Pages

21 April 2009

சரத்பாபு என்றொரு கைப்புள்ள!


சரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன். தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு வேறு ஆள் என்று.

ஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது. யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர். இந்தியாவை முன்னேற்ற! பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.

ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.

கட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.

இதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா? . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள்? அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா.. தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை. எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நடைமுறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.

அதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது. சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று. விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.

ஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.

அவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.

காதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்கு தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.

இது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.

இதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.

அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.

ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.