Pages

11 February 2009

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் கடவுளர்கள்!!


ஒரு சிறைச்சாலையில் வரிசையாக சிறையறைகள் அல்லது செல்கள். பலமான இரும்பு கேட்டு அதைவிட வலிமையான துருப்பிடித்த பூட்டு. ஒரு பத்துக்குபத்து அறை அதிலேயே கழிவறை , படுக்கை . தனியொருவன் மட்டுமே தங்க இயலுமதில். சுவற்றில் விநாயகர். அவரும் அவனுடன் சிறைக்கம்பிகளுக்கு பின்னால். அடுத்த செல்லில் சாய்பாபா . அதற்கடுத்ததில் நாராயணன் . அதற்கடுத்ததில் வெங்கடாஜலபதி. அடுத்ததில் இயேசு. இறைவன் சூழ்ந்திருந்தான் அந்த சிறைமுழுக்க... கைதிகளோடு.
''சார் நீங்க ஜெயிலுக்கு போயிருக்கீங்களா'' இப்படி யாராவது கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். இனிமேல் சென்னையில் பாதி பேரின் பதில் ஆம் என்பதாகத்தான் இருக்கும். சென்னை சென்டரல் ரயில்நிலையத்தை ஒட்டியுள்ள சென்ட்ரல் ஜெயில் இந்த வாரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த சிறைச்சாலை மூடப்பட்டு அங்கிருந்த கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதன் பின் இதோ இன்னும் பத்து நாட்களில் முழுதும் இடிக்கப்பட இருக்கிறது. சென்னை ரயில்நிலைய விரிவாக்கத்திற்காக அது இடிக்கப்பட உள்ளதாய் அறிய முடிகிறது.

சுமார் முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று அந்த சிறைச்சாலையை சூழ்ந்திருந்தனர். எங்கும் மக்களின் முகத்தில் ஆச்சர்ய ரேகை. டே இங்க பார்ரா இதான்டா கைதிங்க குளிக்கற இடம், அண்ணே இத பாருங்க இதான் கைதிகளுக்கு சமைக்கற இடம் , இங்கப்பார்ரா இங்கதான் கைதிங்க மரவேலை செய்வாங்க போலருக்கு, மகாநதி சினிமால வருமே! இதுதான் பெரும்பாலான மக்களின் பேச்சாக இருந்தது.

தமிழ்சினிமா இயக்குனர்கள் யாருமே சிறைச்சாலையை அதிகம்ப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது அச்சிறையை ஒரு முறை வலம்வந்தபோதுதான் தெரிந்தது. தமிழ்சினிமாவின் மிகச்சில இயக்குனர்களே(மகாநதி,பாய்ஸ்,பிதாமகன்) சிறைச்சாலையை அதன் இயல்போடு காட்டியிருந்தது தெரிந்தது. இதுவரை சிறை என்பது ஏதோ பள்ளிக்கூடத்தைப் போல , மருத்துவமனையைப்போல ஒரு அரசாங்க கட்டிடமாகவே எண்ணி வந்த பலருக்கும் அது கட்டிடத்தையும் தாண்டிய ஒன்று என்பது நிதர்சனம்.

பலவித செல்கள் , ஒவ்வொன்றிக்கும் ஒரு கதை இருந்திருக்கும். ஒவ்வொரு அறையிலும் எத்தனை இரவுகள் தனிமையில் தன் குற்றத்தை நினைத்து வருந்தியிருப்பான். தப்பிக்கலாம் என்று திட்டமிட்டிருப்பான். நாளை விடிந்தால் தூக்கென்று நினைத்து உறங்காமல் விழித்திருந்திருப்பான். தன் குடும்பம் என்னானதோ என்று ஏங்கியிருப்பான். எத்தனை நிரபராதிகளை பார்த்திருக்கும் அந்த சிறையறைகள். அரசியல்வாதி முதல் அரைக்காசு திருடியவன் வரை எத்தனை எத்தனை மனிதர்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு சிறைக்கதவையும் தொட்டுப்பார்க்கையில் ஏதோ ஒரு ஓலம் காதினூடே ...




பெரும்பாலான சிறைக்கைதிகள்( ஆயுள் தண்டனை, அல்லது சில ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள்) பலரும் மிகுந்த இறைநம்பிக்கையுடையவர்களாய் அறியமுடிந்தது. எல்லா சிறையறைகளிலும் சாய்பாபா , விநாயகர் முதல் இயேசு வரை எல்லா இறைவர்களும் காலண்டரிலும் கரிக்கட்டை ஓவியத்திலும் வீற்றிருந்தனர்.

நேற்று அங்கே பார்வையிட்ட பொதுமக்களில் பலரும் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுப்பதைக்காண நேர்ந்தது. மிக ஆச்சர்யமாக இருந்தது அவர்களது செயல். ஒரு செத்த புலிக்கு பின்னால் நின்று படம் ஒத்த மனநிலை அதுவல்லவா? , நம்மால் இயங்குகிற ஒரு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்க இயலுமா ? நமக்கெல்லாம் புலிகளை சந்திக்கும் வாய்ப்பில்லையோ என்னவோ? நானும் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டு ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

அங்கே கூடியிருந்த பெரும்பாலான மக்களுக்கு கலைஞரும் ஜெவும் தங்கியிருந்த சிறைச்சாலையை பார்வையிட மிகுந்த ஆவல் இருந்ததாய் தெரிந்தது. இதில் சிறைமேற்பார்வையாளரின் அறையில் யாரோ கரிக்கட்டையால் கருணாநிதி அறை என எழுதிவிட்டு சென்றிருக்க கூட்டம் மொத்தமும் அந்த அறையில். மச்சி இங்க பார்ரா இங்கதான் கலைஞர் ஒன்னுக்கு போயிருப்பாரு, இங்க பார்ரா இங்கதான் கலைஞர் டிவி பார்த்திருப்பாரு , கலைஞர் என்ன டிவிடா பார்த்திருப்பாரு ? . இப்படி இன்னும் சிலபல உரையாடல்கள் காதில் விழுந்தன.

அச்சிறையில் இதற்குமுன்னே கைதியாக இருந்திருந்த பலரையும் காண முடிந்தது. சிலர் தாங்கள் இருந்த சிறையறையை பார்த்து கண்ணீர் சிந்தியது மனதிற்கு மிக இறுக்கமாய் இருந்தது. இன்னும் சிலர் தங்கள் குடும்பத்தினரோடு வந்து சிறைச்சாலையின் பல இடங்களையும் சுற்றிக்காட்டி அந்தந்த இடங்களில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை சொல்லிக்கொண்டிருந்தது அந்த இறுக்கத்தை குறைத்தது.

கல்லூரிகள் பல மூடியிருப்பதால் பல மாணவர்களை காண முடிந்தது. சிலர் சிறைச்சுவர்களில் தங்கள் பெயர்களை கரிக்கட்டைகளால் எழுதிக்கொண்டிருந்தனர். சிறைச்சாலையின் தியான மண்டபத்தை ஒட்டியிருந்த நூற்றாண்டு ஆலமரம் ஒன்றில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு சிறைச்சாலைக்கு இதெல்லாம் மிக புதிதான விடயமாக இருந்திருக்கும். அதேபோல உயரமான மதில் சுவர்களை பார்த்த பலரும் எப்படி ஆட்டோ சங்கர் இதிலிருந்து தப்பினான் என்பதாகவே இருந்தது.

சிறைக்கு வெளியே அமர்ந்திருந்த அச்சிறையில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியிடம் பேசியபோது அவர் சொன்னது , கலைஞருக்கு ஜெவுக்கு என பிரத்யேக அறையெல்லாம் ஒன்றுமில்லை , அப்போதைய சூழலில் எந்த அறை சுத்தமாக ஓரளவுக்கு நல்லதாக இருக்கிறதோ அதில் தங்கவைப்பதே வாடிக்கை என தெளிவுப்படுத்தினார். அப்போதுதான் உணர முடிந்தது சிறைச்சாலை என்ன கோடை வாசஸ்தலமா விஐபிக்களுக்கு சிறப்பு அறை ஒதுக்கவென்று.

சிறைச்சாலையின் கைதிகளை விட சிறைச்சாலையினுள்ளே வேலை செய்யும் காவலர்களின் நிலையை நினைத்தபோதே கதிகலங்கியது. நம்மால் ஒரு இரண்டு மணிநேரம் கூட அந்த இறுக்கமான சூழலில் இருக்க முடியவில்லை. அதனாலே என்னவோ அங்கே பணிபுரியும் பலரும் மூர்க்கமானவராய் இருந்திருக்கலாம்.

ஒரு இடத்தில் மிக அதிக கூட்டமிருந்தது, அது தூக்கிலிடும் இடம். கூட்டம் அதிகமாய் இருந்ததாலும் சிறைச்சாலையை சுற்றியதால் மனதில் தேவையில்லாத ஒரு அதீத மன இறுக்கமும் அதை வேண்டாம் என தடுத்தது. பார்க்கவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை.

1837ஆம் ஆண்டுமுதலே இயங்கிவரும் இந்த சிறைச்சாலை ஏன் இடிக்கப்படுகிறது என்பது புரியாத புதிர். அச்சிறையை ஒரு அருங்காட்சியகமாகவோ அல்லது சினிமா படப்பிடிப்புக்காகவோ உபயோகித்திருக்கலாம். இது போன்ற நூற்றாண்டு கட்டிடங்களை இடிக்கக்கூடாது என ஒரு சட்டமே இருப்பதாக தோழர் ஒருவர் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது நிச்சயம் ஒரு அருங்காட்சியகமாக நம் வருங்காலம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இன்னும் பத்துநாட்களில் இடிக்கப்பட இருக்கும் இந்த கட்டிடங்கள் இன்று மட்டும் மக்கள் பார்வைக்கு கடைசியாக..