Pages

03 June 2009

வாழ்க கலைஞர்! வாழ்க பைத்தியக்காரன்!




கலைஞருக்கு இன்று பிறந்தநாளாம். அவருக்கு அண்டார்டிகா அதிமுக சார்பாக சபை நாகரீகம் அறிந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் நூறாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம். கலைஞர் பிறந்தநாள் வாழ்த்தாக ஜெகத்ரட்சகன் எழுதிய கவிதைதான் இருப்பதிலேயே சிறந்ததாக உடன்பிறப்புகள் அதை வலையுலகமெங்கும் பிரசுரித்து வருகின்றனர். நானும் படித்துப்பார்த்தேன் சுமாரான கவிதைதான். இதை விட நல்ல கவிதையை வலையுல உடன்பிறப்பே எழுதிவிடுவார்.வாழ்க கலைஞர். வாழ்க திமுக

இன்று டைம் ஆப் இந்தியா செய்தியில் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில்(பாலாஜி மருத்துவக்கல்லூரி) சேர 20 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. ராமச்சந்திரா கல்லூரியில் இதை விட அதிகமாக அதாவது 40 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். இது திமுகவின் மீது அபாண்டமாக பழிசுமத்த நடத்தப்பட்ட நாடகம் என திமுகவினர் நாளை அறிக்கைகள் விடலாம். இன்று தலைவருக்கு பிறந்தநாள் அந்த வேலைகளில் உடன்பிறப்புகள் பிஸி. வாழ்க ஜனநாயகம்.வாழ்க ஜகத்ரட்சகன்.

சாருநிவேதிதா ஒரு அஹிம்சை கட்டுரை எழுதினாலும் எழுதினார். பதிவுலகமே பற்றி எரிந்தது. விட்டால் உருட்டு கட்டைகளாலும் சோடா பாட்டில்களாலும் அடித்துக்கொண்டு ரத்தக்களறி ஆகிவிடும் போல் இருந்தது. அதிலும் ஆசிப் அண்ணாச்சி கோதாவில் இறங்கி லுங்கியை உயர்த்திக்கொண்டு டேய் என சைக்கிள் சைனை சுழற்றியது நன்றாக இருந்தது. அவரது படத்தை லக்கிலுக்கு வீரப்பன் படத்தோடு இணைத்து காமெடி செய்து கடைசியில் சுபமாக சப்பென்று முடிந்து போனதாய் தெரிகிறது. வாழ்க சாரு வாழ்க அஹிம்சை

சக பதிவர் நண்பர் எனது ஆருயிர் அண்ணன் பைத்தியக்காரன் என்கிற சிவராமன் அவர்கள் உரையாடல் எனும் பதிவர்கள் அமைப்பின் சார்பாக உலகசினிமாக்களெல்லாம் ( இலவசமாக )பதிவர்களுக்கு மட்டும் காட்டப்போவதாக அறிவித்திருக்கிறார். அது சமயம் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு கிம்கிடுக் அவர்களின் படமான ஸ்பிரிங் சம்மர் பால் வின்டர் எனும் திரைப்படம் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பதிவர்களுக்காக பதிவர்களால் பதிவர்களுக்கென்றே பிரத்யேகமாக நடத்தப்படுவது. அதனால் பதிவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( படம் எந்த வித கட்டும் இல்லாமல் அப்படியே திரையிடப்படும் என்பது கூடுதல் செய்தி ) நீங்கள் பதிவராக இல்லையென்றால் உடனடியாக ஒரு வலைப்பூவை ஆரம்பிக்கவும் உங்களுக்கு என் பக்கத்திலேயே ஒரு சீட்டு புக் பண்ணி வைத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு காத்திருக்கிறேன். வாழ்க பைத்தியக்காரன் வாழ்க கிம்கிடுக்

ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் இலவசமாய் தந்த கோபி கிருஷணனின் சில புத்தகங்களை படிக்க நேர்ந்தது. அதிலும் டேபிள் டென்னிஸ் புத்தகம் ஏற்படுத்திய அதிர்வுகளை எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. ஐநூறு ஜீரோ டிகிரி நாவலின் அதிர்வுகளை விட பல மடங்கு அந்த குறுநாவல் உண்டாக்கி செல்கிறது. அது குறித்து விமர்சனம் எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை என்று நினைப்பதால் இவ்ளோ போதும். இனி கோபி கிருஷ்ணனை தேடிப்படிப்பேன் என்பது மட்டும் நிதர்சனம். வாழ்க சுந்தர் வாழ்க கோபி கிருஷ்ணன்.

மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்து திமுக தமிழகத்தில் பாமகவை தோற்கடித்து விட்டதாக அந்த கட்சியினர் ஊரெல்லாம் ஓப்பாரி வைத்து வருகின்றனர். எனக்கு தெரிந்த வரை இம்மாதிரி இயந்திரங்களில் மோசடி செய்வது மிக கடினமான ஒன்று. அதிலும் இது போன்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்து மட்டுமே வரும் சூழலில் இது எந்த அளவுக்கு உண்மையானது என்பதே சந்தேகமான ஒன்றுதான். மற்றபடி பாமக தோற்றதற்கான காரணம் தமிழக மக்களே என்பது எங்கள் ஏரியா குட்டீஸுக்கு கூட தெரியும். வாழ்க பாமக வாழ்க தமிழக மக்கள்

மக்களவை சபாநாயகராக இன்று பதவியேற்கும் மீராகுமாருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் இவர். இனியாவது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆகி அது நிறைவேறி.......... வாழ்க மீரா குமார் வாழ்க பெண்கள்.

நேற்று திடீர் இன்ப அதிர்ச்சி தமிழ்மணத்தின் சூடான இடுகையைக் காணவில்லை. ஐ ஜாலி என்று மகிழ்ச்சியாய் இருந்தது. தமிழ்மணம் மிக நல்ல காரியத்தை செய்திருக்கிறது. அதே போல ஓபன் ஐடியைக்கொண்டு ஓட்டளிக்கும் புதிய முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனியாவது நல்ல இடுகைகள் எழுதும் என்னைப்போன்ற பதிவர்களின் பதிவுகளும் தமிழ்மணத்தில் கவனிக்கப்படும் என்பது நிதர்சனம். வாழ்க தமிழ்மணம் வாழ்க நல்ல பதிவர்கள்.

தினத்தந்தியில் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஈழத்தமிழர் வரலாறு என்றொரு தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தினமணியிலும் ஈழத்தமிழர் போராட்ட வரலாறு என்றொரு தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே வேலைகளை ஆறு மாதம் முன்பே குமுதம் விகடன் போன்ற பத்திரிக்கைகள் ஆரம்பித்துவிட்ட சூழலில் தினசரிகளின் இந்த திடீர் ஈழ ஆதரவுப்போக்கு வியக்க வைக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதே சிறந்தது என்பது புத்திசாலிக்கு தெரியும் என எப்போதோ தினதந்தியின் சாணக்கியன் சொல்லில் படித்ததாய் ஞாயபகம். ஈழம் நன்றாக விற்கிறது . மற்றபடி வாழ்க தமிழக பத்திரிக்கைகள் வாழ்க ஈழத்தமிழர்

சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகத்திராபையான திரைப்படம் சர்வம். விஷ்ணுவர்த்தன் தனக்கு படம் எடுக்க வராதுடா என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவரது முந்தைய படங்களான பில்லா,பட்டியல் படங்கள் மேக்கிங்கால் கரையேறிவிட்டாலும் இது மேக்கிங்கால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு சின்னாபின்னமாகி கிடக்கிறது. இந்த படத்திற்கு ராஜாதி ராஜா எவ்வளவோ சூப்பர். இனிமேலாவது வி.வர்த்தன் படித்தவர்களுக்கும் பீஸா தின்பவர்களுக்கும் படமெடுக்காமல் பழைய சோறு தின்பவர்களுக்கும் எடுத்தால் தேவலாம். வாழ்க பீஸா வாழ்க சர்வம்

ராஜாதி ராஜா திரைப்படம் குறித்த தவறான விமர்சனத்திற்காக சுஹாசினி மீது ரா.ரா படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. ஜெயா டிவியின் ஒளிபரப்பாகும் சுஹாசினியின் திரைபார்வை நிகழ்ச்சியில் அப்படம் குறித்து மிக மோசமாக கூறியதாய் தெரிகிறது. அதனால் கோபமடைந்த இயக்குனர் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதாய் தெரிகிறது. இனியாவது நம்ம பதிவுலக விமர்சகர்கள் கொஞ்சம் பார்த்து விமர்சனம் செய்யவும். விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். வாழ்க திரையுலகம்! வாழ்க விமர்சகர்கள்!

ஒரு வழியாக ஐபிஎல் முடிந்து உலகக்கோப்பை டி20 துவங்க இருக்கிறது. இந்த கருமாந்திரம் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அனைவரது நேரத்தையும் இங்கிலாந்தில் நடப்பதால் சில நாள் தூக்கத்தையும் கெடுக்கலாம். கிரிக்கெட் என்றாலே வெறுத்து விடும் அளவிற்கு தினசரி கிரிக்கெட் எரிச்சலையும் சலிப்பையும் உண்டாக்குகிறது. டி20 அதைத்தான் செவ்வனே செய்கிறது. ஒரு நாள் போட்டியும் டெஸ்ட் ஆட்டமும் பார்க்க மனது ஏனோ ஏங்குகிறது. வாழ்க லலித் மோடி வாழ்க டி20