இயலுமா தெரியவில்லை. மற்ற பாடல்கள் எதுவும் திரைப்படத்தில் வரவில்லை. நீளம் கருதி வெட்டியிருக்கலாம். பிண்ணனி இசை - மிரட்டல் , அசத்தல் இத்யாதி இத்யாதி . ஆனாலும் இளையராஜா இன்னும் சோகக்காட்சிகளில் ஆதிகாலத்து வயலின் பீஜியத்தையே வாசிப்பது நெருடல் . மற்றபடி பல இடங்களில் நம் உடல் நடுங்கும் அளவுக்கு இசை நம்மை ஆட்கொள்ளுகிறது. இது இளையராஜா இசையமைத்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.


அதுவும் உடுக்கையின் ஒலியும் அதன் நாதமும் படம் முடிந்தும் காதிற்குள் குய் குய் என ரீங்காரமிடுகிறது.


ஆர்யாவின் இரண்டு வருட உழைப்பு , அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது. படம் முழுக்க நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறார் , கட்டைக்குரலில் ஜெய் போலேநாத் என்று கத்துகிறார், கஞ்சா அடிக்கிறார் , விரைப்பாகவே வலம் வருகிறார் , எல்லோரையும் வாய்க்கு வந்த படி திட்டுகிறார் , நான் கடவுள் அகம் பிரம்மாஸ்மி என்று கூவுகிறார் , திடீரென தலைகீழாய் நின்று யோகாசனம் செய்கிறார், சமஸ்கிருதத்தில் பத்தி பத்தியாக (ஜெமோ வலைப்பதிவு போல) யாருக்குமே புரியாதது போல பேசுகிறார். இதெல்லாம் போதாதென்று படம் நெடுக கோவணத்தைக் கட்டிக்கொண்டு விசுக்கு விசுக்கு என்று யாரையோ அடிக்கச் செல்வது போலவே நடக்கிறார். ஆர்யாவை பார்த்தால் பயம் வரவேண்டும் என பாலா நிறைய மெனக்கெட்டிருக்கிறார் . பாவம் ஆர்யா அவரால் முடிந்தவரை முயன்றிருக்கிறார் ... படத்திலும் ஆர்யாவின் காட்சிகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பதாய் தெரியவில்லை , ஆங்காங்கே தென்படுகிறார் , இடைஇடையே வந்து மேற்ச்சொன்ன சில உட்டாலக்கடி வேலைகள் செய்கிறார். ஆனால் எதுவும் உபயோகமில்லை ..கடைசியில் மீண்டும் காசிக்கே செல்கிறார்.. தல அஜித்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் .


பூஜா பெண்ணே ரோசாப்பூவே என்று கவிதை எழுதலாம் , மிக நேர்த்தியான இயல்பான நடிப்பு . பாலாவிடம் ஒரு பிடி மணலை அள்ளிக்கொடுத்து இதை எப்படியாவது நடிகனாக்குங்கள் என்று சொன்னால் கூட அதையும் நடிக்க வைத்துவிடுவார் போல... பலே ஆள்.

ஏனோ பூஜா பிச்சை எடுக்கும் போது பாடும் காட்சிகளில் பழைய பாடல்களை ஓடாத ரேடியோவில் போட்டது போல பிண்ணனி அமைத்தது மகா கேவலாமாக இருந்தது (இளையராஜாவின் மற்றுமொரு சொதப்பல் ) . ஒரு இயல்பான கதைசொல்லலில் சினிமாத்தனத்தை நுழைத்தது போன்ற உணர்வு. இதற்கு பூஜாவின் குரலிலேயே (படு மோசமான குரலாக இருந்தாலும்!) அப்படியே பதிந்திருக்கலாம் .


இதுதவிர பிச்சைக்கார கம்பெனி நடத்தும் தாண்டவன் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுகம். இத்தனை மோசமான ஒரு வில்லனை தமிழ்சினிமா இதுவரை பார்த்திருக்குமா தெரியவில்லை. அவரது வசன உச்சரிப்பும் உடலசைவு மொழியும் இயல்பின் உச்சம். வில்லன்களுக்கான எல்லா அம்சமும் நிரம்பி வழிகிறது அந்த ஓல்லிக்குச்சி உடம்பில். மறைந்து போன நம்பியார் பி.எஸ்.வீரப்பாவுக்கு பின் குழந்தைகள் பார்த்தால் பயந்து ஓட இன்னொரு பூச்சாண்டி புள்ளபுடிக்கறவன் கிடைத்து விட்டார்.


அதே போல பிச்சைக்கார குழு ஒன்றை சித்திரித்திருக்கிறார் இயக்குனர். அதில் ஒரு சிவன் வேடமிட்ட குள்ளக்கிழவன் , அம்மனாய் ஒரு கூனி , அகோரமான முகம் கொண்ட காளி , எழுந்து நிற்கக்கூட இயலாத துடுக்கு பேச்சு சிறுவன் , இவர்களை கண்கானிக்கும் முருகன் என்னும் அடியாள் , முருகனை காதலிக்கும் இடுப்பொடிக்கப்பட்ட இளம்பெண் , இவர்களுக்கு எடுபிடியாய் ஒரு திருநங்கை , இன்னும் பல பல பாத்திரங்கள் படம் முடிந்தும் மனதிற்குள் நிலைகொள்கின்றன. இவர்களில் பலரும் நடிகர்கள் அல்ல என்றும் பலரும் நிஜபிச்சைக்காரர்கள் என்றும் அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றாலே பரிதாபம் என்னும் வழியிலிருந்து விலகி அவர்களது மகிழ்ச்சியையும் காட்ட முயன்றது பாராட்டுக்குரியது.


பகடிக்கு பெயர் போனவர் ஜெயமோகன் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்திற்கு அவர்தான் வசனம். தொப்பி எனும் கட்டுரையால் சினிமாக்காரர்களால் டவுசர் கிழிக்கப்பட்டவர் . அந்த வன்மமோ என்னவோ அதை மனதில் வைத்துக்கொண்டு பல இடங்களிலும் சினிமாவை சகட்டுமேனிக்கு நையாண்டி செய்திருக்கிறார் தன் வசனங்களால். எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்னும் பாடலுக்கு நடனமாடுகிறார் . அது முடிந்தது இப்படி வருகிறது வசனம் எம்.ஜி.ஆரே சொல்வதாய்.. '' வெறும் பாட்ட மட்டும் கேட்டுட்டு அத புரிஞ்சுக்காம எனக்கு ஓட்ட மட்டும் போட்டுட்டீங்க '' என்று. அதேபோல தனது ஹிந்துத்துவா கொள்கையிலிருந்தும் விலகாமல் பாலாவின் படமென்பதால் அடக்கி வாசித்து மிக நுணுக்கமாக தான் கொண்ட கொள்கையை பரப்ப முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தில் சில இடங்களில் எல்லா புகழும் இறைவனுக்கேவும் , ரட்சிப்பும் உபயோகமில்லாதது என்பதனை உணர்த்தியிருக்கிறார் ( படம் பார்த்து புரிந்து கொள்ளுங்க ) . ஜெமோ நாமம் வாழ்க.. அவர் புகழ் வளர்க..

படத்தின் கேமரா , அத்தனை சிறப்பாய் இருக்கிறது , கலர் ஃபுல் ஆனால் இந்த கதைக்கு இத்தனை நிறப்பிரிகைகள் அவசியம்தானா? ( சேதுவில் மனநிலைபாதிப்பு குறித்த காட்சிகளில் ஒரு அழுக்கு பச்சை நிறத்தை உபயோகித்திருப்பார் ) இதற்கு முன் இத்தனை கலர்புல்லாய் சந்திரமுகி பார்த்தது. எடிட்டிங் யாருப்பா? ஜிக் ஜிக் ஜிக் என்று காட்சி மாற்றத்தை கலக்கலாக செய்திருக்கிறார். அதுவும் சண்டை காட்சிகளில் மிதமிஞ்சிய எடிட்டிங்.சபாஷ் ஆர்தர் வில்சன்.


படம் முடிந்ததும் எனக்கு முதலில் தோன்றியது '' ஏன்டா ங்கோத்தா இப்படி படம் எடுக்கறீங்க .. தே... @%@#%$&%@$&$@ '' என்பதே '' அத்தனை பாதிப்பை இந்தப் படம் நம்முள் ஏற்படுத்தித் தொலைக்கிறது. ஆனால் அந்த பாதிப்பு மிக கொடுமையான வன்முறையால் நிகழ்ந்தது என்பது மறக்கவும் மறைக்கவும் முடியாதது. பாலாவின் படங்கள் எல்லாமே உங்களில் இருக்கும் பைத்தியத்தை தட்டி எழுப்பி அதற்க்கு சில மணிநேரங்கள் தீனி போட உதவும் வகைப் படங்கள். இப்படம் அந்த பைத்தியத்தை அழவைத்து ரசிக்கிறது. அவரது முந்தைய படங்கள் அதிகம் பேசப்பட இதுவே காரணமாக இருக்கலாம்.

இந்த படத்தின் பிளஸ் - காசிக்காட்சிகள் , மிகச்சிறந்த கதை , ஜெமோவின் ரேசர் ஷார்ப் வசனங்கள் , எடிட்டிங் , பூஜாவின் நடிப்பு , ஆர்யாவின் உழைப்பு , இளையராஜா , பாலாவின் இயக்கம்

இப்படி பல பிளஸ்கள் இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் திரைக்கதை , மற்ற எல்லா விடயத்திலும் கவனம் செலுத்திய இயக்குனர் இதில்தான் அதிகமாய் கவனம் செலுத்தவேண்டும் என்பதை மறந்து போனதேன் என்று புரியவில்லை.. திரைக்கதையில் அத்தனை ஓட்டைகள் , ஓட்டைகளின் அளவு அதிகமாகி வெறும் சல்லடையாய்தான் போனது திரைக்கதை அமைப்பு. பாலாவின் முந்தைய படங்களில் இருந்த நேர்த்தியான பேலன்ஸ்டு திரைக்கதை வடிவமைப்பு இந்த படத்தில் மிஸஸிங். ரியாலிட்டியோடு ஒரு படம் எடுப்பது என்றுமுடிவான பின் ஏன் பல சினிமாத்தனமான காட்சியமைப்புகள் என்றும் புரியவில்லை.

அடுத்து விளிம்பு நிலை மனிதர்களை இதைவிட கொடுமையாய் யாருமே காட்டியிருக்க முடியாது , அதில் கொஞ்சூண்டு கருணை காட்டியிருக்கலாம். காட்சி வன்முறை கண்ணை மறைக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் , கர்ப்பிணிகள் , பலவீனமான இதயம் கொண்டோர் இந்த படத்தை பார்க்காமல் இருந்துவிடுவது உத்தமம் .

பாலாவின் படங்களில் பொதுவாக படம் முடிந்து வெளியே வரும்போது பேய் பிடித்தது போலிருக்கும். இந்த படத்தில் கடவுள் பிடித்தது போலிருந்தது.

இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே. இதற்குமுன் இதைப்போல பசி,சோறு போன்ற படங்களில் இதே போன்ற மக்களை காட்டியிருந்தாலும் நான் கடவுள் கான்செப்ட் மட்டும் புதுசு.

நீங்கள் கடவுளை ஒரு வேளை காண நேர்ந்தால் உண்டாகும் மிரட்சியும் அதிர்ச்சியும் இந்த படமும் உங்கள் மனதில் உண்டாக்கும் , அதற்கான காரணங்கள் வன்முறையாய் திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும்.