Pages

21 July 2009

தனிமையின் இசைக் கலைஞன்
பியானிஸ்ட் – ஒரு தனிமையின் இசை

அமைதியான ஒரு தேசம். அந்நியர்களின் ஆக்கிரமிப்பு. மொத்தமாய் எல்லாமே மாறிவிடுகிறது. ஒரே நாளில். முதலில் ஒரு இனம் மட்டும் தனித்து அடையாளம் காணப்படுகிறது. பின் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. பின் அவர்களது இனமே மொத்தமாய் அழிக்கப்படுகிறது. அந்த அத்தனை சம்பவங்களிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கும் ஒருவன் , விடாமல் துரத்தும் மரணம் , அதிலிருந்து தப்பி அத்தனை கொடுமைகளுக்கும் ஒரு மௌனசாட்சியாய் தன் இசையின் மூலம் உலகத்திற்கே அறிவிக்கிறான் அவன். அவன் ஒரு பியானிஸ்ட்.

அது செப்டம்பர் 1 1939 போலந்தின் வார் சா (WARSAW) நகரம் தன் அழகோடு அமைதியாய் ஒரு காலை வேளையில் தன் வேலைகளை மும்முரமாகிறது. ஒரு நிசப்தமான வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவுக்கூடம் . அதன் உள்ளே தனிமையில் ஒருவன் தனது பியானோவில் மிகப்புகழ் வாய்ந்த ஒரு இசையை வாசித்துக்கொண்டிருக்கிறான். வெளியே அதை பதிவு செய்யும் இருவர் ரசித்தபடி இருக்கின்றனர். இசை மெல்லியதாய் நகர அவனது விரல்கள் அந்த பியோனோவினைத்தழுவ.. மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வெளியே பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் அவனை நிறுத்தச்சொல்லி வெளியே அழைக்கின்றனர். அவன் விடாது வாசித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் இன்னொரு மிகப்பெரிய சத்தம். அடுத்த குண்டு. தொடர்ந்து வாசிக்கிறான் . மூன்றாவது குண்டு அந்த கட்டிடத்தின் ஒரு பகுதிலேயே விழுகிறது. இப்போது வேறு வழியின்றி வாசிப்பதை நிறுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறுகிறான். கட்டிடத்தை விட்டு வெளியே வர அங்கே அழகான பெண்ணொருத்தி நீங்கள் சில்மேன் தானே என கேட்கிறாள். ஆம் நான்தான் என இவள் சொல்ல. அங்கே ஒரு மெல்லிய காதல். அடுத்த குண்டு மீண்டும் விழுகிறது. அனைவரும் தப்பி ஓடுகின்றனர்.

இப்படித்தான் துவங்குகிறது பியானிஸ்ட் திரைப்படம்.

ஜெர்மனி இரண்டாம் உலகப்போரினை துவக்கிய காலம் அது . போலந்து நாட்டை ஆக்கிரமிக்கிறது. அந்நாடு முழுக்க ஜெர்மனி தன் படைகளை குவித்திருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் இத்திரைப்படம் துவங்குகிறது. வீட்டிற்கு செல்கிறான் சில்மேன் என்னும் இப்படத்தின் நாயகன். அங்கே அவனது தந்தை,தாய்,தம்பி மற்றும் தங்கை என அனைவருமே பிபிசி வானொலியின் அறிவிப்பை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்து தன் போரை அறிவிக்கிறது. இங்கிலாந்து போலந்தைக்காக்கும் என நம்புகின்றனர். விரைவில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் விரட்டியடிக்கப்படுமென மகிழ்ச்சியடைகின்றனர். அம்மகிழ்ச்சியை அன்றிரவே அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாட்கள் நகர்கிறது. ஜெர்மனி முழுமையாக போலந்தை தன் ஆக்கிரமிப்பில் கொண்டு வருகிறது. இக்காகலக்கட்டத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் (Jews ) மீது தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்குகிறது ஆதிக்க அரசு. அனைத்து யூதர்களும் கட்டாயம் தங்களது சட்டைகளில் நீல நிற நட்சத்திரம் பதித்த பட்டையை அணிய வேண்டும் என்பதே அது. அந்த பட்டையும் இத்தனை சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறது.

பின் மற்றொரு அறிவிப்பு வருகிறது. யூதர்கள் தங்கள் வீட்டில் மிகக்குறிப்பிட்ட அளவு பணமே வைத்துக்கொள்ள வேண்டும் என அடுத்த அறிவிப்பு வருகிறது. சில்மேனின் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. அவர்களிடமிருக்கும் அதிக தொகையை மறைக்க இடம் தேடி அலைகின்றனர். கடைசியில் சில்மேனின் தந்தையின் வயலினில் அவை மறைத்து வைக்கப்படுகிறது.

ஜெர்மனியின் தொடர் அறிவிப்பு அதிர்ச்சிகள் குறைவதற்குள் இடியாய் அடுத்த அறிவிப்பு வெளியாகிறது. யூதர்களுக்கென ஊரிலிருந்து பிரிந்து தனி காலனி அமைக்கப்பட்டு அங்கே இடம் பெயர வற்புறுத்தப்படுகின்றனர். சில்மேனின் குடும்பமும் இடம் பெயர்கின்றனர். வசதியாய் வாழ்ந்த அவர்களது குடும்பம் ஒரு சிறிய குடிலுக்குள் தங்க வைக்கப்படுகின்றனர். அனைத்து யூதர்களுக்கும் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு , பசியிலும் பட்டினியிலும் கிடந்து வாடி சாகின்றனர்.

சில்மேனின் குடும்பமும் வறுமையில். சில்மேன் ஒரு சிறிய ஹோட்டலில் பியானோ வாசிக்கிறான். அதற்கிடையில் அந்த காலனியில் இருக்கும் அனைத்து யூதர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிக்கின்றனர். உண்மையில் அத்தனை பேரும் கொல்லப்படவே அழைத்துச்செல்லப்படுகின்றனர். சில்மேன் மட்டும் அவரது போலந்து போலீஸ் நண்பர் ஒருவரால் எதிர்பாராமல் தப்பவைக்கப்படுகிறான். பின்தான் தெரிகிறது யூதர்கள் அனைவருமே சாகடிக்க படவே அந்த இடமாற்ற அறிவிப்பு என்பது. மீண்டும் போலந்து வீதிகளில் அநாதையாய் சுற்றித்திரிகிறான். யாருமே இல்லாத வீதிகள் அவை. மயான அமைதி. மயானமேதானோ என்று எண்ண வைக்கிறது. அத்தனை பிணங்கள்.
ஜெர்மனியப்படையிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவனை ஒரு கட்டுமானப்பணியில் வேலைக்கு அமர்த்துகின்றனர். அங்கே அவனது சக யூத நண்பர்கள் ஜெர்மனிய படையிடம் மோத ஒரு திட்டம் தீட்டுகின்றனர். இவன் அதற்கு உதவுகிறான். திட்டம் நிறைவேற்றப்படும் முன் அந்த இடத்தில் இருந்து தப்புகிறான். அங்கிருந்து தப்பி நண்பர் ஒருவரின் உதவியை நாடுகிறான்.

நண்பர் அவனை அந்த பகுதியின் ஒரு கட்டிட்டத்தில் தங்க வைக்கிறார். எப்போதாவது உணவு . என்கிற ரீதியில் ஒரு சிறிய அறைக்குள் பல நாட்கள் முடங்கிக்கிடக்கிறான். அவனுக்கு உதவிய நண்பர் இறந்துவிட அந்த அறையைவிட்டு வெளியேறி மீண்டும் மறைந்து வாழ இடம் தேடி அலைகிறான். மீண்டும் ஒரு நண்பர். மீண்டும் தனிமை. எப்போதாவது உணவு. ஜன்னல் வழி உலகம்.

அறையிலேயே பியானோ இருந்தும் வாசிக்க இயலாது தவிக்கிறான். பல முறை மரணத்தைக் கண்டும் இறந்து போகாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துகிறான். இப்படி மறைந்து வாழ்வதற்கு இறந்து போய்விடலாமே என எண்ணி அழுகிறான்.
இதற்கிடையில் போலந்து நாடே அழிந்து போய் கிடக்கிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அழிந்து போயிருந்தது. ஜெர்மனி அடி மேல் அடி வாங்கி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.

இவன் மட்டும் யாருமில்லா போலந்து வீதிகளில் உணவு தேடி அடையாளமிழந்து அலைகிறான். ஒரு பாழடைந்த வீட்டில் கிடைத்த பழைய ரொட்டியும் ஒரு டின் ஏதோ ஒரு திரவத்தையும் வைத்துக்கொண்டு அங்கேயே மறைந்து வாழ்கிறான். ஒரு நாள் அந்த வீட்டிற்குள் ஒரு ஜெர்மனி இராணுவ அதிகாரி ஒருவர் நுழைகிறார். இவன் அவரைக்கண்டு அஞ்சுகிறான். யார் நீ என கேட்க , தான் ஒரு பியானிஸ்ட் என்கிறான். எங்கே வாசித்துக்காட்டு என சொல்கிறார் அந்த அதிகாரி.

பல வருடங்களுக்கு பிறகு பியானோவில் விரலை வைத்து வாசிக்கத்துவங்குகிறான் தன் வாழ்க்கையின் மிக உன்னதமான இசையை இடைவிடாது பல மணி நேரங்கள் வாசித்து கொண்டே இருக்கிறான். அந்த அதிகாரி அந்த இசையில் மெய்மறந்து நேரம் செல்வதைக்கூட அறியாது அமர்ந்திருக்கிறார்.

இரவாகிறது. அவனை உயிரோடு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் அந்த ஜெர்மனிய அதிகாரி. தினமும் அவனுக்கு அந்த பாழடைந்த வீட்டிலேயே உணவு கொண்டு வந்து தருகிறார். அது போல ஒரு நாளில் இனி நான் வரமாட்டேன் இனி உனக்கு விடுதலை என தனது கோட்டை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.

போர் முடிவடைகிறது. இவன் சுதந்திரமாய் தன் நாட்டின் வீதியில் இறங்கி நடக்க , அவனது ஜெர்மனிய கோட்டைக் கண்டு போலந்து நாட்டினர் அவனை ஜெர்மானியன் என எண்ணி கல்லால் அடிக்கின்றனர். தன்னை ஒரு யூதன் என அறிவித்துக்கொள்கிறான். பின் ஜெர்மனியின் கொடும் சிறைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுகின்றனர். அங்கே அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு யூதனிடம் சில்மேனை எனக்கு தெரியும் அவரிடம் நான் இங்கிருக்கிறேன் என சொல்லுங்கள் என்கிறான்.

மீண்டும் சில்மேன் தனது வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவுக்கூடத்தில் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறான். அதே அமைதி. அதே இசை. சுதந்திரமான இசை.
அந்த அதிகாரியைத்தேடி சிறைக்கூடம் இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான். அங்கே சிறையும் இல்லை அதிகாரியும் இல்லை..

சில்மேன் என்கிற அக்காலத்திய பியானிஸ்ட் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதப்பெற்ற ஒன்றாகும்.

அது தவிர பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. ஜெர்மனிய சிறைகளின் கொடுமைகளையும் , கீட்டோ எனப்படும் யூதர்களின் காலனிகளில் நடந்த பிரச்சனைகளையும் கண்முன்னே நிறுத்துகிறார். யூதரான இவர் போலந்தைச்சேர்ந்தவர். இவரும் ஜெர்மனியின் படைகளால் துன்புறுத்தப்பட்டு அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக ஆஸ்கரின் சிறந்த இயக்குனர் விருதையும் வென்றார்.

தனிமையின் இசை மிகவும் அழகானது
அது நம் வாழ்வோடு இணைந்தது
அது மரணத்தின் வாசலில் அதீத ஒலியுடன் எதிரொலிப்பது
மரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்
பியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை
இன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை.


**************